தொடர்கள்
சோகம்
புள்ளி மான்களை காப்பாற்றுங்கள் - மாலா ஶ்ரீ

20240418094824436.jpeg

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு, அரக்கோணம், திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு மாவட்டப் பகுதிகளில் பல ஹெக்டேர் பரப்பளவில் ஏராளமான காப்புக் காடுகள் உள்ளன. இக்காடுகளில் ஏராளமான புள்ளிமான்கள், கரடி, குரங்குகள், காட்டெருமை உள்பட பல்வேறு சாதுவான வனவிலங்குகள் வசிக்கின்றன. இத்தகைய காப்புக் காடுகளில் வசிக்கும் பல்வேறு வனவிலங்குகளுக்கு வனத்துறை சார்பில் தொட்டி அமைத்து குடிநீர் வழங்கி வருவதாக கூறப்படுகிறது. எனினும், பல்வேறு காப்பு காடுகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீரின்றி வறண்டும் உடைந்தும் கிடக்கிறது.

தற்போது கோடை வெயிலின் உக்கிரத்தில், காப்புக் காடுகளில் போதிய உணவு மற்றும் குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காமல் புள்ளிமான்கள் உள்பட பல்வேறு வனவிலங்குகள், உணவு மற்றும் குடிநீர் தேடி அருகிலுள்ள கிராம குடியிருப்பு பகுதிகளில் புகுந்துவிடுகின்றன. இவற்றில் சில புள்ளிமான்கள் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது வாகனங்களில் அடிபட்டும், ஒருசில மான்கள் ரயில்களில் அடிபட்டும் இறந்து வருகின்றன. குடியிருப்பு பகுதிகளுக்கு நுழையும் புள்ளிமான்களை அப்பகுதி தெருநாய்கள் விரட்டி சென்று கடித்து குதறி வருவதாலும், தாண்டி குதிக்கும்போது மின்வேலிகளில் சிக்கியும் பரிதாபமாக பலியாகி வருகின்றன. இதற்கு சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில் அரக்கோணம் ரயில்நிலையத்தை ஒட்டிய தண்டவாளப் பகுதியை 3 புள்ளிமான்கள் வேகமாக கடந்து செல்ல முற்பட்டன. அப்போது அவ்வழியே வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 புள்ளிமான்களும் பரிதாபமாக பலியாகிவிட்டன. பின்னர், ரயில்களில் அடிபட்டு இறந்த 3 புள்ளிமான்களையும் வனத்துறையினர் சம்பிராதயப்படி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அந்த 3 புள்ளிமான்களின் உடலும் தீயிட்டு எரிக்கப்பட்டன. அவ்வளவே!

இதுபோன்ற சம்பவங்கள் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்பட் பல்வேறு மாவட்ட காப்பு காடுகளில் புள்ளிமான்களின் இறப்பு தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இதன்மூலம் தமிழகத்தில் உயிர் வாழும் புள்ளிமான்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. இதற்கு தமிழக வனத்துறையினரும் எவ்வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்காமல், வனவிலங்குகளை பாதுகாப்பதில் அக்கறை கொள்ளாமல் மவுனம் சாதித்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் அதிகளவு மரங்கள் வெட்டப்படுவதைப் போல், காப்புக் காடுகளில் இருந்து உணவு, தண்ணீர் தேடி ஊருக்கு செல்லும் புள்ளிமான்கள், குரங்குகளை தெருநாய்களும் விரட்டி சென்று, அதன் எண்ணிக்கையை வெகுவாக குறைத்து வருகின்றன. இவற்றை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர்கள் வேதனையுடன் வலியுறுத்துகின்றனர்.