தொடர்கள்
கவிதை
ஓடறிதல் - ராகவன் ஸாம்யெல்

20240124073541121.jpeg

தனிமையின் ஒற்றைக்கதவின்
வளையத்தில் ஒரு கயிறு
கட்டியிருக்கிறேன்
படுக்கையில் இருந்தபடியே
மூடிவிடமுடியும்
கைகளுக்கருகில் கயிற்றின் நுனி
இரவின் ஓடு உடைபட்டு
வெளியே வரும் பறவைக்குஞ்சின்
அலகில் சிக்கிக் கொள்கிறது
ஒற்றைக் கதவின் கயிறு
நுனி பிடித்திழுத்து விளையாடுகிறது
பறவைக்குஞ்சு
தளர்ந்து விழும் கயிறு
ஒரு பழுதென அறியாது
கொத்தித்தின்று விட முயல்கிறது
அடைத்து சாத்திக் கொள்கிறது கதவு
பறவைக்குஞ்சும் நானும்
சாத்திய கதவுகளுக்குள்.
ஓடென சூழ்கிறது
சாத்தப்பட்ட கதவுக்குள்
நானிருக்கும் அறை!