முளை விடும்போதே நான் இலக்கியக் கொழுந்து என்ற எண்ணம். வயசுக்கு மீறிய கதைப்புத்தகங்களை விடாது வாசிப்பது, அண்ணனின் புத்தகங்களைப் படிப்பது, கதை, நாடகம் என எழுதி இயக்குவது என்று கருவிலே திருவாகும் யத்தனம் இருந்தது. இலக்கியக்காரர்களின் தொடர்பும் அந்த சிறுவயதில் ஊக்கமளித்தது.
புதுமைப் பித்தன், விந்தன், விக்கிரமன் என்ற புனைப் பெயர்கள் வசீகரமாக ஈர்த்தன. ஏழாம் வகுப்பு எட்டாம் வகுப்பு படிக்கையிலேயே நானும் ஒரு புனைப்பெயரில் புகுந்து கொண்டாலென்ன என்ற ஆவல் மேலிட்டது.
முதலில் புனைப்பெயர் வைத்துக் கொண்டு அப்படியே இலக்கியவாதி ஆகிவிடலாம் என்று முடிவெடுத்திருந்தேன்.
நான் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆதலால், புனைப்பெயரில் ‘அன்பு’ இருக்க வேண்டும் என்பது முதல் தீர்மானம். மோகனமாக இருப்பதால் எழிலன் என்றும் சேர்த்துப் பார்த்தேன்.
அட! ‘அன்பெழிலன்’ ஆகி விட்டேன்.
சந்திரா ‘அன்பரசன்’னு வச்சிக்கோ மோகி! என்று சொல்லியிருந்தாள். அந்தப் பெயரும் பரிசீலனையில் இருந்தது.
கடலூர் லைப்ரரி கையெழுத்து பத்திரிகையில் இந்தப் பெயரில் ஒன்று அந்தப் பெயரில் ஒன்று என்று கவிதைகள் எழுதி வந்தேன்.
‘கெடிலத்து ஆஞ்சனேயா! கேட்டாயா சங்கதி!’ என்று மிரட்டல் கவிதைகள் ரசிக்கப் பட்டன.
ஒரு ஆறுமுகம் ‘சபஷ்!’ என்று காலை ஒடித்து கருத்திட்டிருந்தார்.
ஆர்வக் கோளாறு…. எனது எட்டாம் வகுப்பு தமிழ்க் கட்டுரை நோட்டில் என் பெயரை
‘கு. மோகன் (அன்பெழிலன்)’ என்று எழுதி வைத்திருந்தேன். அது எங்க தமிழய்யா தியாகராஜ தேசிகர் கண்ணில் பட்டுவிட்டது.
அந்த சனிக்கிழமை மாலை எங்க ஊர் மைதானத்தில் ஒரு கட்சி பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது.
நானும் இரண்டு நண்பர்களும் பேச்சைக் கேட்கப் போயிருந்தோம். ஒருவர் கரகர குரலிலே வெளிநாட்டு சதி, உள்நாட்டு அரக்கி கன பொளந்து கட்டிக் கொண்டிருந்தார்.
அங்கு நின்றிருந்த தேசிகர் சாரிடம் மாட்டிக் கொண்டேன்.
“என்ன மோகன்? படிக்கிறத விட்டுட்டு இங்கெல்லாம் வரணுமா?”என்று கண்டிக்க, வீடு பார்க்க ஓடினேன்.
அடுத்த நாள் வகுப்பு முடிந்ததும் அழைத்தார்.
“என்னய்யா உன் நோட்டு லேபிள்ல உன் பேரோட அன்பெழிலன்னு சேர்த்து எழுதி வச்சிருக்கே?”
“சார்! அது வந்து…… சும்மா புனைபெயர்னு சேர்த்தேன் சார்”
“இந்த மோகன்கிற பேரு இப்போ ரிப்பேர் ஆகிடுச்சா? புது பேரு வச்சுட்ட?”
“அன்பெழிலன்கிற பேரு அழகான தமிழ் பெயராச்சே சார்…”
“எனக்கே தமிழ் பத்தி சொல்லுறியா? அதிகப் பிரசங்கி!”
“ஐயோ…. அப்படியில்ல சார்! சும்மா ஒரு ஆர்வத்துல வந்து அப்படி”
“பளபளன்னு பேரு வச்சுக்கிறதுல பெருமையில்லே! நல்ல பேரு வாங்குறது தான் பெருமை! பெத்தவங்க பேரைக் காப்பாத்தறது தான் பெருமை! தெரிஞ்சுதா?”
“சரி சார்! சாரி சார்!”
“மீட்டிங்குல்லாம் போற?! எதுனா கட்சி கிட்சின்னு போகப் போறியா? அச்சாரமா பட்ட பேரு புனைபேருன்னு கிளம்பிட்டே..”
“….. இல்ல சார்!”
“உங்க தாத்தாவுக்கு இந்த வம்பெழிலன் பேரு பத்தி தெரியுமா?
“இல்ல சார்…… அவருகிட்டே சொல்லிடாதீங்க சார்!”
“சரி போ! படிப்பை மட்டும் பாரு அன்பெழிலா!”
தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு திரும்பினேன்.
தாத்தா ஏற்கெனவே எனக்கு அப்பளாக்குடுமி வச்சு சிதம்பரம் பாடசாலைல சேர்க்கப் போறேன்னு சொல்லிக்கிட்டுருக்கார். தேசிகர் சார் அவரிடம் போட்டுக் குடுக்காம இருக்கணுமே…
அந்த மாலை பிள்ளையார் கோயிலில் சிநேகிதி சந்திரா எதிர்பட்டாள். அவள் தலைக்கு மேல் ‘விருபாட்சி செட்டியார் உபயம்’ என சிவப்பு பெயிண்டில் எழுதிய குழல் பல்பு ஒளிரத் தொடங்கியது.
“டேய் மோகி! அன்பெழிலனா இல்லை அன்பரசனா? பேரு முடிவு பண்ணிட்டியா? என்று வைத்துக் கேட்டாள் சந்திரா.
“இல்லடி! நான் மோகனாவே இருந்துட்டுப் போறேன்!”
Leave a comment
Upload