தொடர்கள்
அழகு
அன்னமாச்சார்யாரும் திருவேங்கடமுடையானும் - டாக்டர். தாள்ளப்பாக்க வெங்கட மீனலோசனி

2024041623012793.jpg

இசை அரசர் சத்குரு அன்னமாச்சார்யாரும் திருவேங்கடமுடையானும் என்ற தலைப்பில் இதை எழுதியவர் டாக்டர். தாள்ளப்பாக்க வெங்கட மீனலோசனி.

அன்னமாச்சார்யரின் 12ஆவது சந்ததியினர். கர்னாடக சங்கீத பாடகர். தனது மூதாதையரான அன்னாமாச்சார்யார் இசைக்கு ஆற்றிய பங்கு என்ற தலைப்பில் சென்னை பல்கலை கழகத்தில் ஆய்வு கட்டுரையை சமர்பித்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.

அன்னமையாவின் 1001 கீர்த்தனைகளை 101 மணி நேரம் தொடர்ந்து தனது மாணவர்களுடன் பாடி கின்னஸ் உலக சாதனையையும் செய்துள்ளார்.

20240418084727943.jpeg

வரும் வைகாசி விசாக நன்னாளில் திருப்பதி வேங்கடவனுக்கு பிரியமான பக்தன் அன்னமாச்சார்யரின் 616 ஆவது பிறந்த தினம்.

அவரை சந்தித்தேன்.

20240418090133726.jpeg

க்ருதே ரங்கநாதஸ்ய, த்ரேதாயாம் ரகுனந்தன

த்வாபரே வாசுதேவஸ்ய, கலௌ வேங்கடநாயக

புருஷர்களில் உயர்ந்தவரான புருஷோத்தமரான ஸ்ரீமஹாவிஷ்ணு க்ருத யுகத்தில் ரங்கநாதனாகவும், த்ரேதா யுகத்தில் ராமனாகவும், த்வாபர யுகத்தில் க்ருஷ்ணனாகவும், அருள் பாலித்தவன், கலியுகத்தில் ஸ்ரீவெங்கடேஸ்வரனாக ஏழு மலைகளின் மேல் அர்ச்சாவதார மூர்த்தியாக நின்று அருள் பாலிக்கும் இடம் தான் திருமலை க்ஷேத்ரம்.

இப்படிப்பட்ட வெங்கடேஸ்வரனையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு தனது வாழ்நாள் முழுவதும் அவன் புகழ் பாடிக் கொண்டு அவனுக்கு சேவை செய்வதையே முழு மூச்சாகக் கொண்ட முதல் தெலுங்கு வாக்கேயக்காரர் தாள்ளப்பாக்க அன்னமாச்சார்யார் ஆவார்.

ஆந்திர மாநிலம், கர்நாடக இசை வாக்கேயக்காரர்களான அன்னமாச்சார்யா, பத்ராசல ராமதாஸர், க்ஷேத்ரக்ஞர்,சதாசிவ ப்ரம்மேந்திரர் மற்றும் பலரை, பக்தி இசை உலகிற்கு வழங்கிய பெருமையுடையது.

இசை என்பது வெண்பா, விருத்தம், என நாலடி ஈரடியாக பாடப்பட்டு வந்த காலத்தில் இசை சரித்திர உலகிற்கு திருவேங்கடவனால் அளிக்கப்பட்ட நல்முத்து அன்னமாச்சார்யார்.

உயிர் வாழ அன்னம் போல் இசை வாழ அன்னமையா பிறந்தார். சிறு வயது முதலே திருவேங்கடமுடையானிடம் லயித்து பாவ(பாவனையின் பாவ) பூர்வமான கீர்த்தனைகள் இயற்றி பாடியவர்.

வேதாந்த தத்துவங்களைக் கூறும் அத்யாத்மிக சங்கீர்த்தனங்கள், கிராமிய மணம் கமழும் தத்துவப் பாடல்கள், நாயக, நாயகி பாவ(பாவனையின் பாவ)த்தில் செய்த ஸ்ருங்கார ரஸ கீர்த்தனைகள், அலமேலு மங்கை சதகம், நரசிம்மர் பதிகம், தசாவதார கீர்த்தனைகள் என சுமார் 32,000 கீர்த்தனைகள் பக்தர்களுக்கும், தெலுங்கு இலக்கிய உலகிற்கும், கர்நாடக இசை உலகிற்கும் வழங்கிய பெருமை உடையவர், ஸ்ரீஅன்னமையா என்கிற ஸ்ரீஅன்னமாச்சார்யார்.

சாஹித்தியங்களுக்கு பல்லவி, சரணம், என வகைப்படுத்திய முதல் வாக்கேயக்காரர் இவரே ஆவார். பின்னர் வந்த மும்மூர்த்திகளான தியாகராஜர், முதலியோர், இதை விரிவுபடுத்தி பல்லவி அனுபல்லவி, சரணம் என சாஹித்தியங்களை அமைத்தனர்.

“அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அதனினும் அருது கூன் குருடு, செவிடு, பேடு நீங்கப் பிறத்தல்…..”

எத்தனை எத்தனை யுகங்கள், பிறப்பு இறப்பு என்பது, ஆதியும் அந்தமும் இல்லாத அந்த பரம்பொருள் வசம் தான் உள்ளது. நிலையில்லாத இந்த மானுடப்பிறவி னல்லதொரு மார்கத்தில் சென்று, நல்ல நிலையை அடைய, உணர்வுகளின் வெளிப்பாட்டினை இசையுடன் இணைத்து, கீர்த்தனைகள் செய்து நம் முன்னோர்கள் இறைவனிடத்தில் சரண் அடைந்தார்கள்.

இடைப்பட்ட 13-14ம் நூற்றாண்டில் தான் ஆன்மீகம், பக்திமார்க்கம் வலுவிழந்து, மக்கள் மனம் தடுமாறி வேறு சமயங்களை நாடி செல்ல வேண்டிய நிலை. மண்ணாசை, ஜாதி மத வெறியால், பல திருக்கோயில்கள், திவ்ய தேசங்கள் நாசப்படுத்தப்பட்டன.

அத்தகைய தருணத்தில் தான், கலைகளின் மேல் பற்று கொண்ட கிருஷ்ண தேவராயர், மாபெரும் இந்து பேரரசை நிறுவினார். தென்னகத்தில் நாத்திகம் குறைந்து, ஆத்திகம் பக்தி மார்கம் மலரத்துவங்கியது. பக்தி மார்கத்தை வலுப்படுத்த, பரந்தாமன் புகழ் பாட நல்முத்து ஒன்று தோன்றியது.

வாழ்க்கை வரலாறு

ஆந்திர மாநிலம் கடப்பா ஜில்லாவில், ராஜம்பேட்டை தாலுக்காவில், தாள்ளப்பாக்கம் என்னும் கிராமத்தில் கி. பி. 1408 ல் பாரத்வாஜ கோத்ரம், ஆஸ்வலாயன சூத்ரம், நந்தவரிக தெலுங்கு அந்தணர் குலத்தில், வைகாசி விசாக நன்னாளில், நாராயண சூரி, இலக்கமாம்பா திவ்ய தம்பதியர்களுக்கு திருமாலின் நந்தக அம்சமாக அன்னமயா திருவயிறு உதித்தார். தெலுங்கு மற்றும் சம்ஸ்கிருத மொழிகளில் பாண்டித்யம் பெற்று விளங்கினார்.

20240417090355479.jpg

வேங்கடவனின் முதல் தரிசனம்:

இவர் தமது ஏழாவது வயதில், ஓர் இரவு வேங்கடவனையும், சேஷாத்ரி சிகரத்தையும், கோவிலையும் கனவில் கண்டு, இப்புடிட்டு கலகண்டி என்ற தனது முதல் கீர்தனையை பூபாள ராகத்தில் பாடினார்.

தமது 16 ஆவது வயதில் திருமலை செல்லும் பக்தர்கள் கூட்டத்துடன் கலந்து திருப்பதி சென்றுவிட்டார்

மிகுந்த களைப்பின் காரணமாக பின் தங்கிவிட்ட இவருக்கு கங்கம்மா என்னும் கிராமதேவதை கங்காம்ருதம் வழங்கி களைப்பை போக்கி திருமலை செல்லும் வழியைக் காட்டி அருளினாள்.

மலை ஏறுமிடத்தில் மோகாலு மெட்லு என்றழைக்கப்படும் முழங்கால் முடிச்சு என்னுமிடத்தில் பசி மயக்கத்தில் விழுந்தபோது அன்னை அலர்மேல்மங்கை முதியவள் வேடத்தில் தோன்றி அவரின் பசி மயக்கத்தை தெளிய வைத்தாள்.

திருமலையை அடைந்த அன்னமையா பொடகண்டிமையா மிம்மு புருஷோத்தமா என்ற புகழ் பெற்ற கீர்த்தனையைப் பாடினார். பின்னர் அங்கேயே தங்கி பெருமாளுக்கு சுப்ரபாத சேவை ஊஞ்சல் சேவை மற்றும் ஏகாந்த சேவை ஆகிய சேவைகளை செய்துவந்தார். அலர்மேல் மங்கையை தனது மானசீக மகளாக பாவித்து திருவேங்கடவனுக்கு அவளை மணமுடித்து கல்யாணோத்ஸ்வ சேவையை துவக்கிய பெருமை இவரையேச் சாரும். ஒவ்வொரு சேவைக்கும் பல கீர்த்தனைகள் இயற்றி பாடினார்.

அகோபில மடத்தை ஸ்தாபித்த மூல புருஷரான ஆதிவண்ஸடகோப யதீந்த்ர மஹாதேசிகரின் சிஷ்யராகி, திவ்யபிரபந்தம், வேதாந்தம், வேத சாஸ்திரங்களை செவ்வனே பயின்றார்.

அகோபில ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரின் மீது 300 மேற்பட்ட கீர்த்தனைகள் இயற்றி செப்பு தகடுகளில் பொறித்து, அகோபில ஸ்ரீலக்ஷ்மி நரசிம்ம ஸ்வாமிகளின் ஆலயத்தில் வைத்தார். சகஜ வைஷ்ணவாசார என்ற சாமந்த ராக கீர்த்தனையில் வைணவ குரு ஸ்ரீராமானுஜரைப் போற்றி பாடியுள்ளார். சூடுடிந்தரிகி என்ற பைரவி ராக கீர்த்தனையில் தமக்கு ஞான குருவாக அமைந்து, இறைவனின் சரணாகதி பரமானந்த தத்துவத்தை உபதேசித்த ஸ்ரீவண் சடகோப மஹாமுனிவரை துதித்து பாடினார்.

பெற்றோர்களின் வற்புறுத்தலின் பேரில் தக்க சமயத்தில், திம்மக்க என்ற பெண்ணை மணந்தார். அவள் நரசிம்மா என்ற மகனை ஈன்றெடுத்துவிட்டு இறந்துவிட்டாள். பிறகு அக்கலம்மா என்ற பெண்ணை மணந்து கொண்டார். திம்மக்கா சுபத்ரா பரிணயம் என்ற இசை நூலை எழுதினார். நரசிம்மாவும் (1454 - 1546) கவிகர்ண ரசாயணம் என்ற நூலை எழுதியுள்ளார்.

இரண்டாவது மனைவியின் மகன் பெத்த (பெரிய) திருமலாசாரியார். அவரது மகன் சின்ன திருமலாச்சாரியார் (சின்னன்னா) பஜனை சம்பிரதாயத்தின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.

அன்னமையாவின் பக்தி சேவைகள் மற்றும் அவரது படைப்புகள் மக்களிடையே பரவ, அவரின் புகழ் சாளுவ நரசிங்கராயா என்ற அரசனின் செவிக்கு எட்டியது. கவிஞரை தனது அரசவைக் கவியாக ஏற்றுக்கொண்டு அவரது கீர்த்தனைகளை செவியாரக் கேட்டு சந்தோஷமடைந்த அவருக்கு தன்னைப் பற்றியும் பாடு எனக் கேட்க அன்னமையா நரஸ்துதி செய்யமாட்டேன் என்று மறுத்துவிடுகிறார்.

கோபம் கொண்ட அரசன் அவரை சங்கிலிகளால் பிணைத்து சிறையிலிட்டுவிட்டான்.

அப்போது அன்னமையா வேங்கட நரசிம்மனைத் தியானித்து ஆகடி வேளள என்ற கீர்த்தனையப் பாட சங்கிலிகள் அறுபட்டன. இதைக் கேள்வியுற்ற அரசன் ஓடோடி வந்து கவிஞரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்டான். அவனை மன்னித்ததோடல்லாமல் அரசவைக்கவிஞர் பதவியை துறந்தார். திருமலையிலேயே தங்கி வேங்கடவனின் சேவையிலயே தன்னை ஆழ்த்திக் கொண்டார்.

அன்னமைய்யாவின் மகன் பெத்த திருமலாச்சார்லுவும் பேரன் சின்ன திருமலாச்சார்லுவும் தமது கவின் மிகு கீர்த்தனைகளை செப்புத் தகட்டில் பதித்து வந்தனர். இவர்கள் கடப்பா, கர்னூல், பெல்லாரி, அனந்தப்பூர், சித்தூர், நெல்லூர், செங்கல்பட்டு, ஆற்காடு, குண்டூர், தஞ்சாவூர், மற்றும் திருச்சி ஜில்லாக்களில் பயணம் மேற்கொண்டனர் என்பது அந்தந்த ஊர்களில் உள்ள திருமால் கோயில்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட கீர்ததனைகள் பொறிக்கப்பட்ட செப்பேடுகளில் இருந்து தெரியவருகிறது. முக்கியமாக தென்னக பஜனை பத்ததியில் அன்னமையாவின் கீர்த்தனைகள் தோடைய மங்களமாகவும், பவ்வளிம்பு பாடல்களாகவும் பாடப்பட்டு வருகிறது.

20240416232814756.jpg

அன்னமையாவின் கவித்திறனை மெச்சி அரசர்களாலும் பெரிய தனவந்தனர்களாலும் அளிக்கப்பட்ட நிலங்கள், கிராமங்கள், ஆபரணங்கள், பொன் நாணயங்கள் ஆகிய சன்மானங்களை வேங்கடவனின் சேவைக்கே அர்பணித்துவிட்டார். திருமலைக் கோயிலின் உள் வெளி பிரகாரங்களை கட்டி கோனேறு என்ற புஷ்கரணி குளத்தினை எம்பெருமான் அபிஷேகத்திற்காக செப்பனிட்டு கோயிலின் வளர்ச்சிக்காக திருப்பணிகளைச் செய்தார்.

இந்த பூமியில் சூர்ய சந்திரர்கள் இருக்கும்வரை அவரின் சந்ததியினர் அவர் நிறுவிய சுப்ரபாத சேவை, கல்யாணோத்சவம் மற்றும் ஏகாந்த சேவைகள் செய்யவேண்டும் என சிலாசாசனம் செய்து வைத்தார்.

இன்றும் அவரது சந்ததியினர் மேற்படி சேவைகளை செய்து வருகின்றனர். தனது கீர்த்தனைகள் அடங்கிய செப்பு தகடுகளை ஸங்கீர்த்தன பண்டாகாரம் என்றழைக்கப்படும், சிறு அறையில் திருமலை திருப்பதி அஹோபிலம், ஸ்ரீரங்கம் கோயில்களில் பாதுகாத்து வைத்தார். அதனை அன்னமாச்சார்யார் தன் கீர்த்தனை ஒன்றில் அழகாகச் சொல்கிறார். தாசுகோ நீ பாதாலகு….ஒக்க ஸங்கீர்த்தனமேசாலு….தக்கினவி பண்டாரமுனதாகி உண்டனி.

20240416232142102.jpg

20240416232026619.jpg

அவரது பிற நூல்களாவன, தெலுங்கு இரண்டடி ராமாயணம், ஸ்ருங்கார மஞ்சரி, பன்னிரெண்டு வெங்கடேச ஸதகங்கள், ஸங்கீர்த்தன லக்ஷணம், ஸ்ரீவெங்கடேச மஹாத்மியம் ஆகும்.

சங்கீர்த்தனார்ச்சார்யுடு, பதகவித பிதமகுடு, திராவிடாகம ஸார்வபௌமுடு, பஞ்சாகம ஸார்வபௌமுடு ஆகிய விருதுகளைப் பெற்றவர்.

துந்துபி வருடம் கி.பி 1503 ஆம் வருடம் பிப்ரவரி 23 ஆம் நாள் (23.02.1503) பங்குனி த்வாதசியன்று திருமலையில் உள்ள பரிவேட்டை மண்டபத்தில் அன்னமையா பரமபதம் எய்தினார்.

20240416232641970.jpg

அன்னமைய்யாவின் வம்சாவளி அட்டவணை.

20240416232239906.jpg

திருமலையில் தாள்ளப்பாக்க அன்னமையா கவிகள் வாழ்ந்த இல்லம் இதோ. வடக்கு மாட வீதி, ஸ்ரீவராஹஸ்வாமி கோயில் அருகே உள்ளது. தற்போதும் தாள்ளப்பாக்க வம்சத்தினரிருந்துகொண்டு பகவானுக்கு சேவை சாதித்து வருகின்றனர். தற்போது புஷ்கரணிக்கும், கழிப்பிடத்திற்கு செல்லும் வழிக்காக இந்த இல்லம் இடிக்கப்பட்டு விட்டது. இங்கு இருந்த த்வாதசி மண்டபத்தில் ஆஞ்சனேய ஸ்வாமி விக்ரகத்தின் முன்பு அமர்ந்து கொண்டு தான் நிறைய கீர்த்தனங்கள் இயற்றியுள்ளார்.

20240416233012664.jpg

அன்னமாச்சார்யார் கீர்த்தனைகள் - விளக்கமும் பாடலும் என்ற 107 பக்க pdf கோப்பு இணைக்கப்பட்டுள்ளது. இதைத் தயாரித்தவர் நமக்கு பரிச்சயமானஎழுத்தாளர் மோஹன் ஜி அவர்கள் தான். அவரும் அவரது விவேகானந்தா கல்லூரி சக மாணவர்களும் தயாரித்தது.

File கோப்பை தரவிறக்க இங்கே கிளிக்கவும்