"மாணிக்கம் ஷாப் கடை" என்ற பெயர் பலகை தொங்கும் சிறிய கடை, கடையை மறைத்து இரு பக்கமும் வாழைப்பழத்தாறு தொங்கும். ஒரு நீளமான பலகை கல்மீது வைக்கப்பட்டு அதில் நாளிதழ்கள் சிதறி கிடக்கும் வாசலில் ஒரு புங்கைமரம், கிராமம் என்று சொல்ல முடியாத ஒரு பகுதியின் கடைக்கோடிக் கடை.
காலை பத்துமணி முதலே ஆள் நடமாட்டம் இருந்துக்கொண்டே இருக்கும் பகுதி. எழுநூறு மீட்டர் தொலைவில் முன்பகுதி மட்டும் பணையோலையால் குடிசையாக வேயப்பட்ட கல் வீடு, அதுதான் இப் பக்கம் வருபவர்களில் பெரும்பாலானவர்களின் இலக்கு. அதுதான் விஜயாவின் வீடு. கணவனை இழந்தவள் பத்துவயது மகனுடன் வாடகைக்கு குடியேறினாள் ஒரு வருட முன்பு.
கணவனின் இருபது வருட உழைப்பிற்குக்குப்பின், தானும் அவனின் முதலாளியிடத்தில் உழைத்து வாழ்க்கையில் கரையேறிவிடலாம் என்று நினைத்திருந்தவளை தன் இச்சைக்கு வலியுறுத்தி கறைபடுத்திய பின் கழட்டியும் விட்டார் முதலாளி.
சே! யோக்கியன் என்று உலகில் எவனுமில்லை, நான் மட்டும் யோக்கியவளாக வாழ்ந்து என்னவாகப் போகிறது ? உடம்பு வாழ்வதற்கு ஏன் கஷ்டப்பட வேண்டும் என நினைத்தவள் பின்னாளில் அதையே முதலீடாக மாற்றிக்கொண்டு விட்டவள்.
மகன் வாழ்க்கையாவது நல்லபடியாக இருக்கவேண்டி ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே அதிக கட்டணமாக இருந்தாலும் பராவாயில்லை என வெளியூரில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் தனது உழைப்பை மட்டுமே நம்பி விடுதியிலும் சேர்த்து விட்டியிருந்தாள்.
"என்ன மாணிக்கம் ? முதல் போணியாயிடுச்சா ? என கேட்டபடி வந்த கதிரிடம் ஆயிட்டு ஆயிட்டு என்றதும், யாரு வந்தா ? என கேட்டதும் தான் மாணிக்கத்திற்கு புரிந்தது அவன் கடையை கேட்கவில்லை என.
"எனக்கு என்ன இதே வேலையா ? எவன் போறான் வறான் என்று திட்டினார்.
ஏன் கோபம் ? தமாசு என்ற போதே கதிரின் நண்பன் சோமு வந்து சேர "என்ன மாப்ள போறீயா ? போ...போ... என வழியனுப்பினான்..
போங்கடாப் போங்க! காஞ்சப் பயலுவலா! என மாணிக்கமும் சொல்ல, ஏன் நீ மட்டும் போகமாட்டியோ? என கேலிப் பேசினர்.
நான் ஏண்டா போறேன் அங்கே ? உங்களை மாதிரி இல்லடா நானு ? எதற்கு வெட்டிப்பேச்சு என கடையிலிருந்து அவர்களை விரட்டுவதிலே உறுதியாக இருந்தார் மாணிக்கம். இப்படிதான் தினமும் ஐந்தாறு நபர்களாவது வந்து காத்திருந்துப் போவது வழக்கம். மாணிக்கம் மட்டும் விதி விலக்கு.
"அண்ணே, இந்த பணத்தை எம் புள்ளை படிக்கிற ஸ்கூலுக்கு கட்டணும்னே, நான் வேணா உனக்கு வழிச்செலவிற்கு பணம் தாறேன் கொஞ்சம் டவுன் போயி கட்டிவிடுங்கணே"என கெஞ்சினாள் விஜயா
கையில் வாங்கியத் தொகையெல்லாம் நூறு, மற்றும் இருநூறு ரூபாய் நோட்டாக இருப்பதைக்கண்டு கணத்த இதயத்துடன் வாங்கிய மாணிக்கம். "சரி, நான் கடைக்கு பொருட்கள் வாங்க போகும்போது கட்டிவிடுகிறேன், “ஏம்மா நீ வேற ஏதாவது வேலைக்குப் போகலாமே ஏன் இதைப்போய் செய்யறே?” என கரிசனத்துடன் கேட்டபொழுது,
சின்ன வயசிலேயே பொட்டையும் பூவையும் இழந்துட்டதாலே சக மனுஷியா யாருண்ணே பார்க்கிறா ? எங்கே போனாலும் இதே நிலைமைதான், அதற்கு இப்படியே இருந்திடலாம்னுதான் என்று தன் மனக்குமறலை வெளிப்படுத்தி தன் வார்த்தைகளால் சமூகத்தை காரி உமிழ்ந்தாள்.
எத்தனையோ ஆண்கள் அவளிடத்திற்கு வந்துபோக மாணிக்கம் மட்டும் வராததினாலேயே அவனிடத்தில் ஒருவித மரியாதை மட்டும் இருக்கிறது.
அங்கே செல்பவர்கள் எவரும் மாணிக்கத்தின் கடைக்கு செல்லாதவரில்லை, அவனை நீயும் ஒரு நாள் போவாய் என்றும் இல்லையென்றால் நீ ஆம்பளையே இல்லை"எனவும் கேலி பேசாதவார்களில்லை.இவையெதையும் மாணிக்கம் பொருட்படுத்தியதும் இல்லை.
இரண்டு நாளாக ஒருவரையும் காணோம் என்னவாகவிருக்கும் என யோசித்துக்கொண்டியிருந்த மாணிக்கத்திற்கு வாழைப்பழம், தேங்காய் வேண்டுமென வந்த கோயில் குருக்கள் போகும்போது சொன்னார் சிவராத்திரி நாளைக்கு என்று.
அடடே! நாளும் கிழமை வந்தால் பொல்லாதவன் கூட நல்ல மனுசனாயிடுவதால் பக்தர் ஒருவரையும் இந்த பக்கம் காணலை என்று யோசித்த மாணிக்கம், ஆனாலும் விஜயாவையும் வெளியே காணலையே என்று நினைத்தவர் மாலை அவளது வீட்டிற்கு பார்த்துவரச் சென்றார்.
கடும் காய்ச்சலில் முனகிக் கொண்டியிருந்தவளை கூப்பிட்டுப் பார்த்தவர், மருத்துவமனைக்கு அழைத்துப்போக நினைத்து வீட்டிலிருந்து வெளியே வரும் நேரத்தில் சோமுவும் கதிரும் பார்த்துவிட
"என்ன மாணிக்கம், போணியாகாத நாளாகப்பார்த்து நுழைஞ்சுட்டே இல்லே, அந்த பேச்சு பேசினே?! என நக்கலடித்தானர்..
சே! நாயே! கம்முன கட, கடும் காய்ச்சல் கண்டு முடியாமல் படுத்திருக்கா. சோமு.. கொஞ்சம் அவளை ஆஸ்பத்திரி வரைக்கும் கூட்டிகிட்டு போயிட்டு வாயேன் என்றதும்,
ஏய்! என்ன ? உனக்கு அக்கறையாக இருந்தா நீ போ, இந்த வேலையெல்லாம் செய்கிறதைப் பார்த்தால் ஊரிலே அசிங்கமா போயிடும்" என்று மறுத்தான் சோமு. கதிரு நீயாவது ஆட்டோ எடுத்துகிட்டு வாய்யா, கொஞ்சங்கூட நன்றி உணர்ச்சியில்லையா என்றான் மாணிக்கம்.
நன்றியா ?? சும்மாவா போனோம் ? என கேட்டதோடு சென்றார்கள்.
ஆட்டோ ஒன்றை வரவழைத்த மாணிக்கம், அவளைத் தூக்க முயன்றான். அதுவரை சூடாக இருந்த உடல் சில்லிட்டுப் போயிருந்தது. மகனுக்கும் ஊருக்கும் தகவல் சொல்லிவிட்டு விஜயாவின் மகனின் வருகைக்காக காத்திருந்தான் ராத்திரி முழுவதும் சவத்தோடு.
சவமானதற்குப் பிறகுதான் எந்த தொந்தரவுகளுமின்றி உறங்குகிறாள் பாவம்.
Leave a comment
Upload