சமீபத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், இந்திய மக்கள் திருமணத்திற்காக, சுமார் 36.5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்கிறார்கள் என்று தெரிய வருகிறது. இது முந்தைய வருடத்தை விட, 7 சதவீதம் அதிகரித்துள்ளது. மண்டபம் மற்றும் சாப்பாட்டுக்கான செலவு மட்டுமே 10 சதவீதம் உயர்ந்துள்ளதாம்.
திருமணமென்பது, இரு குடும்பங்களுக்கு இடையே, சொந்த பந்தக்களுக்காக நடந்த காலம் போய், இப்போது, சமூகத்திற்காக நடத்தப்படும் நிகழ்ச்சி என்றாகிவிட்டது. இயற்கையை அனுசரித்து, இலைகளையும் மலர்களையும் வைத்து கலைஞர்கள் செய்த அலங்காரங்கள் இன்று காணாமலே போய்விட்டன.
அந்த காலத்தில் நிகழ்ச்சிக்கு வந்த சொந்தங்கள், தங்கள் வீட்டு நிகழ்ச்சியெனும் அளவிற்கு அனைத்திலும் பங்கெடுத்து உறவாடி மகிழ்ந்தனர். வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் செய்துபார் என்ற பழமொழியின் உண்மையை அறிந்து, குறைகளை கண்டுகொள்ளாமல் சென்றனர். கல்யாண விருந்தை சமைப்பதிலும் பரிமாறுவதிலும் பங்கேற்றதால், எத்தனை வகை இருந்தன என்றோ, எப்படி இருந்ததோ என்றெல்லாம் கவலைப் பட்டதேயில்லை. அன்று, ஒரு வாரம் முன்பே வந்து கலந்து கொண்ட அனைத்து சொந்தங்களுக்கும், ஊர் திரும்பும்போது வழியில் பசியாற பலகாரங்களை கட்டிக் கொடுத்தனர் மணவீட்டார். இன்று அப்பழக்கம் ஒரு சம்பிரதாயமாக மாறிவிட்டது.
பந்தியில், அண்ணன், மாமா, சித்தப்பா, பெரியப்பா என ஒரு உறவினர் பரிமாறுகையில் கிடைத்த உபசரிப்பே அலாதியானது. ஒரு பொரியலில் உப்பு சரியான அளவில் இல்லை என்பதைகூட உணர முடியாத அளவிற்கு சம்பாஷனைகள் கலகலக்கும். “டேய் கணேசா, என் மாப்பிள்ளைக்கு ஒரு ஜிலேபி கொண்டுவா” என ஒருவர், அவர் சாம்பாரை பரிமாறிக்கொண்டு செல்லும்போது உரக்கச் சொல்வதையெல்லாம் இனி கேட்கவே முடியாது.
ஆடம்பரம் என்பது அத்தி பூத்தது போல் இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்த காலம் போய், இப்போது சமூக நிர்பந்தமாக கருதப் படுகிறது. இரு வீட்டாரும் சேர்ந்து அச்சிட்டு விநியோகித்த மங்களகரமான பத்திரிக்கைகள் இன்று குலதெய்வக் கோவிலில் வைப்பதற்காக மட்டுமே அச்சிடப்படுகிறது. இரு குடும்பத்தினரும் தனித்தனியே தயாரிப்பது மட்டுமின்றி, மணமகனும், மணமகளும் கூட அவர்கள் சார்பில் தனித்தனியே தயாரித்து விநியோகிக்கிறார்கள். தன்னுடைய பத்திரிக்கை தனித்துவம் வாய்ந்ததாகவும் பிரமாண்டமாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தால், அதிலும் தேவையற்ற ஆடம்பரம் அவசியமாயிற்று. பத்திரிக்கையில் தொடங்கி, விருந்தினருக்கு கடைசியாகக் கொடுக்கும் தாம்பூலப் பை வரை, அனைத்திலும் ஆடம்பரம் என்பது காலத்தின் கட்டாயமாகி விட்டது.
மணமக்களின் வீட்டிலோ அல்லது வீட்டின் அருகில் உள்ள மண்டபத்திலோ திருமணத்தை நடத்தும் வழக்கம் மாறி விட்டது. டெஸ்டினேஷன் திருமணம் என்ற பெயரில் ஒரு சிறந்த சுற்றுலா தலத்திலோ அல்லது கடற்கரை அருகே உள்ள ஒரு சொகுசு மாளிகையிலோதான் திருமணம் வேண்டுமென்கிறார்கள். இதற்காக, இரு வீட்டார் குடும்பத்தினருக்கும், அங்கே உள்ள அனைத்து அறைகளையும் வாடகைக்கு எடுக்க வேண்டியிருக்கும். வாழ்க்கையில் முக்கியமான ஒன்றான திருமணத்தின் சில தருணங்களை புகைப்படம் எடுத்துக் கொள்வது, அந்த வசதி இருந்தவர்களால் முடிந்தது. அந்நாளிலேயே அது ஆடம்பரமாக கருதப்பட்டாலும், அதற்கான செலவு ஒரு வரம்புக்குள்ளாகத்தான் இருந்தது. இன்றோ, புகைப்படம் மற்றும் வீடியோவின் செலவு கணிசமாக உயர்ந்து விட்டது. அது மட்டுமல்ல. அவர்கள்தான் திருமணத்தையே நடத்தி வைப்பவர்கள்போல் எதை, எப்படி செய்ய வேண்டுமென்று சொல்லிக் கொண்டு இருப்பார்கள். மணமேடையில் என்ன நடக்கிறது என்பதை விருந்தினர்கள் சிலசமயம் பார்க்கக்கூட முடியாத அளவிற்கு, அவர்கள் சூழ்ந்துகொண்டு நிற்பார்கள்.
திருமணத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே, வழக்கமாக துணிமணிகள் வாங்கும் கடையிலேயே வாங்கி, குடும்ப தையல்காரரிடம் தைத்து உடுத்திய காலம் மாறி, இப்போதெல்லாம் டிசைனர் ஆடைகள் என்று வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே அணியும் படியான ஆடைகளைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். மணமக்கள் மட்டுமல்ல, அவர்கள் வீட்டாரும்தான். மற்ற சிறு நிகழ்ச்சிகளான மஞ்சள், மருதானை, சங்கீதம் என ஒவ்வொன்றுக்கும் ஏற்றவாறு குடும்பத்தினர் அனைவரும் ஆடைகளில் செலவு செய்கிறார்கள்.
மண்டபத்தின் நுழைவாசலில் எல்லோரையும் வரவேற்க நின்ற சொந்தங்களை காணவில்லை. மாறாக, சீருடை அணிந்த பணியாளர்கள்தான் நிற்கிறார்கள். பணியாளர்கள் எங்கிருந்து வந்தார்கள் என நீங்கள் கேட்கலாம். சில நாட்கள் முன்னமே வந்திருந்து, கல்யாண வேலைகளில் பங்கேற்க சொந்தங்களுக்கு நேரமில்லை. சரியாக முகூர்த்த நேரத்தில் வந்து மணமக்களை வாழ்த்திவிட்டு மதிய விருந்து வரை கூட இருக்காமல் செல்கிறார்கள். “எல்லா பொறுப்பையும் எங்களிடமே விட்டுவிடுங்கள்; உங்கள் வீட்டுத் திருமணத்திற்கு நீங்களும் விருந்தினர் போல வந்து செல்லுங்கள்” என்று விளம்பரப் படுத்திக் கொண்டு பல நிறுவனங்கள் வந்து விட்டன. அவர்களின் பணியாளர்கள்தான் இப்போதெல்லாம் வரவேற்பில் நிற்கிறார்கள்.
புதுமை என்ற பெயரில், புரோகிதர்களும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். கிரிக்கெட் போன்ற விளையாட்டில் வரும் நேர்முக வர்ணனை போல, அவர்கள் நடத்தும் சடங்குகளையும் வர்ணிக்கிறார்கள். நான் கடைசியாகச் சென்ற திருமணத்தில், அவர் மணமகளுக்கு, காலை 10 மணிக்கு, வானமே தெரியாத குளிரூட்டப்பட்ட மண்டபத்தின் மேற்கூரையை காட்டி, அருந்ததி நட்சத்திரத்தை காட்டுவதாக கூறினார். இதை விட அபத்தம் வேறு இருக்குமா?
கடைசியாக, விருந்திலும் புதுமை என்ற பெயரில் பல அபத்தங்கள் அரங்கேறுகின்றன. வாய்க்கு ருசியாக, வயிறார பரிமாறுவோம் என்ற எண்ணம் போய், எத்தனை வகைகள் வைத்தோம், என்னென்ன புதுமையாகச் செய்தோம் என்றுதான் விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள். அமாம், சமையல் ஒப்பந்தக்காரரின் விளம்பரத்தில் இருந்து உங்களால் தப்பிக்கவே முடியாது. ஆறுவகை காய்கறிகள் என்பார்கள். ஊறுகாய் வைக்கும் அளவிற்கு காட்சி பொருள் போலத்தான் ஒவ்வொன்றையும் பரிமாறுவார்கள். பிடித்த ஒன்றை மறுபடியும் கேட்டு பெறுவதற்குள் பந்தியே முடிந்துவிடும்.
வெற்றிலை, தேங்காய், குங்குமம் என்றிருந்த தாம்பூலப்பையில் இன்று மெழுகுவர்த்திகளும் சாக்லேடுகளும் வருகிறது.
இப்படி ஒவ்வொன்றிலும் புதுமை, பகட்டு, அந்தஸ்து என அனத்துமே, திருமண செலவை தேவையிலாமல் அதிகரிக்கிறது. இதனால் எத்தனை பேருக்கு வாழ்வாதாரம் கிடைக்கிறதென்று ஒரு சாரார் வாதிடுவார்கள். ஆடம்பரம் தேவையில்லை என நினைத்தால், கருமி என முத்திரை குத்திவிடும் இந்த சமூகம் இன்று. அதற்கு பயந்தே அனைவரையும் ஒருவித கட்டாயத்தில் நிறுத்திவிடுகிறது இன்றைய சமூகம்.
உறவுகள் சேர்ந்து கொண்டாட வேண்டிய தருணத்தில், அந்த உறவுகளுக்குமுன், தன் சமூக அந்தஸ்த்தை எடுத்துக்காட்ட வேண்டிய நிலைக்கு மணமக்களின் பெற்றோர்களை நிறுத்திவிட்டோம். அதனால்தான் இன்று, ஒரு திருமணத்திற்கு ரூ 36 லட்சம் தேவைப்படுகிறது. வரவுக்கும் மீறி செலவு செய்யவேண்டிய நிர்பந்தத்தை சில குடும்பங்கள் சந்திக்க நேரிடும் என்பதில் சந்தேகமில்லை.
Leave a comment
Upload