சகஸ்ரநாமம், எஸ்.வி.ரங்காராவ், நாகையா வரிசையில் வைத்துக் கொண்டாடப்பட வேண்டிய மிகச் சிறந்த குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ். சில நாள்களுக்கு முன்னால் நடந்த அவரின் சதாபிஷேக வைபவத்தில் (80 வயது பூர்த்தி) கலந்துகொள்ள விரும்பியும் வாய்ப்பில்லாமல் போனவர்களுக்காகவே, சென்னை, மேற்கு மாம்பலம், கிரி தெருவில், டெல்லி கணேஷ் அவர்களின் மருத்துவ நண்பரின் இல்லத்தில், அந்தச் சதாபிஷேகக் கதாநாயகருடனான சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார் என் இனிய நண்பர் என்.சி.மோகன்தாஸ்.
டெல்லி கணேஷின் ஆரம்ப உரை, போட்டோ செஷன், அவரிடம் தங்களின் புத்தகங்கள், பெற்ற விருதுகளைக் கொடுத்து ஆசி பெறுதல் என யாவும் முடிந்த பின்பு, அவரைச் சுற்றி வட்டமாக அமர்ந்துகொண்டு, எங்கள் உரையாடலை அவரின் அறிமுகப் படமான ‘பட்டினப்பிரவேசம்’ படத்திலிருந்து தொடங்கினோம்.
‘பொன் மனம்’ படத்தைப் பார்த்துவிட்டு, அதில் பூர்ணிமாவின் அப்பாவாக நடித்தவர் யாரென்று பிரபுவிடம் கேட்டாராம் சிவாஜி. ‘டெல்லி கணேஷ்’ என்று பிரபு சொல்ல, விரல் அபிநயம் மற்றும் முக பாவனையிலேயே ‘பிரமாத நடிப்பு’ என்று சிவாஜி பாராட்டியதை அதே அபிநய, முக பாவனையோடு டெல்லி கணேஷ் விவரித்தபோது, சிவாஜியையே நேரில் பார்த்த உணர்வு!
பின்னாளில், ‘என் ஆச ராசாவே’ படப்பிடிப்பின்போது, “இதில் டெல்லி கணேஷும் இருக்காரில்லையா?” என்று சிவாஜி போகிற போக்கில் கேட்டுவிட்டுப் போக, அதற்காகவே, அதுவரையில் அந்தப் படத்தில் இல்லாத டெல்லி கணேஷுக்காக அவசர அவசரமாக ஒரு கதாபாத்திரம் உருவாக்கி, அவரை நடிக்க வைத்தது பற்றிச் சொன்னார்.
நடிப்பின் மீதுள்ள தீவிர ஈடுபாட்டால், சிவாஜி கடும் காய்ச்சலோடு கடைசி நாள் படப்பிடிப்பில் வந்து கலந்துகொண்டு நடித்துக் கொடுத்துவிட்டு, தன்னிடம் வந்து கையைப் பற்றி விடைபெற்றுக்கொண்டு போனது பற்றிச் சிலிர்ப்பாகச் சொன்ன டெல்லி கணேஷ், சிவாஜி மறைவு குறித்து விரிவாகச் சொல்ல மனம் சங்கடப்பட்டவராக ‘அதுதான் கடைசி’ என்று முடித்தார். அதிலேயே சிவாஜி எனும் மாபெரும் நடிகரின் இழப்பின் வலி மனசை அழுத்தியது.
ஸ்ரீ ராகவேந்திரர் படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பகிர்ந்துகொண்டார். இந்தப் படத்தில் நடிப்பதற்கான அழைப்பு வரும் என்று வெகு நாளாகக் காத்திருந்தும் வராமல், பின்னர் தன் மனைவியின் தோழி மூலம் மந்த்ராலயத்திலிருந்து ராகவேந்திரர் பிரசாதம் கிடைத்ததற்கு மறுநாள் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடமிருந்து அழைப்பு வந்தது குறித்துச் சிலிர்ப்புடன் நினைவுகூர்ந்தார். ராகவேந்திரரின் முக்கிய சீடர் அப்பண்ணாச்சார்யா வேடத்தில் நடித்தது பற்றிச் சொன்னவர், “அங்கே மந்த்ராலயத்தில் ராகவேந்திரருக்குப் பக்கத்தில் அப்பண்ணாச்சார்யாவுக்கும் தனிச் சன்னிதி உண்டு. ஆனால், ராகவேந்திரரைத் தெரிந்த அளவுக்கு அப்பண்ணாச்சார்யாவை யாருக்கும் தெரியாது. ஆனால், இந்தப் படத்துக்குப் பிறகு, அங்கே உள்ள குருக்கள், வருகிற பக்தர்களிடமெல்லாம் ‘இவர்தான் அப்பண்ணாச்சார்யா. ஸ்ரீ ராகவேந்திரர் படத்தில் டெல்லி கணேஷ் இந்தச் சீடராக வருவார்’ என்று சொல்லி விளக்கிக்கொண்டிருக்கிறார். ஆக, மந்த்ராலயத்திலேயே தினமும் என் பெயர் உச்சரிக்கப்படும்படி செய்துவிட்டார் அந்த மகான்” என்று நெகிழ்ச்சியுடன் சொன்னார் டெல்லி கணேஷ்.
தி.ஜானகிராமனின் கதையான ‘பாயசம்’ (வெப் சீரிஸ்) படத்தில் நடித்தது பற்றிச் சொன்னார். சின்ன வயதிலேயே மகள் விதவைக் கோலம் பூண்டுவிட, அண்ணா பிள்ளை தன் பெண்ணுக்கு ஜாம் ஜாமென்று திருமணம் செய்யும்போது, ஆங்காரம் எழ, பாயச அண்டாவைச் சாய்த்துக் கவிழ்க்கும் காட்சியை அதே ஆங்காரம், வருத்தம், வயிற்றெரிச்சல், கோபம் என அத்தனை உணர்வுகளோடும் அவர் விவரித்தபோது, அந்தத் தகப்பனின் மொத்த குணச்சித்திரமும் எங்களுள் இறங்கியது. தொடர்ந்து பசி, அவ்வை சண்முகி, மைக்கேல் மதன காமராஜன், சிந்து பைரவி என அவரின் அனுபவ உரையாடல் நீண்டது.
பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடுவதை விரும்பாதவர் டெல்லி கணேஷ். அதற்காகவே சமயோசிதமாக அவரை தர்பூசணிப் பழம் வெட்டச் சொல்லிக் கொண்டாடினார் என்.சி.மோகன்தாஸ்.
'பேனாக்கள் சந்திப்பு' என்னும் தலைப்பில் நடந்த இந்தச் சந்திப்பில் கலந்துகொண்ட அனைவரும் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களே!
டெல்லி கணேஷ் நடிகர் மட்டுமல்ல; நூலாசிரியரும்கூட. 'பிள்ளையார் சுழி', 'டெல்லி தர்பார்' என இரண்டு புத்தகங்கள் எழுதியுள்ளார். ஆனால், நான் உள்பட அனைவருமே அவரின் நடிப்பைப் பற்றியும், அவர் நடித்த சினிமாக் கதாபாத்திரங்கள் பற்றியும் மட்டும்தான் அவருடன் கலந்துரையாடினோமே தவிர, மருந்துக்கும் அவர் எழுதிய புத்தகங்கள் பற்றி ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஆக, 'பேனாக்கள் சந்திப்பு' வெறுமே ரசிகர்கள் சந்திப்பாக மட்டுமே அமைந்ததில், எனக்குக் குற்றவுணர்ச்சியுடன்கூடிய ஒரு சின்ன ஆதங்கம்!
மற்றபடி, மனசுக்கு நிறைவான, மகிழ்ச்சியான சந்திப்பு இது!
Leave a comment
Upload