தொடர்கள்
பொது
யாமறியோம் பராபரமே - ஆரா 

20240501072056568.jpg

பிபிசி Earth நிகழ்ச்சி ஒன்றில் நான் பார்த்த ஒரு விஷயம், என் எண்ண ஓட்டங்களை தூண்டி விட்டது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.

ஆர்க்கிட் வகை மலர்ச்செடிகளில் ஒன்று, மகரந்த சேர்க்கை நிகழ வேண்டி செய்யும் ஒரு மந்திர ஜால வித்தை தான் அது! இந்த வகை ஆர்க்கிட் செடி தன் மலர்களை மலர வைக்கும் நேரத்தை அங்கு வாழும் வண்டுகளின் இனப்பெருக்க காலத்துடன் ஒத்து போக செய்து இருக்கிறது! சரி, ஒவ்வொரு பயிரும் செடி கொடியும் இயற்கையின் கால சுழற்சிக்கு ஏற்பவும் அதன் சுற்றுச்சூழலுக்கு ஏற்பவும் பரிணாம வளர்ச்சி பெற்று பூத்து காய்த்து வருவது இயல்பு எனக் கடந்து விடலாம்!

ஆனால் நமது ஆர்க்கிட் செடி 'தி கிரேட் கிரிகாலன் மாஜிக் ஷோ' போல் மேலும் பல வித்தைகளை காட்டும் போதுதான் நாம் அசந்தே போய்விடுவோம்! மேற்சொன்ன இந்த வண்டு இனத்தில், பெண் வண்டு இனபெருக்கத்திற்குத் தயார் ஆனவுடன், ஒரு சின்னச் செடியில் (தரையில் இருந்து ஒரு அரை அல்லது முக்கால் அடி உயரத்தில்) ஏறி கொண்டு ஆண் வண்டை கவர்வதற்கு ஒரு விதமான வாசனையை கமழ விடுகின்றது. இது இயற்கையில் சாதாரணமாக நடக்கும் ஒரு விஷயம். இங்குதான் நம் ஆர்க்கிட் செடி தன் மூளையை (?!) காட்டி உள்ளது. இந்த செடி, தனது ஆர்க்கிட் மலரை தரையில் இருந்து அதே உயரத்தில் மலர வைக்கிறது. மேலும் இந்த மலர் பார்ப்பதற்கு அந்த பெண் வண்டு போலவே உள்ளது. இதற்கும் மேலே இந்த மலரின் மணம் அந்தப்பெண் வண்டு கமழ வைக்கும் வாசனையைப் போலவே, ஆனால் வீரியம் அதிகமாக உள்ளது. இதனால், ஆண் வண்டுகள் குழம்பிப்போய் நிஜ பெண் வண்டை விட்டு விட்டு, அந்த ஆர்க்கிட் மலருடன் புணர முயல்கின்றன! இதைப்போல மலர் விட்டு மலர் தாவி பெண் வண்டு என எண்ணி அந்த ஆண் வண்டுகள் சோடி போட படும் பாட்டைப்பார்த்தால் சற்றே பாவமாகத் தான் இருக்கிறது. ஆனால் இந்தக் குழப்பத்தில், அவை ஆர்க்கிட் மலர்களுக்குள் மகரந்தச் சேர்க்கை நிகழ தம்மை அறியாமலே உதவி விடுகின்றன! இந்த குழப்பத்தில் பெண் வண்டையும் ஒரு வழியாய் கண்டு பிடித்து தங்கள் பாட்டையும் பார்த்துக்கொள்கின்றன! ஆக இறுதியில் இனி எல்லாம் சுகமே என்று வைத்துக்கொள்ளுங்கள்!

ஆனால் எனக்கு ஆச்சரியம் என்னவென்றால் - பார்க்கும் திறன் இல்லாமல் அந்த ஆர்க்கிட் மலர்ச்செடி தன் மலரை எப்படி சரியான பெண் வண்டு போன்ற உருவத்தில் (ஆண் வண்டு பார்க்க வேறு மாதிரி இருக்கும்), சரியான உயரத்தில், மலர வைக்கிறது? அந்த வாசனை திரவியத்தை எப்படி இந்த செடி உணர்ந்து அதுபோலவே அதை விட வீரியமாக உருவாக்கியது? என்னதான் பரிணாம வளர்ச்சி என்று புரிந்து கொள்ள முற்பட்டாலும் இது நம் புரிதலுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்றாகவே இது தோன்றுகிறது! ஆறு அறிவு, ஐந்து அறிவு என பாகு படுத்தி நாம்தான் அறிவு வளர்ச்சி பெற்ற மேலான உயிரினம் என்று மார் தட்டி கொண்டிருக்கும் வேளையில், இயற்கையில் இது போல ஆயிரம் ஆயிரம் ஆச்சிரியங்கள் நம்மை அசர வைத்துக்கொண்டுதான் இருக்கின்றன!

பாறைக்குள் இருக்கும் தேரைக்கு தண்ணீரை வைத்தவன் எவன் என்று ஆரம்பித்து, ஆர்க்கிட் மலருக்கு பெண் வண்டின் வடிவும் வாசமும் தந்தவன் எவன் என்றாக இந்த பூமியில் மட்டுமே நாம் அறியாத நமக்கு (இன்னும்) புரியாத விஷயங்கள் கோடிகளாய் கொட்டிக்கிடக்கின்றன! நமக்கு மேலே ஒரு சக்தி தான் இதை செய்கிறதா? அது கடவுளா? அல்லது இப்போது ட்ரெண்ட்-ல் இருக்கும் யுனிவெர்ஸா? அல்லது, இது விஞ்ஞானத்தில் அடங்கும் வெறும் இயற்கைதானா? அப்படியென்றால், நாம் அறிந்தவரையில் இன்னும் வேறெங்கும் உயிர்களைத்தாங்கும் உலகங்கள் கணித சாத்தியக்கூறுகளாகவே அன்றி சாஸ்வதமாக இல்லையே? ஒரு வேளை நம் விஞ்ஞான அறிவு இன்னும் வளர்ந்தால் இந்த ஆச்சரியங்கள் நமக்கு சாதாரணமாகத் தோன்றுமா? அதற்கு இன்னும் எத்தனைக் காலம் ஆகும்? அதற்குள் வேறன்ன புது அதிசயங்கள் நிகழும்?

அருகில் செல்ல செல்ல மறைந்து போகும் கானல் நீர் போல, நெருங்க நெருங்க தூர விலகும் தொடுவானம் போல இந்த உலகத்தில் நாம் ஒவ்வொன்றாக அறிய அறிய நமக்கு புரியாத புதிராக பல நம் கைகளுக்கு எட்டாமலே போய்க்கொண்டு தான் இருக்கின்றன! அப்படியென்றால் நிதர்சனம் என்பது தான் என்ன? யாமறியோம் பராபரமே!!