இராம நாமம் எங்கு ஒலிக்கிறதோ அங்குப் பிரசன்னமாகி விடுவார் ஸ்ரீ ஆஞ்சநேயர். ஒரு முறை ‘ராம’ என்று சொன்னால் அது ஒரு சகஸ்ர நாமம் (1008 ) தடவைகள் சொன்னதற்குச் சமம் என்று சிவபெருமான் விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உத்தர பாகத்தில் கூறியிருக்கின்றார். இவர் சிவபெருமானின் அவதாரம் என்று கூறப்படுகிறது. ஆஞ்சநேயர் வாயு பகவானுக்கும் அஞ்சனா தேவிக்கும் மகனாகப் பிறந்து இன்றும் சப்த சிரஞ்சீவிகளில் ஒருவராக வாழ்ந்து வருகிறார். இவரை வாயுபுத்திரன், ஆஞ்சநேயர், அனுமன், மாருதி, ராமபக்தன் என்றெல்லாம் அழைக்கின்றோம்.. பெருமாள் கோயில், இராமர் கோயில்கள் மட்டுமின்றி சில இடங்களில் ஆஞ்சநேயருக்குத் தனியாகவும் கோயில்கள் உள்ளன. இது தவிர சில இடங்களில் ஐந்து முகங்களுடன் கூடிய பஞ்சமுக (ஐந்து முகம்) ஆஞ்சநேயராகவும் அருள்பாலிக்கிறார். ஐந்து என்கிற எண் மிகவும் விசேஷமானது. பஞ்சபூதங்கள், பஞ்சாட்சர நாமம், பஞ்ச வேள்விகள், பஞ்ச இந்திரியங்கள் எனப் பல சிறப்புகள் ஐந்து என்கிற எண்ணுக்கு உண்டு. ஐந்து முகங்களைக் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்த ஓர் அவதாரம். அனுமன் முகம், நரசிம்ம முகம்,கருட முகம், வராக முகம், ஹயக்ரீவ முகம் என ஆஞ்சநேயர் ஐந்து முக வடிவில் ஒருங்கிணைந்து உள்ளதே பஞ்சமுக ஆஞ்சநேயர். இந்த பஞ்சமுக ஆஞ்சநேயரின் ஒவ்வொரு முகத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு.
பஞ்சமுக ஆஞ்சனேயரை வழிபடுவதன் மூலம் சொல் வன்மை, ஆரோக்கியம், எதிரிகள் விலகுதல் என அனைத்து நலன்களும் உண்டாகும்.
இராமாயணத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர்:
இராம - இராவண யுத்தத்தில் இராவணன் தோல்வி அடையப்போகும் சமயத்தில் அவனைக் காப்பாற்ற மயில்இராவணன் ஒரு யாகம் செய்தான். அந்த யாகமானது தடங்கல் இல்லாமல் முடிந்து விட்டால் இராமர், லக்ஷ்மணர் அழிந்து விடுவார்கள். அதனால் ஆஞ்சநேயர் இராமனின் உத்தரவு பெற்று மயில்இராவணனின் யாகத்தைத் தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர், ஹயக்ரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார். இந்த தெய்வங்கள் ஒருசேர அனைவரும் போரில் ஆஞ்சநேயர் வெற்றி பெற தங்களின் உருவ வடிவின் சக்தியை ஆஞ்சநேயருக்கு அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மயில்இராவணனை அழித்தார். இப்படி பஞ்சமுகத்தில் அவதாரம் எடுத்ததால், அவர் பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளை எல்லாம் தீர்த்து வைக்கும் அருளாற்றலை பெற்றார்.
பஞ்சமுக ஆஞ்சநேயர் வழிபாட்டுப் பலன்கள்:
பஞ்சமுக ஆஞ்சநேயரின் தெற்கு திசை நோக்கிய நரசிம்ம முகம் - எதிரிகளால் ஏற்படும் பயத்தைப் போக்கும்.
மேற்கு திசையை நோக்கிய கருட முகம் - விஷ ஜந்துக்களால் வரும் சரும நோய்களைப் போக்கும்.
வடக்கு திசையை நோக்கிய வராக முகம் - தீராத கடன், பொருள் இழப்புகளைத் தடுக்கும்.
மேல்நோக்கிய ஹயக்ரீவர் முகம் - கலைகளில் சிறந்த ஞானம், கல்வி வளம் தரும்.
கிழக்கு திசையை நோக்கிய அனுமன் முகம் - பாவங்களை நீக்கி, மனதை தூய்மைப்படுத்தும்.
பஞ்சமுக ஆஞ்சநேயரைச் சனிக்கிழமைகள் மற்றும் ஏகாதசி நாட்களில் வழிபடுவது சிறப்பு.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில்கள்:
பஞ்சமுக ஆஞ்சநேயர் மந்திராலய மகானான ஸ்ரீ ராகவேந்திரா தீர்த்தரின் உபாசனை தெய்வமாகத் திகழ்கிறார். அவர் பஞ்சமுக ஆஞ்சநேயரை நினைத்து தியானம் செய்த இடம் பஞ்சமுகி என அழைக்கப்படுகிறது. அங்குப் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கும்பகோணத்திலும் பஞ்சமுக ஆஞ்சனேயர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளூருக்கு அருகில் உள்ள பெரிய குப்பம் கிராமத்தில் 32 அடி உயரமுள்ள பிரம்மாண்டமான ஸ்ரீ விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. புதுச்சேரி அருகே பஞ்சவடி எனும் ஊரில் 36 அடி உயரத்தில் அமைதியான ஐந்து முகங்களுடன் நின்ற திருக்கோலம், 118 அடி இராஜ கோபுரம், அதன்மீது 5 அடி உயர கலசம், 1,200 கிலோ எடையுள்ள பிரமாண்ட மணி என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்ட ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் பிரசித்தி பெற்றது.
பஞ்சமுக ஆஞ்சநேயரை வழிபட்டு நற்பலன்களைப் பெறுவோம்!!
Leave a comment
Upload