தொடர்கள்
தொடர்கள்
குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை – 25. ரேணு மீரா

20240431093641532.png

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற்கு அரிய செயல்.- குறள் - 489

“நமக்கு கிடைப்பதற்கரிய காலம் கிடைத்து விட்டால் செய்ய முடியாமல் கிடக்கும் செயல்களைச் செய்து முடித்தல் வேண்டும்” என்பதே இக்குறளின் பொருள் .

நம் நேரத்தை திட்டமிட சில குறிப்புகள்.

முதலில் நேரங்களில் வித்தியாசமான விஷயங்களை பிரித்து புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்றாலும், அந்த 24 மணி நேரமும் ஒரே மாதிரியானவை அல்ல, ஒவ்வொரு நொடியும் மணித்துளிகளும் 60 நிமிடத்தை ஒரே போல் குறிக்கலாம். ஆனால் காலை 6:00 மணியையும் மாலை 6 மணியையும் ஒன்றாக எடுத்துக்கொள்ள முடியாது.

ஏனெனில் குழந்தைகள் படிப்பதற்கு திட்டம் போடும்போது, எந்த இரண்டு மணி நேரம் படித்தால் போதும் என திட்டமிட மாட்டார்கள், இதில் கவனம் செலுத்துவோர் மிகக் குறைவு.

எந்த இரண்டு மணி நேரமாக இருந்தால் என்ன?

மொத்தத்தில் தினமும் இரண்டு மணி நேரம் படிக்கிறார்கள் அல்லவா? அது போதாதா என பெற்றோர்கள் கேட்கலாம்.

நேரம் மற்றும் மனித மனநிலை தொடர்பாக இன்னும் சில விஷயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இரண்டு குழந்தைகளை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம்.

குமாரும் சுரேஷும் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள், வரவிருக்கும் அரசுத் தேர்வை சமாளிக்க தினமும் இரண்டு மணி நேரம் படிக்க திட்டமிடுகிறார்கள்.

குமார் காலை 5 மணி முதல் 7 மணி வரை படிக்க திட்டமிடுகிறான். சுரேஷ் பள்ளி விட்டு வந்தவுடன், சாப்பிட்டுவிட்டு மூன்று முப்பது மணி முதல் 5 30 மணி வரை படிக்கிறான். இவர்கள் இருவருமே ஒரு நாளிற்கு இரண்டு மணி நேரம் படிக்கிறார்கள்.

ஆனால் இந்த இரண்டு மணி நேரங்களும் ஒன்றா? என்றால் நிச்சயமாக இல்லை என்று தான் சொல்வேன்.

குமார் காலையில் எழுந்து மனமும் உடலும் நீண்ட ஓய்விற்குப் பிறகு புத்துணர்வுடன் படிக்கும் போது அந்த பாடத்தை உள்வாங்கும் நிலை வேறு.

ஆனால் சுரேஷ் நாள் முழுவதும் பள்ளியில் இருந்து விட்டு வந்து அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு உண்ட களைப்புடன் உழைத்த களைப்புடன் படிப்பதற்கு நிறைய வித்தியாசங்கள் இருப்பதை உணர வேண்டும்.

நேரம் மற்றும் நேரம் சார்ந்த மனப்பாங்கு என்று ஒன்று உண்டு. அதாவது நாம் எல்லோரும் ஒரே மாதிரி செயல் புரிவதில்லை உதாரணத்திற்கு சிலர் அதிகாலையில் மிகவும் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் இருப்பார்கள். இரவு தொடங்கியதுமே அந்த சுறுசுறுப்பு மறைந்துவிடும் சாப்பிட்டு தூங்க போகும் வழியை பார்ப்பார்கள், இருக்கிறார்கள் அவர்களுக்கு இரவு தான் உற்சாகமே பிறக்கும் விடிய விடிய விழித்துக் கொண்டு உற்சாகமாக அவர் தம் வேலைகளை செய்வார்கள், ஆனால் காலையில் எழுந்திருப்பது என்பது அவர்களால் முடியாது.

நாம் ஒவ்வொருவரும் எந்த எந்த நேரங்களில் உற்சாகமாக சுறுசுறுப்பாகவும் செயல்படுகிறோம் என்பதை முதலில் கண்டறிய வேண்டும். அதன் அடிப்படையில் செய்ய வேண்டிய வேலைகளைத் திட்டமிட்டு அமைத்துக் கொண்டால் மிகவும் திறமையாக செயல்பட முடியும் .இதை பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தெளிவாக புரிய வைக்க வேண்டும்.

மனிதனுக்கு மனிதன் உடலில் உற்பத்தியாகும் சக்தியின் அளவு வேறுபடுகிறது. அது மட்டுமல்ல, சக்தி பெருக்கெடுக்கும் நேரமும் மாறுபடுகிறது, சக்தி உணர்வுகள் மிகுந்திருக்கும் சமயத்தில்தான் நாம் சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் தெளிவான மனநிலையிலும் இருக்கின்றோம். எனவே அந்த நேரங்களை கண்டுபிடித்து திட்டமிட்டு கொள்வது நமது கடமையாகும்.

திட்டமிடல் பற்றிய மேலும் சில எளிய குறிப்புகளை தொடர்ந்து பேசுவோம்………

தொடரும்