தொடர்கள்
கதை
என் தங்கை கல்யாணி

என் தங்கை கல்யாணி - பா. அய்யாசாமி

20241118144605919.jpg



காலை நேரத்தில் காபியை ரசனையோடு குடிக்கும் போது, மோடியே போன் செய்தாலும் எடுக்கமாட்டார் அய்யாசாமி. சோதனையாக அதுவும் சரியாக அந்த நேரத்தில்தான் அழைப்புகளும் வரும் அன்றும் ருக்குவின் அலைபேசி ஒலித்தது.

ருக்குவோ கொல்லைபுரத்தில் வேலையாக இருந்தாள்

கைகளை அலம்பிண்டு கூடத்திற்கு வந்து சேர்ந்து போனை எடுப்பதற்குள் அது கட்டாகியிருந்தது.

ஏண்ணா இங்கேதானே இருந்தேள் ? அடிக்கிற போனை செத்த எடுக்கப்படாதோ ? நான் அங்கேயிருந்து இரண்டு கிலோ மீட்டருக்கு மூச்சு வாங்கிண்டு ஓடி வரனுமா ?
அதுக்குத்தான் உடம்பைக் குறை என்று சொல்கிறேன். என அம்பை தொடுத்து வில்லை அவள் பக்கம் திருப்பினார் அய்யாசாமி.

காபி எங்கே ஓடி போயிடப் போறது ? என்ன ரசனையோ என்றாள் ருக்கு.

ஓடிப் போகாது... ஆறிப்போயிடும் என்ற பதிலுக்குப் பதில் பேசியதினாலும், தன் உடம்பைப் பற்றி கேலி பேசியதிலும் சற்று கடுகடுப்பாகியிருந்த ருக்கு, பதிலுக்கு இதுக்கு எதாவது செய்யனும் என மனத்தில் நினைத்தாள் மீண்டும் போன் ஒலித்தது.

யாரு, கல்யாணியா ?
....
செளக்கியம்,
....
அவருக்கென்ன ?
....
நீங்க ?
....
அப்படியா? வா,வா.. ஆமாம் எங்களுக்கும் அப்படித்தான், உன்னைப் பார்க்கனும் போல இருக்கு. பேஷா வா என பேசிவிட்டு வைத்து விட்டாள்.

யாரு போனில் என கேட்டார் அய்யாசாமி.

ம்..கல்யாணி. என்ற ருக்கு கிளம்பி வருகிறாளாம் என்றதும்,

ரயிலிலா காரிலா ? என அய்யாசாமி கேட்ட்தும்,

தலையில் பிரகாசமான ஒளி ஒன்று எழும்பியது ருக்குவிற்கு அவரைப் பழிவாங்க இதுதான் சந்தர்ப்பம்.

ஓ..ஓ.. இது என் தங்கை கல்யாணினு நினைச்சுண்டுடுத்து, இதை வைத்தே இன்னைக்கு ஆரம்பித்து பழி தீர்த்துவிட வேண்டியதுதான் என மனதிற்குள் நினைத்தாள் ருக்கு.

எப்படி வருகிறாள் என்று தெரியலை இன்று மாலை அகத்திற்கு வருகிறேன் என்று்தான் சொன்னாள். நீண்ட காலத்திற்குப் பின் நம்மை பார்க்கனும் போல இருக்காம் அவளுக்கு என்றதும்.

இருக்காதா பின்னே ? என்றவர் நான் போய் ஹேர் கட்,ஷேவிங் செய்துண்டு வரேன் என்ற அய்யாசாமி, இப்படியே அத்திம்பேரைப் பார்த்தால் கல்யாணி சங்கடப்படுவாள் என்றபடி கிளம்பினார்.

ம்ம்..ம் இந்த பிராமணன் இன்றைக்கு என்னவெல்லாம் செய்யறதுனு பார்ப்போம் என நினைத்து மனத்தில் சிரித்துக்கொண்டாள் ருக்கு.

குளித்து முடித்து ஊஞ்சலில் வந்து அமர்ந்தவரிடம், சாப்பிடுவதற்குள், கடைக்குப் போயிட்டு வந்து விடுறேளா ? கடலை மாவு மட்டும் வாங்கிண்டு வாங்கோ கல்யாணிக்கு பஜ்ஜின்னா ரொம்ப பிடிக்கும் என்றதும்,

உடனே கிளம்பினார் வரும்பொழுது பச்சை நிலக்கடலை, மோர் மிளகாய் போட குண்டு மிளகாய், சலங்கை மாவடு, பாதிரி மாம்பழம், கடலை மாவு, பஜ்ஜிக்காக பீர்க்கங்காய் உட்பட அனைத்தையும் கடைத் தெரு முழுவதும் தேடித்தேடி அலைந்து வாங்கிண்டு வந்து சேர்ந்தார் அய்யாசாமி

கடலை மாவு மட்டும் தானே கேட்டேன் இதெல்லாம் எதற்கு ? கேட்ட ருக்குவிடம்,



இதெல்லாம் நம்ம மாயவரத்திலேதான் கிடைக்கும் அதான் கல்யாணிக்காக வாங்கினேன் என்றார். பாதிரிமாம்பழம் இன்னும் சீசனே வரலையே எப்படி பார்த்து வாங்கினேளா ? அது் பாதிரிதானா ? என்றதும்.

நேக்கா ? நேக்கா? பார்த்து வாங்க தெரியாது என முழு சந்திரமுகியாக மாறியிருந்தார் அய்யாசாமி.

என் ஸ்நேகிதன் சேகர் கடையிலே கிலோ நூறு ரூபாயாம், நல்லதா கேட்டு வாங்கிண்டு வந்தேன் என்றார் அமைதியாக.

மதியமும் மாலையும் கூடும் நேரத்தில் கல்யாணி வந்தாள்.

வாம்மா நல்லா இருக்கியா ? என வரவேற்றாள் ருக்கு.

நாம ஒரே ஊரில் இருந்தும் பார்த்துக்க முடியலை, நாலு வார்த்தை முகம் பார்த்து பேசக் கூட முடியலை அத்தனை வேலை என வருத்தப்பட்ட கல்யாணி, பாவம் அண்ணாவும் என்னைப் பார்க்காமல் ஏங்கித்தான் போயிருப்பார்

ஆமாம், காலையிலிருந்து ஏங்கித்தான் கிடக்கார் என்றாள் ருக்கு நக்கலாக.

அண்ணா எங்கே ? காணோம் என்ற கல்யாணியிடம் இதோ கிணத்தடியிலே குளித்துக்கொண்டிருக்கார்,வருவார். நீ வா உட்கார் என்றாள்.

பஜ்ஜி போட்டுக்கொண்டு காபியோட வந்தமர்ந்தாள் ருக்கு.
மூக்கில் வேர்த்தபடி அய்யாசாமியும் வந்து அமர்ந்தார்.
மண்ணி, இதெல்லாம் எதற்கு சிரமப்பட்டுண்டு என்றாள் கல்யாணி.

இதென்ன பிரமாதம், நீ காலையில் போன் செய்தவுடன், உன் அண்ணா ஆசையாக உனக்காக என்னவெல்லாம் வாங்கிண்டு வந்து இருக்கார் பாரு, என நிலக்கடலை, மோர்மிளகாய், மாவடு, பாதிரிபழம் என அனைத்தையும் கல்யாணியிடம் கொடுத்தாள் ருக்கு.

எடுத்த பஜ்ஜியை பிட்டு வாயில் வைத்த அய்யாசாமிக்கு தொண்டையில் லேசாக அடைத்த மாதிரி் இருக்க, கொஞ்ச கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது கல்யாணி என்ற பெயரால்

ஏற்பட்ட குழப்பம்.

எப்பவுமே, அய்யாசாமி அண்ணாவிற்கு என் மேல் தான் அதிக பாசமுண்டு என சொன்னபடி நன்றிண்ணா சொல்லிவிட்டுப் போனாள் அவரது தங்கை கல்யாணி.

சோகமாய் இருந்த அய்யாசாமியிடம், என்ன சமூகம் சைலண்ட்டா இருக்கு ? என் தங்கை கல்யாணி வருவாள்னு எதிர்பார்த்தேளா ? என கேலி செய்தாள் ருக்கு.

ஆமாம் என வழிந்தவர், முன்னேயே சொல்லப் படாதோ ? காலையிலிருந்து ஆயிரம் ரூபாய் பழுத்திடுத்தே! என வருத்தப்பட்டார்.

சும்மா இருங்கோ, அம்மா அப்பா அக்கா தங்கைகளுக்கு செய்வதை யாரும் கணக்குப் பார்ப்பாளா ? அவாளுக்கு செய்யறதுக்கு கொடுத்தல்லவா வச்சிருக்கனும் உங்களுக்கு என ருக்கு கூற..

அதுவும் சரிதான் எங்காத்திலே உறவுனு மிச்சமிருக்கிறதே இவள்தானே, அவளுக்குச் செய்யாமல் நாம யாருக்கு செய்யப் போகிறோம் என்று அய்யாசாமி பாசமாய் சொன்னதும்,

இதுதாண்ணா நீங்க ! இப்படியே இருங்கோ என்றாள் ருக்கு.