சென்னிமலை முருகன் கோயில் தமிழ்நாட்டில், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை அருகே சென்னிமலை என்னும் ஊரில் மலை மீது அமைந்துள்ளது. சுமார் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயில் பலவித அதிசயங்களைக் கொண்டு தனிச்சிறப்புடன் விளங்குகிறது. இங்கு முருகன் 1749 அடி உயரத்தில் தண்டாயுதத்தை வலக்கரத்தில் ஏந்தி, இடது திருக்கரத்தை இடுப்பில் வைத்தபடி ஞான தண்டாயுதபாணியாகக் காட்சியளிக்கிறார். ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் யுத்தம் நடந்தபோது, ஆதிசேஷனுடைய சிரம் விழுந்த இடம் இது என்று கூறுகின்றனர். (சிரகிரி - சிரம் சென்னி, கிரி-மலை)
அருணகிரிநாதரால் பாடல் பெற்ற திருத்தலங்களில் இதுவும் ஒன்றாகும். பால தேவராய சுவாமிகள் எழுதிய ‘கந்த சஷ்டி கவசம்’ அரங்கேற்றிய ஸ்தலம் மற்றும் சென்னிமலை பிள்ளைத்தமிழ், சென்னியாண்டவர் காதல், சென்னிமலை அந்தாதி, மேழி விளக்கம், சென்னிமலை தலபுராணம், அருணகிரி நாதரின் திருப்புகழ் போன்ற பாடல்கள் மூலம், இத்தலத்தின் பெருமையையும், முருகனின் சிறப்பையும் அறியலாம். இங்கு முருகப்பெருமானை வழிபட்டாலே நவகிரகங்கள் அனைத்தையும் வழிபட்ட பலன் உண்டு. இங்கு பதினெட்டு சித்தர்களில் ஒருவரான பிண்ணாக்கு சித்தருக்கும் கோயில் உள்ளது. சென்னிமலை முருகன் கோயிலுக்கு மலை அடிவாரத்தில் உள்ள தீர்த்த கிணற்றில் இருந்து காலை 8 மணி பூஜைக்குப் பொதி காளைகள் மூலம் 1,320 படி வழியாகத் தீர்த்த குடங்கள் கொண்டு செல்வது பல வருடங்களாகத் தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கம். இந்நிலையில், கடந்த, 1984, பிப்ரவரி, 12ம் தேதி உலக அதிசயமாக, இரட்டை மாட்டு வண்டி, படி வழியாக மலையேறிய அதிசயம் நிகழ்ந்தது.
இத்தல முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்தபின் தயிரானது புளிப்பதில்லை என்ற அதிசயமும் நிகழ்கிறது. மூலவர் விமானத்தின் மீது காக்கைகள் பறப்பதில்லை என்பது சான்றோர் வாக்கு.சென்னிமலை முருகனைப் படிகளில் ஏறிச்சென்று தரிசிக்கலாம் அல்லது மலைப் பாதையில் வாகனத்தில் சென்றும் தரிசிக்கலாம். இதைத்தவிரத் தேவஸ்தானம் இரண்டு பேருந்து மற்றும் சிறுபேருந்து போன்றவற்றையும் இயக்கிவருகிறது.
ஸ்தல புராணம்:
ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் இடையிலான போட்டி என்று நன்கு அறியப்பட்ட புராணக்கதை. ஆதிசேஷன் தன் நீண்ட உடலால் மேருமலையை அணைத்துப் பாதுகாத்தபடி கிடக்க, வாயு தன் பலங்கொண்ட மட்டும் காற்றை வீசச் செய்து, மேரு மலையை அசைக்கத் தொடங்கினார். மேருமலை வாயுவின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அதன் பகுதிகள் வெவ்வேறு இடங்களில் விழுந்தன. அந்த மலையின் உச்சத்தில் இருந்த சிரப்பகுதி (தலை பகுதி) பெருந்துறை என்ற இடத்தில் விழுந்ததால் சென்னிமலை என்று பெயர் வந்தது. தமிழில் "சென்னி" என்றால் தலை என்று பொருள். இந்த ஊருக்கு ‘சிரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி’ போன்ற பெயர்களும் உண்டு.
ஸ்தல வரலாறு:
இந்த மலையின் ஒரு பகுதியில் நொய்யல் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்து வந்த ஒருவர் தாம் வளர்க்கும் பசு தினந்தோறும் யாருக்கும் தெரியாமல் சென்று ஒரு குறிப்பிட்ட இடத்தில் பால் சொரிந்தது. இதை ஒருநாள் கவனித்து விட்ட பசுவின் உரிமையாளர் அந்த குறிப்பிட்ட இடத்தை தோண்டிப்பார்க்க அங்கு அழகிய முருகப்பெருமான் சிலை இடுப்பு வரை நல்ல வேலைப்பாட்டுடன் இருக்க, இடுப்புக்குக்கீழ், கரடு முரடாக ஒரு வடிவமின்றி இருந்ததால் அதை வடிவமைக்க அந்த சிலை மீது சிற்பி உளியால் அடித்தபொழுது ரத்தம் பீரிட்டு வந்தது கண்டு, பயந்து வேலை அப்படியே நிறுத்தப்பட்டது, பின்பு, அங்கு வாழ்ந்த சரவண முனிவர் அருளாசிப்படி ஆண்டவர் அப்படியே இருக்கப் பிரியப்படுகிறார் என்று அறிந்து சிலையை அப்படியே சென்னிமலை மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர் என்று
வரலாறு கூறுகிறது. சிலை இடுப்புக்குக் கீழ் வேலைப்பாடற்று இருப்பதை இன்றும் காணலாம்.
முற்கால சோழ மன்னர்களில் ஒருவரான சிவாலய சோழன் பிரம்மஹத்தி தோஷத்தால் அவதிப்பட்டு, புனித யாத்திரை மேற்கொண்டு, இங்குள்ள நொய்யல் ஆற்றில் நீராடியபோது, இம்மலையைக் கண்டார். மலை மீது ஏறி, சிறிய கோயிலைத் தரிசித்தார். அப்போது, முருகப்பெருமானே, அர்ச்சகராக வந்து, தன்னைத்தானே பூஜித்து, மன்னருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கி அருளினார். உடனே, சிவாலய சோழன் இந்த கோயிலை மேலும் மேம்படுத்தி, திருக்கடையூரில் இருந்து அர்ச்சகர்களையும் வரவழைத்தார். இம்மலைமீது உள்ள ஆலயம் மற்றும் கற்பக்கிரஹம், விஜயாலயச்சோழன் என்பவரால் கட்டப்பட்டது. அதன்பிறகு பல மண்டபங்கள் செங்கத்துரை பூசாரியாலும், வேளாளத் தம்பிரானாலும் கட்டப்பட்டவை.
ஸ்தல அமைப்பு:
இத்திருக்கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1749 அடி உயரத்தில் பசுமை நிறைந்த மரங்களாலும், மூலிகை குணம் கொண்ட செடி கொடிகளாலும் சூழப்பட்ட அழகிய மலையில் அமைந்துள்ளது. மலை அடிவாரத்தில் இருந்து செங்குத்தாக இல்லாமல், பக்தர்கள் எளிதில் ஏறிச் செல்ல வசதியாக 1,320 திருப்படிகள் கொண்ட படிவழி பாதையும், வாகனங்கள் மூலம் செல்ல 4 கிலோ மீட்டர் தூரமுள்ள தார்சாலை ஒன்றும் உள்ளது. படிவழியில் ஆங்காங்கே நிழல் தரும் மண்டபங்களும், குடிநீர் வசதியும், இரவு நேரங்களில் பாதுகாப்பிற்காகப் படி வழியில் மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. அடிவாரத்தில் இருந்து சில படிகள் ஏறியதுமே கடம்பவனேஸ்வரர், கந்தர், இடும்பன் ஆகியோரின் சந்நிதிகளை ஒரே வரிசையில் தரிசிக்கலாம். பின்னர் தொடர்ந்து வள்ளியம்மன் பாதம் என்ற மண்டபத்தைக் கடந்து மேலே சென்றால், `முத்துக்குமார சாவான்’ என்னும் மலைக் காவலர் சந்நிதி அமைந்திருக்கிறது. அதற்கடுத்ததாக கோயிலின் நுழைவாயிலில் விநாயகரைத் தரிசித்த ஐந்து நிலை இராஜகோபுரத்தின் வழியாக உள்ளே சென்றால், ஒரே பிரகாரத்துடன் கூடிய கிழக்கு நோக்கிய கருவறையில் மூலவர் தண்டாயுதபாணி கோலத்தில் அருள்பாலிக்கிறார். முருகப்பெருமான் சந்நிதிக்கு முன்னால் அர்த்தமண்டபம், அடுத்து,மகாமண்டபத்தில் சுப்பிரமணியர் தெற்கு நோக்கிய உற்சவ விக்ரகமும் உள்ளது.
மூலவருக்கு வலது புறத்தில் மார்க்கண்டேசுவரர் மற்றும் உமையவல்லி அம்மன் சந்நிதிகளும், இடது புறத்தில் காசி விஸ்வநாதர் மற்றும் விசாலாட்சி அம்மன் சந்நிதிகளும் அமையப்பெற்றுள்ளன. இங்கு மூலவர் சென்னிமலை ஆண்டவர், நடுநாயக மூர்த்தியாக வீற்றிருக்கிறார். இவர் நவக்கிரகங்களில் செவ்வாய் அம்சமாக அமைந்துள்ளார். இவரைச் சுற்றி நவக்கிரகங்களின் மற்ற எட்டு கிரகங்களும் அழகிய தேவ கோஷ்டங்களில் அழகுற அமைந்து அருள்பாலிக்கிறார்கள். இங்கு மூலவரை சென்னிமலை ஆண்டவரை வலம் வந்து வணங்கினாலே நவக்கிரகங்களையும் வழிபட்ட பலன் உண்டு. இத்தலம் செவ்வாய் பரிகார சிறப்புத் தலமாகும்.
முருகன் சந்நிக்குப் பின்புறம் படிக்கட்டுகள் வழியாக மேலே சென்றால் அங்கு வள்ளி, தெய்வானை இருவரும் அமிர்தவல்லி, சுந்தரவல்லி என்ற பெயர்களுடன் சென்னிமலையாண்டவரைத் திருமணம் செய்யத் தவமிருந்து முருகப்பெருமானை அடைந்து அங்கேயே தனிப்பெருங்கோயில் கொண்டு பக்தர்களை அருள்பாலிக்கிறார்கள். இங்கு வள்ளி-தெய்வானை தேவியர் இருவரும், ஒரே கல்லில் பிரபையுடன் வீற்றிருக்கும் தனிச் சந்நிதி வேறு எங்கும் காண முடியாத சிறப்பாகும்.
அம்மன் சந்நிதியிலிருந்து பின்புறம் சென்றால் மலையின் உச்சியில் மகான்(பின் நாக்குச் சித்தர்) புண்ணாக்குச் சித்தர் கோயில் வேல்கள் நிறைந்த வேல் கோட்டமாக அமைந்துள்ளது. இதன் அருகே சரவண மாமுனிவரின் சமாதிக் கோயிலும் உள்ளது. இந்தக் கோயில் அருகே மிகப் பழமை வாய்ந்த குகை ஒன்றும் காணப்படுகிறது.
சென்னிமலை கோயிலில் 20 தீர்த்தங்கள் உள்ளன. இந்திர தீர்த்தம், அக்னி, இமயன், காசிபர், பட்சி, நிரு, சிவகங்கை, மாமாங்கம், வரடி, காளி, தேவி, செங்கழுநீர், வாலி விஷ்ணு, நெடுமால் சுனை, தேவர்பாழி, நவவீர, பிரம்ம, சாரதா, மார்க்கண்டேய தீர்த்தம், தெப்பக்குளம் முதலான தீர்த்தங்கள் உள்ளன. மேலும், சென்னிமலை முருகப் பெருமானின் தினசரி அபிஷேகம் மற்றும் நைவேத்திய பிரசாதங்களுக்காக மலை அடிவாரத்தில் இருக்கும் திருமஞ்சன தீர்த்தத்தில் இருந்து நீர் கொண்டு வரப்படுகிறது.
ஸ்தல விருட்சம் புளியமரம்
ஸ்தலச் சிறப்பு:
தேவராய சுவாமிகள் என்ற முருக பக்தர் இயற்றிய ‘கந்த சஷ்டி கவசம்’ என்ற கவசமாலை இத்தலத்தில் அரங்கேற்றம் செய்யப்பட்டது.
இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம் இது வேறு எந்த ஸ்தலத்திலும் காணமுடியாது.
அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்றுள்ளது. முருகப் பெருமானால் அருணகிரிநாதருக்குப் படிக்காசு வழங்கப் பெற்றத்திருத்தலம்.
சிவாலய சோழனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய இடம்.
இடும்பனுக்கு, பொதிகைக்கு வழி அறியாத நிலையில், முருகப்பெருமான், இராசகுமாரனாகக் காட்சியளித்து, பொதிகைக்கு வழிகாட்டிய இடமே புஷ்பகிரி எனும் சென்னிமலையாகும்.
முருகன் தன்னைத்தானே பூஜித்த ஸ்தலம்.
சென்னிமலை ஆண்டவருக்கு அர்ச்சனை செய்து சிரசுப் பூ உத்தரவு கேட்டு நல்ல உத்தரவு கிடைத்தபின் மன நிறைவோடு செயல்படுவது தொன்று தொட்டு நடந்து வரும் மிகப் பெரிய அற்புதமாகும்.
சென்னிமலை, மலைக்கோயிலில் 20 வகை தீர்த்தங்கள் உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தம் உள்ளது.
அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்பிரமணியர் வேறு எங்கும் இல்லை. இவர் மிகவும் விசேஷமானவர்.
தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் காணமுடியாத வேங்கை மரத் தேர் இத்தலத்தில் உள்ளது.
இத்தலம், செவ்வாய் பரிகார ஸ்தலமாகக் கருதப்படுகிறது. ஏற்கனவே, நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயிலிலும், முருகப்பெருமான் செவ்வாய் அம்சமாகவே அருள்பாலிப்பதால், செவ்வாய் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. அதுபோல, சென்னிமலையும், பரிகார ஸ்தல சிறப்புப் பெற்றுள்ளது.
கந்த சஷ்டி கவசம் அரங்கேறிய ஸ்தலம்:
கந்த சஷ்டி கவசம் இயற்றிய பாலன் தேவராய சுவாமிகள் காங்கேயம் அருகே உள்ள மடவிளாகத்தைச் சேர்ந்தவர். மைசூர் தேவராச உடையாருக்கு உதவியாளராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். முருக பக்தரான இவர், ஐப்பசி மாதம், கந்த சஷ்டி தினத்தில் வேற்று மதத்தவர்களிடம் அனல்வாதம் (தான் எழுதிய நூலைச் சான்றோர்கள் முன், நெருப்பிலிட்டு, தீயில் கருகாமல் திரும்ப எடுத்து அரங்கேற்றுவது), புனல்வாதம் (கரைபுரண்டு ஓடும் ஆற்று வெள்ளத்தில், தான் எழுதிய நூலை இட்டு, நீரில் எதிர்கொண்டு செல்லும் சுவடிகளை எடுத்து அரங்கேற்றுவது)செய்து, கந்த சஷ்டி கவசத்தை அரங்கேற்றம் செய்ய முருகனை வேண்டினார். அதற்கு உரிய ஆலயமாக சென்னிமலையை, முருகப்பெருமானின் அருளாணையால் உணர்ந்து, இங்குக் கந்த சஷ்டி கவசத்தை சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக' என இத்தலத்துப் பெருமானை அழைத்து, அரங்கேற்றம் செய்து, பெருமை படைத்தார்.
சஷ்டி விரத மகிமை: கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இத்தலத்தில், பிரதி மாதம் வளர்பிறை சஷ்டி திருநாளிலும், ஐப்பசி மாதம் கந்தர் சஷ்டி திருவிழா ஆறாம் நாளில் எண்ணற்ற பக்தர்கள், சந்தான பாக்கியம் வேண்டி விரதம் இருந்து சென்னிமலை முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம். புதிதாகத் திருமணம் ஆனவர்கள் குழந்தைப் பேறு வேண்டி, பச்சரிசி மாவிடித்து, தீபம் ஏற்றி வழிபடுவது, சந்நிதி முன்னர் தாலிச் சரடு கட்டிக் கொள்வது இன்றும் நடைபெறுகிறது.
சிரசுப் பூ உத்திரவு கேட்டல் :
பக்தர்கள் புதிய வீடுகள் கட்டவும், தங்கள் வீடுகளில் நடைபெறும் திருமணம் குறித்தும், விவசாய பூமிகள் வாங்குவது, விற்பது, மற்றும் கிணறு வெட்டுதல், ஆழ்குழாய்க் கிணறு தோண்டுதல், புதிய வியாபாரம் தொடங்கல், வியாதியின் சிகிச்சைக்காக மருத்துவ மனை செல்லுதல் முதலான அனைத்துமே முடிவு செய்ய சென்னிமலை ஆண்டவருக்கு அர்ச்சனை செய்து சிரசுப் பூ உத்தரவு கேட்டு நல்ல உத்திரவு கிடைத்த பின்பு காரியத்தைத் தொடங்குகிறார்கள். சிரசுப்பூ உத்திரவு நல்லபடியாகக் கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட செயல்களைப் பக்தர்கள் தொடங்குவதில்லை.
மாமாங்கத் தீர்த்தம் :
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடைக் காலத்தில் சிறிதேனும் கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்குத் தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைகிறது.
பிண்ணாக்கு சித்தர் (புண்ணாக்கு சித்தர்):
சென்னிமலை முருகன் கோவிலில், பதினெட்டு சித்தர்களில் ஒருவராகக் கருதப்படும் பிண்ணாக்கு சித்தருக்குக் கோவில் உள்ளது. இந்த சித்தர், இங்குதான் சமாதி அடைந்தார் என்று சொல்லப்படுகிறது. தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறும்போது, நாக்கை பின்னுக்கு மடித்துக் கூறியதால் இவர் பிண்ணாக்கு சித்தர் என்று அழைக்கப்பட்டார்.
மேலும் இவரின் நாக்கு பிளவுபட்டிருந்ததாலும் பிண்ணாக்கு சித்தர் என்று அழைக்கப்பட்டார். பின்னர் அது மருவி ”புண்ணாக்கு சித்தர்” என்று பெயர் மாறியது. இவர் சமாதி அடைந்த இடத்தில் கோயில் கட்டி வழிபாடு நடந்து வருகிறது. இவர் பயன்படுத்திய குகை இந்த கோயில் அருகிலேயே உள்ளது. இங்குள்ள புண்ணாக்கு சித்தரை வழிபடும் பக்தர்கள் அதிகம். குருவுக்கு உகந்த வியாழக்கிழமை மட்டுமின்றி எல்லா நாளும் இங்குப் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் இங்குள்ள புண்ணாக்கு சித்தரின் சமாதிக்கோயில் அருகே அமர்ந்து தியானம் செய்தால் மயில் மீது அமர்ந்து ஓய்வெடுக்க வரும் முருகப்பெருமானின் அருளைப்பெறலாம் என்பது சித்தர்கள் வாக்கு.
திருவிழாக்கள்:
சித்திரை முதல் பங்குனி முடிய இங்கு எப்போதும் திருவிழா நடைபெறும். தமிழ்ப் புத்தாண்டு உற்சவம், சித்ரா பௌர்ணமி உற்சவம், வைகாசி விசாகம், ஆடி அமாவாசை உற்சவம், கந்த சஷ்டி சூரசம்ஹார உற்சவம் (6 நாட்கள்), கார்த்திகை தீபம், தைப்பூச தேர்த் திருவிழா பிரம்மோத்ஸவம் (15 நாட்கள்), பங்குனி உத்திரம் தேர்த் திருவிழாவும் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனை, நேர்த்திக்கடன் :
கல்யாணத்தடை, குழந்தை பாக்கியம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ஆகியவற்றைப்பெற இத்தலத்தில் முருகனிடம் வேண்டுகிறார்கள். இதைத்தவிரச் செவ்வாய் தோஷம் நீங்குகிறது. இத்தலம் பிரார்த்தனைத் தலங்களில் முக்கியமானது.
முருகனுக்குப் பால், தயிர் அபிஷேகம் செய்தும் மற்றும் காவடி எடுத்தல், முடிக் காணிக்கை, முடி இறக்கி காது குத்துதல், கிருத்திகை விரதம் இருத்தல், சஷ்டி விரதம் இருத்தல், சண்முகார்ச்சனை, முருக வேள்வி உள்ளிட்டவற்றைச் செய்து பக்தர்கள் முருகனுக்கு இங்கே தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்குப் பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் முருகனுக்காகச் செய்யலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
தினசரி காலை 5.45 மணிக்கு கோபூஜை நடைபெற்ற பின்னர் காலை 6.00 மணிக்கு சந்நிதி நடை திறக்கப்பட்டு பகல் வேளையில் நடை சாத்தப்படாமல் தங்குதடையின்றி இரவு 8.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு வருகிறது, ஒவ்வொரு வாரம் செவ்வாய்க்கிழமை நாட்களிலும், திருமணம் நடைபெறும் நாட்களிலும் அதிகாலை 4.45 மணிக்கு கோபூஜை நடத்தப்பட்டு சந்நிதி நடை காலை 5.00 மணிக்குத் திறக்கப்பட்டு வருகிறது.
கோயிலுக்குச் செல்லும் வழி:
ஈரோட்டில் இருந்து பெருந்துறை வழியாகச் சென்றால் 32 கி.மீ. பெருந்துறையில் இருந்து 13 கி.மீ. தொலைவில் சென்னிமலை அமைந்துள்ளது. ஈரோடு பழநி சாலையில் காங்கேயம் அடுத்து சென்னிமலை இருப்பதால் ஈரோடு பழநி, பேருந்து போக்குவரத்து வசதி அதிகம் உள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : ஈரோடு 27 கி.மீ., காங்கேயம் 21 கி.மீ., திருப்பூர் 35 கி.மீ., மலைக்கு மேலே செல்ல வாகன வசதிகள் உண்டு.
நாம் செய்த பாவங்களைப் போக்கும் சென்னிமலை முருகப்பெருமானைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!
https://youtu.be/Ki4BROiKA1g?si=NDK7OujiMNUor3ZI
https://youtu.be/KOs0T6MKvzk?si=w-iooR3OSGm6aYnq
Leave a comment
Upload