"காந்தி" - பொன் ஐஸ்வர்யா
"வணக்கம் சார்…
இந்த காலி ப்ளாட்டு யாருதுன்னு கேட்டு இதுல மண்டிக் கெடக்கிற புத்து பொதரையெல்லாம் சுத்தம் பண்ணச் சொல்லுங்க சார் .. பூச்சி பொட்டெல்லாம் நெறைய இழையுதுன்னு அக்கம் பக்கத்து மக்கள் பயப்படுதுங்க ... சின்ன குழந்தைங்க விளையாடுற இடம்.. ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிட்டா யார் பொறுப்பு ?"
காந்தியின் படபடக்கும் வார்த்தைக்ளுக்கு மதிப்பளித்து “இன்னோவா” காரில் போய்க் கொண்டிருந்த ஏரியா கவுன்சிலர், காரிலிருந்து இருந்து இறங்கி நின்று நிதானமாய் காது கொடுத்து கேட்டுக் கொண்டிருந்தார்.
“காந்தி" என்பது ஆண்பால் இல்லை. காந்திமதி என்ற பெண்மணியின் இயற்பெயர் சுருங்கி "காந்தி"யாகிவிட்டது. காவேரி நகர் ஒன்பதாவது மற்றும் பத்தாவது தெருக்களின் துப்புறவுத் ஊழியரான காந்திமதியை அந்தப் பகுதி குடியிருப்புவாசிகள் அன்புடன் "காந்தி" "காந்தி" என்றே அழைத்தனர். காந்தியின் குரல் தெரு முனையில் கேட்டு விட்டால், மொத்த தெருவும் சுறுசுறுப்பாகி விடும். மணிகட்டிய சின்ன வண்டியைத் தள்ளிக் கொண்டு வரும் காந்தியை இங்கே யாரும் நகராட்சி ஊழியராகப் பார்ப்பதில்லை. தங்களின் குடும்ப உறுப்பினராகவேஉரிமை கொண்டாடினர்.
முதல் வீட்டு கேட்டைத் தட்டி " நாயுடம்மா உடம்பு நல்ல இருக்கீங்களா ... நயினாவை குப்பையை எடுத்திட்டு வெளியே வர சொல்லுங்கோ .. " வாசலில் இருந்து குரல் போகும்.
நாயுடம்மா ஆறு மாதமாய் உடம்பு சரியில்லாமல் படுத்த படுக்கை. சமையல் வேலையெல்லாம் நாயுடம்மா வீட்டுக்காரர் நயினாதான். எழுபது வயசிலும் ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டிருப்பவர். பெரிசாய் வருமானம் ஏதுமில்லை. ஏதோ ஜீவனம் ஓடுகிறது.
அடுத்தது கணேசய்யர் வீடு. "புள்ளிங்க அமெரிக்கவுலேர்ந்து பேசினாங்களா மாமி.. அம்முவை கேட்டதா சொல்லுங்கோ.. என்னையெல்லாம் ஞாபகம் வெச்சு இருக்கோ.. இல்லையோ…. நம்ப ஊருக்கு எப்ப வர்ராங்கலாம்.." என்று நாலு வீட்டுக்கு கேட்க்கும் படியாய் சத்தமாய் நலம் விசாரிப்பாள்.
பொண்ணு பையன் ரெண்டு பேரையும் ஐய்யரும் மாமியும் நல்லா படிக்க வச்சு, அவங்களுக்கு நல்ல வேலை கெடைக்க வச்சு, அமெரிக்கா போகச் வச்சு, அங்கேயே செட்டிலாக்கி விட்டாங்க. மாமாவும் மாமியும் வாராவாரம் வராண்டாவில் நின்று மாத்தி மாத்தி வீடியோ காலில் குசலம் விசாரிப்பார்கள்.. அப்பப்போ அஞ்சாறு மாசம் அமெரிக்கா விசிட். அதைப் பற்றி அடுத்த ஆறு மாசம் பேசிகிட்டிருப்பார்கள்.. மத்தபடி இங்கதான் குடித்தனம். ரொம்ப வசதியான வீடு.
அடுத்து ரெண்டு ப்ளாட் தள்ளி பூக்கரம்மா வீடு. அந்த தெருவிலேயே வரிசையான மாடி வீடுகளுக்கு இடையில் ஒரே ஒரு ஓட்டு வீடு. கிராமத்தில இருந்த விளைநிலத்தை வித்துட்டு இங்க வந்து கார் வாங்கி டாக்சி ஓட்டிகிட்டிருந்தவர் பரமசிவன். ஒரு நாள் ஆக்சிடெண்டில் அகாலமாய் போய் சேர்ந்து விட்டார். குடும்பச் சுமையை சமாளிக்க வேறு வழியில்லை, வீட்டம்மா பூகட்டி விற்க வேண்டியதாயிற்று. கந்திமதிக்கு பூக்காரம்மா மீது மிகுந்த பாசமுண்டு.
" என்ன பூக்கரம்மா நல்லா இருக்கீங்களா... பையன் ரமேசுக்கு வேலை கெடச்சுதா.. . கடவுள் கட்டாயம் உங்களுக்கு நல்ல வழி காட்டுவார்.." அவ்வப்போது தெருவில் நின்று உடுக்கை அடிப்பது போன்று இரண்டொரு வார்த்தை ஆறுதலாய் பேசுவாள்.
"இப்பதான் கொஞ்ச நாளா வெல்டிங் பட்டறைக்கு வேலைக்கு போயிட்டிருக்கான். நம்ம ரோட்டு மேலேயே ஒரு கடை வாடகைக்கு வருதாம். ஐடிஐ வெல்டர் படிச்சவன்…, பேங்க் லோன் கெடச்சா சொந்தமா ஒரு பட்டறை போடலாம்ணு அலையிறான். வயசு முப்பது ஆயிடுச்சே, அவனும் வாழ்க்கையில செட்டிலாகணுமே..? "
"கிடைக்கும்மா.. கண்டிப்பா கிடைக்கும்.. பத்தாம் தெரு நாராயணன் சார் பேங்கிலதான் மேனேஜரா இருக்கார்.. நானும் கேட்டுப் பார்கிறேன் " - பூக்காரம்மாளின் புலம்பலுக்கு சமாதானம் சொல்வாள்.
எதிரே சைக்கிளில் வரும் பள்ளி ஆசிரியர் தனராஜ் சார். " என்ன சார் இந்த காலத்திலேயும் இப்படி சைக்கிள்ல வேலைக்கு போறீங்க.. பள்ளிக்கூடம் எம்புட்டு தூரம்.. எப்போ போய் சேருவீங்க. லோனை கீனை போட்டு ஒரு வண்டி வாங்குங்க சார்.."
"நீ வேற காந்தி... வாங்குற சம்பளத்தில வாடகை கொடுத்தது போக வீட்டு செலவுக்கே துண்டு விழுவுது .. நான் எப்போ வண்டி வாங்கிறது..?"
"வாங்கிடலாம் வாத்தியாரே.. நம்பிக்கையை விடாதீங்க..." - பாடம் நடத்தும் வாத்தியாருக்கே நம்பிக்கை ஊட்டினாள்.
"குமாரு.. இது என்ன.. ரோட்டோரம் பிரியாணி எலும்பெல்லாம் கொட்டி வச்சிருக்க.. கவிச்சு கழிவெல்லாம் கவர்ல போட்டு வெளியே வையின்னு எத்தனை தடவைசொல்றது.. அடுத்த வாரம் சபரிமலைக்கு போறேன்.. சுத்த பத்தமா இருக்கனும்னு குருசாமி சொல்லியிருக்கார்.." - சிறு அதட்டலோடு கூடிய கண்டிப்பு.
அப்படியே வலப்புறமாய் திரும்பினால் பத்தாம் தெரு. பத்தாம் தெருவில் அரசு ஆரம்ப பள்ளிக்கூடம் இயங்குகிறது. பகல் நேரத்தில் படிக்கும் பிள்ளைகள் சத்தம் “ஜே.. ஜே.. “ என்றிருக்கும். அங்கே ஆயாவாக வேலை செய்யும் வள்ளியம்மாவும் காந்திமதியும் தோழிகள். மத்தியான நேரத்தில் மர நிழலில் ஒன்றாய் உற்கார்ந்து சாப்பாட்டை பகிர்ந்து சாப்பிடுவார்கள்.
"காந்தி .. உனக்குதான் கவுன்சிலரை நல்லா தெரியுமில்ல.. பள்ளிகூடத்துக்கு ஒரு தண்ணீர் தொட்டி கட்டி குடுக்க சொல்லேன்.. டாய்லட்ல தண்ணி இல்லாம எல்லாரும் அல்லாடுறோம்..."
"ஐய்யோ நான் சொன்னால்லாம் கேட்க மாட்டாங்கப்பா.. வாத்தியாருங்கள ஒன்னா சேர்ந்து போய் கேட்க சொல்லு.."
இப்படிதான் காந்தியின் அன்றாடம் வாழ்க்கை சுழன்று கொண்டிருக்கிறது. இரண்டு தெருக்களையும் பெருக்கி சுத்தப் படுத்தி, வீட்டு குப்பைகளையும் தெரு குப்பையும் ஒன்று சேர்த்து, வண்டியில் நிறப்பிக் கொண்டு போய் ஊருக்கு வெளியே குப்பை கிடங்கில் சேர்த்து விடுவது அன்றாட வாடிக்கை.
நகராட்சியில் பணியிலிருந்த கணவன் குடித்து குடித்து அற்ப ஆயுளில் போய் சேர்ந்ததால், கருணை அடிப்படையில் மனைவி காந்திமதிக்கு கிடைத்தது இந்த வேலை. பிள்ளைகள் என்று யாரும் இல்லை. தன்னந் தனியாளாய் பயணிக்கத் தொடங்கி வாழ்க்கையில் பதினைந்து வருடங்கள் ஓடி விட்டது. இந்த தெரு, இந்த மக்கள், இந்த குப்பை இதுதான் காந்திமதியின் உலகமாய் ஆகிப் போனது.
இரண்டு நாட்கள் தொடர்ந்து கனமழை. சாலைகளில் வெள்ளமாய் ஓடிய மழைநீரில் எங்கெங்கிருந்தோ அடித்து வந்த குப்பைக் கூளங்கள் நாலாப்புறமும் சிதறிக் கிடந்தன. அந்த நேரத்தில் காந்திமதி, கோவிந்தன் குருசாமி குழுவில் சேர்ந்து, இருமுடி கட்டி சபரிமலை பதினெட்டாம் படி ஏறி சாமி தரிசனம் செய்து கொண்டிருந்தாள். தோழி வள்ளியம்மாவும் கூட வந்து இருந்தாள்.
தரிசனம் முடிந்து வரும் வழியில் பம்பையில் நிறய திருவிழாக் கடைகள். பொம்மைகள், பாசிமணிகள், பித்தளை விளக்குகள், பூஜைமணிகள், கரண்டி, சொம்பு, தட்டு என்று நம்ம ஊர்க் கடைக்காரர்கள் கூவிக் கொண்டிருந்தனர்.
மலையாளிகள் அடிக்கு ஒருவராய் நின்று "அடுத்த வார பம்பர் பிரைஸ்.. ஒரு கோடி.. ஒரு கோடி.." என்று கேரளா லாட்டரி சீட்டு விற்றுக் கொண்டிருந்தார்கள். நேந்திரம் சிப்ஸ், கேரளா அல்வா கடைகளில் மதுரைக் கூட்டம் அலைமோதியது.
"ஏய் காந்தி.. கோவில் தலத்துக்கு வந்தால் ஏதாவது வாங்கிட்டு போகணும்" - பாத்திரக்கடையில் வள்ளியம்மா விளக்கொண்ணும் கரண்டியொண்ணுமாய் பேரம் பேசியபடியே சொன்னாள்.
"இதெல்லாம் நம்ம ஊர்லேயே கெடைக்குமடி.. இங்கிருந்து பாத்திரத்தை சுமந்து போகணுமின்னு என்ன வேண்டுதலையா ... கெடைக்காத பொருளா வாங்கணும்...?"
சற்று நேரத்தில் அரவணப் பாயசத்தோடு குருசாமி வந்துவிட அனைவரும் அங்கிருந்து புறப்பட்டனர்.
அடுத்த நாள் காலையிலேயே வண்டியோடு காவேரி நகரில் இறங்கிய காந்திமதிக்கு சுத்தமாய் இருந்த இடமெல்லாம் குப்பைக் கூளமாய் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியாய் இருந்தது.
மஞ்சப்பையில் கொண்டு வந்திருந்த சபரிமலைப் பிரசாதத்தை மாமி வீட்டில் கொடுத்து " வச்சுருங்கோ மாமி.. வேலைய முடிச்சிட்டு சாயங்காலமா கொண்டு போய் எல்லா வீட்டிற்கும் குடுக்கிறேன்.." என்றாள்.
புடவையை உயர்த்திக் இடுப்பில் செறுகிக் கொண்டு நீளமான வாருகோலை கையில் எடுத்து களத்தில் இறங்கினாள். அன்று ஞாயிற்றுக் கிழமையானதால் நிறைய பேர் வீடுகளில் இருந்தனர். வாத்தியார், டேவிட், குமார் இன்னும் பலர் வீடுகளை விட்டு வெளியே வந்து காந்திமதியோடு சேர்ந்து ஒத்தாசையாய் சுத்தம் செய்தார்கள். மதியத்திற்குள் ஒன்பதாம் பத்தாம் தெருக்கள் பழைய பொலிவைப் மீண்டும் பெற்றன. மாலையில் விபூதி மஞ்சள் குங்குமம் சகிதம் டின்னிலடைத்த அரவணப் பாயசமும் நேந்திரம் சிப்சும் தெரு முழுக்க வீடு வீடாய் சென்று வினியோகித்தாள்.
நாயுடம்மாவுக்கு உடல் நிலை திடீரென்று மோசமானது. நயினா கையைப் பிசைந்து கொண்டு செய்வதறியாது குழம்பிப் போய் நின்றார். கேள்விப்பட்டு காந்திமதி ஓடி வந்தாள்.
"என்னாச்சு நயினா .. உடம்பு தேறி வந்திச்சே .. எங்கேயாவது விழுந்து கிழுந்து வச்சிட்டாங்களா.."
"இல்லை காந்தி.. வயத்துல ஆப்பரேசன் செய்யணுமாம்.. டாக்டர்ங்க அடுத்த வாரம் வரை டயம் கொடுத்திருக்காங்க.. குறைந்தது அஞ்சு லட்சம் ரூபய் செலவு ஆகுமாம் .. நான் அவ்வளவு பணத்துக்கு எங்கே போவேன்.." கண்கலங்கினார்.
"கவலைப் படாதீங்க நயினா .. எதனாச்சும் பண்ணி அம்மாவ பொழைக்க வெச்சுடுவோம்.. கடவுள் வழிக் காட்டுவார்.." பூக்காரம்மாவும் காந்திமதியும் வீட்டின் உள்ளே போய் நாயுடம்மாவை பார்த்து விட்டு வந்தார்கள்.
"பூக்காரம்மா.. பேங்க் மேனேஜர் எதனா சொன்னாரா... மலைக்கு போறதுக்கு முன்னாடி ரமேஷ் தம்பி விசயத்தை சொல்லி உதவுங்க சார்ன்னு சொன்னேன்.."
"ஆங் பேங்க்குக்கு வர சொன்னரு.. அங்க போனா அதே கதைதான்.. சொத்து பத்து இருந்தாதான் லோன் கொடுப்பாங்களாம்.. நம்மகிட்ட ஏது சொத்து.. எல்லாத்தையும்தான் வித்துட்டு போய்ட்டாரே.. " பூக்கார அம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் உருண்டோடியது.
இரண்டு நாட்களும் உருண்டோடியது. வழியில் வாத்தியார் தென்பட்டார்.
"வாத்தியாரே.. ஒரு உதவி பண்ணுவீங்களா.. “ வெட்கத்தில் வார்த்தைகள் ஜவ்வாய் இழுபட்டன.
“சொல்லவே கூச்சமா இருக்கு .. யாருக்கும் தெரியாம இத பார்த்து சொல்லுங்களேன்.."
சேலை முந்தானையில் முடிஞ்சு வச்சிருந்த ஒரு சீட்டைக் கொடுத்து ஏதோ காதில் சொன்னாள்.
"உனக்கு செய்யாமலா.. கண்டிப்பா பார்த்து சொல்றேன் காந்தி.." வாத்தியார் அவசர அவசரமாய் சைக்கிளை மிதித்துக் கொண்டு பள்ளிக்கூடம் போய் விட்டார்.
ஒரு வாரம் ஓடிப் போயிற்று. மொத்த தெருவும் திடீரென்று குதூகலத்தில் மிதந்தது. வாத்தியார் புத்தம்புது பைக் வாங்கி வந்து வாசலில் நிறுத்தினார். நயினா மனைவியைக் கூட்டிக்கொண்டு மேல் சிகிச்சைக்கு சென்னை புறப்பட தயாரானார். பூக்காரம்மா மகன் ரமேஷ் சொந்த வெல்டிங் பட்டறை துவங்க அட்வான்ஸ் கொடுத்து கடைதிறக்க நாள் குறித்தான்.. இப்படியாய் பல நிகழ்வுகள்...
பள்ளிக்கூடத்தில் கவுன்சிலர் தலைமையில் பாராட்டு விழா. வரவேற்புரையை வாத்தியார் வாசித்தார்.
"நம் பகுதியில் கடந்த சில தினங்களாய் நடக்கும் அதிசயங்களை எல்லோரும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகின்றேன்.. அந்த வரிசையில் நம் பள்ளியில் தண்ணீர் தொட்டி உள்ளிட்ட கல்வி மேம்பாட்டுப் பணிகளுக்காக தலைமை ஆசிரியரிடம் ரூபாய் பத்து லட்சம் வழங்கும் விழா இது.. இதையெல்லாவற்றையும் நிகழ்த்திக் கொண்டிருக்கும் "காந்தி" என்கிற காந்திமதி அவர்களை மேடைக்கு அழைக்கின்றேன்"
மிக எளிமையாக முன் வரிசையில் அமர்ந்திருந்த காந்திமதி மேடைக்கு வர மறுத்து விடவே, ஆசிரியர் மேலே தொடர்ந்து பேசினார்.
"போன வாரம் காந்திமதி என்னிடம் ஒரு பரிசுச் சீட்டைக் கொடுத்து இதற்கு ஏதாவது பரிசு விழுந்திருக்கிறதா என்று பார்த்து வரச் சொன்னார்.. அது சபரிமலையில் அவர் வாங்கிய கேரள மாநிலப் பம்பர்ப் பரிசுச் சீட்டு. முதல்ப் பரிசு ரூபாய் ஒரு கோடி அந்த சீட்டுக்கே விழுந்திருந்தது. அதிலிருந்துதான் மகராசி நமக்கெல்லாம் வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றார். தான் பணி ஓய்வு பெறும் வரை நம் பகுதியில் எப்பொழுதும் போலவே தொடர்ந்த. பணியாற்றுவேன் என்று மிகவும் உறுதியாய் இருக்கின்றார் ........ ...... ....."
கூடியிருந்தோர் கரவொலி விண்ணைப் பிளக்க, காந்திமதியின் கண்கள் மண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தது.
Leave a comment
Upload