தொடர்கள்
கவிதை
கார்த்திகை மாதம்... காட்சிகள் மாறும்...!! - கோவை பாலா

20241114180859698.jpeg

கார்த்திகை மாதம் வந்திட
காட்சிகள் மாறிவிடும்...!
காணும் இடங்கள் எல்லாம்
கரு நீலம் அழகு தெரியும்...!
நேர்த்தியாகி மனிதர் மனம்
மாட்சிமை தேடி வரும்...!
காந்தமலை ஜோதி காண
காடு மலைகள் கடந்துவிடும்...!

ஆச்சரியக் கடவுள் என்றால்
ஐயப்பன் என்று அறிவார்...!
ஐயம் இருப்பின் எவரும்
அதிசயம் தான் கண்டிடுவார்...!

எண்ணம் போல் சுற்றியவனை,
தன் வண்ணம் திரும்பச் செய்வான்...!
நெஞ்சம் அவனையே நினைத்து
தஞ்சம் அடைந்திடு என்பான்...!
காணும் உணவும் கறியும் மறந்து
கார்த்திகை விரதம் ஏற்க செய்வான்..!
மாலை அணிந்து சரணம் சொல்ல
காலை மாலை அவன் வருவான்...!

பிரார்த்தனை நெய்யாக தேங்காயும்,
தானத்து அரிசியும், காணிக்கையும்,
பூஜைப் பொருளும் ஒருமுடி சேரும்...!
பதினெட்டாம் படிக்குத் தேங்காயும்,
வீட்டின் படிக்கு ஒரு தேங்காயும்,
நேர்த்திக்கடனாய் இருமுடி சேரும்...!
இருமுடி தாங்கி தரிசனம் காண, நம்
இரு அடி தேடி அவனிடம் போகும்...!

தூக்கி வைத்த இருமுடியில்,எனை
தாங்கி நடப்பார் குருசாமி...!
எருமேலி ஏறி வந்தால், தரிசனம்
தருவார் வாவர் சுவாமி...!
பேட்டை துள்ளல் நடனத்தோடு
காண வேண்டும் சாஸ்தா சாமி...!
மாளிகை புறத்தில் அம்மனாய் மகிஷியை அமர்த்திய சாமி...!
பம்பா நதியில் நீராட பாவங்கள்
தீர்ப்பான் ஐயப்ப சாமி...!

காடுமலை தாண்டி, நீலிமலை ஏறி விட்டால்...
எங்கும் சுவாமி சரணம் கோஷம் தான்...!!
சபரிமலை சபரிநாதன் தரிசனம் தான்...!!

ஏற்றி விடப்பா என்று சொல்ல
ஏற்றி விடுவான் ஐயப்ப சாமி...!
இறக்கி விடப்பா என்று சொன்னால்
இறக்கி விடுவான் ஐயப்ப சாமி...!

சுவாமி சரணம் ஐயப்பா...!!

20241114180946475.jpg