சமீபத்தில் அல்லு அர்ஜுனா நடித்த புஷ்பா 2 படம் வெளியானது. படம் வெளியான ஆறு நாட்களிலேயே ஆயிரம் கோடி வசூலை தாண்டியது. தற்சமயம் 1500 கோடியை தாண்டி வசூல், எப்படியும் 2000 கோடியை தொட்டு விடும் என்கிறார்கள்.
படம் பார்க்க ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டருக்கு சென்றார் அல்லு அர்ஜுனா. அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற பெண் இறந்து போனார் அவரது மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அல்லு அர்ஜுனா உடனே இந்த இறப்பு சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததுடன் அந்த குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவியும் செய்தார்.
ரேவதி இறந்து போனதற்கு காரணம் திடீரென தியேட்டருக்கு அல்லு அர்ஜுனா வந்ததுதான். அவரைப் பார்க்க ரசிகர்கள் அவரை நெருங்கி சென்றார்கள் இறந்து போன ரேவதி கூட அவருடன் செல்பி எடுக்க முயற்சி செய்து கூட்ட நெரிசலில் சிக்கி இறந்து போனார் என்பது போலீஸ் குற்றச்சாட்டு.
பாதுகாப்பு குறைபாடு என்று சொல்லி தான் போலீஸ் வழக்கு பதிவு செய்து தியேட்டர் அதிபர் மேலாளர் உட்பட மூன்று பேரை உடனடியாக கைது செய்தது ஹைதராபாத் போலீஸ். இந்த வழக்கில் அல்லு அர்ஜுனா பெயரும் சேர்க்கப்பட்டது. எனவே அவரை கைது செய்ய ஹைதராபாத் போலீஸ் முடிவு செய்து அவர் வீட்டுக்குப் போனபோது அல்லு அர்ஜுனா படுக்கையறையில் இருந்தார்.அவர் உடைமாற்ற அனுமதிக்காமல், அவர் காலை சிற்றுண்டி சாப்பிட அனுமதிக்காமல் அவரை காவல்துறை அழைத்துச் சென்ற வீடியோ தற்சமயம் வைரலாகி கொண்டு இருக்கிறது.
இதற்காக காவல்துறையையும் தெலுங்கானா காங்கிரஸ் அரசையும் அல்லு அர்ஜுனா ரசிகர்கள் வறுத்தெடுக்கிறார்கள்.
அவரை கைது செய்து அழைத்துச் செல்லும்போது அவரது மனைவி சினேகா ரெட்டி தனது கணவர் கைது செய்வதை பார்த்து அழத் தொடங்க அல்லு அர்ஜுனா அவரது முகத்தை வருடி தந்து அவருக்கு முத்தம் தந்து விட்டு தான் புறப்பட்டார்.
இந்த விஷயத்தில் அல்லு அர்ஜுனா தரப்பு சொல்வது இதுதான். அல்லு அர்ஜுனா திடீரென தியேட்டருக்கு வரவில்லை டிசம்பர் இரண்டாம் தேதியே நான்காம் தேதி சிறப்புக் காட்சியைக் காண அல்லு அர்ஜுனா தியேட்டருக்கு வருகிறார் என்று தியேட்டர் நிர்வாகம் ஹைதராபாத் போலீசுக்கு கடிதம் தந்திருக்கிறது.
போலீஸ் அந்த கடிதத்திற்கு ஒப்புதல் தந்திருக்கிறது. அதே சமயம் காவல்துறை துணை ஆணையர் தியேட்டர் இருக்கும் இடம் நெரிசலான குறுக்கு சந்து ரசிகர்கள் அதிகம் வந்து தேவையில்லாத குழப்பம் ஏற்படுத்தக் கூடாது என்று எச்சரிக்கையும் செய்திருக்கிறார்.
14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட அல்லு அர்ஜுனாவுக்கு ஹைதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமின் வழங்கியது. ஒரு நாள் முழுக்க சஞ்சல்குடா சிறையில் இருந்திருக்கிறார் புஷ்பா நாயகர்.
அல்லு அர்ஜுனா கைதை கண்டித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் தளத்தில் அல்லு அர்ஜுனாவுக்கு ஆதரவாக கருத்து பதிவு செய்திருக்கிறார்.
அல்லு அர்ஜுனா ஜாமீன் ரத்து செய்ய மேல்முறையீடு செய்ய இருக்கிறது ஹைதராபாத் போலீஸ். இதற்குக் காரணம் ரேவதியுடன் நெரிசலில் சிக்கி கீழே விழுந்த அவரது ஒன்பது வயது மகன் தேஜ் மூளை சாவு அடைந்து தற்சமயம் கோமா நிலைக்கு சென்றுவிட்டார்.
இப்போதைக்கு புஷ்பா நாயகருக்கு பிரச்சனை தொடர்கிறது. எப்படி சமாளிக்கப் போகிறார் ???
Leave a comment
Upload