தொடர்கள்
அழகு
மண்டல காலம் - கொல்கத்தா இராதாகிருஷ்ணன்

பதினெட்டு படிகளின் தாத்பர்யம்

20241113223355832.jpg

சபரிமலை யாத்திரையில் துளசி மணி மாலையணிந்து ஆறு வாரம் நோன்பிருந்து பின் கலியுக வரதன் அய்யப்பன் சன்னிதியை அடைய பதினெட்டு படிகளைக் கடக்க வேண்டும்.

மண்டல காலமிது. இந்த புனித பதினெட்டு படிகளைகளின் தாத்பர்யம்தான் என்ன என்று தெரிந்து கொள்வோமே.

முதல் படி : விஷாத யோகம்

பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தி அடைய வேண்டும் என்ற ஆத்ம துடிப்பே விஷாத யோகம்.

இரண்டாம் படி : சாங்கிய யோகம்

பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இந்த படி..

மூன்றாம் படி : கர்ம யோகம்

உபதேசம் பெற்றால் போதுமா? மனப்பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவத்தை உணர்த்துவது இந்த படி.

நான்காம் படி : ஞான கர்ம சந்நியாச யோகம்

பாவங்கள் புண்ணியங்கள் பற்றிக் கூட கவலைப்படாமல் எதன் மீதும் பற்று இல்லாமல் பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம் படி கூறும் உபதேசம்.

ஐந்தாம் படி : சந்நியாச யோகம்

நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இன்றி தான தர்மங்கள் செய்வது.

ஆறாம் யோகம் : தியான யோகம்

கடவுளை அடைய புலனடக்கம் முக்கியமாகும். மெய் வாய் கண் மூக்கு செவி என்ற இந்த ஐம்புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்கவேண்டுமே தவிர அவை இழுக்கும் இழுப்புக்கு நாம் போய் விடக்கூடாது. இது ஆறாவது படி.

ஏழாம் படி : ஞான யோகம்

இந்த உலகில் காண்பவை எல்லாம் பிரம்மம் தான். எல்லாமே கடவுள் தான் என்று உணர்த்துவதே இந்த படி.

எட்டாம் படி : அட்சர பிரம்ம யோகம்

எந்நேரமும் இறைவனது சிந்தனையைத் தவிர வேறெந்த சிந்தனைகளே இல்லாது இருப்பது.

ஒன்பதாம் படி : ராஜ வித்ய, ராஜ குஹ்ய யோகம்

கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பலனில்லை. சமூகத்தொண்டு செய்து ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பது தான் உண்மையான பக்தி, உண்மையான ஆன்மீகம் என்று உணர்வதே ஒன்பதாம் படி.

பத்தாம் படி : விபூதி யோகம்

அழகு, அறிவு ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவேக் காண்பது விபூதி யோகமாகும்.

பதினொன்றாம் படி : விஸ்வரூப தரிசன யோகம்

ஆண்டவனில் உலகத்தையும் உலகினில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவமே இந்த யோகம்.

பன்னிரெண்டாம் படி : பக்தி யோகம்

இன்பம், துன்பம், விருப்பு வெறுப்பு ஏழை பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவாற்றிலும் சமத்துவத்தை விரும்புபது இந்த படியின் தத்துவம்.

பதிமூன்றாம் படி : க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்

எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை இந்த படி கூறுகிறது.

பதினான்காம் படி : குணத்ர விபாக யோகம்

பிறப்பு இறப்பு, மூப்பு இவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி இறைவனின் முழு அருளுக்கும் பாத்திரமாவதே இந்த படியின் தத்துவம்.

பதினைந்தாம் படி : தெய்வாகர விபாக யோகம்

தீய குணங்களை ஒழித்து நல்ல குணங்களை மட்டுமே வளர்த்துக் கொண்டு நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரித்துக் கொள்வதே இந்த படி விளக்குகிறது.

பதினாறாம் படி : சம்பத் விபாக யோகம்

இறைவனின் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து ஆணவம் வராமல் கவனமுடன் இருப்பதை உணர்த்துகிறது இந்த படி.

பதினேழாம் படி : சிரித்ராத்ரய விபாக யோகம்

சர்வம் பிரம்மமயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தைப் பெறுவது இந்த படி.

பதினெட்டாம் படி : மோட்ச சந்நியாச யோகம்

யாரிடமும், எந்த உயிர்களிடமும், பேதம் பார்க்காமல் உன்னையே சரணாகதியடைகிறேன் என்று இறைவனின் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே நம்புவது பற்றி இந்த படி உணர்த்துகிறது.

சுவாமியே சரணம் ஐயப்பா