தொடர்கள்
கவர் ஸ்டோரி
பதக்கம்…. பதட்டம்…… -தில்லைக்கரசிசம்பத்

வினேஷ் போகத்

2024070906141769.jpg

ஒவியம்: செ. சிவபாலன்

வெறும் ஒரு 100 கிராம் உடல் எடை , வினேஷ் போகத்தை மட்டுமல்ல, ஒட்டு மொத்த இந்தியர்களின் நம்பிக்கைளையும் சுக்கு நூறாக்கி விட்டது. இந்தியர்களின் கொந்தளிப்பு பதக்கம் பறிப்போனதற்காக அல்ல. வினேஷை வெளியேற்றிய விதம் மிக மோசமானது, அநியாயமானது என்கிற முறையில் கொந்தளிக்க வைக்கிறது. “மல்யுத்த போட்டிகளின் விதிமுறைகள் அப்படி .. அதன்படியே மல்யுத்த சம்மேளனம் செயல்படும்.. “ என்கிறார்கள்.

20240709195215884.jpeg

நன்றி : தினமணி

மல்யுத்தப்போட்டிகள் என்றால் பலமிக்க வீரர்கள் சண்டை இடுவார்கள்,வெற்றி ,தோல்வி பெறுவார்கள், அதற்கு மேல் என்ன என்கிற பொது பார்வைக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் வகையில் அதன் பின்னால் உள்ள கடுமையான கட்டுப்பாடுகளும் அதற்குரிய குரூர வழிமுறைகளும் நடுங்க வைக்கின்றன.

2 மணி நேரத்தில் 4 கிலோ குறைத்த மேரி கோமின் அனுபவத்தையெல்லாம் இப்போது சொல்கிறார்கள். 2008 ஒலிம்பிக்கில்

போட்டிக்கு முன் , பயிற்சி கூட எடுக்காமல் நன்கு படுத்து தூங்கிவிட்டு, எழுந்து மெக்டொனால்ட் சிக்கன் நக்கட்ஸ் சாப்பிட்டு நேராக வந்து 100 மீ ஓட்டப்பந்தயத்தில் கலந்து தங்கப்பதக்கம் வாங்கினார் உலகின் வேகமான மனிதன் உசைன் போல்ட். அப்படிதான் உடல்பலத்தை பொறுத்து

மல்யுத்தப்போட்டி இருக்கும் என நினைத்தால் , நிஜத்தில் இந்தப்போட்டி உடல் எடையை மையப்படுத்தி உள்ளது.

20240709195350802.jpeg

வினேஷ் எப்போதும் 53 கி எடைப்பிரிவில் கலந்துக்கொள்பவர். இந்திய வீராங்கனை அன்டிம் பங்கல் சென்ற வருடம் பெல்கிரேடில் நடந்த உலக மல்யுத்தப்போட்டியில் கலந்துக்கொண்டு வெண்கலம் வாங்கியதால் ஒலிம்பிக் போட்டியின் 53 கிலோ எடைப்பிரிவுக்கு நேரிடையாக தகுதி பெற்றுவிட்டார் என முடிவாக, வினேஷ் வேறு வழியின்றி 50கி பிரிவில் கலந்துக்கொள்ள வேண்டியதாயிற்று என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. இருந்தாலும் நம்பிக்கையுடன் வினேஷ்போகத், 2024 ஒலிம்பிக் மல்யுத்தம் 50கி எடைப்பிரிவில், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சர்வதேச அளவில் ஒருமுறைகூட தோல்வியே ருசிக்காத நம்பர் 1 வீராங்கனை ஜப்பானின் யூசுசாகியை வீழ்த்தி சரித்திரம் படைத்தார்.

காலிறுதியிலும் 3 முறை காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீராங்கனை மற்றும்அரையிறுதியில் 2023-ல் பான் அமெரிக்கன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை இருவரையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய மல்யுத்த வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இறுதிப்போட்டியிலும் தங்கம் வென்றுவிடுவார் என எல்லாமே நன்றாக போய் கொண்டிருந்த சமயத்தில் திடீரென 100 கிராம் எடை கூடுதலால் வினேஷ் தகுதி இழந்தார் என்ற செய்தி இடியை போல இறங்கியது.

இதனால் வெள்ளிப்பதக்கத்தையும் இழந்ததாக அறிவிப்பு வெளியானது. வினேஷ் 50 கிலோ எடைக்குள் இருந்து, அரை இறுதியில் விதிகளுக்கு உட்பட்டு வெற்றி பெற்று இருக்கிறார். அதன் பின்னர் தான் தானே எடைக்கூடியது!? எனவே ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட வெள்ளி பதக்கத்தையாவது வினேஷுக்கு கொடுத்தால் என்ன? என்ற ஒரு சாமானியனின் கேள்விக்கு பதிலாக ஒலிம்பிக் மல்யுத்தப்போட்டிகளின் விதிமுறைகளை சுட்டிக்காண்பித்து “பதக்கம் இல்லை “ என்கிறார்கள். எடைக்குறைப்பிற்காக தண்ணீர் கூட குடிக்காமல் , வேர்வை வெளியேற பல அடுக்கு போர்வைகளுக்குள் சுருண்டுப்படுத்து இரவெல்லாம் தூங்காமல் பல உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்து 2 கிலோ வரை குறைத்த வினேஷ், அந்த கடைசி 100 கிராமை குறைக்க சூடான எரிக்கலன் போன்ற விஷேஷ சொவ்னா சூட்ஸ் அணிந்தும் ஒரு சொட்டு வியர்வைக்கூட வராத அபாய நிலையில், எடை குறையாமல் கையறு நிலையில் இருந்திருக்கிறார் வினேஷ்.

உடல்வலி வேறு தாங்க முடியாமல் அழுதிருக்கிறார்.எடை குறைப்பிற்காக அவர் உடையில் உள்ள எலாஸ்டிக்கை வெட்டி இருக்கிறார்கள். அப்போதும் எடை குறையாமல் இருக்கவே, வினேஷின் தலைமுடியை வெட்டி இருக்கிறார்கள். அதுவும் பிரயோஜனம் படாமல் போக, இதை எழுதவே மனம் நடுங்குகிறது. வினேஷின் ரத்தத்தை குறிப்பிட்ட அளவு உறிந்து வெளியேற்றவும் யோசனை செய்திருக்கிறார்கள். நல்லவேளையாக கடைசி நேரத்தில் தவிர்த்து விட்டார்கள். கடைசி முயற்சியாக தொண்டை வரை விரலை விட்டு வாந்தி எடுக்க முயற்சித்திருக்கிறார் வினேஷ். சொட்டு நீர் கூட இல்லாமல் காய்ந்த வயிற்றில் என்ன இருக்கும் வாந்தியாக வெளியே வர? ஒன்றும் வரவில்லை. அதற்கு மேல் எடைக்குறைக்க வேறு வழி இல்லாததால் வினேஷ் தகுதிஇழந்ததாக அறிவிக்கப்பட்டார். எடைக்குறிப்பு முயற்சிகளில் ஏற்கனவே மிகவும் களைத்திருந்த வினேஷ் கடும் நீர்சத்து குறைப்பாட்டால் மயக்கம் அடைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு டிரிப்ஸ் ஏற்றப்பட்டது .

20240709195613663.jpeg

இந்திய ஒலிம்பிக் சங்கம் வினேஷின் தகுதி இழப்பை வாபஸ் வாங்கும்படி சர்வதேச மல்யுத்த சம்மேளத்திடம் முறையிட்டும் பலனில்லை.

“இன்று 100 கிராம் எடை கூடுதலை அனுமதித்தால் நாளை மற்றவர்களுக்கும் அனுமதி வழங்க வேண்டி வரும். விதி என்றால் விதிதான்.. யாருக்காகவும் மாற்ற முடியாது” என நியாயவாதி வேஷம் போடுகிற சர்வதேச மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் நெனட் லலோவிச் , இதே பாரீஸில் 2019ல் நடந்த உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் போது அமெரிக்க வீரர் கெய்ல் ஸ்னேடர் 600 கிராம் கூடுதல் எடையுடன் இருந்த போது அதனை தனிப்பட்ட முறையில் பரீசிலித்து விளையாட அனுமதி தந்தார். கெய்லும் தங்கம் வென்றார். வல்லான் வகுத்தது தான் விதி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்.

வினேஷின் உடல் எடை 50 கிலோவில் இருந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு முதல் நாள் இரவு திடீரென அதிகரித்ததன் காரணத்தை அவருடன் கூடவே இருக்கும் ஊட்டச்சத்து நிபுணரும்,பயிற்சியாளரும்தான் கூற வேண்டும் என இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய்சங் கூறுகிறார்.

ல்யுத்தப்போட்டிகள் நடக்கையில் வீரர்கள் எடைக்குறைப்பு செய்வது சகஜமான ஒன்று என்கிறார்கள். நீர் கூட அருந்தாமல், எச்சிலைக்கூட வெளியே துப்பி விடுவது போன்ற முறைகளை பின்பற்றுகிறார்கள்.

1997ல் அமெரிக்காவை சேர்ந்த மல்யுத்தவீரர்களான 3 கல்லூரி மாணவர்கள் இதேப்போல் எடைக்குறைப்பில் ஈடுப்பட்டு இறந்துப்போனார்கள். நீர் கூட அருந்தாமல் இருப்பதால் கடுமையான நீர்சத்து குறைப்பாடு ஏற்பட்டு உடலுக்கு தாழ்வெப்பநிலை (hypothermia ) ஏற்படுகிறது. இதன் விளைவாக மாரடைப்பும் சிறுநீரக செயலிழப்பும் உண்டாகிறது. சிக்கலான இந்த போட்டி விதிமுறைகளில் உலகின் மல்யுத்த வீரவீராங்கனைகள் அபாயத்தின் தன்மையை உணர்ந்தாலும் போட்டிகளில் வெல்ல வேண்டும் என துணிச்சலாக பின்பற்றிவருவது குறிப்பிடத்தக்கது.

தற்போது உடல்நலம் தேறியுள்ள வினேஷ் பாரீஸில் இருந்தபடியே தான் மல்யுத்த விளையாட்டுகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

“அம்மா, மல்யுத்த போட்டியில் நான் வெற்றி பெற்றேன், இருந்தாலும் நான் தோற்றேன். என்னைமன்னித்துவிடு. உங்கள் கனவு, என் தைரியம், அனைத்தும் உடைந்துவிட்டன, இனி என்னிடம்போராட சக்தி இல்லை.. குட்பை மல்யுத்தம் 2001-2024 ... உங்கள் அனைவருக்கும் நான்என்றும் கடமைப்பட்டிருப்பேன், மன்னிக்கவும்..." என்று தெரிவித்துள்ளார். வினேஷின் வேதனையான வார்த்தைகளின் வீரியம் இந்த தேசத்தின் மனதையே நொறுக்கியுள்ளது என்றால் மிகையில்லை. வினேஷின் 9 வயதில், மனநலம் சரியில்லாத உறவினர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் அவரின் தந்தை இறந்துப்போனார். வினேஷின் தாயாரோ புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். சோதனை என்பது வினேஷுக்கு புதிதல்ல. வாழும் வாழ்க்கையே போராட்டக்களமாக இருந்தாலும் ஒவ்வொரு மோசமான காலக்கட்டத்திலும் தன்னை இழக்காமல் சமாளித்து வந்திருக்கிறார் இந்த ஜாட் சமூக இளம் வீராங்கனை. இப்போதுள்ள சோதனை காலத்திலிருந்தும் வினேஷ் மீண்டு, உடலும் உள்ளமும் தேறி வர வேண்டும் என்பதே இந்தியர்களின்பிரார்த்தனை ஆகும். வினேஷ் பதக்கம் வெல்லாவிட்டாலும் இந்தியர் அனைவரின் மனங்களையும் பேரன்புகளையும் வென்று இருக்கிறார்.

வெற்றி தோல்வி பெரிதல்ல. களத்தில் நின்று, விடாமுயற்சியோடு போராடிய அந்த தீரமே ஒரு போராளியின் வெற்றிக்கான அடையாளம்.

வினேஷ் போகத் ஒரு வலிமைமிக்க வெற்றியாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.