நமது நாட்டில் பல்வேறு பழமொழிகளை நமது முன்னோர்கள் கூறக் கேட்டுள்ளோம். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளன. அவற்றை நாம் உச்சரிக்கும் வகையிலேயே எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதற்கு பழமொழிகள் சில….
குரைக்கிற நாய் கடிக்காது:
“குரைக்கிற நாய் கடிக்காது” என்பதில் உண்மையே இல்லை. பேச்சு வழக்கில் சொற்கள் திரிவது காலங்காலமாக நடந்து வருவது. தமிழ்ப் பழமொழிகள் பல இப்படித்தான் திரிந்து போயிருக்கின்றன. இந்த பழமொழிக்கும் நாய்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. இது மனிதர்களின் குணத்தை ஒப்பிட்டு உருவாக்கப்பட்ட பழமொழியாகும்.
இதன் அர்த்தம் அதிகமாக வாய் பேசுபவன் அல்லது தற்பெருமை பேசுபவன் தன் செயலில் ஒன்றும் காட்ட மாட்டான் என்பதே. அதாவது நாய் குரைப்பது போல அதிகப்படியாகப் பந்தா காட்டுவது, வாய் பேசுவது, வாய் சவடால் விடுவது என்பது போன்ற குணங்களைக் கொண்டிருக்கும் ஆட்களை ஒப்பிட்டு தான் இந்த பழமொழி கூறப்படுகிறது.
நாற்பது வயதில் நாய்க் குணம்:
பொதுவாகவே மனிதர்களுக்கு நாற்பது வயது வந்த உடன் அவர்கள் கொஞ்சம் சிடுசிடு என்று பேசினாலும் உடனே வீட்டிலிருப்பவர்கள் “அவர்களுக்கு நாற்பது வயது ஆகிவிட்டது இல்லையா...? அதனால் நாய்க் குணம் வந்து விட்டது... அப்படித்தான் இருப்பார்கள்...” என்று சொல்லி மேலும் அவர்களைக் கோபப் படுத்துவார்கள்... இது நம் வீடுகளிலேயே கண்கூடாகக் கண்பது தான்.
நாற்பது வயதில் நம் எண்ணம்போல உடல் ஒத்துழைக்காது. நம்முடன் பணியாற்றும் இளைஞர்கள் சிலர் நம்மைவிட உயர்ந்த பொறுப்புகளுக்குக் கடந்து செல்வார்கள். நம் பேச்சைக் கேட்டு வளர்ந்த பிள்ளைகள், `நீ சொல்கிறது தப்பு' என நமக்கே புத்திமதி சொல்வார்கள். இதனால், அந்த வயதில் நமக்குக் கோபம், கண்டிப்பு அதிகம் உண்டாகும். இதுதான் `நாய்க்குண'த்துக்குக் காரணம்.
நாற்பது வயதாகிவிட்டது... இனிமேல் நீங்கள் உப்பைக் குறைக்கணும், சர்க்கரையைக் குறைக்கணும், சோற்றைக் குறைக்கணும், சுக போகங்களைக் குறைக்கணும்… என்று மருத்துவர் நம்மை நோய் வராமல் தடுக்க எல்லாவற்றையும் ‘குறை’க்கச் சொல்வார். அந்த ‘குறை’த்தலில் உள்ள பெரிய ‘ற’வை சின்ன ‘ர’வாக்கி, ‘நோய்’ என்பதை ‘நாய்’ ஆக்கிவிட்டோம். உண்மையிலேயே வைத்தியர் சொற்படி உப்பு, சர்க்கரை போன்றவற்றைக் குறைத்தால் நாற்பது வயதில் நோய் ‘நாய்’ ‘குணம்’ ஆகும். எனவே, நாற்பது வயது என்பது பயப்பட வேண்டிய வயதல்ல! பக்குவப்பட வேண்டிய வயது.''
"கல்லைக் கண்டால் நாயைக் காணோம்!
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!!"
பொதுவாகச் சிலருக்கு நாயைக் கண்டால் உடனே கல்லை எடுக்கும் பழக்கம் இருக்கும். ஏனென்றால் நாய் நம்மைக் கடித்துவிடுமோ என்று பயந்து நம்மை அறியாமலே உடனே கல்லை எடுத்து நாயை விரட்டுவார்கள். இதனைத்தான் சிலர் நாயைப் பார்க்கும்போது கல் கிடைக்காது, கல் கிடைத்தால் நாய் இருக்காது என்று கூறுவார்கள். இந்த பழமொழிக்கு இதுதான் அர்த்தம் என்று சொல்வார்கள். ஆனால் அதற்கான அர்த்தம் இது கிடையாது.
சரியான பழமொழி :
"கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்,
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்".
இங்கு நாயகன் என்பது கடவுளைக் குறிக்கிறது. கல்லால் செதுக்கப்பட்ட ஒரு கடவுள் சிலையை நீங்கள் பார்க்கிறீர்கள். அதை கல்லாகப் பார்க்கும் போது அங்கே கடவுளைப் பார்க்கமாட்டீர்கள். அதையே நீங்கள் கடவுளாகப் பார்க்கும்போது கல்லைப் பார்க்கமாட்டீர்கள். இதில் நாயகன் என்ற வார்த்தை மறுவியே நாய் என்றாகிவிட்டது.
அதாவது, நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம் என்ற பழமொழியை நாம் நகைச்சுவைக்காக அல்லவா பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
இதேபோல…..
நாயின் வாலை நிமிர்த்த முடியாது.
நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும், அது கண்டதையும் தேடி ஓடத்தான் செய்யும்
நாய் விற்ற காசு குரைக்குமா? மீன் விற்ற காசு நாறுமா?
நாய் வேஷம் போட்டால் குரைக்க வேண்டும்; பேய் வேஷம் போட்டால் ஆடவேண்டும்.
நாயை இப்படி ஒப்பிட்டுப் பல பழமொழிகள் இருந்தாலும் அவை அனைத்தும் மனிதர்களின் சுபாவத்தை குறிப்பதாகவே இருக்கிறது.
Leave a comment
Upload