மார்கழித் திங்களில் சைவர்கள் திருவெம்பாவை படிப்பதும், வைணவர்கள் திருப்பாவை படிப்பதும் தமிழ் நாட்டில் தொன்று தொட்டு நிலவிவரும் வழக்கமாகும்.
"மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்" என்று கிருஷ்ணர் கீதையில் சொல்லியிருக்கிறார். எனவே மார்கழி மாதம் என்றவுடனேயே மாசற்ற கிருஷ்ணரின் நினைவு வருவது போலவே, அம்மாத முழுவதும் பாடக் கூடிய திருப்பாவைப் பாடல்களையளித்த பாவையாக விளங்கும் ஆண்டாளுடைய நினைவு வாராமற் போகாது. ஆண்டாள் திருப்பாவையில் கண்ணனை நாம் மார்கழியில் எப்படி,எந்த முறையில் வணங்கி அருளைப் பெற வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாகப் பாடிய நூல். இது மொத்தம் 30 பாடல்களைக் கொண்டது. இவை ‘நாலாயிர திவ்ய பிரபந்தங்களில்’ 473 முதல் 503 வரை உள்ள பாடல்களின் தொகுப்பு.
ஆண்டாளால் பாடப்பெற்ற பாடல் ஸ்தலங்கள்:
1. திருவரங்கம், 2. திருக்கண்ணபுரம்,
3. திருமாலிருஞ்சோலைமலை, 4. ஶ்ரீவில்லிப்புத்தூர்,
5. திருவேங்கடம், 6. துவாரகை, 7. வட மதுரை, 8. திருவாய்பாடி,9. திருப்பாற்கடல் முதலியனவாகும்.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி:
நாயன்மார்களும் ஆழ்வார்களும் தமிழால் இசை பாடி இறைவனை வாழ்த்தித் துதித்தார்கள். இவர்களுள் சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளும் ஒருவராவர். ஆண்டாள் தமிழகத்தில் 7 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண் என்பது குறிப்பிடத்தக்கது. இலக்கிய செழுமைக்கும், தத்துவம், பக்தி ஆகியவற்றிற்கும் உதாரணமாகப் போற்றப்படும் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களையும் ஆண்டாள் தனது 15 ஆம் வயதில் இயற்றியுள்ளார். இந்த இரண்டு நூல்களையும் படித்தால் ஆண்டாளின் தெய்வீகத் தன்மையையும் ஞானத்தையும் உணர முடியும்.
இறைவனையே ஆண்டவள் ஆண்டாள்:
மதுரைக்கு அண்மையிலுள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணுசித்தர் (பெரியாழ்வார்). அந்தணரான அவர் ஶ்ரீவில்லிப்புத்தூர் கோவிலுக்கு மலர்களைப் பறித்து மாலைகள் தொடுத்துக் கொடுப்பதையே தமது கடமையாகக் கொண்டவர்.
ஒரு நாள் தோட்டத்தில் பூ பறிக்கச் சென்றபோது, குழந்தை ஒன்றை(ஆண்டாள்) துளசிச் செடியின் கீழ் கண்டெடுத்தார். பெரியாழ்வார் அந்த குழந்தையை தமது மகளாகப் பாவித்துக் கோதை எனப் பெயரிட்டு வளர்களானார். இளம் வயதிலேயே கண்ணன் மீது மிகுந்த பக்தியுணர்வு கொண்டவராயும், தமிழில் நல்ல திறமை கொண்டவராகவும் இருந்தார். சிறு வயதிலேயே கண்ணன் மீதிருந்த அளவற்ற அன்பு காரணமாக அவனையே மணம் செய்துகொள்ள வேண்டுமென்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார். தன்னைக் கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்துவந்தார்.
கோயிலில் இறைவனுக்கு அணிவிப்பதற்காகப் பெரியாழ்வார் தொடுத்து வைத்திருக்கும் மாலைகளை ஒவ்வொரு நாளும் அவருக்குத் தெரியாமல் தான் அணிந்து கண்ணனுக்கு ஏற்றவளாக தானிருக்கிறோமா என்று கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து பின்னர் திரும்பவும் கொண்டுபோய் வைத்துவந்தார்.
இதனால் கோதை சூடிய மாலைகளே இறைவனுக்கும் சூடப்பட்டன. ஒருநாள் இதனை அறிந்து கொண்ட பெரியாழ்வார் கோதையைக் கடிந்துகொண்டார். அவள் சூடிய மாலையை ஒதுக்கிவிட்டுப் புதிய மாலை தொடுத்து இறைவனுக்கு அணிவித்தார். அன்றிரவு இறைவன் அவரது கனவில் தோன்றி கோதை சூடிய மாலைகளே தனக்கு உகந்தவை எனவும், அவற்றையே தனக்குச் சூடவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். இதனாலேயே "சூடிக்கொடுத்த சுடர்க்கொடி" என்றும், இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறார்.
கோதை மண வந்தடைந்த பின்னர் அவளுக்காகச் செய்யப்பட்ட திருமண ஏற்பாடுகளை மறுத்து, திருவரங்கம் (ஸ்ரீரங்கம்) கோயிலில் உள்ள இறைவனையே மணப்பதென்று பிடிவாதமாக இருந்தார். என்ன செய்வதென்று அறியாது கவலையுடனிருந்த விஷ்ணுசித்தருடைய (பெரியாழ்வார்) கனவில் தோன்றிய இறைவன், கோதையை மணப்பெண்ணாக அலங்கரித்து திருவரங்கம் கோயிலுக்கு அழைத்துவருமாறு பணித்தார். குறித்த நாளன்று கோயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோதை, கருவறைக்குள் சென்று இறைவனுடன் கலந்துவிட்டார்.
திருப்பாவை:
தமிழகத்தில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலை எழுந்து நீராடி, வீட்டின் முன் கோலம் போட்டு, இறைவனைத் துதித்து பாவை நோன்பு நோற்பது வழக்கம். இதனைப் பின்னணியாகக் கொண்டு இயற்றப்பெற்றதுதான் திருப்பாவை, தற்போது ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்கள்தான் பாவை நோன்பு காலத்தில் பாடப்படுகிறது.
மார்கழி மாதம் அதிகாலை எழுந்து நோன்பு இருப்பதால் உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் ஏற்படும். எனவே மார்கழி மாதம் தொடங்கி தை வரையான காலத்தில் இளம்பெண்களுக்கு ஒரு நோன்பினை விதித்திருந்தது. அந்த நோன்பு காத்தாயினி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட நோன்பாகவும், அப்படி நோன்பு நோற்று நல்ல கணவனை அடைய வழி தேவியின் சிலையினை வைத்து நோன்பிருந்து பாடி மகிழ்ந்தனர். ஆண்டாள் அந்த பாவை சிலையினை கண்ணாகக் கருதினார், எல்லா இளம்பெண்களும் கணவனை அடைய, அவரோ கண்ணனை அடைய நோன்பிருந்து பாடினார், அதுதான் திருப்பாவை ஆயிற்று. திருப்பாவை 30 பாசுரங்களும் மார்கழி மாதம் கன்னிப் பெண்கள் நல்ல கணவன் வேண்டியும் மழை வேண்டியும் செய்யும் இந்த நோன்பு முறைகளைப் பற்றிக் கூறுகின்றன. ஆண்டாள் கண்ணன் வளர்ந்த மதுராவில் இருப்பது போலவும் தன் தோழியர்களைக் கோபியர் போலவும் தன்னையும் ஓர் ஆய்க் குலப் பெண்ணாகவும் நினைத்து இந்தப் பாசுரங்களைப் பாடுகிறார்.
“மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்…..”
இத்தகைய சிறப்புகள் பொருந்திய மார்கழியில், நாட்டுக்கும், வீட்டுக்கும், தன்னைப்போன்ற அனைத்துப் பெண்களுக்கும் நன்மை ஏற்படும் விதமாக ஆண்டாள் கடைப்பிடித்த நோன்பே, மார்கழி நோன்பாக இன்றளவும் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பெயர்களில் கடைப்பிடிக்கப்பட்டுப் போற்றுதலுக்கு உரியதாயிற்று. நோன்பினை நூற்கும் பெண்கள், சில விதிமுறைகளைக் கடைப்பிடித்தனர் என்பதை, ஆண்டாள் அருளிய திருப்பாவையின் வாயிலாக அறிய முடிகிறது. பொழுது விடிவதற்குரிய அறிகுறிகளாக கீழ் வானம் வெளுப்பதும், பறவைகள் ஒலிப்பதும், கோழி கூவுவதும், முனிவர்களும் தேவர்களும் துயிலெழுந்து எம்பெருமானின் பெயரை முழங்குவதாகவும் விடியல் பொழுதின் அடையாளங்களாகக் குறிப்பிடும் ஆண்டாள், அதற்கெல்லாம் முன்பாகவே எழுந்து விரத நியமத்தை முடிக்கவேண்டி, ஆயர்பாடிப் பெண்களைத் துயிலெழுப்புகிறார். இதனால்தான் திருப்பாவை நம்மை எண்ணி எண்ணி வியக்க வைக்கிறது..
மார்கழி மாதத்தில் திருப்பதி திருமலையில் காலையில் சுப்ரபாதம் பாடுவதற்குப் பதிலாக ஆண்டாளின் திருப்பாவை பாடுவார்கள். இந்த மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்குப் பதில் திருப்பாவை பாடப்படுகிறது. தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலின்போது பாடப்படுகின்றன.
(திருப்) பாவை மூலமாக சரணாகதி தத்துவத்தைத் காட்டிய பாவை (ஆண்டாளின்) திருவடிகளை வணங்குவோம்!!
Leave a comment
Upload