தொடர்கள்
ஆன்மீகம்
தேஜோவதி -1 : கொல்கத்தா இராதாகிருஷ்ணன்

20240006083101804.jpg

பக்த பரிபாலனே – சரணம் ஐயப்பா

சிருஷ்டி, ஸ்திதி, லயம் என்ற முத் தொழில் இயற்றும் பிரம்மா விஷ்ணு, ருத்ரன் என்ற மும்மூர்த்திகளாக உள்ளவன் பகவான் ஸ்ரீமஹசாஸ்தா.

த்வத்ரூபேணா வதீர்ணா : ஸ்ம:

ப்ரம்ஹா விஷ்ணுரஹம் சுத:

பிரம்மனும் விஷ்ணுவும், நானும் உன்னுருவாய் அவதரிக்கிறோம் என சாஸ்தா அவதரித்த போது சிவபிரான் கூறியதாக ஸ்காந்தம் கோடி ருத்ர சம்ஹிதை தெரிவிக்கின்றது.

“மாயாவ்ருதம்ததா ப்ரஹ்ம வ்ராட் ரூபேண வர்த்ததே

அஹமேவ விராட் ரூபீ ப்ப்ப்ய:ஸ்ருணு மஹாமதே

புனஸ்சமத்த ஸ்த்ரீகுணாஸ் தேப்யஸ் சாதத்ரி மூர்த்த்ய்:

ஸ்ருஷ்டி ஸ்தித்யந்தகர்த்தாரோ சம்பவந்தி தராபதே”

“மாயையால் மறைக்கப்பட்டுள்ள பரம்பொருளின் உண்மையான வடிவம் விராட் ஸ்வரூபத்தில் உள்ளது. நானே அந்த விராட் புருஷன். விராட் ரூபியான என்னிடமிருந்தே சத்வம், ரஜஸ் தமஸ் என்கிற மூன்று குணங்களும் தோன்றியது.. அது போலவே படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று தொழில்களையும் செய்ய வேண்டி மும்மூர்த்திகளான பிரம்ம, விஷ்ணு, சிவன் என்னிடமிருந்தே தோன்றினார்கள்” என்று பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவே பந்தள அரசன் ராஜசேகரனுக்கு கூறி அருளியதாக பிரம்மாண்ட புராணத்தின் ஒரு பகுதியான ஸ்ரீபூதனாத உபாக்யானம் கூறுகின்றது.

மும்மூர்த்திகளையும் உற்பத்தி செய்து உலக காரியங்களை நிகழ்த்தி வைக்கும் மூலப்பொருளான ஸ்ரீமஹாசாஸ்தாவின் நாமப் பிரபாவம் அளவிட முடியாது அளவில் அடங்காதது. அனைத்து உலக ஜீவன்களில் சகலவித துன்பங்களையும் நாசம் செய்து யோக போக மோட்சங்களைத் தருவது பகவானின் பரம மங்களகரமான நாமங்களேயாகும். பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவின் நாமங்களை எப்போதும் உச்சரித்துக் கொண்டிருப்பவர்கள் போகசித்தி, யோகசித்தி, ஞானசித்தி, மோட்சசித்தி போன்ற உத்தம நலங்கள் யாவற்றையும் அடைவர்.

எவர் ஒருவர் தான் உயிர் துறக்கும் தருணம் பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவின்

திவ்ய நாமங்களை அறிந்தோ அறியாமலோ கேட்கின்றானோ அல்லது சொல்லுகின்றானோ அவன் தன்னப் பற்றியுள்ள சகலவிதமான பாவங்களிலிருந்தும் சகலவித பித்ரு சாபங்கள் தேவதா சாபங்கள போன்றவற்றிலிருந்தும் விடுபட்டு பகவானின் சாரூப்யத்தினை அடைந்து விடுகிறான். கொடும் சாபத்திற்கு ஆளானவர்களும் பகவானது நாம சிரவண விஷேசத்தால் மேன்மை அடைந்து விடுவர்.

தன்னைச் சரணடைந்தவர்களுக்கு சகலவித சுகங்களும் நலங்களும் நல்கும் பரம கருணாமூர்த்தியான பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாக் குறித்து போடப்படும் சரணங்களாலும், அவனது மஹிமைகளைக் கூறும் சம்பவங்களையும், வரலாறுகளையும், லீலாவினோதங்களையும், திருவிளையாடல்களையும் படிப்பதாலும், கேட்பதாலும், கூறுவதாலும் மேன்மேலும் மேன்மையடையலாம். இதனை மனதில் கொண்டே பகவான் ஸ்ரீமஹா சாஸ்தாவின் வாசஸ்தலங்களில் மிகவும் முக்கியமானதும் மேன்மையானதுமான மஹாகாளம் என்று அறியப்படும் தேஜோவதியைப் பற்றியும், ரைவத மலை பற்றியும் அங்கு பகவான் ஸ்ரீமஹாசாஸ்தா அமர்ந்து அருளாட்சி புரியும் அழகைப்பற்றியும் அவரது சபையின் அழகு, அணிந்துள்ள ஆபரணங்கள், அவரது காவலர்கள் பற்றியும், பரிவார கணங்கள் பற்றியும், அவரது மிகவும் விவரமாகக் கூறப்பட்டுள்ளது. பக்தர்கள் யாவரும் இந்நூலைப் படித்து பயன் பெருவார்களாக, பகவான் ஸ்ரீமஹாசாஸ்தாவின் அருள் பெருவார்களாக.

தேஜோவதி என்ற இந்த உன்னதமான நூலினை 125 தலைப்புகளில் தொகுத்து அளிக்கும் மஹா பாக்கியத்தினை தனக்கு அருளிய தன்னுடைய குல தெய்வம் கருணைக்கடலான மஹாசாஸ்தாவின் பொற்பாத கமலங்களை பணிவுடன் நமஸ்கரிப்பதாக கூறி இந்த புத்தகத்திற்கு மேற்கூறியவாறு முன்னுரை எழுதியுள்ளார் இந்நூலைத் தொகுத்த கொல்கட்டாவில் வாழும் ரா. இராதாகிருஷ்ணன்.

இந்த நூலை அழகு பெட்டகமாக ஒரு தகவல் களஞ்சியமாக தந்துள்ளார் நூலாசிரியர் என்பதில் துளிகூட சந்தேகமேயில்லை.

இந்த விலை மதிப்பிலாத புத்தகம் விலையின்றி கல்லிடைக் குறிச்சியில் உள்ள குளத்தூரில் அய்யனின் சமீபத்திய கும்பாபிஷேகத்தின்

[நமது விகடகவி இதழில் வெளி வந்த கும்பாபிஷேகக் கட்டுரை லிங்க் இதோ

https://www.vikatakavi.in/magazines/326/11615/kallidaikurichchi-kulathooril-ayyan-koil-kumbhabhishegam.php

{கும்பாபிஷேகம் பற்றிய கட்டுரை}] போது வந்தவரிடையே பகிரப்பட்டது.

தற்போது, குறுகிய வட்டத்தில் பகிரப்பட்ட அந்த பொக்கிஷத்தை தமிழறிந்த அனைவரிடமும் பகிர்ந்திட முன்வந்துள்ளார்.

இவர் கல்லிடைக்குறிச்சியில் பிரதானமாக வீற்றிருக்கும் குளத்தூரில் அய்யனைக் கொண்டாடும் கரந்தயர் பாளையத்தில் வசிக்கும் கம்பங்குடி வம்சத்தைச் சேர்ந்தவர். இவர்களது மூதாதையருக்கு ஸ்ரீதர்மசாஸ்தா ப்ரத்யக்ஷமாக விஸ்வரூப தரிசனம் கொடுத்திருக்கிறார் என்பது வரலாறு.

அந்த மூதாதையர் செய்த உதவிக்காக பகவான், “உமது குடும்பத்தினர் அனைவரும் எமது அடிமையாகவும் நான் உங்கள் குடும்பத்தினருக்கு உடமையாக இருப்போம்” என்று கூறினார். எம்மைப் போற்றி பணிந்து எம்மையே சொந்த புதல்வனாக கருதி கம்பங்கூழ் உணவளித்து ஏற்றுக்கொண்டதால் உமது பரம்பரைக்கு கம்பும் கொடி என்ற ஸ்தானப் பெயர் ஏற்படும் [இந்த பெயரே நாளடைவில் மறுவி, கம்பங்குடி ஆயிற்று]. அதற்காக எமது முத்திரை பிரம்பும், அன்னதானம் செய்ததற்காக அன்னக் கொடியும் இதோ உமக்கு அளிக்கிறோம் என்று திருவாய் மலர்ந்து மறைந்தனர். இந்த சமூகத்தைப்பற்றி ஏற்கெனவே நாம் எழுதிய கட்டுரையின் லிங்க் இதோ.

https://www.vikatakavi.in/magazines/300/10801/saasthaapreethi-celeberations-for-900-years-by-kambangudi-family.php

இனி வரும் வாரங்களின் அந்த புத்தகத்திலிருந்து பகுதிகள் இடம் பெறும்.

அந்தவகையில், முதலாவதாக அடுத்த வாரம் வரும் பகுதி ஸ்ரீதர்மசாஸ்தா பெயர்க் காரணம்