தொடர்கள்
தமிழ்
கத கேளு கத கேளு தமிழோட கத கேளு 58 - பரணீதரன்

20240124231121261.jpg

இன்று ஒரு கதையைப் பார்ப்போம் என்று புறப்பொருள் தலைப்பை ஆரம்பிக்கின்றார் நமது பரணீதரன்.

ஒரு அரசன் இருக்கிறார். அவர் நாட்டின் அருகில் இன்னொரு நாடு இருக்கிறது. அந்த நாடு மிகவும் செல்வ செழிப்பாக உள்ளது. அந்த நாட்டினுடைய செல்வங்களை கவர வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய படையின் ஒரு சிறு பகுதியை எதிரி நாட்டின் மீது அனுப்புகிறார். இந்த காலத்தில் நாம் கூறக்கூடிய எக்கனாமிக்கல் வார்ஃபேர் (Economical Warfare) என்பதை இந்த காலத்திலேயே அவர்கள் செய்துள்ளனர். அந்த காலத்தில் ஒரு நாட்டின் செல்வ செழிப்பானது அந்த நாட்டில் விளையும் உணவு பொருட்களும், ஆநிரைகளுமே (பசுக் கூட்டங்கள்) ஆகும். அதனால்தான் ஆண்டாள் கூட “வள்ளல் பெரும்பசுக்கள் நீங்காத செல்வம்” என்று பாடியுள்ளார். மாடு என்ற சொல்லிற்கே செல்வம் என்று தான் பொருள். அதனால் தான் புகுந்த வீட்டிற்கு வரக்கூடிய பெண்ணை மாட்டுப் பெண் என்று அந்த காலத்தில் கூறினர். அதாவது அந்த வீட்டிற்கு திருமகள் (இலட்சுமி தேவி) போன்ற செல்வமானவள் என்று பொருள்.

20240124231211952.jpg

உணவுப் பொருட்களும் செல்வங்கள் தானே ? பிறகு ஏன் மாடுகளை மட்டும் கவர வேண்டும் ? என்று நீங்கள் கேட்டால், மாடுகளை கவர்ந்து வருவது மிகவும் சுலபம். உணவு பொருட்களை அறுவடை செய்தோ அல்லது உணவு பொருள் உள்ள இடங்களுக்கு சென்று எடுத்து வருவதோ மிகவும் கடினம். பொதுவாக அந்த காலத்தில் உணவு பொருட்கள் கோட்டைக்குள்ளோ அல்லது மக்களின் வீடுகளுக்குள்ளோ இருக்கும். அவற்றை கவருவதற்கு மிகப்பெரிய படை தேவை. போர் அறிவிக்காமல் இவ்வாறு படையெடுப்பது அந்த காலத்தில் அறமாகாது (தர்மம் ஆகாது). அதனால் தான் சண்டை செய்யாமல் ஆநிரைகளை மட்டும் கவர்ந்து செல்வார்கள். இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பொதுவாக ஆநிரைகள் ஒரு நாட்டின் எல்லையான காட்டுப் பகுதிகளில் இருக்கும். ஒரு போர் ஆரம்பம் ஆகும் பொழுது அந்தப் போரினால் இந்த ஆநிரைகளுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்பதற்காகவும் இவ்வாறு ஆநிரைகள் கவரப்பட்டன. இப்படி மாடுகளை கவருவதற்கு அவர்கள் வரக்கூடிய நேரம் நடுராத்திரி (யாமம்) பொழுதாகும். இதற்குக் காரணம் முன்பே சொன்னது போல அவர்கள் போர் செய்யாமல் மக்கள் உறங்கும் பொழுது மாடுகளை கவர்ந்து செல்வார்கள். இந்த செயலிற்கு நாட்டின் எல்லைப் பகுதியில் இருக்கும் மலைக்கோட்டையில் உள்ள முன்கள வீரர்கள் பயன்படுத்தப்படுவார்கள்.

20240124231307122.jpg

மறுநாள் விடிந்ததும் தங்களுடைய ஆநிரைகளை காணாது தவிக்கும் மக்கள் அதை குறித்து மன்னரிடம் தகவல் கூறுவர். மன்னருடைய ஒற்றர்கள் வாயிலாக எதிரி நாட்டு மன்னன் செய்த சூழ்ச்சியை இந்த நாட்டு மன்னன் அறிந்து கொள்வார். அவரும் உடனடியாக ஒரு சிறு படையை தயார் செய்தார். இந்தப் படையும் குறிஞ்சிக் கோட்டையை பாதுகாக்கும் முன்கள வீரர்கள் தான். ஏன் ஒரு பெரும் படையை எடுத்துக் கொண்டு செல்லக்கூடாதா என்று நீங்கள் கேட்டால் இதற்கும் போர் அறம் தான் காரணம். வந்த எதிர்நாட்டு படைகள் மிகவும் சிறியது. அவர்களை பெரிய படை கொண்டு அழிப்பது தர்மம் ஆகாது. அதேபோல போர் தொடுக்காமல் பெரும்படையை கொண்டு செல்வதும் தர்மம் ஆகாது. அதனால் எதிரி படையின் அளவு போலவே இந்த படையும் இருக்கும். இந்த படை தயாராகுவதற்கு மதியநேரம் ஆகிவிடும். அவர்கள் தங்கள் நாட்டை விட்டு எதிரி நாட்டிற்கு கிளம்பிச் செல்வர். அவர்கள் நாட்டை தாண்டிய காட்டுப் பகுதியை அடையும் பொழுது மாலை பொழுதாகிவிடும். அதனால் அங்கேயே உணவு சாப்பிட்டு பாசறை அமைத்து தங்கி விடுவர். அன்றைய யாமப் பொழுதில் இதே நாட்டின் சிறுபடையுடன் சண்டை இட்டு தங்களுடைய ஆநிரைகளை மீட்பர். இந்த சண்டையிலும் ஆநிரைகளுக்கு எந்த ஆபத்தோ பிரச்சனையோ வராமல் இரண்டு பக்கத்து வீரர்களும் சிறிய சண்டை செய்வர். ஒரு கட்டத்திற்கு மேல் ஆநிரைகள் நடுவில் உள்ளதால் எதிரி நாட்டு வீரர்கள் சண்டையை நிறுத்திவிட்டு அவர்கள் நாட்டிற்கு சென்று விடுவார்கள். இந்த நாட்டு வீரர்கள் ஆநிரைகளை தங்களுடைய நாட்டிற்கு மீட்டு வருவர்.

20240124231347363.jpg

இதன் பிறகு இரண்டு நாட்டு மன்னர்களும் தங்களுடைய போர்படைகளை தயார் நிலைக்கு மாற்றுவர். எதிரி மன்னன் நாடுபிடிக்கும் ஆசையால் போரினை அறிவிப்பான். தன்னுடைய ஒரு பெரும் தரைப்படையை எடுத்துக் கொண்டு எதிரி நாட்டின் மீது போர் தொடுத்து எதிரி நாட்டின் எல்லைக்கு வருவான்.

இந்த போர் செய்தியை கேள்விப்பட்ட இந்த நாட்டு மன்னனும் தன்னுடைய படைகளை எடுத்துக்கொண்டு தன்னுடைய நாட்டை காப்பதற்காக எதிர்த்து நிற்பான். நாட்டின் வெளியில் உள்ள மக்களையும் காட்டிற்குள் உள்ள மக்களையும் ஆநிரைகளையும் பிற செல்வங்களையும் தன்னுடைய கோட்டைக்குள் செல்லுமாறு கட்டளையிடுவான்.

20240124231445502.jpg

எதிரி நாட்டு வீரர்கள் இந்த நாட்டின் கோட்டை பகுதிகளை முற்றுகை இடுவார்கள். கோட்டை கொத்தளங்களை தாண்டி நாட்டிற்குள் செல்ல பல்வேறு விதமான யுக்திகளை பயன்படுத்துவார்கள்.

20240124231533545.jpg

அப்படி அவர்கள் கோட்டையை முற்றுகை கொண்டிருக்கும் பொழுது இந்த நாட்டு மன்னன் தன்னுடைய கோட்டையை காப்பதற்காக பல்வேறு விதமான முறைகளை கையாளுவான். உதாரணமாக கோட்டையை உடைக்க பயன்படுத்தப்படும் யானையை தாக்குவது, எதிரி வீரர்களை தாக்குவது, கோட்டையை மேலும் பலப்படுத்துவது, அகழியை இன்னும் ஆழமாக்குவது போன்றவையாகும். பொதுவாக கோட்டை முற்றுகை மற்றும் கோட்டை காத்தல் ஆகிய இரண்டும் ஒரு நாட்டிற்கு உள்ளே அரண்மனை உள்ள இடத்தில் விடியற்காலை பொழுது தொடங்கி மாலை வரை நடக்கும்.

20240124231643115.jpg

ஒரு கட்டத்திற்கு மேல் இரண்டு படைகளும் சோர்வடைந்த பிறகு, இரண்டு அரசர்களும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு பரந்து விரிந்த இடத்தில் நேரடியாக சண்டையை போடுவார்கள். இந்த சண்டை விடியற்காலை தொடங்கி மாலை வரை நடக்கும்.

20240124231720338.jpg

எப்பொழுதும் போர்களில் இரண்டு படைகளுமே வென்றது கிடையாது. ஏதாவது ஒரு படை தான் வெல்லும். அப்படி வென்ற படைகள் மிகுந்த ஆர்வமாக இருக்கும்.

20240124231749594.jpg

அப்படி வென்ற ஒரு படையின் தலைவனுக்கும் அந்த நாட்டின் அரசனுக்கும் அந்த படைகளுக்கும் மகிழ்ச்சி ஏற்படுமாறு அவர்களைப் பற்றிய வாழ்த்து பாக்களையும் பாடல்களையும் பலர் பாடுபவர்கள். ஒரு ஆண்மகனது ஒழுக்கத்தையும் வீரத்தையும் கல்வியையும் கொடையையும் பற்றி மிகவும் சிறப்பாக கூறுவார்கள். இன்றைய கிரிக்கெட் விளையாட்டில் உள்ள ஆட்ட நாயகன் (Man of the Match) போல.

இப்படி அந்த காலத்தில் போர் முறைகள் நடந்துள்ளன.

இப்போது இந்த கதைக்கும் இலக்கணத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம் என்று விடை பெற்றார் பரணீதரன்.