தொடர்கள்
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்
நான் கொண்டாடிய கிறிஸ்துமஸ் -லாவண்யா மணிமுத்து

20241119220813370.jpg

கிறிஸ்துமஸ் பண்டிகை என்றதும் என் நினைவுகள் பின்னோக்கிச் செல்கிறது.

கேரள மண்ணில் என் தோழி வீட்டில்,தோழிகளுடன் கொண்டாடிய அந்த கிறிஸ்துமஸ் .ஆண்டுகள் பல கடந்த பின்னும் பசுமையாய் மனதுள் வியாபித்திருக்கிறது. அந்த நெகிழ வைக்கும் நினைவுகள் இன்றும் இனிக்கிறது

அது 2005 வருடம்.. மூணாறில் /எனது கல்லூரித் தோழிகள் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட பெற்றோரிடம் அனுமதி கிடைத்தது. மகிழ்ச்சியுடன் பயணத்தைக் தொடங்கினோம் .

நாங்கள் வசித்த உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் பேருந்தில் கேரளத் தோழிகளோடு தமிழ்நாட்டில் இருந்து நானும் இன்னொரு தோழியும் இணைந்து கொண்டோம். கொண்டை ஊசி வளைவுகளையும், உடலை ஊடுருவிய அந்த மென் குளிரையும், பச்சை பசேலென பரந்து விரிந்த தேயிலை தோட்டங்களையும் சிறுசிறு அருவிகளையும், பூத்துச் சிரித்த பூக்களையும் பார்க்கப் பார்க்கப் பரவசமானது.

மூணார் செல்ல நான்கு மணி நேரம் ஆனது. பிறகு அங்கிருந்து ஜீப் மூலம் என் தோழியின் கிராமத்திற்கு சென்றோம்.

கரடு முரடான அந்த மலைப்பாதையில் ஜீப் குலுங்கிச் சென்ற போது அப்பயணம் ஒரு ரோலர் கோஸ்டர் ரைடாகத் தான் இருந்தது. சமதளத்தில் வளர்ந்த எங்களுக்கோ அந்தப் பாதையில் நடக்கவே சிரமமாக இருந்தது, அவர்கள் எளிதாகவும் வேகமாகவும் நடந்தனர்.

முதல் நாள் முழுவதும் தோழி ஒருவரின் வீட்டில் இருந்தோம். அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் காபி, ஏலக்காய், மிளகு, அன்னாசிபழம்,பீன்ஸ் விளைந்தன. வீட்டிலேயே பையோ- கேஸ் அமைத்திருந்தனர். மரவள்ளிக்கிழங்கில் செய்த மாலை நேர இனிப்பு மிகவும் சுவையாக இருந்தது.

அமைதியான, நிறைவான வாழ்க்கை முறையின் மகத்துவம் புரிந்தது.

தோழிகளுக்கு மலையாளம் நன்கு புரிந்தாலும் பேசத் தெரியாததால் அங்கு நான் மொழிபெயர்ப்பாளர் வேலை செய்ய வேண்டி இருந்தது. அருமையான உபசரிப்பு,உணவு, இனிப்பு வகைகள் என்று அமர்க்களப்படுத்தி இருந்தனர்.

அந்த இயற்கை சார்ந்த வாழ்க்கை முறையை நாங்களும் ஒரு நாள் வாழ்ந்து விட்டு அன்று மாலை மற்றொரு தோழி வீட்டிற்கு சென்றோம்.

அங்கே கிறிஸ்துமஸ் குடில் அமைத்து இருந்தனர். வீடுகளில் வண்ண வண்ண மின்விளக்கு அலங்காரம் செய்து மரங்களிலும் தோரணங்களை தொங்க விட்டிருந்தனர்.

20241119220900936.jpg

குடிலில் இயேசு கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் பொம்மைகளை வைத்திருந்தனர். கிறிஸ்துமஸ் மரம் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது. பெரிய பெரிய நட்சத்திரங்கள் ஒளிர்ந்தன. ஆனால் குழந்தை இயேசு சிலை மட்டும் அங்கே காணவில்லையே என்று கேட்டோம். அப்பொழுது இரவு 12:00 மணி அளவில் வழிபாடு முடிந்த பிறகு குழந்தை இயேசுவை அங்கே வைப்போம் என்றனர். அனைவரும் ஆடிப் பாடி மகிழ்ந்து கிறிஸ்து பிறப்பை கொண்டாடினோம்.

காலையில் எழுந்து கிளம்பி தேவாலயம் சென்று பிரார்த்தனை, பூஜை முடிந்த பிறகு அனைவரும் ஒன்றாய் அமர்ந்து உணவு உண்டோம்.

நிறைய நண்பர்கள், உறவினர்கள் வந்ததால் ஆளுக்கு ஒரு கதையும் வேடிக்கையையுமாய் நேரம் சென்றது. எல்லோரும் சேர்ந்து வேலை செய்வதும் மிக சுவாரஸ்யமாய் இருந்தது.

பின்னர் மதியம் அனைவரும் ஒரு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் சென்றோம். அவர்களுக்கு தேவையான பால் பவுடர், உடைகள் எல்லாம் எடுத்துச் சென்றோம். அது முற்றிலும் புதியதொரு அனுபவமாய் மனதை கனக்கச் செய்தது. இப்போது நினைத்தாலும் கண்ணில் நீர் பெருகுகிறது. அந்த தினம் முதல் இன்று வரை நமக்கு கிடைத்த எல்லாவற்றிற்கும் நாம் கடவுளுக்கு எவ்வளவு நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்ற புரிதல் மனதுள் ஆழமாய் இறங்கியது.

அவர்களுடன் கிறிஸ்துமஸ் கேக் வெட்டிக் கொண்டாடிவிட்டு திரும்பினோம். அடுத்த நாள் எல்லோரிடமும் விடைபெற்று ஊருக்கு கிளம்பினோம். ஆனால் இந்த முறைப் பயணமோ மலையின் மேலிருந்து கீழே வண்டி இறங்குவதைப் போல அனுபவங்களாய் மனதுள் இறக்கியது.

பிறப்பால்,மொழியால், இடத்தால்,மதத்தால் வேறுபட்டாலும் அன்பு ஒன்றே மிகச்சிறந்தது என்பதை புரிய வைத்தது. அதுவே நம் அனைவரையும் இணைக்கும் பாலம் என்ற வாழ்வின் மிகச்சிறந்த அனுபவத்தைத் தந்தது இந்த கிறிஸ்துமஸ் பயணமும் ,கொண்டாட்டமும் .

அன்பைப் பொழியும் மனத்தாலே

அகிலம் முழுதும் வென்றிட்டாய்

உன்றன் அன்பும் பெரிதென்ற

உண்மை புரிந்தால் செழித்திடலாம்!

பாவியை நீயும் ஆதரித்தாய்

பாவி அவனை மன்னித்தாய்

காவல் தந்தும் காத்தாயே

காயம் மாறச் செய்தாயே!

கேட்டால் கிடைக்கும் என்றாயே

கேட்கும் உறுதி தந்தாயே

மாட்டுக் கொட்டிலில் பிறந்தாயே

மாந்தர் வாழ்வை காத்திடவே!

உன்னைப் போல் உறுதியாய்

உயர வேண்டும் உலகினிலே

தன்னைப் போல் பிறரையுமே

தயக்கம் இன்றி நேசிக்கவே!

மொழிகள் கடந்து , மதம் கடந்து அன்பினால் மட்டுமே கட்டமைத்த அற்புதமான நட்பும் ,அது தந்த இனிமையான நினைவுகளையும் ஒவ்வொரு கிறிஸ்துமஸ் நாளும் என் மனதில் .நிழலாட வைக்கிறது

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்