தொடர்கள்
கவிதை
தந்தையின் கைரேகைகள் - கோவை பாலா

20240710080036364.jpeg

படித்த முகநூல் செய்தி ஒன்று ...
படிந்தது மனதினில் அன்று...!
வரித்த வரிகளாய் கொண்டு,
வடித்தேன் கவிதையாய் இன்று‌...!

தந்தையின் வயதின் தள்ளாமை,
கால்கள் சொல்லியது இயலாமை...
கைகளில் இல்லை வலிமை...!
பற்றி நடக்க வழியும் இல்லை...!

கால்கள் தரையைத் தேய்க்க,
கைகள் சுவரினைத் தாங்க,
சுற்றி சற்றே நடைபோட்டு,கை
பற்றி மகிழ்வார் பேரனோடு...!

பிடித்து நடந்த கைகளால்
இளித்து நின்றது சுவரும்...!
மங்கியது சுவரின் வர்ணம்...!
பொங்கியது மருமகள் மனம்...!

கால்கள் வலுவிழந்த போது,
கைகள் எண்ணெய் தேய்திட,
எண்ணெய் கைகள் சுவர் பிடிக்க,
கைரேகைகள் அடையாளமானது...!

எண்ணெய் கரைகளாய் சுவரில்
கைரேகைகள் பதியக் கண்டு,
விண்ணைத் தொடும் ஓசையில்
வசை பாடினாள் மருமகள் அன்று...!

வெட்கிக் குனிந்த தந்தைக்கு
மகனும் தந்தான் தன் பங்கிற்கு...!
சுவரில் கைகள் வைக்காமல்
இனி கவனமாய் நடங்களேன்று...!

சுவரை தொடாது சிலகாலம்,
நடக்க முயன்ற தந்தையும்,
வீழ்ந்து எழுந்து நடந்த பின்
படமாகிப் போனார் சுவரில்...!

தந்தை மறைந்து போனாலும்
தடயங்கள் மறைந்து போகாது...!
பதிந்த கைரேகை பிள்ளையின்
இதயத்தின் துடிப்பாய் போனது...!

வருடங்கள் உருண்டு போனதில்
வீடும் இருண்டு போனது...!
வர்ணம் செய்து பொலிவு பெற
தருணமும் தழைத்து வந்தது...!

"தன் கைகள் பிடித்த தாத்தாவின் கைரேகைகள் அழியக் கூடாது"...!
பேரன் சொன்ன வார்த்தைகளில்
பேச மறந்தார்,வர்ணம் பூசவந்தவர்...!

தந்தையின் கைரேகை வண்ணம்,
கொஞ்சமும் அழியா வண்ணம்,
வீட்டிற்கு பூசினார் வர்ணம்,
அச்சுவரும் பெற்றது தனித்துவம்...!

கைரேகைகள் செய்த மாயம்
வரைபடமாய் பெற்றது வடிவம்...!
பேரனின் பள்ளிப் போட்டியில்
பரிசாய் மாறிய கைவண்ணம்...!

மகனும் மருமகளும் அன்று
நிந்தனை செய்து இருந்தாலும்,
நற்சிந்தனை தந்த பேரனால்,
தந்தை கைரேகைகள் தந்தன
நல்லாசிகள் மூவர்க்கும் இன்று...!