தொடர்கள்
பொது
பல்ப் ஸீரீஸ் 40 "வழி கேட்ட பல்பு" - மோகன் ஜி

20241119220037632.jpg

எண்பதுகளின் துவக்கத்தில் கல்கத்தாவுக்கு பணிமாறுதலில் போய் விழுந்தேன். என் நண்பர்கள் எனக்காக வீடுபார்த்து ஏற்பாடு செய்து வைத்திருந்தார்கள்.

ஹௌரா ரயில் நிலையத்துக்கு வந்து எங்களை அந்த வீட்டிற்கு டோர் டெலிவரி செய்துவிட்டுப் போனார்கள்.

என் மனைவி எழுதிக் கொடுத்த வீட்டுப் பொருட்கள், கறிகாய், பால், தயிர் என யாவற்றையும் தீனாவே போய் வாங்கிக் கொண்டு வந்தான்.

கூடவே கிளம்பிய என்னைத் தடுத்தான்.

‘’இன்னைக்கு ரெஸ்ட் எடுத்துக்கடா மாப்ள! நீ எப்ப வருவேன்னு கூடைகூடையா வேலை ஆபீஸ்ல காத்துக் கிட்டு இருக்கு! நாளைல இருந்து பொறுப்பை எடுத்துக்க. இப்போ ரிலாக்ஸ் பண்ணு மோகா!”

திரும்பி வந்த தீனா, ஆபிஸுக்குப் போக எங்கே பஸ் ஏறணும் எங்கே இறங்கணும் என்று எடுத்துச் சொல்லிவிட்டுப் போனான்.

அடுத்த நாள் பளபளான்னு உடுத்திக்கிட்டு, பிள்ளையைக் கொஞ்சிட்டு, ஷூவை மாட்டிக்கிட்டு கிளம்பினேன். லேண்ட்ஸ்டௌன் சாலைக்கு வந்து சௌரங்கிக்கு டிக்கெட் வாங்கினேன்.

என் வங்கிக்கிளைக்குப் போவதில் சிரமம் இருக்கவில்லை தான்.

முதல் நாள் வேலை. அறிமுகங்கள். கைகுலுக்கல்கள், வாடிக்கையாளர்களுடன் சந்திப்பு, எல்லோருக்கும் நான் வழங்கிய தித்திப்பு என்று நாள் ஓடியது.

மாலை ஏழுமணிக்கு வீடு திரும்ப பஸ் பிடித்தேன்.

கவிதையொன்றை மனதில் கோர்த்துக் கொண்டு இருந்தேனா…

நான் இறங்க வேண்டிய பஸ் ஸ்டாப்பை தவறவிட்டு விட்டேன். கண்டக்டர் வாலிபன் “நீங்க மனோகர் புக்கூர் வரைக்கும் தானே டிக்கெட் வாங்கினீங்க? அங்க இறங்காம என்ன பண்றீங்க?” என பெங்காலியில் சாமியாடி அடுத்த ஸ்டாப்பில் இறக்கிவிட்டு ஏதோ சொன்னான். ‘என்ன சொல்லியிருப்பான்… சாவு கிராக்கின்னா?!’

பஸ்ஸை விட்டு இறங்கியவனுக்கு திக்கு திசை தெரியவில்லை. எனது தெரு பேரைச் சொல்லி விசாரித்தேன். இகானே ஒகானே என்று கைகாட்டினார்கள்.

என் வீடிருந்த தெருவின் மறுமுனையிலிருந்து நுழைந்தேனா.. எல்லா கட்டிடமும் ஒரே மாதிரி இருக்கிறது. எதேனும் ‘ஃபேமிலி சாங்க்’ இருந்திருந்தாலும் அதைப் பாடி ‘ஓ… ஜெயந்தீ!’ என்றழைத்திருப்பேன். அவளும் ‘பிராண நாதா’ என்று பதில்குரல் கொடுக்க வீட்டைக் கண்டுபடித்திருப்பேன். அப்படி எந்தப் பாட்டும் இல்லையாதலால், பர்ஸிலிருந்த என் வீட்டு விலாஸத்தை எடுத்தேன்.

முகத்தில் பாதிக்குமேல் பரந்திருந்த மூக்குக் கண்ணாடி அணிந்து எதிர்ப்பட்ட நபரிடம் விசாரித்தேன்.

‘இந்த நம்பர் வீடு எங்கே இருக்கு ஜி?’

‘ஓ.. அங்கே யாரைப் பார்க்கணும்?’

‘மிஸ்டர் மோகன்னு அந்த வீட்டில் முதல் மாடில இருக்கார்’

‘ஓ… புதுசா குடி வந்திருக்காங்களே? அவங்க வீடா?’

‘ஆமாம் ஜி!’

‘நீங்க யாரு?’

உனக்கேண்டா அந்த விசாரமெல்லாம் கண்ணாடிக்காரா? வழிகேட்டா சொல்லிட்டுப் போவியா… அகத்தில் அகலாய்ப்பு. முகத்தில் சிரிப்பு.

‘அவர்கூட வேலை செய்யுறேன் ஜி’

‘டீக்காச்சே!’ என்றபடி வீட்டைக் காட்டினார். நான் எதுக்கு டீ காச்சணும் என்று யோசித்தபடி வீட்டை அடைந்தேன்.

என் வீட்டுக்கு நானே வழிகேட்கிறாப்புல ஆகிடுச்சே என்று வெட்கமாயிருந்தது.

அந்த ஞாயிற்றுக்கிழமை என் வீட்டு ஓனர் தாத்தா அவருடைய மகனைக் கூட்டிக் கொண்டு என்னைப் பார்க்க வந்தார். "எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா?" என்று விசாரித்து விட்டு அவர் மகனை அறிமுகம் செய்வித்தார்.

அந்த மகர் ‘நமஸ்தே’ என்றபடி ஒரு ரஸகுல்லா சட்டியைத் தந்தார்.

என்னைக் கூர்ந்து பார்த்தபடி, ‘உங்களை எங்கோ பார்த்திருக்கிறேனே சார்’ என்றார்.

“அப்படியா!” என்று ஆச்சரியம் காட்டினேன்.

காபி பிஸ்கெட் உபசாரத்துடன் ஏதேதோ பேசிவிட்டு அவர்கள் கிளம்புகையில் அந்தப் பையர் மீண்டும் சொன்னார். “உங்களைப் பார்த்திருக்கேன் ஜி. எங்கன்னுதான் ஞாபகம் வரல்லே!”

மையமாகச் சிரித்து வழியனுப்பினேன்.

என்னிய பார்த்திருக்கடா கண்ணாடிக்காரா! அன்னைக்கு என் வீட்டுக்கு போற வழியை உன் கிட்ட தான் கேட்டேன்!