தொடர்கள்
அழகு
சிப்பிப்பாறை நாய் - விகடகவியில் வெளிவந்த கட்டுரையின் மீள் பதிவு. ராம்

20240418121115278.jpg

(பிரதமரே ரெக்கமண்ட் பண்ணிட்டார்...இன்னும் என்ன ?? )

தமிழ்நாட்டைப் பற்றியோ தமிழைப் பற்றியோ தமிழ் இலக்கணத்தைப் பற்றியோ பிரதமர் அவ்வப்போது எங்கேனும் பேசிக்கொண்டே தான் இருக்கிறார். இதற்காக தமிழ்நாட்டில் பா.ஜ.க வுக்கு ஓட்டுப் போடுவார்களா என்பது பிரியாணியையும் இலவசங்களையும் பொறுத்தது என்று ஒரு சார் நினைத்தாலும் அந்த அரசியலுக்குள் போகாமல் இன்று மேலும் ஒரு ஆச்சரியம்.

இந்த மாத மன் கீ பாத் (மனதின் குரல்) நிகழ்ச்சியில் பிரதமர் தமிழகத்தைப் பற்றி சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்.

தமிழ் இளைஞர்கள் புதிய செயலிகளை கண்டுபிடித்ததை பாராட்டியிருக்கிறார் பிரதமர்.

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் பற்றியும் பெருமையாக பேசியிருக்கிறார்.

மூன்றாவதாக சொன்ன சிப்பிப் பாறை நாய்கள் முத்தாய்ப்பான அடுத்த விஷயம்.

திருநெல்வேலி பக்கத்தில் வளர்ந்ததால் எனக்கு இந்த சிப்பிப்பாறை நாய்களை பார்த்த அனுபவம் இருக்கிறது.

ஆனாலும் நாய்களைப் பற்றி எழுதும் அனுபவம் சுத்தமாக இல்லை.

ஹாங்காங்கில் அனைத்து கட்டிடங்களிலும் நாய்கள் வளர்த்துக் கொள்ள அனுமதியில்லை. ஆனால் நாங்கள் இருக்கும் குடியிருப்பில் அதிகாரபூர்வமாக நாய்கள் வளர்க்க அனுமதி உண்டு.

அதனால் சின்னதும் பெரிசுமாக, சின்ன பொம்மை நாய் முதல் கன்னுக்குட்டி சைஸ் நாய்கள் வரை இங்கு வளைய வருவது சில சமயங்களில் கிலியை ஏற்படுத்தும்.

என் மனைவி நாய் அரை மைல் தூரத்தில் வந்தாலே ஹெலிகாப்டரை கண்ட அதிமுக அமைச்சர்கள் போல பம்முவாள்.

ஆக நாய் வளர்க்கும் தகுதியோ, அல்லது ஆசையோ ஆகாது. ஆனாலும் சிப்பிப்பாறை போல ஒரு நாயை அபார்ட்மெண்டில் வைத்துக் கொள்வது கடினம்.

சிப்பிப்பாறையைப் பற்றி பள்ளிக் கூடம் போல ஒரு சிறு குறிப்பு வரைவது இங்கே தேவைப்படுகிறது.

புள்ளி புள்ளியாக இல்லாமல் அலம்பி விட்டது போல ஒரே வண்ணத்தில் இருக்கும் சிப்பிப்பாறை வகை நாய்கள் திருநெல்வேலி, தென்காசி மதுரை பக்கம் நிறைய காணலாம். சிப்பிப்பாறை என்ற ஊரில் தான் இந்த வகை நாய்கள் முதலில் பாளையக்காரர்கள் அல்லது சிற்றரசர்கள் வளர்த்து வந்தனராம். அதனால் தான் இதற்கு சிப்பிப் பாறை என்று பெயர்.

20200731082229124.jpg

சிப்பிப்பாறை வளர்ப்பது அந்த நாளில் ஒரு அந்தஸ்து பெருமை. அதன் வேகம் சிறுத்தை போல இருக்குமாம். முயல் வேட்டைகளில் ஆரம்ப காலத்தில் ஈடுபடுத்தப்பட்டது சிப்பிப் பாறை. முயல் வேகம் என்பது யோசித்துப் பாருங்கள் அதுவே சிப்பிப் பாறைக்கு ஒன்றுமேயில்லை என்றால் அதன் வேகம் அசாத்தியமானது.

சிப்பிப்பாறை நாய்கள் இருமல் மாத்திரை போல பல வண்ணங்களில் இருக்கிறது. கருப்பு, ப்ரெளன், பழுப்பு, சில்வர் கிரே இது போன்ற வண்ணங்களில் காணும் சிப்பிப்பாறை ஓரளவுக்கு உயரமாக வளரக்கூடிய வகை. புசு புசுவென்று முடியை உதிர்த்து எரிச்சல் ஏற்படுத்தாத தோல் சிப்பிப்பாறைக்கு.

இதில் விசேஷம் என்னவெனில் இங்குள்ள சில நாய்வளர்ப்பாளர்களை கேட்டால் மாதம் நாய் பராமரிக்கும் செலவே சுமார் இருபதாயிரம் வரை செலவு செய்கிறார்களாம். அதற்கு ஸ்பெஷல் தீனி, மருத்துவர் அது இது என்று. வெளிநாட்டு நாய்களை பராமரிப்பது பி.எம்.டபுள்யூ கார் வைத்திருப்பது போல ஏகப்பட்ட செலவாகும்.

சிப்பிப்பாறை டயோட்டா போல மெயிண்டனென்ஸ் ஃப்ரீயாம். அடிக்கடி ஆஸ்பத்திரி அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாத கல் தூணால் செய்யப்பட்ட சிப்பிப் பாறையை பற்றி பல வதந்திகள் உண்டு.

அதாவது ஒரே ஒரு ஆளிடம் தான் சிப்பிப்பாறை வகை நாய்கள் விஸ்வாசமாக இருக்கும் என்று.

இது தவறு என்கிறார்கள் நாய் அனுபவஸ்தர்கள். சிப்பிப்பாறை மிக மிக புத்திசாலித்தனமானது. மனிதர்களுடன் மிகுந்த அன்பாக பழகக் கூடியது. அதற்கு தனியாக இருப்பது தான் ரொம்ப கஷ்டம்.

அது போலவே அது வேட்டையாடும் வகையைச் சேர்ந்ததால் ஏகப்பட்ட உடற்பயிற்சி தேவைப்படும் அதற்கு.

சும்மா வாங்கி வைத்து சோபாவில் பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டு சதாசர்வ காலம் டிவி சீரியல் பார்த்தால் மனைவிமார்களுடன் சேர்ந்து கொண்டு சிப்பிப்பாறையும் கடித்து வைத்து விடும்.

சிப்பிப்பாறை நாய்களை பழக்குவதற்கே ஊரில் 48 நாட்கள் செலவிடுவார்களாம்.

சிப்பிப்பாறையைப் பற்றிய இன்னொரு சுவையான செய்தி சொல்லப்படுகிறது. சத்ரபதி சிவாஜியிடம் பிரியமாக இருந்த குதிரையும் ஒரு சிப்பிப்பாறை நாயும் அவரது மறைவுக்குப் பின் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்தார்களாம். அந்தளவும் எஜமானனிடம் பாசம் வைக்கும் சிப்பிப் பாறை.

20200731082431172.png

20240418121400711.jpg

ராஜபாளையம் நாய்.

இந்திய அளவில் சிப்பிப்பாறை மட்டுமல்லாது, ராஜபாளையம், கோம்பை, கன்னி, முதோல், ராம்பூர், காரவான் போன்ற நாய் வகைகளும் மிகப் பிரபலம். சர்வதேச அளவில் நம் நாட்டு நாய்களுக்கு அங்கீகாரம் கிடைக்காதது தான் வருத்தம்.

பிரதமரின் இந்த உரை என் நண்பர்களை தூண்டி அல்சேஷன் ஆதிசேஷன் போன்ற வெளிநாட்டு வகை நாய்கள் ஏதேனும் வாங்கி போஷிக்காமல் நம்மூர் சிப்பிப்பாறை ராஜபாளையம் போன்ற நாய்களை வளர்க்கத் துவங்கினால் மகிழ்ச்சி.

என்ன ஓரே ஒரு விஷயம், உங்கள் வீட்டுக்கு மட்டும் என்னை அழைத்து விடாதீர்கள்.

சிப்பிப்பாறையை பற்றி எழுத மட்டும் தான் தைரியம். !!