தொடர்கள்
ஆன்மீகம்
கரும்புக் குடிலில் ஒரு பொங்கல் - மாலா ஶ்ரீ

20240017235328684.jpg

காஞ்சிபுரம் அருகே கீழ்கதிர்பூர் கிராமத்தில் வசிப்பவர்கள் செந்தில்குமார் குடும்பத்தினர். இக்குடும்பத்தினர் விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர். இதில் செந்தில்குமார், காஞ்சிபுரம் மாவட்ட பாஜ துணை தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். ஒவ்வொரு ஆண்டு பொங்கல் தினத்தன்று விவசாயிகளின் உன்னதத்தை போற்றும் வகையில், செந்தில்குமார் குடும்பத்தினர், அப்பகுதி விவசாயிகளின் முக்கிய உற்பத்தி பொருளான செங்கரும்பின் மூலமாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, கடந்த ஆண்டு செங்கரும்பிலான பொங்கல் பானை, ஜல்லிக்கட்டு காளைகள் அமைத்து ஆச்சரியப்படுத்தினர். இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது, அனைத்து மக்களும் பாரம்பரிய பொருட்களை அறிந்து கொள்ளவும், பிரமர் மோடியின் அனைவருக்கும் வீடு திட்டம் பற்றிய விழிப்புணர்வுக்காக, சுமார் 3 டன் எடையிலான செங்கரும்பினால் குடிசை வீடு அமைத்து அசத்தியுள்ளனர். அந்த செங்கரும்பு வீட்டுக்குள் பண்டைய மற்றும் பாரம்பரிய சமையலறை உபகரணங்கள், அளவைகளை செந்தில்குமார் குடும்பத்தினர் காட்சிப்படுத்தி உள்ளனர். இந்த செங்கரும்பு வீடு கட்டுமானப் பணி மற்றும் பாரம்பரிய பொருட்களை சேகரிக்கும் பணியில் கடந்த 10 நாட்களாக செந்தில்குமார் குடும்பத்தினர் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி பொங்கல் தினத்தன்று செங்கரும்பு குடிலின் முன்பு கிராமிய முறைப்படி தனது குடும்பத்தினருடன் பொங்கலிட்டு செந்தில்குமார் கொண்டாடினார். இதுகுறித்து செந்தில்குமார் கூறுகையில், ‘‘மக்களிடையே பாரம்பரிய சமையலறை உபகரணங்கள், அளவைகள் மற்றும் பிரதமர் மோடியின் அனைவருக்கும் வீடு திட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செங்கரும்பு குடிலை உருவாக்கினேன்.

இது, மக்களிடையே வெகுவாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி…’’ என்று தெரிவித்தார். அந்த செங்கரும்பு குடில் பற்றி வீடியோ பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, இதுவரை சுமார் லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்துள்ளனர்.