தொடர்கள்
கவிதை
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் (அ) மழைப்பாட்டு - ராகவன் ஸாம்யெல்

20240417193049117.jpeg

வெய்யிலுக்குப் பின்னான
இந்த மழையின் பிரியம் என்னால்
தாளமுடியாததாய் இருக்கிறது
பெரும்வாதையை சொஸ்தவிரலாய்த் தொடுகிறது
மொட்டை மாடியில் பூந்தொட்டிகளிலும்
குரோட்டன் செடிகளின் வனப்பிலும்
மழையின் நீண்ட கரங்களின் வெம்மையை
வண்ணங்கள் அப்பிக்கொள்ளும்படி தழுவுகிறேன்
மழைப்பாடலின் தத்துவத்தை தகரத்தடுப்பின்
தாளத்திற்குப் பித்தனாய் சுழன்று சுழன்று ஆடுகிறேன்
சருகுகள் அடைத்திருந்த மழைவடிகால் துளைகளை
திறந்துவிட மனமில்லை எனக்கு
நிறைந்து மிதக்கிறது மொட்டைமாடித் தக்கையென
மழை நீரில் வெங்காயத்தாமரையாய் மிதப்பதானாலும்
தேங்கிய நீரில் மூழ்கிவிடுவதானாலும் உடன்பாடே!
என் மனைவி என்னைக்குறித்து சொல்கிற
ஹிந்தி பழமொழி ஞாபகம் வருவதைத் தவிர்க்கமுடியவில்லை
சாமர்த்தியம் இல்லாதவனே வாழ்க்கையை
முழுவதுமாய் வாழ்ந்துவிட துணிகிறான்
கைப்பள்ள நீரில் மூழ்குகிறவனாகவும் இருக்கிறான்
மேலும் மழைக்கு ஒதுங்கிக்கொள்கிறவர்களைப் பார்க்கிறேன்
மழையை நேசிப்பவர்கள் எல்லோரும்
அந்தக் கலவியில் கரைவதில்லை
நீண்ட தாழ்வாரத்தடுப்பில் வழியும் மழையை
கைகளால் அளைந்தோ அல்லது கம்பிகளின் ஊடாய்
ஒரு தேனீரின் மிடற்றிலே மழையின் விள்ளலை
உண்டுவிட முயன்று தோற்கிறார்கள்
துளிர்த்தலின் இசையை சுழலவிட்டபடி
கண்களை மூடி மழைத்துவத்தை செவிமறுத்து
தாமதமாகும் ஸ்விக்கி, ஸொமாட்டோ டெலிவரிகளை சபித்தபடி
கேக் வெட்டிக் கொண்டாடுகிறார்கள்
பொசுக்க பொசுக்க நெய் சூழ்ந்த வெள்ளாட்டங்கறியும்
சோறுமாய் தின்று செரித்த பொழுதுகளின் நீட்சியை
மழையின் பெட்டியில் கிடத்தி உடன் உறங்குகிறார்கள்
மொட்டை மாடியும், நானும் என் மழையும்
அவரவர் மழை அவரவர்க்கே
மழை பொதுவில் இல்லை எனத்தெளிகிறோம்

என்றாலும் எனக்கான கவிதையை யாரோ மழைப்பாடலாக்கி
இசைத்துக் கொண்டிருக்கக் கூடும் என்று
மழைப்புள்ளி வைக்கிறேன்.