ஒரு காலத்தில் கிராமத்திலிருந்து டவுனுக்கு சென்று படிப்பதே பெரிய விஷயமாக இருந்தது.
இன்றைய கால கட்டத்தில் ஊர் விட்டு ஊர் செல்வது ஃபாஷன் இல்லை. வெளிநாடு செல்வது தான் ஃபாஷன். மேலும் இந்தியர்களிடம் இருக்கும் பணத்தையும் கல்வி மோகத்தையும் மூலதனமாக்கி நன்றாகவே கல்லா கட்டுகிறது வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள்.
ஹாங்காங் பல்கலைக்கழகத்தின் மதிய வேளைகளில் ஏதோ அண்ணா பல்கலைக்கழகத்தில் நுழைந்து விட்டது போல ஒரு உணர்வு அத்தனை இந்தியர்கள்.
அட்மிஷன் ஸ்பெஷலில் எந்தெந்த நாடுகளில் படிக்கலாம் என்ற ஒரு அலசல் இல்லையென்றால் எப்படி. ????
படிப்பதற்காக வெளிநாடு போக வேண்டுமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்தியாவில் இல்லாத கல்வியா ?? ஆனால் வெளிநாடு கொடுக்கும் அனுபவம் அலாதியானது. அங்கு பரந்து பட்ட மக்கள், கலாச்சாரம், துறை சம்பந்தமான அறிவு இதெல்லாம் அல்ப சந்தோஷங்களுக்கு ஆளாகாமல் மனது அலைபாயாமல் கடந்து வந்தால் அமோகமாக முன்னேறலாம்.
எந்தெந்த நாடுகள் படிக்க சிறந்தது ?? ஏன் ??
ஆஸ்திரேலியா
அற்புதமான அழகான நாடு. கண்ணுக்கினிய கடற்கரைகள், கிரேட் பாரியர் ரீஃப், அருமையான சாலைகள், சீதோஷ்ண நிலை குறைந்த அளவு மக்கள் தொகை, பிரசித்தியான நகரங்கள், பிரிஸ்பேன், மெல்போர்ன், அடிலைட், சிட்னி, போன்ற நகரங்கள்...
பல பல்கலைக்கழகங்கள் அனைத்து நகரங்களிலும் வியாபித்திருக்கின்றன.
என்ன கொஞ்சம் நிறவெறி பிரச்சினை அவ்வப்போது தலை தூக்கும். அதைத் தவிர படித்து முடித்தவர்களுக்கு விசாவும் கொடுக்கும் நாடு ஆஸ்திரேலியா..... இது இந்தியர்களின் முதல் சாய்சாக இருக்கிறது.
கனடா
மோண்ட்ரியல், டொரண்டோ, வான்கூவர் போன்ற நகரங்கள் அதிக வெளிநாட்டு நபர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் நகரங்கள். டொரண்டோ பல்கலைக்கழகம், பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகம், அல்பெர்ட்டோ பல்கலைக்கழகம், போன்றவை மாணவர்களால் பெரிதும் தேர்ந்தெடுக்கப்படுபவை. கனடாவைப் பொறுத்தவரை சீக்கியர்களின் எண்ணிக்கை மிக அதிகம். சில இடங்களில் பஞ்சாப் ஜலந்தரில் இருப்பது போல தோன்றுவது சாதாரணம்.
ஜெர்மனி
ஜெர்மனியின் கல்வி முறை ஆகச் சிறந்தது. அனைத்து நாடுகளைப் பொறுத்தவரை செலவு மிகக் குறைவு ஜெர்மனி தான்.
ஒரே ஒரு விஷயம். மொழி. ஜெர்மன் மொழி தெரிந்தால் தவிர அங்கு படிப்பது கடினம். மற்றபடி அங்கிருக்கும் அழகான கோட்டைகள், பனிமலைகள், ஜெர்மனியில் படிப்பதற்கு பெரிய கிரியாஊக்கிகள். மியூனிக், பான், ஹைடல்பர்க், ஹாம்பர்க் பல்கலைக்கழகங்கள் அதிமுக்கியமானவை.
சுவிஸ்சர்லாந்து
ஹோட்டல் சார்ந்த படிப்புக்களுக்கு சிறந்த நாடு. உலகத்திலேயே சந்தோஷமாக மக்கள் வாழும் நாடு என்று சொல்லக்கூடிய இங்கே படிப்பதற்கு ஏகப் போட்டி. ஜுரிக் பல்கலைக்கழகம், பெர்ன் பல்கலைக்கழகம், போன்றவை டிமாண்டில் உள்ளவை. மற்றபடி நம்ம அரசியல்வாதிகளை டெபாசிட் செய்ய வரும் போது பார்க்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
அமெரிக்கா
அமெரிக்காவைப் பற்றி நாம் என்ன சொல்லியாக வேண்டியிருக்கிறது. உள்ளதிலேயே அதிக செலவு பிடிக்கும் நாடு இது தான்.
ஒரே ஆறுதல். இங்கே படித்து விட்டு அப்படியே வேலைக்குப் போய் சம்பாதித்து கடன் வாங்கி வீடு கட்டி, குழந்தை பெற்று குடும்பமாக செட்டில் ஆவது ஏறக்குறைய கியாரண்டி. அதற்காகவே அமெரிக்கா அமெரிக்கா என்று ஆலாய்ப் பறக்கிறார்கள்.
ஹார்வர்ட், மாசசூட்ஸ், ஸ்டாண்ஃபார்ட், கலிபோர்னியா பல்கலைக்கழகங்கள் ஏக கிராக்கி. சுஜாதா சொல்வது போன்ற ஒரு மாயச் சுழல் அமெரிக்கா வந்தால் மீண்டும் இந்தியா திரும்ப விடாது. விடாது கருப்பு.
இங்கிலாந்து
இங்கும் விலை அதிகம் தான். ஆனால் அமெரிக்கா போல படித்து முடித்து விட்டு உத்திரவாதமாக விசாவெல்லாம் கிடையாது. படித்து விட்டு வெளியேறி விடவேண்டியது தான். ஆனால் தரமான கல்விக்கு உத்திரவாதம். ஆக்ஸ்ஃபோர்டு, காம்பிரிட்ஜ், இம்பீரியல், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ், எடின்பர்க் பல்கலைக்கழகம் இங்கிலாந்தின் கெத்து.
ஆமா பெரிய லண்டன் ரிட்டர்ன் என்று சொல்லிக் கொள்ளலாம்.
நியூசிலாந்து
குறைந்த மக்கள் தொகை. இயற்கையின் அத்தனை கொடையும் கொண்ட நாடு நியூசிலாந்து. அழகான கடற்கரைகள், காடுகள், தீவுகள், மொத்தத்தில் பூலோக சொர்க்கம் நியூசிலாந்து. ஆக்லாந்து, காண்டர்பரி, வெலிங்டன்,மாசே பல்கலைக்கழகங்கள் இங்கே பிரசித்தி. இங்கும் கல்வித் தரம் அதிகம் என்றும் சொல்லப்படுகிறது.
நெதர்லாந்து
டச்சு கலாச்சாரத்தில் ஒரு வாழ்க்கை சைக்கிள் கலாச்சாரம், கோட்டை கொத்தளங்கள், அருமையா சீதோஷ்ணம், ஒரு ஆரோக்கியமான வாழ்க்கைத் தரம் இதைத் தருகிறது நெதர்லாந்து. கொஞ்சம் வாழ்க்கை மெதுவாகவே நகரும் இங்கே..
ஆம்ஸ்டர்டாம்,டிரைபர்க்,மாஸ்டிரிக், டிவெண்டே பல்கலைக்கழகங்கள் நெதர்லாந்தில் பலம். ஹேக் பல்கலைக்கழகம் அறிவியல் சார்ந்த படிப்புக்கு.
ஃபிரான்ஸ்
பிரெஞ்சுக் கலாச்சாரத்தில் படிக்கலாம். அடிக்கடி ஈபில் டவரைப் பார்க்கலாம். பல்கலைக்கழக ஃபீஸ் கம்மி தான். ஆனால் ஊர் தான் அவ்வளவு பாதுகாப்பு இல்லை. வெளியே வாசலுக்கு போனால் கையில் காசு மிச்சம் இருக்காது. பிடுங்கிக் கொண்டு விடுவார்கள். எஸ்ஸக் பிஸினஸ் ஸ்கூல், இன்ஸீட், சார்போன், எகோலே பல்கலைக்கழகங்கள் பிரான்சின் பலம். பெண்கள் போனால் ஃபாஷன் நகரம். ஏகப்பட்ட உடைகள் வாங்கலாம்.
தென் கொரியா
ஆசியாவில் இருந்தாலும் தென்கொரியா சமீபத்தில் நிறைய இந்திய மாணவர்களை ஈர்க்கிறது. யோன்சாய், சியோல், கொரியா, ஹாங்யாங் பல்கலைக்கழகங்கள் தென் கொரியாவின் பலம். இந்திய புரொபசர்கள் நிறைய இருக்கிறார்கள். மேல்படிப்புக்கு சிறந்த நாடு. மற்றபடி தொழில்நுட்பத்தில் தலை சிறந்த நாடு. மாணவர்களுக்கு ஏகப்பட்ட எக்ஸ்போஷர்கள் கிடைக்கும்.
இந்தப் பட்டியல் சும்மா ஒரு அறிமுகத்திற்கு மட்டுமே... இதைத் தவிர மருத்துவப் படிப்பு என்று வந்து விட்டால், நம்மூரில் நீட் அடிதடியிலும் இட ஒதுக்கீட்டிலும் இடிபட்டு இடம் கிடைக்காத மாணவர்கள் ரஷ்யாவில் இருக்கும் ஜியார்ஜியா, பிலிப்பைன்ஸ், சீனா, வியட்நாம் என்று பல நாடுகளுக்கு ஓடி படித்து விட்டு பின் மீண்டும் இந்தியா வந்து ஒரு பரீட்சை எழுதி டாக்டராவது இப்படி ஏராள வழி வகைகள் இருக்கிறது.
இந்த லிஸ்டில் இல்லாத ஹாங்காங்கிற்கும் தற்போது ஏராளமான இந்திய மாணவர்கள் படையெடுக்கிறார்கள்.
ஹாங்காங் பல்கலைக்கழகம், சயன்ஸ் அண்ட் டெக்னாலஜி பல்கலைக் கழகம், சீன பல்கலைக் கழகம், சிட்டி பல்கலைக் கழகம் இப்படி கல்விச் சாலைகள் ஹாங்காங்கின் பலம். மொழி கற்றுக் கொண்டால் தான் உள்ளூரில் எளிதில் வேலை கிடைக்கும். சீன மொழி கற்றுக் கொள்வது கொஞ்சம் சிந்தாதரிப்பேட்டை வாசி சங்க இலக்கியம் கற்றுக் கொள்வது போலத் தான்.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளை ஓப்பிடுகையில் ஹாங்காங்கில் ஃபீஸ் குறைவு தான். மேலும் இந்தியாவிற்கு அருகில் இருப்பது இன்னொரு சலுகை.
பள்ளி இறுதித் தேர்வில் நல்ல மார்க் எடுத்தால் நல்ல என்றால் எக்கச்சக்க மார்க் எடுத்தால், ஒரு பைசா செலவில்லாமல் ஸ்காலர்ஷிப்பில் கூட படிக்கலாம்.
சும்மாவா சொன்னார் வள்ளுவர்
யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
கற்றவனுக்கு தன் நாடும் ஊரும் போல வேறு எதுவாயினும் நாடாகும், ஊராகும் ஆகையால் ஒருவன் சாகும் வரையில் கல்லாமல் காலங்கழிப்பது ஏன்.
—மு. வரதராசன்
இதை கற்பதற்கும் என்றும் மாற்றிக் கொள்ளலாம்.
Leave a comment
Upload