தொடர்கள்
அரசியல்
மஹாராஷ்டிராவில் குறைந்தளவு வாக்குப்பதிவு !! ஏன் ??? - பால்கி

20240425083342765.jpeg

மாநிலம் முழுவதும் அலசுவதற்கு முன் அதன் தலைநகரான மும்பையை வலம் வருவோம்.

குறைவான வாக்குப் பதிவு பெற்ற தொகுதி தென் மும்பை தொகுதி தான் 44.63%.

அதே மும்பை நகரில் வட மேற்கு மும்பை தொகுதி தான் அதிகமான வாக்குப்பதிவான 49.79% வாக்குப்பதிவு பெற்றது என தேர்தல் ஆணையக் குறிப்பு சொல்கிறது.

மும்பை நகரம் முழுவதும் எடுத்துக்கொண்டால் 47.71% வாக்குப்பதிவு தான் நடந்துள்ளது.

1991ல் இந்த நகரில் நடந்து வாக்குப்பதிவான 41.2% தான் மிகவும் குறைவான வாக்காளர் பங்கேற்பு.

2019ல் தான் 55.4% தான் கடந்த முப்பதாண்டுகளில் கிடைத்த அதிகமான வாக்குப்பதிவு.

48 பாராளுமன்றத் தொகுதிகளிலேயே அதிகமான 71.88% வாக்குப்பதிவு கட்சிரோளி தொகுதியில்தான் நடந்துள்ளது.

மஹாராஷ்டிராவில் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய ஐந்து கட்ட தேர்தல் நடந்துள்ளன.
மாநில அளவில் இந்த ஐந்து கட்டத்தேர்தல் வாக்குப்பதிவுகளின் சராசரியாகப் பார்க்கையில் 61.29% வாக்குப்பதிவு ஆகியுள்ளது.

மாநில அளவில் இந்த குறைந்த வாக்குப்பதிவுக்கான காரணங்கள்....

போய்த் தொலையுது (சல்தா ஹை), நான் ஒர்த்தன் ஓட்டு போட்டு என்ன ஆயிடப்போறது என்ற விட்டேத்தியான அணுகுமுறை தான் அது. இந்த நகர்புறத்தாரின் அக்கறையின்மை அலாதியானது. ஆபத்தானது.

இந்தியாவின் முதன்மை முதலீட்டு நகரம் என்பதால் வளர்ச்சி ஸ்மார்ட் சிடி, அனைத்து துறைகளிலும் ஏற்கெனவே உயரம் தொட்டுவிட இனி என்ன என்ற உணர்வு, இங்கு வாழ்பவரில் வெளியூரிலிருந்து வந்து குடிபெயர்ந்தவர்கள், கம்பெனிகள், வங்கிகளில் நடக்கும் தொழில்முறை டிரான்ஸ்ஃபர்கள் இந்த மாதிரியான குறைந்த வாக்குப்பதிவுக்கு முக்கிய காரணம்.

நகர்புறத்தாரின் அக்கறையின்மை என்பது தனிநபர்களின் அகநிலையின் விளைவு அல்ல, மாறாக அரசியலற்ற சூழல் மற்றும் 'எதுவும் மாறாது' என்ற (அவ) நம்பிக்கையின் வெளிப்பாடாகும். இதன் விளைவாக, நகரங்கள் மற்றும் அதன் குடியிருப்பாளர்களைப் பாதிக்கும் வறுமை, குற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு மற்றும் அரசியல் போன்ற நகர்ப்புற பிரச்சனைகளில் மக்கள் ஆர்வமின்றி உள்ளனர்.

சுட்டெரிக்கும் வெய்யில், வாக்கு சாவடிகளில் குறைந்த பட்ச வசதிகளான காற்றோட்ட வசதி, தண்ணீர் வசதி, முதியோர்க்கான அமர இருக்கை வசதி, வீல்சேர் வசதி ஆகியவை மிஸ்ஸிங்.

முன்னாள் HDFC Bank சேர்மேன் தீபக் பரேக், " ஒரு மணி நேரம் வெய்யிலில் நிற்க முடியாமல் வாக்களிக்காமலே வீடு திரும்பி விட்டனர் என்று கூறினார்.

வாக்காளர்கள் செல்போனுடன் நுழைய அனுமதிக்கப்படாததால், குடும்பத்தில் ஒருவர் செல்போன் காப்பாளராக வெளியில் நிற்க மற்றவர் வாக்குச் சாவடிகளில் க்யூவில் நிற்க, அதுவே மணிக்கணக்கில் போக நிற்க முடியாமல் பலரும் வாக்களிக்காமல் வெளியேறினர். மற்றவர்கள் தங்கள் உடமைகள் மற்றும் மொபைல்களை வீட்டில் வைத்திருக்க திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது. மற்ற வாக்குச் சாவடிகளில், மொபைல்களை அணைத்த பிறகே அனுமதிக்கப் பட்டிருந்தனர்.

தேர்தலன்று லீவு கிடைப்பதால் கூடவே வரும் சனி, ஞாயிறு லீவையும் இணைத்துக் கொண்டு சூற்றுலா சென்றுவிடுகின்றனர்.

ட்ரான்பரில் இடம் பெயருவோரும் புதிதாக குடி பெயர்ந்த இடத்தில் தனது அட்ரஸை மாற்றுவதில்லை.

அரசாணை ஒன்று வரவேண்டும்..அதன்படி வோட்டு போடாதவற்கு சலுகைகளை நீக்கிட வேண்டும் அல்லது வோட்டு போட்டவர்க்கு சில சலுகைகள் தந்திடவேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் வோட்டிங் ஸ்லிப்புகளைக்கூட சரிவர முழுமையாக மக்களிடையை விநியோகம் செய்வதில்லை.

நமக்கு தோன்று ஐடியா இது தான்.

கட்சிகளும் தேர்தலுக்கு ஆறு மாதத்திற்கு முன்பே ஒவ்வொரு தொகுதிகளில் உள்ள மக்களிடையே ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தகுதியான வாக்காளர்களை வோட்டர் லிஸ்டில் ஊர்ஜிதப்படுத்தலாம். இதன் மூலம் இடம் பெயர்ந்தவர்கள் இறந்தவர்கள் பெயர்களை நீக்கவும் ஆவன செய்யலாம்.

டிரான்ஸ்ஃபரில் வருபவர்களை கம்பெனிகள் அவர்களது வோட்டர் கார்டில் அட்ரஸ் மாற்றத்தையும் செய்ய உதவி/ஆணையிடலாம்.

இதன் மூலம் நிச்சயமாக வரும் தேர்தல்களில் வாக்குப்பதிவு மஹாராஷ்டிராவில் மட்டுமல்ல அகில இந்திய அளவிலும் அதிகரிக்க வாய்ப்பு நிச்சயம்.

கொசுறு: எங்கள் அம்மா எங்களோடு ஓட்டுப்போட வரவில்லை. ஒருவேளை ஆறு மணிக்கு முன்னால வந்திருப்பாங்களோன்னு தெரியல.

2014லியே இறைவனடி பதித்துவிட்டார் என்று எழுதியும் கொடுத்தாச்சு. லிஸ்டில் இன்னும் ஸ்திரமாக இருக்கிறார். இன்னும் எத்தனை தேர்தல்களில் வோட்டு போடப்போறாங்களோ?

உண்மையான காரணங்கள் இப்படியிருக்க அரசியல்வாதிகள் கூறும் காரணங்கள் வேறுவிதமாக இருந்தன.

துணை முதல்வர் ஃபட்னவிஸ், உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே தேர்தல் ஆணையத்தை X ஸின் மூலம் நிர்பந்தித்தனர்.

உத்தவ் தாக்கரே, வாக்குப்பதிவு மெதுவாக நடப்பதாகவும் அதனால் மிதமாகவும் நடப்பதற்கு காரணம் தேர்தல் ஆணையம் பாஜகவின் இச்சைப்படி நடப்பதால் தான் என்று அரசியலை சூடாக்கினார்.

உடனே, ஃபட்னவிஸ், நாங்கள் தான் தேர்தல் ஆணையத்திற்கு ஏன் இப்படி மெதுவாகவும் அதனால் மிதமாகவும் வாக்குப் பதிவு நடக்கிறது என்று கம்ப்ளெயிண்ட் கொடுத்துள்ளோம் என்றார்.

இன்னொரு படி மேலே போய் இனி ஓட்டுப் போடாதவர்களுக்கு அதிக வரி என்று வைத்தால் என்ன ?? எதேனும் செய்ய வேண்டும் வாக்காளர்களை வெளியே கொண்டு வர....