தங்க மீன்களுக்கு நீள் ஞாபக சக்தி கிடையாது என்றும் , அவைகள் மூன்றில் இருந்து ஏழு நிமிடங்களுக்குள் பழையதை மறந்து புதிய அனுபவம் மற்றும் நினைவுகளுக்கு தயார் ஆகிவிடும் என்றும் ஒரு கருத்து உண்டு. அந்த சின்ன மீன்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறிய தொட்டிக்குள் போர் அடிக்காமல் சந்தோஷமாக (?!) வளைய வர, அவைகளுக்கு நீண்ட கால நினைவு மற்றும் அதனை சார்ந்த பாடங்களோ, பதிவுகளோ இல்லாமல் இருப்பதே காரணம் ! அதாவது, மிக சிறிய கால இடைவெளியில் புதிய அனுபவங்களை தேடும் வேட்கை இல்லை என்றால், இந்த தங்க மீன்களின் தொட்டி வாழ்க்கையில் சுவாஸ்யமும் இல்லை, சாத்தியமும் இல்லை!
'Reader's Digest' - இது ஓரு உலகப்புகழ் பெற்ற ஆங்கில ஏடு! உலகின் பல நாடுகளில் பதிப்பில் இருக்கும் இந்த இதழ் சமீபத்தில் இங்கிலாந்தில் மூடுவிழா கண்டுள்ளது. தமிழில் கல்கி போன்ற தரமான இதழ்களும் இணைய வழியில் மட்டும் என புது தடம் தேடி உயிர் மூச்சு விட்டுக்கொண்டு இருக்கின்றன. பல தரப்பட்ட இதழ்கள் மின் இதழ்களாக உருவெடுத்து டிஜிட்டல் காலத்தில் கரை சேர முயன்று வருகின்றன.
ஆனால் வாசகம்/வாசிப்பு வெகுவாக குறைந்து உள்ளதை நாம் அனைவரும் உணர்கிறோம்.
விகடகவி போன்ற சிறிய மின்னிதழ்கள் லாப நோக்கு இல்லாத ஒரே காரணத்தினாலும், எழுத்தாளர்களின் பங்களிப்பாலும் 'வலை'ய வந்து கொண்டிருக்கிறது.
இன்றைய தேதியில் பொதுவான விஷயங்களை கிரகிக்கும் மேல்வாரியான வாசித்தல் என்ற பழக்கம், shorts மற்றும் reels கலாச்சாரத்தால் விழுங்கபட்டு வருகின்றது. குறிப்பாக digital natives என்று அழைக்கப்படும் சந்ததி, படித்தல் எனும் வழக்கத்தையே கடந்து வந்துள்ளனரோ என்று சந்தேகம் வலுக்கிறது! அவர்கள் மட்டும் அல்ல, பொதுவாகவே, வாசித்தல் குறைந்து காணொளி வாயிலாக என்பது பழக்கம் ஆகிவிட்டது.
இரண்டு மணி நேர திரைப்படம் கூட, தரம் இல்லாவிட்டால் ஓடுவதில்லை. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக முழு நீள படங்கள் இன்று வெப் சீரீஸ் வடிவில் 20-40 நிமிட எபிசொடுகளாக உரு மாறி வருகின்றன. எதை சொன்னாலும் 20 நிமிடங்களுக்குள் சொன்னால் கவனம் சிதறாமல் பார்ப்பார்கள் என்று ஒரு கருத்தியலும் உண்டு.
இன்றைக்கு 2 நிமிட நேரம் தான்.
இந்த இரண்டு நிமிட கவன சாளரம் மூலம் எவ்வளவு தரமான விஷயங்களை நமக்குள் கடத்த முடியும் என்பது தெரியவில்லை. ஆனால் வருங்காலத்தில் நாம் சொல்ல யத்தனிக்கும் விஷயங்களை 2 நிமிட காணொளிகளாக வழங்கினால் மட்டுமே கவனம் பெறுவோம் என்பது நியதியாக உருவெடுத்து விட்டது. நெடிய காணொளிகள் கூட, சிறு சிறு துண்டுகளாக வெட்டபட்டு வழங்கப்படுகின்றன.
இந்த இரண்டு நிமிட சந்தோஷங்கள் சரியாக பயன்படுத்தப்பட்டால் அவை ஒரு தூண்டில் போல நெடிய காணொளிகள் பக்கம் கவனத்தை ஈர்க்கும் என்பது புரிகிறது.
புத்தகம் படித்துப் பெறும் அந்த தனி சுக அனுபவத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்தாமல் விட்ட பழி நம் மீது தான் விழும் என்பதை நினைத்தால் சற்றே கவலை ஆகத்தான் இருக்கிறது. படிக்கும் போது விரியும் நம் கற்பனைக்கு ஈடு இணையே கிடையாது. என்னதான் சொல்லுங்கள், உலக அழகி ஐஸ்வர்யா கூட, பொன்னியின் செல்வன் படிக்கும் பொழுது நம் மனதில் உதித்த நந்தினி தேவிக்கு நிகராக மாட்டார்.
சரியான வழிகாட்ட தவறி நாமும் தடம் மாறி, நமது நேரம் மிஞ்சுவதாக எண்ணி நம் குழந்தைகள் கையில் மொபைல் கொடுத்து, அவர்களை வாசிப்பின் அருமை தெரியாமல் செய்து விட்டோமோ?
வாசிப்பை பொறுத்தவரை நம் அடுத்த தலைமுறையை நாம் செல்லமான தங்க மீன்கள் போல ஆக்கிவிட்டோமா?!
ரீடர்ஸ் டைஜஸ்ட் போன்ற பத்திரிகைகள் நம்மிடம் இல்லாமல் போகையில் மனது வலிக்கிறது.
காலம் தான் வாசிப்பை மீட்டெடுக்க வேண்டும். !!
Leave a comment
Upload