எல்லாவற்றையும் துறந்து விடு. அதுவே மோட்சத்திற்கு ஆனந்தத்திற்கு வழி என்று புத்த மதமும் ஜைன மதமும் சொல்லும். அதனாலேயே அந்த மதங்களில் இல்லற வாழ்வை எப்படி வாழ வேண்டும் என்பது குறித்த கோட்பாடுகளும் அறிவுரைகளும் மிகக் குறைவாக உள்ளன.
அப்படியானால் சநாதன தர்மம் என்ன சொல்கிறது?.
பல ஸ்மிருதிகளும் சூத்திரங்களும் இல்லற வாழ்க்கை பற்றி விரிவாகச் சொல்கிறன. அவற்றை அலச இந்த இடம் போதாது. ஆனால், வேதாந்தம் என்ற மோட்ச வழியைச் சொல்லும் உபனிடதம், வாழும் முறையை எளிதாகச் சுருக்கமாகச் சொல்கிறது.
ஈஶாவாஸ்யம் என்ற உபனிடதம், தனது முதல் சுலோகமாக இதைச் சொல்கிறது.
ஈஶா வாஸ்யமிதம் ஸர்வம் யத்கிம் ச ஜகத்யாம் ஜகத் |
தேன த்யக்தேன புஞ்ஜீதா மா க்ருத꞉ கஸ்ய ஸ்வித்தனம் |
இதன் பொருளை சற்று விரிவாகப் பார்ப்போம்.
இந்த ப்ரபஞ்சம் என்பது கடவுளுக்குச் சொந்தமானது, அவனால் வசிக்கப் படுவது. இது எனது என்று சொந்தம் கொண்டாட அந்த இறைவனைத் தவிர யாருக்கும் முடியாது. நமது உலகியலிலும் நாம் அதைக் கண்கூடாகக் காண்கிறோம். நமக்கு முன்னால் வேறொருவரும் நமக்கு அப்புறம் வேறொருவரும் உரிமை கொண்டாடும் ஒன்றை நாம் இன்று நமது என்கிறோம். செல்வம், வீடு, நிலம், வண்டி என்ற எல்லாமே யாருக்கும் நிலையான சொந்தமாக இருப்பதில்லை. ஆறு மலை முதலியவை கூட காலப்போக்கில் ஒரு நாட்டின் சொந்தமாக இருந்து மற்றொரு நாட்டின் சொந்தமாக ஆகிவிடுகிறது. ஏன், ஒரு நாடே ஒரு இனத்திலிருந்து மற்றொரு இனத்தின் வசம் வந்து விடுகிறது.
கல்வி, பதவி, புகழ், செல்வாக்கு என்பவையும் நமது காலத்திற்குப் பிறகு அழிந்துவிடும். வேறு யாராவது அதைப் பற்றிப் பேசினாலும் அது நமக்கு உரியதாக ஆவதில்லை. ஆனால் அவை எல்லாம் இருக்கின்றன. காலங்களைக் கடந்து இருக்கும் இறைவன் மட்டுமே அதற்கு சொந்தக்காரன். இந்த உலகமும் அதில் இருக்கும் மலை நதி முதலியவையும் மனிதன் முதலிய உயிர்களும் அவனது இஷ்டப்படியே அவனது கட்டுப் பாட்டுக்குள்ளேயே வாழ்கின்றன.
நான் என்பது எனது ஆன்மா, எனது என்பது அந்த ஆன்மாவின் கர்ம வினைப்பயன்களும் பெற்ற ஆன்ம ஞானமும் மட்டுமே. ஆனால் அவற்றை எனது என்று ஏற்க மனிதமனம் தடுமாறுகிறது.
சநாதன தர்மத்தைத் தவிர மற்றவர் யாரும் அப்படி ஒரு உரிமைப்பட்ட சொத்து (?) இருப்பதை ஒப்புக் கொள்வதே இல்லை!
அதனால், நாம் ஒவ்வொருவரும் இந்த உலகில் அந்த இறைவனின் ஒரு விருந்தாளியே. அவரவர் சக்திக்கும், விருப்பத்திற்கும், தகுதிக்கும் ஏற்றவாறு இந்த உலகை அனுபவிக்கும் உரிமையை இறைவன் நமக்குத் தந்திருக்கிறான். அது அனுபவிக்கும் உரிமை மட்டுமே. எதையும் சொந்தம் கொண்டாடவோ அழிக்கவோ நமக்கு உரிமையில்லை. நம் வீட்டின் விருந்தாளிக்கு நாம் அந்த உரிமைகளைத் தருவதில்லையே!
இன்று இந்த சுகம் கிடைத்தது, சந்தோஷம். நாளையும் இதுவே வேண்டும் என்று அடம் பிடிப்பதோ அல்லது அதற்காக அடுத்தவரைத் துன்பப் படுத்துவதோ கூடாது.
எனக்கு இந்த பொருள் மிகவும் பிடித்து விட்டது அதனால் அதை நான் எனக்கு சொந்தமாக்கிக் கொள்கிறேன் என்பதும் தவறானது. ஏன் தவறு என்று கீழே பார்க்கலாம்.
நீரும், நிழலும், வெம்மையும் குளிரும், மழையும் பனியும் என்ற எல்லாக் காலங்களும், அந்தந்த காலங்களில் விளையும் காய்களும் கனிகளும் மற்ற உணவுப் பொருட்களும் நாம் அனுபவிப்பதற்காக இறைவனால் படைக்கப் படுகின்றன. அறம் சார்ந்த வழியில் அவற்றை ஒரு விருந்தாளியாக அனுபவிப்பதில் எந்தத் தடையும் இல்லை, ஏனென்றால் அவை படைக்கப் படுவதே நாம் அனுபவிப்பதற்காகவே. ஆனால் நினைவில் கொள்ள வேண்டியது இது எனது என்று சொந்தம் கொண்டாடக் கூடாது.
ஆக உபனிடதம் சொல்வது என்ன என்றால் எனது என்ற எண்ணம் இல்லாமல் இந்த உலகத்தை அனுபவியுங்கள் என்பதுதான்.
எனது எனக்கு வேண்டும் எனக்கு மட்டுமே வேண்டும் என்ற ஆசை விலகும்போது அந்த அனுபவம் நமது ஆன்மாவைத் தொடுவதில்லை. முன்னம் பார்த்த கோட்பாட்டில் பார்த்தால் அந்த அனுபவம் நமது கர்மாவாக மாறுவதில்லை. எனது உடல் பசிக்கு உணவு அருந்துவேன் அதன் ருசிக்காக அல்ல என்பதிலிருந்து இந்த அனுபவம் தொடங்குகிறது.
அது சரி, இப்படி விட்டேத்தியாக இருக்க முடியுமா என்ற கேள்வி எழும்.
நாம் சிறு வயதில் நமது உயிராய்க் கருதிய உடைகளும், விளையாட்டுச் சாமான்களும் ஏன் நண்பர்களுமே இன்று நமது நினைவிலிருந்துகூட நீங்கி விட்டார்கள். அப்படியானால் அவற்றுடன் அவர்களுடன் இருந்த அனுபவித்த இன்பம் பொய்யா? இல்லை. நான் என்று சொல்லப்படும் எனது ஆன்மாவின் இயல்பே இப்படி விட்டு நிற்பதுதான். அது புரியாமல் நான் என்பது இந்த உடலும், அதன் புலன்களும், அவற்றால் விரிவடையும் மனமும், அதன் வீச்சும் என்று பாதை மாறிப் போகும்போதுதான் ஆன்மா இன்பம் என்று நினைத்துத் துன்பத்தில் சிக்கித் தவிக்கிறது. எனது எனது என்ற ஆசையும், ஆணவமும் ஒரு நாள் தகரும்போது அதை ஜீரணிக்க முடியாமல் நொறுங்கிப் போகிறது.
முன்பே பார்த்ததுபோல, இந்த மனிதப் பிறவியின் குறிக்கோள் மோட்சம் மட்டுமே அல்லாது இந்த உலகியல் இன்பங்களை அனுபவிப்பதல்ல. இதனையே இந்த உபனிடத வாக்கியம் அறிவுறுத்துகிறது. எதுவும் எனக்கு சொந்தமில்லை, நான் இங்கே ஒரு விருந்தாளி மட்டுமே என்ற உறுதி வந்து விட்டால், கர்ம வினைகள் நம்மைப் பற்றுவதில்லை. நாம் மோட்சத்தின் வழியில் வந்து விடுகிறோம்.
இதைச் சொன்ன உபனிடதம், மேலும் ஒரு செய்தியைச் சொல்கிறது. ‘மற்ற யாருடைய செல்வத்திற்கும் ஆசைப் படாதே’ என்று. உலகில் உள்ள உயிரினங்கள் எல்லாமே என்னைப்போலத்தான், அவர்களுக்கும் எதன்மீதும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆதலால், இந்த ப்ரபஞ்சத்தின் எல்லாமே இறைவனுக்கே சொந்தம். அப்படி இருக்கும்போது அந்த இறைவனின் சொத்துக்கு நான் எப்படி ஆசைப் படுவது? இதுதான் இந்த உபனிடதத்தின் முத்தாய்ப்பான தொடக்கம்.
பிறர் செல்வத்திற்கு ஆசைப் படாதே என்று எல்லா மதங்களும் ஏன் சட்டங்களுமே சொல்லும்போது வராத தெளிவு, உபனிடதத்தின் இந்த வாக்கியத்திற்கு வருகிறது. எல்லாவற்றிற்கும் மேலான சக்தியான இறைவனின் சொத்தின்மேல் ஆசை கொள்வது தவறு மட்டுமல்ல, முட்டாள்தனம் என்று அடித்துசொல்லும் இந்த உபனிடத வாக்கியம் நமது வாழ்க்கையின் வழிகாட்டி! நாம் இங்கே அவனின் விருந்தாளி, அவன் கொடுத்ததை மனதார அனுபவிப்போம், ஆசைப்படோம்! அவ்விதம் ஆசைகளை அகற்றி முக்தி எனும் நிலையான இன்பத்தை நோக்கிப் பயணிப்போம்.
சனாதன தர்மத்தின் மீது எழும் கேள்விகள் குற்றச் சாட்டுகள் சிலவற்றை அடுத்த பகுதிகளில் காண்போம்.
Leave a comment
Upload