இமானே கெலிஃப். பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக்ஸ் நிகழ்வுகளை கவனிப்பவர்களுக்கு இந்த பெயர் ஒரு சர்ச்சையை ஞாபகப்படுத்தும். பாலின சர்ச்சையில் இருப்பவர். அவர் ஆணா, பெண்ணா என்ற கேள்வி இன்னும் பலர் மனதில் இருக்கிறது.
66 கிலோ போட்டியில் இவருக்கு எதிராக போட்டி இட்ட ஏஞ்சலா கரிணி, 46 வினாடிகளில் ஆட்டத்தை நிறுத்தி விட்டு இவர் ஒரு பெண் இல்லை என்றும் தன்னால் ஒரு அடி கூட தாங்க முடியவில்லை என்றும் குற்றம் சாட்டினார். ஒலிம்பிக்ஸ் கமிட்டி இவர் பெண் என்றும் அவர் போட்டியில் பங்கு பெறலாம் என்றும் முடிவெடுத்தது. இப்பொழுது அவர் அரைஇறுதியிலும் வென்று பதக்கத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்.
2023 இல் சர்வதேச குத்துச் சண்டை சங்கம் இமானே காலிஃ வையும், லின் யூ-டிங் ஐயும் ஆண்களுக்குண்டான XY chromosomes இருக்கிறது என்று சொல்லி தகுதி நீக்கம் செய்தது. ஆனால் அதற்குண்டான எந்த ஆதாரமும் கொடுக்கப்படவில்லை. இதை ஒலிம்பிக்ஸ் கமிட்டி நிராகரித்து ஒலிம்பிக்ஸ்ல் விளையாட அனுமதித்திருக்கிறது. அவர்களுக்கு அவர்கள் விளையாட்டு விதிகளில் எந்தவித குழப்பமும் இல்லை.
பிரச்சனையின் முழு விவரம் தெரிவதற்கு முன்பே எப்பொழுதும் போல நம் இணையதள செயல் வீரர்கள் அவரவர் கருத்தை அவரவர் பாணியில் முன்வைக்கத் தொடங்கினர். கங்கனா ரணாவத் இதை ஒரு "வோக்" காலச்சாரம் என்று பெயரிட்டு இந்திய பெற்றோர்களை கவனமாக இருக்கச் சொன்னார். இலன் மஸ்க், பெண்கள் போட்டியில் ஆண்களுக்கு இடம் இல்லை என்று கூறினார். ஜே.கே ரவ்லிங், ஒரு படி மேலே போய் சபையில் பெண்களை அடிப்பது ஆண்களுக்கு ஒரு பொழுது போக்கு என்றும், இமானே காலிஃ ஐ ஒரு ஏமாற்றுக்காரர் என்றும் கூறியிருக்கிறார். ஒலிம்பிக் கமிட்டி மிகவும் தெளிவாக, இதை எதுவும் பொருட்படுத்தாமல் தன் வேலையை செய்து கொண்டிருக்கிறது.
அனால் இந்தப் பிரச்சனையை அவர்களுடன் போட்டியிடும் மற்றவர்களைக் கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது ஒரு முடிவுக்கு வர கடினமாகத்தான் இருக்கிறது. இவர்களின் வெற்றி நிச்சியம் என்பதால், மற்றவர்களின் பல வருடக் கனவுகள் ஒப்புக்கொள்ள முடியாத காரணத்தினால் கலைக்கப்படுகிறது. இது சரியா இல்லையா என்பதெல்லாம் மீறி எல்லாவற்றிலும் ஒரு அரசியல் சாயம் பூச அனைவரும் காத்திருக்கின்றனறோ என்று தோன்றுகிறது. வினேஷ் போகத்தின் தோல்வியும் அப்படித்தான். இது பிரச்சனையின் வேறு பக்கம்.
ஒருவரின் பாலினமும், பாலின விருப்பமும் வெவ்வேறு விஷயங்களாகும். இமானே போன்றவர்களின் பிரச்னை அவர்களின் உடற்கூறு சார்ந்தது. மார்ட்டினா நவரத்திலோவா, செரினா வில்லியம்ஸ் போன்றவர்கள் கூட இதைப்போன்ற விமர்சனத்திற்கு ஆளாகி உள்ளனர். வில்லியம்ஸ் சகோதரிகளை, சகோதரர்கள் என்று ஒரு அறிவிப்பாளர் கேலி செய்து இருக்கிறார். சில விளையாட்டு வீராங்கனைகள் தங்கள் அழகை பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துவதனால், உடற்பயிற்சியை சற்று மிதமாகவே செய்கின்றனர். விளையாட்டை மட்டுமே இலாக்காக கொண்டிருப்பவர்களுக்கு பெண்மையான உருவம் இரண்டாம் பட்சம் தானோ என்னவோ! இதைப் போன்ற கேலிகளுக்கும் விமர்சனத்துக்கும் இடம் கொடுக்காமல் தன் எல்லையைக் குறிவைத்து முன்னேறிக்கொண்டுதான் இவர்கள் இருக்கின்றார்கள் .
அல்ஜீரியா விலிருந்து 18 பெண்கள் ஒலிம்பிக்ஸ் இல் பங்கு பெற்றிருக்கிறார்கள். குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் அந்த நாட்டிலிருந்து பெண்கள் பங்கெடுப்பது என்பதே நிறைய தடைகளை கடந்து தான். அல்ஜீரியா போன்ற ஒரு நாட்டில் ஒரு பெண் குத்துச் சண்டை விளையாட்டை தேர்ந்தெடுக்கும் போது அவள் கடக்கவேண்டிய முதல் தடையே அவள் சுற்றம் தான். இவானே யின் தந்தையே இதை முதலில் ஏற்கவில்லை. அவள் திறமை புரிபட்ட பின் ஆதரித்திருக்கிறார். "என் மகள் பெண்ணாகத்தான் பிறந்தாள், பெண்ணாகத்தான் வளர்ந்தாள்" என்று அவர் புகைபடத்துடன் ட்விட்டரில் பதிவு செய்து இருக்கிறார் இந்த சர்ச்சையின் போது.
ஒரு விளையாட்டுக்களம் விதிகளால் ஆக்கப்படும், ஆளப்படும். விதிகள் தெளிவாக இருப்பின் போட்டிகள் ஆரோக்கியமாக இருக்கும். அது போன்ற இடத்தில் இனம், மொழி, உருவம், நாடு போன்ற பாகுபாடுகளுக்கு இடம் இருக்கக்கூடாது. முக்கியமாக அரசியல் கலக்கக்கூடாது, வெறுப்புப் பிரச்சாரம் கூடாது. இது அவர்களின் மன நிலையை மிகவும் பாதிக்கும். இமானேயும் அதைத்தான் கூறி இருக்கிறார்.
1900 ஆம் ஆண்டில் தான் முதன் முதலில் பெண்கள் ஒலிம்பிக்ஸ் இல் பங்கேற்றனராம். அது 2 விழுக்காடு மட்டுமே. அதிலிருந்து இப்பொழுது 50 விழுக்காடுக்கு முன்னேறியிருக்கிறார்கள்.
தான் அரசியல் தூதுவர் என்றோ, கலாச்சார காவலர் என்றோ தன்னை பிரகடனப் படுத்திக் கொண்டு, வாய் சொல்லில் வீரராக இருப்பவர் அப்படியே தான் இருக்கப்போகிறார். இமானே வெள்ளியோ தங்கமோ ஏதோ ஒரு பதக்கத்துடன் ஊர் திரும்பப்போகிறார்.
Leave a comment
Upload