பெற்றோராகிய நீங்கள் தான் கவலைப்பட வேண்டும் என்பது உண்மை ஆனால் அதை எப்படி கையாள்வது என்பது முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று.
“ஏரின் உழாஅர் உழவர் புயலென்னும்
வாரி வளங்குன்றிக் கால் “
மழை என்னும் வளம் குறைந்து விட்டால், உழவர் ஏரினால் நிலத்தை உழுது பயிர் செய்ய முடியாது.
மழையின் பெருமையை எடுத்துச் சொல்லும் இந்த குறள் பல உள் அர்த்தத்தை குறிப்பதாக நான் உணர்கிறேன்.
குழந்தைகள் எனும் நிலத்தில் பெற்றோர்கள் பணம், பொருள், தங்களின் நேரம் கொண்டு அவர்களை வளர்ப்பது நிலத்தை உழுவது போன்றது,... ஆனால் அக்கறை, பொறுப்பு, ஈடுபாடு, கலைநயம் இவை மழையை போன்றது, இவை இல்லை என்றால் குழந்தை வளர்ப்பு முழுமை பெறாது.
சமீபத்தில் என்னை சந்தித்த பெற்றோர் தங்கள் மகள் 10 ஆம் வகுப்பு படிக்கிறாள் அவள் மிகவும் உடல் பருமனாக இருக்கிறாள். நிறம் குறைவு முகத்தில் பருக்கள் அதிகமாக உள்ளது என்று அந்தச் சிருமியின் உடல் அமைப்பை குறை சொல்லி பட்டியலிட்டனர்.
உங்கள் மகளுக்கு படிப்பதில் ஏதேனும் சிரமம் உள்ளதா?, மற்றவர்களோடு பழகுவதில் ஏதேனும் சிரமம் உள்ளதா?, அல்லது பள்ளியில் அவளுக்கு இடையூறுகள் இருக்கிறதா? என்று கேட்டபோது. “அவள் படிப்பில் மிகவும் கெட்டிக்காரி” என்றனர் “ஸ்கூலில் ஃபர்ஸ்ட் வருவாள் கிளாஸிலும் ஃபர்ஸ்ட் வருவாள்” என்றனர்.” பிறகு உங்கள் பிரச்சனை என்ன? “ என்றதும். அவள் இப்படி இருப்பது எங்களுக்கு மன வருத்தத்தை தருகிறது என்றனர். அவர்கள் இப்படி சொன்னது என்னை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது.
பெற்றோர்களே தங்கள் குழந்தைகளை விமர்சனம் செய்வது முதல் தவறு. அதை குறிப்பாக குழந்தைகள் முன் செய்ய கூடாது.
உங்களின் கேள்வி புரிகிறது…
உருவத்தை முன்னிலைப்படுத்தி பேசுவது ஒரு தவறான அணுகுமுறை. இதற்கு பதிலாக ஆரோக்கியமான உணவு முறைகள் என்னென்ன என்றும், ஆரோக்கியம் நமக்கு எத்தகைய சீரான வாழ்க்கையை கொடுக்கும் என்ற உண்மையை அவர்களுக்கு புரிய வைப்பது நல்லது. இதற்கு பெற்றோர்கள் தங்களின் உணவு முறையை, ஆரோக்கியமாக உள்ளதா? என்று சரி பார்ப்பது அவசியம். பிறகு குழந்தைகளின் பலம் என்ன என்பதை அடிக்கடி எடுத்து சொல்லி அவர்களை மனதளவில் உறுதிப்படுத்த வேண்டும். அதாவது, படிப்பில் அவள் கெட்டிக்காரத்தனம் உள்ளது. பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தைரியமும் நல்ல புத்திசாலித்தனமும் உள்ளது, ஒரே நேரத்தில் மல்டி டாஸ்க் என்று சொல்லக்கூடிய இரண்டு மூன்று வேலைகளை ஒரே நேரத்தில் செவ்வனே செய்யக்கூடிய திறமை அந்த குழந்தைகளிடம் உள்ளது. இவை அனைத்தும் மிகவும் சிறப்பான குணங்கள் மற்றவர்களிடம் காணக் கிடைக்காத குணங்கள் என்பதை ஒவ்வொரு முறையும் சொல்லி சொல்லி அந்த குழந்தைக்கு ஊக்கப்படுத்துவது பெற்றோரின் கடமை.
பெரும்பான்மையான குழந்தைகள் மற்ற குழந்தைகளின் பார்வையில் தன்னை பார்ப்பதே வாடிக்கை மற்றும் உருவத்தை வைத்து அவர்களை நிக் நேம் கொண்டு அழைப்பது போன்ற விஷயங்களை பள்ளிகள் கடுமையாக கண்டிக்க வேண்டும். ஆசிரியர்களும் இதை கவனத்தில் கொள்வது அவசியம். சக மாணவர்களை உருவத்தை வைத்து எடை போடும் பழக்கம் மாற வேண்டும் என்றால் ஒவ்வொரு குழந்தையின் பெற்றோரும் தங்கள் குழந்தைகள் தன்னம்பிக்கையோடு இருப்பது எப்படி என்ற முறையை சொல்லிக் கொடுக்க வேண்டும். இதை சிறுகதைகள் மூலமாகவோ அல்லது பல பெரிய மனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளை படித்து கதைகளாகவோ சொல்லலாம் இதற்கு நேரம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் உட்கார்ந்து பேசுவதை விட வேகமாக போகிற போக்கில் சிறு விஷயங்களை அவர்கள் காதில் போட்டுவிட்டு பிறகு அப்போது ஒரு விஷயம் சொன்னேன் அல்லவா இப்போது அதன் தொடர்ச்சி இது என்று அப்பப்ப சொல்லுவது தான் சாலச் சிறந்தது. அவர்களின் கவனத்தை ஈர்ப்பது சுலபம். அவர்களை உட்கார வைத்து பேசினால் அவர்கள் கவனம் கொடுப்பதில் தயக்கம் ஏற்பட்டு முழு கவனம் கொடுக்க மாட்டார்கள். ஊக்கப்படுத்துவதற்காக பெற்றோர்கள் குழந்தைகளிடம் பேசுவது ஒருவித கலை, இதை மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டும்.
குழந்தைகளிடம் நேர்மறை விஷயங்களை மட்டுமே அழுத்தம் தந்து பேச வேண்டும் சிறு வயதிலிருந்து இப்படி வளரும் குழந்தைகள் யாரையும் உடல் ரீதியாக எடை போட மாட்டார்கள். எப்போதெல்லாம் அந்த குழந்தைகள் மற்றவர்களால் ஒரு தாழ்வு மனப்பான்மை அடைகிறார்களோ அப்பொழுது அவர்கள் வாய்விட்டு சொல்லுவார்கள் என்று நினைப்பது தவறு பல நேரங்களில் அமைதியாகவோ, தனியாக அழுவதோ எதிலும் நாட்டம் இல்லாமல் இருக்க நேரிடும், அதை புரிந்து கொண்டு அவர்களிடம் இருந்து வார்த்தைகளை எழுத்து வடிவாகவோ அல்லது வேறு சில கைவினை பொருட்களை செய்வதன் மூலமாகவோ அவர்கள் மன அழுத்தத்தை வெளிப்படுத்த செய்யுதல் அவசியம். என்னிடம் வந்த அந்த பெற்றோர் தங்கள் மகளிடம் அவர்கள் பேசும் தோரணையை மாற்றிக் கொண்டனர். பொது நிகழ்ச்சிகளில் உறவினர்கள் முன் குழந்தைக்கு மனதில்பாதிப்பு ஏற்படாத வண்ணம் எப்படி பேசுவது என்பதை புரிந்து நடக்க ஆரம்பித்தனர்.
ஒரு சில உறவினர்கள் போது இடங்களில் அந்த சிறுமியை கேள்வி கேட்கும் முன் மறு கேள்வி கேட்பது என்று தன் பெற்றோர்களின் இந்த செயல் அந்த பெண்ணுக்கு பெரிய நம்பிக்கையை தந்தது.
ஆந்திர மாநிலத்தின் சிறந்த பெண் எழுத்தாளராக பேசப்படும்
Volga (P. Lalitha Kumari ) என்பவர் அவருடைய புத்தகங்கள் பலவற்றில் பெண்ணியத்தை மையப்படுத்தி எழுதியுள்ளார், அதில் குறிப்பாக பெண்கள் இந்த சமுதாயதால் தங்களின் உருவத்தை வைத்து உடைக்கப்படுகிறார்கள் என்ற அவரது பதிவுகள் அருமையானவை. அவரையும் அவர்தம் அழகை மையப்படுத்தி பேசும் கலாச்சாரம் இனி கூடாது, அவர்கள் குணத்தையும், திறமையையும், பண்பையும், மையப்படுத்தி பேச வேண்டும் என்பதை உணர்த்தும் எழுத்தாளர்களை பற்றி அந்த குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்துவது அவசியம். பெற்றோர்களிடம் மாற்றம் ஏற்பட்டால் குழந்தைகளிடம் தானாகவே மாற்றம் ஏற்படும் என்பதே நிதர்சனமான உண்மை.
- தொடர்ந்து பேசுவோம்
Leave a comment
Upload