புஷ்பா 2 . முந்தைய படங்களின் வசூலை முறியடித்திருக்கிறது.
அது ஒரு புறம். ஆனால்......
ஒரு சில விஷயங்களுக்கு எப்போதுமே மனம் தாயாராவதில்லை. மனைவி சொன்னதற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் கணவன். பெண்களுக்கு மரியாதை கொடுப்பதாக சொல்லும் படம். கொடுக்கிறார்களா?
கட்டாயமாக இல்லை.
பொதுவாகவே தெலுங்கு படங்களில் பெண்களை ஒரு போக வஸ்துவாக காட்டுவது என்பது பழக்கமாகிவிட்டது. தமிழில் இல்லையா என்று கேட்டால், இருக்கிறது சற்று குறைவாக என்று சொல்லலாம்.
கட்டாயமாக ஒரு ஐட்டம் பாட்டு வேண்டும், அதற்குண்டான வரைமுறைகளை அவர்களே போட்டுக்கொண்டு ஒவ்வொரு படத்திலும் அவர்களே மீறுகிறார்கள். உம் சொல்றயா மாமா போலத்தான் இந்த படப் பாடலும்- சங்கடப் படுத்துகிறது.
படம் முடிவில் ஒரு பாலியல் பலாத்கார காட்சி வரும் அதில் வரும் காட்சியும், வசனமும் trigering points. வக்கிரத்தின் உச்ச கட்டம்.
இதை எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு படத்தை எப்படி கொண்டாட முடிகிறது என்று தெரியவில்லை.
நாம் எது எதற்கோ பழகி கொள்கிறோம். மனமும் மரத்து தான் போகிறது. எல்லா படமும் இப்படித்தான், இதுல மட்டுமான்னு கேட்டு கேட்டு வரம்புகளை மீறிக்கொண்டே இருக்கிறோம். மனநலத்தைப் பற்றி நிறைய பேசுகிறோம்.
காட்சியின் உச்ச கட்ட வரம்பு மீறல்கள் எங்கேயோ யாரையோ காயப்படுத்துகிறது. பாலியல் பலாத்தகாரத்தை காண்பிக்கும் பொழுது பொறுப்புடன் நடக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
பணம் மட்டுமே குறியாக இருப்பவர்களுக்கு இது எதுவுமே இல்லை என்று தான் தோன்றுகிறது.
இந்த கட்டுரையில் நான் யார் பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால் வசனத்தைப் பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை.
தெலுங்கில் ஸ்ரீகாந்த் விசா, தமிழில் மதன் கார்கி. "ஒரு லட்சம் ரூபாய் குடுத்தால், ஹை கிளாஸ் வேசி தன் ஆடைகளை கலைவாள்."(நாகரீகம் கருதி வார்த்தைகளை மாற்றி இருக்கிறேன் ) இது தெலுங்கில் எப்படி இருந்தது என்று தெரியவில்லை.
தமிழில் கேட்கும் போது, ஆண்பாலில்லாத சில வார்த்தைகள் ஒரு ஆண் உபயோகப்படுத்திடும் பொழுது, அதுவும் அந்த காட்சியில் சொல்பவரும் ஒரு பாலியல் தொழிலாளியுடன் தான் இருப்பார்,
கோபம் வருகிறது. மறுபடியும், இது புதுசா என்ன என்று கேட்பவர்களுக்கு - பழக்கப்பட்டதுனாலேயே தவறு சரியாகிவிடாது. சினிமா அரங்கத்தில் பெரும்பாலும் இளைஞர்கள். நாம் சொல்லும் கதை ஒரு கொள்ளைக்காரன் பற்றி, அவனைக் கொண்டாடுகிறோம். அதை தடுக்க முயலும் காவல் அதிகாரிகளை வில்லனாக காட்டுகிறோம்.
அதற்காகவே அவருக்கு கொஞ்சம் தீய சாயலும் பூசுகிறோம். மரக் கடத்தலில் காவல் துறையை முட்டாளாக்கும் பொழுது கொண்டாடுகிறோம்.
கொஞ்சம் கூட சுய மரியாதை இல்லாமல் எல்லோரும் பணத்திற்கு அடிமையாகிறார்கள். கோடிக்கணக்கில் பணம் புரள்கிறது.
அவர்கள் காட்டுவது என்ன உலகம் என்று புரியவில்லை.
தென்னிந்திய கனவுத் தொழிற்சாலை இப்பொழுது சிறந்து விளங்குகிறது. மிகச் சிறந்த திரைப்படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
வாழையும் வேண்டும், விடுதலையும் வேண்டும், மென்மையான மெய்யழகனும் வேண்டும்.
புஷ்பாவையும் கொண்டாடலாம், கொஞ்சம் பொறுப்புடன் நடந்தால்.
பெண்களைப் பொறுத்தவரை புஷ்பா ஃபயர் இல்லை. பெருந் துயர்.
Leave a comment
Upload