அமெரிக்காவில் பாஸ்டன் நகரத்திலுள்ள 'Boston Commons' என்ற மிகவும் பழமையான பெரிய பூங்காவில் Embrace என்று அழைக்கப்படும் இந்த நினைவுச்சின்னம் நிறுவப்பட்டிருக்கிறது. இரண்டு ஜோடி கைகள் தழுவிகொண்டிருப்பதைப் போல இருக்கும் இந்த சிற்பம் ஜனவரி 2023-ல் நிறுவப்பட்டது. இந்த கைகளுக்கு சொந்தகாரர்கள் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியரும், அவருடைய மனைவி கொரெட்டா ஸ்காட் கிங் கும் ஆவார்கள்.
மார்ட்டின் லூதர் கிங் (MLK) சமூக உரிமைக்காகப் போராடிய ஆப்பிரிக்க அமெரிக்க தலைவராவார். இவர் கிறிஸ்துவ தேவாலயத்தில் குருமாராகவும் இருந்தார். இவர் மகாத்மா காந்தியைப் போல அகிம்சை வழியிலான அறப்போராட்டத்தைப் பின்பற்றியவர். அதனால் இவர் ‘கருப்பு காந்தி’ என்றும் அழைக்கப்படுகிறார். இளமைக்காலத்திலிருந்தே சமூக நீதிக்காக பாடுபட்டார்.
இந்த நினைவுச் சின்னம் வெண்கலத்தினாலானது. 'Hank willis Thomas' என்பவரும் mass design group-ம் இணைந்து இதனை வடிவமைத்தார்கள். MLK அமைதிக்கான நோபல்பரிசை வாங்கிய தருணத்தில், அவரும் அவருடைய மனைவியும் தழுவி கொள்ளும்போது எடுத்த புகைப்படம்தான் இந்த நினைவுச்சின்னத்தை வடிவமைக்க தூண்டுகோலாக அமைந்தது. இந்த சிற்பம், 609 பகுதிகளாக உருவாக்கப்பட்டு, வெல்டிங் மூலம் இணைத்து உருவாக்கப்பட்டது. இது 19 டன் எடையும் 20 அடி உயரமும் மற்றும் 40 அடி அகலமுமாக அமைக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவில் இன சமத்துவத்திற்காக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னங்களிலியே இது மிகவும் பெரியதாக உள்ளது.
MLK 1952-ல் பாஸ்டனில் சமய கல்வியில் முனைவர் பட்ட ஆய்விற்காகப் படித்து கொண்டிருந்தப்போது, இசை பயின்று கொண்டிருந்த கொரெட்டோவை சந்தித்தார். இதற்கு அடுத்த வருடத்திலேயே இவர்கள் திருமணம் நடந்தது. 1954லிருந்து இவர் தேவாலயத்தில் போதகராக இருந்தார். சமூக நீதிக்கான செயல்பாடுகளை இங்கிருந்து தான் ஆரம்பித்தார்.
MLK கருப்பர்களின் நல்வாழ்விற்காக மிகவும் பாடுபட்டார். பண்டைய காலத்தில் ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பர்கள் அடிமைகளாக அமெரிக்காவிற்கு வந்தார்கள். இங்கு நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டாலும் இருபதாம் நூற்றாண்டில் இனவெறியால் பள்ளி, கல்லூரி, நிறுவனங்கள், உணவகம் என எல்லா இடங்களிலும் கருப்பர்கள் ஒதுக்கப்பட்டார்கள். வாக்களிக்கும் உரிமை, தொழிலாளர் உரிமை, மற்றும் அடிப்படை சிவில் உரிமைகள் என அனைத்திற்கும் எந்தப் பாகுபாடும் இல்லாமல் கருப்பர்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டுமென MLK போராடினார்.
MLK யும் அவருடைய மனைவி கொரெட்டோவும் அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கத்தில் சேர்ந்து, அறவழியிலான போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். கொரெட்டோ போராட்டத்தில் பாடல்களையும் இணைத்துச் செயல்பட்டார். பெண்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களுக்காகவும் பாடுபட்டார்.
1959 ம் ஆண்டு MLK, அமெரிக்க சேவை நண்பர்கள் குழுவினருடன் இந்தியாவுக்கு வந்தார். இந்தப் பயணம் MLK-வை வெகுவாகப் பாதித்தது. இந்தியாவில் இருந்தப்போது வானொலியில், "இங்கு வந்தப்பிறகு முன்பை விட அகிம்சை வழியிலான எதிர்ப்பு பற்றி நன்கு தெரிந்துகொண்டேன்" என உரையாற்றினார். காந்தியடிகளின் கொள்கைகள் இவருக்குப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. MLK, காந்தியின் அறப்போராட்டத்தையும், இயேசுவின் போதனைகளையும் பின்பற்றினார். அதுமட்டுமல்லாமல் லியோடால்ஸ்டாய் எழுதிய 'கடவுளின் அரசாங்கம் உங்களுடன் இருக்கிறது' என்ற நூலில் கூறப்பட்ட வன்முறையற்ற எதிர்ப்பு என்ற கருத்துகளாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டார்.
MLK, பலப் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தி வந்தார். 1962 ல் அலபாமாவில் இவர் நடத்திய அறவழியிலான போராட்டம் பலரது கவனத்தை கவர்ந்தது. நல்ல தொலைநோக்குப் பார்வையுடன் மக்களை ஒருங்கிணைத்துப் போராடினார். நல்ல தலைவருக்குள்ள அத்தனைப் பண்புகளும் MLK-வுக்கு இருந்தது. அவருடைய வாழ்நாளில் கிட்டத்தட்ட 2500 பொது மேடைகளில் சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார்.
MLK, 1963ம் ஆண்டு வாஷிங்டனில் அமெரிக்க வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த 'I have a dream' என்னும் உரையை வழங்கினார். இதில் அவர் "எல்லா மனிதர்களும் சமமாக மதிக்கப்படவேண்டும். கருப்பர்களுக்கு அடிப்படை உரிமைகள் கிடைக்கவில்லை. முழு சுதந்திரத்துடன் மரியாதையுடன் வாழ்க்கைத்தரம் அமையும் வரை போராட வேண்டும். நியாயம் கிடைக்கும் வரை தவறான செயல்களில் ஈடுபடாமல், அறவழியில் போராடி உரிமைகளை பெறவேண்டும்" என்றார். மேலும், "நான் ஒரு கனவு காண்கின்றேன் (I have a dream). அமெரிக்கா, கருப்பர்களுக்கும் அனைத்திலும் சம உரிமை உண்டு என்று முன்னோர்கள் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றுகின்றது. எல்லா மனிதர்களும் சமமாகப் பாவிக்கப்படுகிறார்கள். என் நான்கு குழந்தைகளின் நிறத்தைப் பார்க்காமல், குணத்தை வைத்து மதிப்பிடுகிறார்கள். கருப்பின சிறுவர் சிறுமிகளும் வெள்ளையின சிறுவர் சிறுமிகளும் கைகோர்த்துக் கொண்டு சகோதரத்துவத்துடன் இருக்கிறார்கள். அனைத்தும் சமநிலைக்கு வருகின்றது. இந்த நம்பிக்கையுடன் சகோதரத்துவமான நாடாக நம் நாட்டை மாற்றுவோம். அமெரிக்கா உயர்ந்த நாடு என்றால் இது கண்டிப்பாக நடக்கும். இந்த நம்பிக்கையுடன் சேர்ந்து செயல்படுவோம், போராடுவோம். ஒருநாள் நாம் சுதந்திரம் பெறுவோம். அன்று ஒவ்வொரு மலையிலிருந்தும் சுதந்தரகீதம் கேட்கும். நாட்டின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் சுதந்திரகீதம் கேட்கும். எல்லா இனத்தவரும் கை கோர்த்துகொண்டு, இறுதியாக சுதந்திரம் கிடைத்து விட்டது. எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி எனப் பாட்டு பாடலாம்". இவ்வாறு மாபெரும் உரையாற்றி, மக்களின் மனதில் நம்பிக்கை விதையை ஆழமாக விதைத்தார். இந்த கூட்டத்திற்கு சுமார் 2,50,000 மக்கள் நாட்டின் எல்லாப் பகுதியிலிருந்தும் வந்தார்கள். MLK-வின் வசீகரமானப் பேச்சால் கருப்பர்கள் மட்டுமல்லாமல் வெள்ளையர்களும் ஈர்க்கப்பட்டனர்.
இவரின் போராட்டத்தின் பலனாக 1964ம் ஆண்டு அமெரிக்க அரசாங்கம் கருப்பர்களுக்கும் ஓட்டுரிமை அளித்தது. இன ஒதுக்கல் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். இதே ஆண்டில் MLK-வுக்கு நிறவெறிக்கு எதிராக அறவழியில் பாடுபட்டதற்காக அமைதிக்கான நோபல்பரிசு வழங்கப்பட்டது. இதற்கு அடுத்த வருடத்தில் MLK, பாஸ்டனில் இனவெறியை எதிர்த்து ஊர்வலம் நடத்தினார். அங்கு ஆற்றல்மிக்க சொற்பொழிவு ஒன்றை ஆற்றினார். இதில் 22000 பாஸ்டன் மக்கள் கலந்து கொண்டார்கள். தற்போது அமைத்துள்ள Embrace நினைவுச் சின்னத்திற்கு அருகில்தான் அந்த கூட்டம் நடந்தது.
MLK 1968ம் ஆண்டு ஏப்ரல் 4ந் தேதி நிறவெறியரால் டென்னசி மாநிலத்தில் சுட்டு கொல்லப்பட்டார். அப்போது அவருடைய வயது 39. அவருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்தியது.
கொரெட்டோ கிங் கணவனின் மரணத்திற்குப் பிறகு நிறவெறியை எதிர்த்து, சமூக நீதிக்காகப் போராடுவதில் முக்கியப்பங்கு வகித்தார். பெண்கள் நலத்திட்டத்தில் ஈடுபாடு காண்பித்து, அதற்காகப் பாடுபட்டார். இவரின் தொடர்முயற்சிகளுக்குப் பிறகு MLK-வின் பிறந்த நாளை அமெரிக்கா அரசாங்கம் வருடாந்திர தேசிய விடுமுறை நாளாக அறிவித்தது. 2004-ல் கொரெட்டோவிற்கு காந்தி அமைதி பரிசு கிடைத்தது. இவர் LGBTQ - மக்களை ஆதரித்து, அவர்கள் உரிமைக்காகவும் போராடினார். இவர் தன்னுடைய 78வது வயதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். இவருடைய வாழ்நாள் முழுவதும் தன் கணவனின் அகிம்சை வழியை மக்களிடம் பரப்பி கொண்டிருந்தார்.
Embrace, 10 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டிருக்கின்றது. பாஸ்டனில் MLK மற்றும் கொரெட்டோ அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கொண்டாடும் விதமாகவும், இவற்றை எதிர்கால சந்ததியினருக்குத் தெரிவிக்கும் விதமாகவும் இதனை நிறுவியிருக்கிறார்கள். City of Boston-ம் Embrace பாஸ்டன் அமைப்பும் சேர்ந்து, அனைத்து முயற்சிகளையும் எடுத்து பாஸ்டனில் அமைத்திருக்கிறாா்கள். இதன் திறப்பு விழா ஜனவரி 2023 ல் நடந்தப்போது MLK-வின் மகனும், பேத்தியும் கலந்துகொண்டனா்.
"ஒருவருக்குள் இருக்கும் அன்பு என்னும் வலிமை வாய்ந்த சக்தி தான் சமூகத்திற்கு உதவி செய்ய உந்துகின்றது. மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயா்த்த ஆபத்து இருக்கிறது என்றுத் தெரிந்தாலும், தான் நம்புவதை செயல்படுத்துவதற்கு நிபந்தனையற்ற அன்பு என்ற சக்தி தான் உதவுகிறது". இந்த வாசகங்கள், ஆங்கிலத்தில் நினைவுச்சின்னத்திற்கு அருகில் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த கலைப்படைப்பு, புரட்சிகாரா் மாா்ட்டின் லூதா் கிங் ஜூனியருக்கு நிரந்தர அடையாளச் சின்னமாக விளங்குகின்றது.
அமெரிக்காவில், ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமையன்று மாா்ட்டின் லூதா் கிங் நாளாக அனுசரிக்கப்பட்டு, தேசிய விடுமுறை நாளாக கொண்டாடப்படுகின்றது.
Leave a comment
Upload