“அப்புறம் நாழியாயிடுச்சு’ன்னு எல்லாம் திட்டக்கூடாது. வேலையா கிளம்புங்க”பங்கஜத்தின் வார்த்தைகள் காதில் விழுந்ததும் புயலாய்ப் புறப்படத்தொடங்கினார் சீமாச்சு.
ஆம். அப்படித்தான் எல்லோரும் சீனுவை, சீமாச்சு ஆக்கிவிட்டார்கள். உண்மையில் ஒருகாலம் வரை எல்லோரும் ‘சீனு, சீனு’ என்று தான் அழைத்துக் கொண்டிருந்தனர். பக்கத்து வீட்டிற்கு இன்னொரு சீனிவாசன் குடி வந்தான். அவனுக்கு இவனுக்கும் வித்தியாசம் காண புது சீனு, பழைய சீனு என்று திருநாமம் பெற்றனர். இதனிடையில் இன்னொரு சீனுவும் வர இவர்களுக்குள் வித்தியாசம் கண்டுபிடிக்க வேண்டிய வரலாற்றுத் திருப்பம் நேர்ந்தது. இதனால் அவர்களை புது சீனுவை பழைய சீனுவாக்கி விட்டு, இவனுடைய அப்பா அச்சுதன் பேரையும் சேர்த்து இவனை அச்சுதனாத்து சீனுவாக்கி பின்னர் ஒரு சுபயோக சுபதினத்தில் ’சீமாச்சு’ என்றே ஆக்கிவிட்டனர்.
சரி. நேரமாச்சு. நாம் இரயிலை பிடிக்க கிளம்புவோம்..ஒரு வழியாக சீமாச்சும் பங்கஜமும் ரயில் நிலையத்திற்கு புறப்பட்டார்கள். அரக்கோணம் இரயில் நிலையம் ஒன்று அதிவிருஷ்டி அல்லது அனாவிருஷ்டி. மைசூர் போகும் இரயில்கள் எப்போதும் நள்ளிரவிலேயே வரும். பலவும் திரும்புகையில் விடிந்தே வரும்.
சீமாச்சுவிடம் சிறந்த குணம் உண்டு. முதலில் பயணத் தேதியைப் பார்ப்பார், பிறகு நேரத்தை பார்ப்பார், பிறகு இரயிலின் பெயரைப் பார்ப்பார். அந்த இரயில் அந்த ஊர் தான் செல்கிறதா? என்று பார்த்துக் கொள்வார்
வழக்கத்துக்கு முன்பாகவே இரயில் நிலையத்துக்கு வந்து விட்டார். இரயில் நிலையம் ஏனோ வெறிச்சோடி கிடந்தது. நடுநிசியில் பின் எப்படி இருக்கும்? ஆற அமர இரயில்வே நடைமேடையை நோட்டமிட்டுக் கொண்டு வந்து சேர்ந்தார்.
ஒரு வழியாக இரயில் முதல் பிளாட்ஃபார்மில் ’கிரிச்’சென்று சப்தம் செய்து நின்றது. ’பி ஒன்’ கோச்சில் சென்னை செல்லும் இவர்களுக்காக இருக்கை எண்கள் 62ம், 63ம் ஒதுக்கப்பட்டிருந்தது. இரயிலில் ஏறி அவர்களது இருக்கையை அடைந்தார்கள். அவரது இருக்கைகளில் ஏற்கனவே பயணிகள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர்.
அதிர்ந்து போன சீமாச்சு மெல்ல அவர்களை எழுப்பினார். அவர்கள் எழுந்திருப்பதாக இல்லை. கொஞ்சம் சிரித்து பார்க்கிறார். அவர் சிரிப்பதாக இல்லை. இது என்னடா பாதி ராத்திரியில் ஒருத்தன் நம்ம பிராணனை வாங்குகிறானே என நினைத்திருக்கலாம். சீமாச்சு உரிமைக்குரலுக்கு முனைகிறார்.
சார், இது பி1 கோச்சு தானே.
ஆமா
இது சீட் 62 தானே
ஆமாம் அப்படின்னா, ’இது என்னோட சீட்டு’ என சீமாச்சு சத்தம் போடத் தொடங்குகிறார்.
ஏன்யா பாதி ராத்திரியிலே எழுப்பி பிராணனை வாங்கறே. நான் மெட்ராசிலிருந்து மைசூர் போறேன். ’நாங்களும் மைசூர்தான் போறோம்.’ இது சீமாச்சு இவர்களின் வாக்குவாதமும் அதிகமாகவே,அங்கு டி.டி.இ. ஆஜரானார்.
இருவருடைய பயண சீட்டையும் அவர் பார்த்தார்.
சீமாச்சுவிடம், ’சார் உங்க ட்ரெயின் நேற்றே போயிடுச்சு’ என்கிறார்.
சீமாச்சுவுக்கு தூக்கி வாரிப் போட்ட்து. அது எப்படி நான் வராமல் என் ட்ரெயின் போகும்?
சீமாச்சுவை டிடிஆர் ஆசுவாசப்படுத்தினார். இந்த ரயிலில் வருபவர்கள் எப்போதும் பண்ணும் கோளாறு தான் இது. இந்த இரயில் இரவு 12 மணிக்கு 20 நிமிடத்திற்கு புறப்படுவதால், நீங்கள் இன்றைய தேதி போட்டு தான் முன்பதிவு செய்து இருக்க வேண்டும். பலரும் செய்வது போல் நீங்கள் நேற்றைய தேதியில் முன்பதிவு செய்துள்ளீர்கள்.
சீமாச்சு அசடு வழிந்து கொண்டு நின்றார்.
’சரி, சரி. உங்க நல்ல நேரம் வண்டி காலியாத்தான் இருக்கிறது. பெனால்டி கட்டிட்டு பயணத்தை தொடருங்க.’என்றார் அவர்.
அப்பாடா’ என்று பணம் எடுக்க பர்சைத் துழாவினார் சீமாச்சு.பங்கஜம் அவரை ஒரு முறை முறைத்தார்.அசடு வழிஞ்சார் சீமாச்சு அவளைப் பார்த்து.கெடச்ச இடத்துல உட்கார்ந்தார். இரயில் புறப்பட, இவர் குறட்டை விட ஆரம்பித்தார். அவர் முகத்தையே கொஞ்ச நேரம் பார்த்து கொண்டிருந்த பங்கஜம் அவருடைய தோளில் சாய்ந்து தூங்கத் தொடங்கினாள்.
Leave a comment
Upload