மதிமிஞ்சு போதக வேலா ஆளா
மகிழ்சம்பு வேதொழு பாதா நாதா
மயிலந்தண் மாமலை வாழ்வே வானோர் ...... பெருமாளே. அருணகிரிநாதரின் பாடல் (திருப்புகழ்) பெற்ற தலம் மயிலம்
தென்னிந்தியக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான மயிலம் முருகன் கோயில் விழுப்புரம் மாவட்டத்தில், திண்டிவனத்தில் இருந்து 15 கிலோமீட்டர், புதுச்சேரியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், திருமணக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளித்து வருகிறார். இது சூரபத்மன் வழிபாடு செய்த திருத்தலமாகும். இந்த கோயில் பொம்மபுர ஆதீனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த மலைக்கோயில் பசுமையான மரங்கள் சூழ்ந்து இருப்பதால், தூரத்தி லிருந்து பார்க்கும்போது ஒரு மயில் தோகை விரித்திருப்பது போல் அழகாகக் காட்சியளிக்கிறது. மலை உச்சியில் மயிலின் கொண்டை போலத் திருக்கோயில் அமைந்திருக்கிறது. இது மயில் போன்ற காட்சி தருவதால், இதை மயூராசலம் என அழைத்து, பின் மருவி மயிலம் என ஆயிற்று.
இத்தகைய பல்வேறு பெருமை களைத் தாங்கிய மயிலம் திருத்தலத்தை அருணகிரிநாதரைத் தவிர ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள், தியாகராஜ கவிராயர், வண்ணச்சரபம் தண்ட பாணி சுவாமிகள், பாவேந்தர் பாரதிதாசன் உள்ளிட்ட பல்வேறு புலவர்கள் பல நூல்களை எழுதியுள்ளனர்.
ஸ்தல புராணம்:
முருகப்பெருமானால் போரில் தோற்கடிக்கப்பட்ட சூரபத்மன் மயில் வடிவான மலையாக மாறி இங்கு கடுந்தவம் புரிந்தார். தவத்தில் மகிழ்ந்த சுப்பிரமணியர் காட்சியளித்த போது, சூரபத்மன் தன்னையே வாகனமாக ஏற்றுக் கொள்ள சொன்னார். மயில் வடிவாக அவர் தவம் புரிந்த அத்தலத்திற்கும் 'மயூராசலம்' என்று அழைக்கும்படி வேண்டினார். முருகப்பெருமானும் அவரது தவத்தை ஏற்றுக் கொண்டார். 'பாலசித்தர்' என்பவரால் சூரபத்மனின் கோரிக்கைகள் பிற்காலத்தில் நிறைவேறியது. மயூராசலம் என்கிற பெயரே பின்னாளில் மயிலமாக மருவியது என்கிறது ஸ்தல புராணம். பொதுவாக முருகன் கோயில்களில் உள்ள மயில் தெற்கு நோக்கியபடியோ அல்லது நேர் திசையிலோ இருப்பது வழக்கம். ஆனால், இந்த ஆலயத்தில் உள்ள மயில், வடக்கு நோக்கியபடி காணப்படுகிறது. இது சூரபத்மன் வழிபட்ட திசையைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த மலை பால சித்தர் ஜீவ சமாதி அடைந்த இடம். பொதுவாகவே சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த தலங்களில், பக்தர்களுக்கு வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. யாருக்கும் வணங்காத கந்தனின் வேல் இங்குத் தவம் புரிந்த பாலசித்தரின் தவத்தைக் கண்டு வணங்கியதாகக் கூறப்படுகிறது. இன்றைக்கும் மயிலத்தில் நடக்கும் கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹாரத்திற்கு முருகன் புறப்படும் போது பாலசித்தரிடமிருந்தே முருகப்பெருமான் வேல் வாங்கிச் செல்கிறார்.
ஸ்தல அமைப்பு:
மயிலம் மலை மேல் ஐந்து நிலை இராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்திருக்கிறது. மேலே ஏறிச் செல்ல எளிதான படிகள் அமைந்துள்ளன. மேலும் வாகனத்தில் வருவோர் வசதிக்காக மலைப்பாதையும் உள்ளது. மலையடிவாரத்தில் சுந்தர விநாயகர் சந்நிதியும், அக்னி தீர்த்தமும் உள்ளது. மலை மேல் உள்ள கோயிலுக்குள் நுழைந்தவுடன் முதலில் விநாயகர் சந்நிதியும், அதனை அடுத்து பாலசித்தரின் சந்நிதி அமைந்துள்ளது. பால சித்தருக்கு அருகில் பிரதான கருவறையில் வள்ளி தெய்வானையுடன் இணைந்து நின்ற கோலத்தில் காட்சி தரும் சுப்பிரமணிய சுவாமி, ஒரு கையில் வேல் மற்றொரு கையில் சேவர் கொடியுடன் காட்சி அளிக்கின்றார். இங்கு சூரபத்மன் வடக்கு நோக்கித் தவமிருந்து முருகனின் வாகனமாக மாறியதால், அதே திசையை நோக்கியபடி மயில் வாகனம் அமைந்திருப்பது தனிச் சிறப்பு. இக்கோயிலில் தனி நவக்கிரக சந்நிதி உள்ளது.
ஸ்தல சிறப்பு:
இந்த மலையில் முருகன் மூன்று விதமான உற்சவராகக் காட்சியளிக்கிறார்.
இவர்களில் பிரதான உற்சவர் வள்ளி- தெய்வானை சமேதரான பாலசுப்பிரமணியர். பகலில் வெள்ளிக்காப்பு அணிந்தும், மாலை பூஜைக் குப் பிறகு தங்கக் காப்பு அணிந்தும் அருள் பாலிக்கும் இவர் மாதாந்திர கார்த்திகைகளிலும், பங்குனி உத்தரப் பெருவிழாவிலும் வீதியுலா வருகிறார்.
இரண்டாவது உற்சவர் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி பரணி நட்சத்திரத்தின்போது வீதியுலா வரும் இவர், தினசரி சுற்றுப் பிராகாரத்தில் இருந்தபடி அருள் பாலிக்கிறார். மாசிமக தீர்த்தவாரியின்போது இந்த உற்சவரைப் புதுவை கடற்கரைக்குத் தோளில் சுமந்து செல்கிறார்கள். ஐந்து நாட்கள் அங்கிருந்தவாறே அருள் வழங்கும் இவர் ஆறாவது நாளன்று திரும்பி வருவார்.
மூன்றாவது உற்சவர் ஆறுமுகங்கள் கொண்ட சண்முகப் பெருமான். கந்த சஷ்டி உற்சவத்தின்போது ஆறு நாட்கள் வீதியுலா வருவது இவர்தான்.
உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார்.
முருகன் திருமணக்கோலத்திலேயே எந்நேரமும் காட்சி அளிப்பதால் திருமணம் தொடர்பான எந்த வேண்டுதல்களும் எளிதில் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை..
முருகனுக்கு உகந்த நொச்சி மரங்கள் மயிலம் மலையில் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின் போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும். உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவித்த பிறகே மற்ற பூமாலைகள் அணிவிக்கப்படுகின்றன.
திருவிழாக்கள்:
தமிழ்ப் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், ஆடி18, ஆவணி அவிட்டம், ஆடி வெள்ளிகள், சூரசம்காரம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, சரஸ்வதி பூஜை, தீபாவளி, சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, ஆங்கிலப் புத்தாண்டு, தைப் பொங்கல், தைப்பூசம், சிவராத்திரி, மாசிமக தீர்த்தவாரி, பங்குனி உத்திரம் போன்ற அனைத்து உற்சவங்களும், சிறப்பாக நடைபெறுகின்றது. தவிர பாலசித்தர் குரு பூஜை எனப் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
பங்குனியில் பிரமோற்சவம்: பங்குனி உத்திரம் இங்குப் பன்னிரண்டு நாட்கள் பிரம்மோற்சவமாக விமரிசையாக நடக்கிறது. அன்றைய தினத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்குக் கூடியிருப்பர். பல்வேறுபட்ட வேண்டுதல்களுடன் பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் மலையைச் சுற்றிவந்து தேரடியில் நிறைவு செய்வர். வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் மக்கள் அனைவரும் மிளகாய், தானியம், பூக்கள், எலுமிச்சை போன்ற பொருட்களைக் கொண்டுவந்து தேரடியில் கொட்டி வழிபடுவர்.
பிரார்த்தனை, நேர்த்திக்கடன் :
இங்கு முடிக் காணிக்கை செலுத்தும் வழக்கம் உண்டு. கோயிலில் செவ்வாய்க் கிழமை தோறும் காலசந்தி பூஜையின் போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யும் பக்தர்களுக்குக் கடன் பிரச்சினைகள் அகலும் என்பது நம்பிக்கை.
இதேபோல உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சனை செய்தால் சீக்கிரம் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
தினசரி காலை 6:00 மணி முதல் மதியம் 1:00 வரை
மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரையில் கோவில் நடை திறந்திருக்கும். ஞாயிறு மற்றும் விழாக்காலங்களில் கோவில் முழு நேரம் திறந்திருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் இருக்கிறது மயிலம். புதுவை, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகரங்களி லிருந்து அடிக்கடி பஸ்கள் உண்டு. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு என்ற நிறுத்தத்தில் இறங்கினால் அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் இருக்கிறது மயிலம் கோயில். இங்கிருந்து பத்து நிமிடத்துக்கு ஒரு தடவை பஸ் போகிறது. வாகனங்களில் வருகிறவர்கள் நேராக மலைமீதுள்ள கோயிலுக்குச் செல்ல சாலை வசதி உள்ளது. இது தவிர நடந்து வருகிறவர்களுக்காக நேர்த்தியாக அமைக்கப்பட்ட படிக்கட்டு வழி உள்ளது.
சமீபத்தில் நடந்த கும்பாபிஷேகம்:
இக்கோவிலில் கடந்த 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து 12 ஆண்டுகளுக்குப்பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த ஓராண்டுகளாக நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து, கடந்த 15-ஆம் தேதி ஸ்ரீவிநாயகர், ஸ்ரீபாலசித்தா், ஸ்ரீவள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமான் வழிபாடுகளுடன் கும்பாபிஷேக பூஜைகள் தொடங்கிற்று. இதன் தொடர்ச்சியாகக் கடந்த 5 நாட்களாக யாக வேள்வி பூஜைகள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. மேலும், 6-ஆம் கால யாக பூஜைகள் முடிந்த பின்னர் 21.02.2024 கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இக்கும்பாபிஷேகம் விழாவில் பொம்மபுர ஆதீனம் 20-ஆம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் கோயில் விமான கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இவ்விழாவில் மயிலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் மற்றும் புதுச்சேரியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா, மயிலம் முருகனுக்கு அரோகரா என்று கோஷம் எழுப்பினர். பின்பு, முருகப்பெருமானைத் தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாலை 6.30 மணிக்குச் சிறப்பு அபிஷேக வழிபாடும்,வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்குத் திருக்கல்யாண உற்சவமும் நடந்தது.
மனச்சஞ்சலம் நீக்கும் மயிலம் முருகப்பெருமானைத் தரிசித்து அவரது அருளினைப் பெறுவோம்!!
https://youtu.be/ZtIdfoctU14
https://youtu.be/smRQh2fwjLQ
Leave a comment
Upload