தமிழ்நாட்டில், தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தின் புறநகரில் உள்ள இன்னம்பூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ளது எழுத்தறிநாதேஸ்வரர் கோயில். இக்கோயில் கல்வி அபிவிருத்தியைத் தரும் ஸ்தலம். இது காவிரியின் வடகரையில் அமைந்துள்ள 54 தலங்களுள் 45-வது திருத்தலமாக அமைந்துள்ளது. பள்ளியில் சேர உள்ள குழந்தைகள் அட்மிஷனுக்கு முன்னதாக இங்கு வந்து சிவபெருமானை வழிபட்டு அர்ச்சனை செய்வதால் அவர்களின் கல்வி தடையின்றி பயிலும் அருள் கிடைக்கும். சிறு குழந்தைகளுக்கு இங்குச் சிறப்பு வித்தியாப்பியாசம் செய்து வைக்கப்படுகிறது. மற்றும் பேச்சுத்திறமை குன்றியவர்களுக்கும், படிப்பறிவு இல்லாதவர்களுக்கு இந்த கோயிலில் நாக்கில் நெல் கொண்டு எழுதப்படுகிறது. இதனால் அறிவுக் கூர்மை ஏற்படும் என்பது ஐதீகம்.
இந்த ஸ்தலத்தில் சூரியன் பூஜித்தும், அகத்தியர் வழிபட்டு இலக்கண உபதேசமும் பெற்றுள்ளார். மற்றும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலம். இக்கோயிலில் பக்தர் ஒருவருக்காகச் சிவபெருமான் தாமே கணக்கெழுதிக் கொடுத்துள்ளார்
ஸ்தல புராணம்:
ஸ்தல புராணத்தின்படி, சிவபெருமானால் அகஸ்திய முனிவருக்குத் தமிழிலக்கணம் உபதேசித்த காரணத்தால் எம்பெருமானுக்கு அட்சரபுரீஸ்வரர் எனவும் போற்றப்படுகிறார்.
ஒரு முறை துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளான, இந்திரனின் வெள்ளை யானையான ஐராவதம் இத்தல ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றது. சந்நிதி நுழைவாயில் சிறியதாக இருந்ததால் ஐராவதம் சிவபெருமானிடம் தன்னை உள்ளே நுழைய அனுமதிக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். அவரை உள்ளே அனுமதிக்கும் வகையில், சிவபெருமான் கருவறையையும் அதன் நுழைவாயிலையும் மிகவும் அகலமாக்கினார்.அதனால் இத்தல சிவனுக்கு ஐராவதேஸ்வரர் என்ற பெயரும் உண்டு.
முன் ஒரு சமயத்தில் சூரியன் தான் பெற்ற சாபத்தின் காரணமாக தன்னுடைய ஒளியையும், பொலிவையும் இழந்தார். சாபவிமோசனம் பெற இங்குள்ள சிவபெருமானை வழிபடுமாறு முனிவர்களால் அறிவுறுத்தப்பட்டார். ஆனால் நந்தியும் விநாயகரும் இறைவன் எதிரில் இருந்ததால் அவரால் வழிபடமுடியவில்லை. அப்போது சூரியன் சிவபெருமானை வழிபட அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டதின் பேரில் இருவரும் சற்று பக்கம் நகர்ந்தனர். அதனால் சூரியன் சிவபெருமானை வணங்கி சாப விமோசனம் அடைந்தார்.
'இனன்' என்றால் சூரியன் என்று பொருள். சூரியன் இத்தல ஈசனை நம்பி வழிபட்ட ஊர் என்பதால் இனன்நம்பூர் என்று பெயர் பெற்றது. காலப்போக்கில் இதுவே மருவி 'இன்னம்பூர்' என்றாகியிருக்கிறது. இத்தலத்தில் சூரியன் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி 31-ந் தேதி, புரட்டாசி 12-ந் தேதி மற்றும் பங்குனி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில், எழுத்தறிநாதரின் மீது தன்னுடைய சூரிய கதிர்களை வீசி வழிபடுகிறார். இந்த நாட்களில் ஆலயத்தில் சூரிய பூஜை, திருவிழா போல் கொண்டாடப்படுகிறது.
பக்தர் உருவில் வந்த ஈசன் :
சோழமன்னனின் கணக்கரான சுதன்மன் என்பவர் சிவ பக்தர், இன்னம்பர் எழுத்தறிநாதரை அனுதினமும் வழிபட்டு வந்தார்.
ஒருமுறை காட்டிய கணக்கில் மன்னனுக்குச் சந்தேகம் ஏற்பட்டது. சரியான கணக்கைக் காட்டியும் பழி வந்துவிட்டதே என நினைத்த அவர் சிவனை வேண்டினார். சிவன் சுதன்மனின் வடிவத்தில் மன்னனிடம் சென்று சந்தேகத்தைப் போக்கினார். உண்மையான சுதன்மன் சற்றுநேரம் கழித்து மன்னனிடம் கணக்குடன் சென்றான். மீண்டும் ஏன் கணக்குக் காட்ட வருகிறீர்கள் என்று மன்னன் கேட்டான். இறைவனே வந்து கணக்குக் காட்டிய விபரத்தை மன்னனிடம் சொன்னவுடன், மன்னன் சுதன்மனிடம் மன்னிப்புக் கேட்டு, சுவாமிக்குக் கோயிலும் எழுப்பினான். சுவாமிக்கு “எழுத்தறிநாதர், அட்சரபுரீஸ்வரர்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. “அட்சரம்’ என்றால் “எழுத்து’. இது சுயம்புலிங்கம் என்பதால் “தான்தோன்றீயீசர்’ என்றும் பெயர் உள்ளது. சுதன்மன் எழுத்தறிநாதரின் அருட்கருணையை நினைத்து தன் கடைசிக் காலம் வரை, அவரது கோவிலிலேயே வழிபட்டு, பின்பு சிவலோகப் பதவி அடைந்தார்.
ஸ்தல அமைப்பு:
இக்கோயில் கிழக்கு நோக்கிய ஐந்து நிலை இராஜகோபுரத்துடன் விளங்குகிறது. கோபுர வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விசாலமான கிழக்கு வெளிப் பிரகாரத்தைக் காணலாம். இங்கு முதலில் நாம் காண்பது விநாகயரையும் அதன் பின் உள்ள நந்தி மண்டபம். உள்ளே இடதுபுறம் நால்வர் சன்னதி. இத்தலத்தில் கொடிமரம் இல்லை. இரண்டு அம்பாள் சந்நிதிகள் உள்ளன. கிழக்கு வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு தோக்கிய சந்நிதியில் அம்பாள் சுகந்த குந்தளாம்பிகை எழுந்தருளியுள்ளாள். மற்றொரு அம்பாள் சந்நிதியில் நான்கு திருக்கரங்களுடன், தெற்கு நோக்கியபடி சௌந்தர நாயகி என்னும் நித்திய கல்யாணி அம்மன் திருமணக் கோலத்தில் எழுந்தருளியிருக்கிறாள். நந்தி மண்டபத்திற்குப் பின்புறம் இரண்டாவது நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றால் இந்த ஸ்தல மூலவர் எழுத்தறிநாதர், மிகப்பெரிய வடிவில் கம்பீரமாக, கிழக்கு நோக்கி லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக ருத்திராட்சப் பந்தலின் கீழ் அருள்புரிகிறார். கருவறையின் விமானம் (கூரை கோபுரம்) கஜ பிருஷ்டம் எனப்படும் சிறப்புக் கட்டிடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் விமானம் யானையின் பின்புறம் (கஜ - யானை, பிருஷ்டம் - பின்புறம்) போல் தெரிகிறது. இது தமிழில் "தூங்கனை மாடம்" என்றும் அழைக்கப்படுகிறது (தூங்(உம்) - தூங்குதல், ஆனை - யானை, மாடம் - ஒரு கோவில் மேல்). கருவறை கோஷ்டத்தில் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். பாலசுப்பிரமணியர், தட்சிண கயிலாய லிங்கம், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சண்டேஸ்வரர் ஆகியோர் தனிச் சந்நிதியில் வீற்றிருந்து அருள்கிறார்கள்.
கல்லில் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலையும் கோஷ்டத்தில் உள்ளது. இவர்களைத் தவிரப் பைரவர், மகா மண்டபத்தில் நவக்கிரகங்கள் உள்ளன.
ஸ்தல விருட்சம் : செண்பகமரம், பலா
ஸ்தல தீர்த்தம் : ஐராவத தீர்த்தம்
திருவிழாக்கள்:
இக்கோயிலில் விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, திருவாதிரை, மகாசிவராத்திரி, பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.
பிரார்த்தனை, நேர்த்திக்கடன்:
இத்தல எழுத்தறிநாதரை வழிபட்டு, 27 நெய் தீபங்கள் ஏற்றினால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது ஐதீகம். பேசும் திறன் இல்லாதவர்கள், படிப்பறிவு இல்லாதவர்கள் இத்திருத்தலத்திற்கு நேரில் குழந்தையோடு வந்து அர்ச்சனை செய்து சுவாமி சன்னதியில் குழந்தையின் நாக்கில் அர்ச்சகரால் எழுதப்பட வேண்டும். இதனால் அவர்கள் குரல்வளம் நன்றாக அமையும் என்றும் அவர்கள் கல்வியில் முன்னேற்றம் ஏற்பட்டு அறிவுக் கூர்மை பெறுவார்கள் என்றும் நம்பப்படுகிறது. குழந்தை பாக்கியம் பெற இங்கு அர்த்தநாரீஸ்வரருக்கு எண்ணெய் அபிஷேகம் செய்யலாம்.
இத்திருத்தலத்தை வழிபடுபவர்களுக்குப் பூர்வ ஜென்ம பாவங்கள், திருமணத்தோஷங்கள், நவக்கிரக தோஷங்கள் போன்றவை நிவர்த்தியாகும் என்பது இத்திருக்கோயிலின் சிறப்பாகும்.
பள்ளியில் சேர உள்ள குழந்தைகள் அட்மிஷனுக்கு முன்னதாக இங்கு வந்து அர்ச்சனை செய்து கொள்ளலாம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
தினசரி காலை 07.00 மணி முதல் மதியம் 12.00 வரை
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையில் கோவில் திறந்திருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
கும்பகோணத்திலிருந்து திருப்புறம்பயம் செல்லும் வழியில் 8 கீ.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் சாலையில் சென்று புளியஞ்சேரிக்கு வடக்கே திரும்பி 2 கி.மீ. தொலைவு சென்றால் இக்கோயிலை அடையலாம்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் சேர்க்கத் தயாராக இருப்பீர்கள். அதேநேரம் பிள்ளைகளைப் படிக்கவும் தயாராக்க வேண்டாமா... இன்னம்பூர் எழுத்தறி நாதேஸ்வரரை வழிபட்டால் கல்வி தடையின்றி பயிலும் அருள் கிடைக்கும்!!
https://youtu.be/VqshXujoccc?si=F8ePgk15FJ9CIaHQ
Leave a comment
Upload