தொடர்கள்
கதை
குப்புசாமி மாமாவும் கும்பாபிஷேகமும் - சிரிக்கதை - வேங்கடகிருஷ்ணன்

20240020075012850.jpeg

"என்ன மீனாட்சி இன்னைக்கு காபி இவ்ளோ லேட் காலையிலிருந்து உட்கார்ந்திருக்கேன் எனக்கு கும்பாபிஷேக வேலை தலைக்கு மேல இருக்கு நீ என்ன கொஞ்சம் கூட கண்டுக்காம குறுக்கும் நடுக்கும் போயிட்டு வந்துட்டு இருக்கே..".


குப்புசாமி மாமாவின் குரல் காலை வேளையிலேயே ஓங்கி ஒலித்தது பக்கத்து வீட்டு பட்டு மாமிக்கு அதிசயம்! "என்னது மாமா குரல் உசந்து இருக்கே" என்று காம்பவுண்ட் சுவர் வழியே எட்டி உள்ளே பார்த்தாள். குப்புசாமி மாமா வீட்டு சமையலறை அங்கிருந்து பார்த்தாலே நன்றாக தெரியும். மாமா காபி போட்டு கொண்டு இருந்தார். சத்தமாக பேசிக்கொண்டு, "மீனாட்சி இப்படி லேட் பண்ணினா எனக்கு காபி வேண்டாம், நான் போற வழியில நம்ம கிருஷ்ண பவன்ல சாப்டுகிறேன். உன் காஃபியை நம்பி தான் நான் இருக்கேன்னு நினைச்சியா?"
என்று சொல்லியபடியே கலந்த காபியை ஆற்றிக் கொண்டே கூடத்துக்கு வந்தார் காம்பவுண்ட் சுவர் வழியாக இதை பார்த்துக் கொண்டிருந்த பட்டு மாமிக்கு, ஒருபுறம் ஆச்சரியம் ,ஒரு புறம் சிரிப்பு. மீனாட்சி மாமி ஊர்ல இல்ல, அதனாலதான் மாமா இவ்வளவு உசந்த குரல்ல அதிகாரமா பேசுறார்.
மாமா காபி எப்படி இருக்குன்னு பார்க்க வேண்டாமா? என்று மனதில் நினைத்துக் கொண்டே காம்பவுண்டுக்கு வெளியே தலையை நீட்டி "மாமா எனக்கு ஒரு வா காபி கொடுங்களேன்" என்றாள்.
அவ்வளவுதான் மாமா சுருதி அடங்கி அமைதியானார். தன்னுடைய Mono Acting பர்பாமன்ஸுக்கு ஆடியன்ஸே இல்லை என்று நினைத்துக் கொண்டிருந்த அவருக்கு இது அதிர்ச்சியாய் இருந்தது. "யாரு? யாரு?" என்று கேட்டுக்கொண்டே வெளியே வந்தார். முன் ஜாக்கிரதையாக காபி டம்ளரை உள்ளே மேஜை மேலே வைத்து விட்டு வந்தார்.
"ஓ! பட்டு மாமியா காபி தானே இதோ மீனாட்சியை விட்டு போட சொல்லி தரேன்" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று மனதில் ஊரில் இல்லாத மீனாட்சி மாமியையும் தன்னோட காஃபியிலேயே பங்கு கேட்டு வந்துவிட்ட பட்டு மாமியையும் கரித்து கொட்டிக் கொண்டு ஒரு டம்ளரில் முக்கால் கப் காபியை நிரப்பி கொண்டு வந்து முகத்தை சிரித்தவாறு வைத்துக்கொண்டு பட்டு மாமியிடம் நீட்டினார்.
காபியைப் பார்த்தே பல வருடங்கள் ஆனவர் போல் பட்டு மாமி அதை "படக்" என்று பிடுங்கி கடக்கென்று ஒரே மடக்கில் குடித்து முடித்து "பேஷ் பேஷ் குப்பு மாமா காபின்னா, குப்பு மாமா காபி தான்! ரொம்ப நல்லா இருக்கு மாமா" என்று சொல்லி டம்ளரை திரும்ப நீட்டினாள். அவள் சாப்பிட்ட விதத்தை பார்த்த அதிர்ச்சியிலிருந்து மீளாத குப்பு மாமா, சமாளித்து "இல்ல இது மீனாட்சி போட்ட காபி என்று சொன்னார். மாமா ஏன் கதவுடுற நேத்திக்கு மாமி நான் இன்னைக்கு ஊருக்கு போறேன், நாளைக்கு ஊர்ல இருக்க மாட்டேன் மறுநாள் தான் வரேன் அப்படின்னு என்கிட்ட சொல்லிட்டு தான் போனா. நீங்க குரலை ஒசத்தி சத்தம் போடற மாதிரி நடிச்சா நான் நம்பிடுவேனா?" மாமா உள்ளுக்குள் (என்திட்டம் எல்லாத்தையும் கண்டுபிடிச்சிட்டியே ராட்சசி! உனக்கு என்னோட காபியை கொடுத்தேன் பாரு எனக்கு வேணும்) பொருமினார். " ஓ அப்படியா! மீனாட்சி சொல்லிட்டு தான் போனாளா ?( நற நற) நான் சும்மா பேசிப் பாத்துட்டு இருந்தேன்...அவ இல்லாம பொழுதே போகல்ல எனக்கு....( எப்படியும் மீனாட்சி கிட்ட சொல்லுவாளே)
என்று சொல்லியபடியே கலந்த காபியில் இருந்த (ஆறிப்போன) மிச்சத்தை குடித்தார். ம்ஹும்...இன்னிக்கு ஆரம்பமே அலச்சலா இருக்கே என்று அலுத்துக் கொண்டே...வெளியில் புறப்பட தயாரான குப்பு மாமாவின் செல்போன் கணகணவென ஒலிக்கத்துவங்க வரிசையாக அவருக்கு கால்கள்... வாசல் கதவை பூட்டி சாவியை பைக்குள் போட அவர் தயாராகும் போது சொல்லி வைத்தார் போல அவருடைய மைத்துனன் அச்சு வந்து சேர்ந்தான்.. "என்னடா அச்சு உங்க அக்கா இல்லாதப்போ தொகுதி பக்கம் வராத எம்எல்ஏ மாதிரி கண்ணிலே பார்க்க முடியாது உன்ன.. எங்க திடீர்னு இந்த பக்கம்?" "அதுவா அத்திம்பேர். உங்க காபி ரொம்ப பிரமாதமா இருக்குன்னு இப்பதான் வர்ற வழியில் பட்டு மாமி சொல்லிட்டு போனா, அதான் ஒரு வா சாப்பிட்டு போலாமேன்னு"... என்று இழுத்தான்.. (குப்பு மாமா மனசுக்குள்...பத்த வச்சுட்டியே பட்டு....) சரிடா வா...." ஏன் அத்திம்பேர் எல்லாம் சுயம்பாகமா? சமையலும் நீங்க தானா? " இல்லாடா...சமையல் கிடையாது. எனக்கு கோயில்ல சாப்பாடு...அங்க கும்பாபிஷேக கமிட்டீல செகரட்டரியோன்னோ....அங்க ஸ்பெஷல் சாப்பாடு." இன்னிக்கு பரிமளா மாமி ஆத்திலேர்ந்து வரும்."
(ஓஹோ.... அதான் அக்கா ஆத்துல இல்லனாலும் மாமா ரொம்ப சந்தோஷமா இங்க இருக்காரா??.. இத கண்டிப்பா அக்கா கிட்ட சொல்லணுமே இவர் என்னடான்னா பரிமளா மாமி சாப்பாட்டுக்கு இப்படி அலையுறாரு..)
"ஏன் மாமா கும்பாபிஷேக கமிட்டி செகரட்டரினா நீங்க என்ன அயோத்தியா ராமர் கோயில் கும்பாபிஷேக கமிட்டி செகரட்டிரியா? அயோத்யா காலனி ராமர் கோயில் கும்பாபிஷேக கமிட்டி செகரட்டிரி தானே? என்றான் அச்சு.
" டேய், என்ன சாதாரணமா சொல்லிட்ட எத்தனை பெரிய மனுஷங்களை பார்க்கிறேன், எவ்வளவு பணம் புழங்குது, கும்பாபிஷேகத்தன்னிக்கு அய்யாவுக்கு தான் முதல் மரியாதை தெரியுமா? அது எல்லாம் நேரம் வந்து பாருடா! அப்ப தெரியும் உங்க அத்திம்பேரு யாருன்னு!? " என்று சொல்லிக் கொண்டு காப்பியை அவன் கையில் கொடுத்தார் நிதானமாக வாங்கி ஒரு ஆற்று ஆற்றி ஒரு சிப் குடித்தவன்.... அரைக்கண் மூடி தலையை ஆட்டி வேற ஏதோ ஒரு கிரகத்திற்கு சென்றவன் போல் மயங்கி நின்றான்."மாமா நெஜமாவே இது பேஷ் பேஷ் காபி! தான் இந்த மாதிரி நான் சாப்பிட்டதே இல்லை அக்கா கூட இப்படி போட மாட்டா மாமா....என்றான் அடுத்த வாய் சாப்பிட்டு கொண்டே (இவன் பேசறது உண்மையா இல்ல நம்மள கலாய்க்கிறானா.. என்பது புரியாமல் )குப்பு மாமாவும் திகைத்துப் போய் நின்று இருந்தார்.
குப்பு மாமா அவனிடம் சொன்னார் "நீ வந்ததும் நல்லதா போச்சு. கும்பாபிஷேக ஷாப்பிங் போக வேண்டி இருக்கு கூடமாட ஒத்தாசையா இருக்கும் வா"...( ஒரு கப் காபி போட்டு கொடுத்துட்டு ஓராயிரம் வேலை வாங்குறதுக்கு ரெடியா இருக்காரு அத்திம்பேரு. இதுக்கு தான் அக்கா இல்லாதப்ப இந்த ஆத்து பக்கமே வரக்கூடாதுன்னு சொல்றது...அச்சு மனசுக்குள்) சரி அவருக்கு தான் யார் இருக்கா நம்மள விட்டா போயிட்டு தான் வருவோம்.... இருவரும் வெளியே கிளம்பினார்கள்.
நேரே கோவிலுக்கு சென்ற மாமா வேலைகள் நடப்பதை கவனமாகப் பார்த்தார். சிலருக்கு சில இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தார். கமிட்டி தலைவர் ஒரு லிஸ்ட்டை கொடுக்க மாமா அதை வாங்கி படித்துவிட்டு சரி எல்லாம் சேர்ந்து ஒரு 42 ஆயிரம் ஆகும், சரி நீங்க காசு குடுங்க நான் போயிட்டு வரேன் என்று சொல்ல ஒரு 500 ரூபாய் நோட்டு கட்டை எடுத்து மாமாவிடம் கொடுத்தார். அதை அலட்சியமாக வாங்கியவர், அச்சுவை பார்த்து ஒரு புன்னகை புரிந்து அந்த நோட்டுக்கட்டை தன்னுடைய பேண்ட் பாக்கெட்டில் பத்திரப்படுத்தினார். அந்தப் பார்வையின் அர்த்தம் 'இப்ப புரிஞ்சுதா நான் யாருன்னு.. உன் அக்கா வந்தவுடனே சொல்லுடா' என்பது போல் இருந்தது.
மாமா கைக்கு பணம் வந்ததும் அச்சுவும் அமைதியாகி விட்டான். நெஜமாவே மாமா பயங்கர வெயிட்டான ஆளு தான் போல இருக்கு. அக்கா கிட்ட சொல்லணும் என்று நினைத்துக் கொண்டான். ஷாப்பிங் எல்லாம் முடிந்து ,மாமா சாப்பிட்ட கிருஷ்ணா பவன் குலாப் ஜாமுன் அப்புறம் வாங்கி கொடுத்த கீரை வடை இருவரும் தனித்தனியாக சாப்பிட்ட பாதாம் பால், பாஸந்தி எல்லாவற்றையும் சேர்த்து மாமா கணக்கை ஒப்படைத்து விட்டார். கோயிலை விட்டு கிளம்பும்போது அச்சு சொன்னான் மாமா இனிமே என்ன வேலை இருக்குன்னு சொல்லுங்க நான் வந்து செய்யறேன் கும்பாபிஷேகம் வரைக்கும் நீங்க தனியா கஷ்டப்பட வேண்டாம்".. குப்பு மாமா நினைத்துக் கொண்டார் பரவாயில்லையே அச்சு இவ்வளவு நல்ல பையனா மாறிட்டான். அவனுக்கு நல்ல வேலை கிடைக்கனும் பகவானே என்று நினைத்தார்.

ஷாப்பிங் எல்லாம் முடிந்து மாமாவும் அச்சுவும் களைத்துப்போய் வந்தனர். உள்ளே அவர் நுழைந்த உடனே கமிட்டி தலைவரும் மற்ற பலரும் மாமாவை ஓடோடி வந்து வாங்க வாங்க! வாங்க வாங்க! வாங்க வாங்க வாங்க வாங்க என்று வரவேற்றார்கள். இருவரும் குழம்ப, தலைவர் சொன்னார் "யாரோ உங்க ஃபிரண்டாம், அமெரிக்காவில் இருந்து உங்க பேருக்கு கோயிலுக்காக ஒரு செக் அனுப்பி இருக்காங்க, 10 லட்ச ரூபாய். இப்பதான் கொரியர் வந்தது. கொரியர்ல விலாசம் பார்த்தா பேபி அப்படின்னு போட்டு இருக்கு, நியூ ஜெர்சி ல இருந்து அனுப்பி இருக்காங்க. மாமா அப்படியே இன்ப அதிர்ச்சியில் உறைந்தவராக அருகில் இருந்த சாரில் 'தொப்' என்று விழுந்தார். பேபியா!! பேபியா?! என்று இரு முறை மனசுக்குள்ளே சொல்லிப் பார்த்தார். காது ஓரமாக 'தம்தன தம்தன தனனம்தன'....என ராஜாவின் கோரஸ் ஒலிக்க...அரைக்கண் மூடி , வாய் திறந்து, ஒரு ஜென் மோடுக்கு மாமா போய்விட்டார்... அச்சுதான் அவரை உலுக்கி புகை மண்டத்திலிருந்து பூ மண்டலத்திற்கு வரவழைத்தான்." அத்திம்பேர் யார் இது பேபி எனக்கு தெரியாம?" "போடா இவனே, உனக்கு எப்படிடா தெரியும்? அவ என்னோட ..... என்று எதையோ சொல்ல வந்து அதை அப்படியே முழுங்கி சின்ன வயசு ஸ்கூல் ஃபிரெண்டு டா" என்று முடித்தார். அச்சு விடாமல் "ஃபிரண்டுன்னா" என்றான்..."ம்ம் ஃபிரண்டுன்னா....வெறும் ஃபிரண்டு தான்" என்று கையில் கேரியரோடு வந்த பரிமளா மாமி அதை முடித்து வைத்தாள். அவள் கேரியரை வைத்த "டொக்" மாமாவை மௌன விரதத்திற்கு கொண்டு சென்றது. அதன் பிறகு மாமா ED விசாரித்த அணில் மாதிரி ஆகிவிட்டார். பரிமளா மாமி கேரியரை திறந்து எல்லாவற்றையும் பரப்பி வைத்தாள். தட்டில் சூடாக சாதம் பரிமாறி அதைக் குழித்து, மோர் குழம்பை அதில் இரண்டு கரண்டி தாராளமாக விட்டாள்... "நேத்திக்கு வெண்டைக்காய்த்தான் போட்டு மோர் குழம்பு கேட்டீங்களே அதான் கொண்டு வந்தேன்" (அச்சு...ஓஹோ இதெல்லாம் வேற நடக்கறதா??) "சாப்பிடுங்க எல்லா வேலையும் தலைக்கு மேல இழுத்து போட்டுட்டு அலையுறீங்க உடம்பு என்னத்துக்கு ஆகும்?" இந்த உபச்சாரத்தால் மாடுபிடி வீரனிடம் மாட்டிக்கொண்ட ஜல்லிக்கட்டு காளையாய் மிரண்டார். வாயைத் திறந்து போதும், போதும் என்று சொல்ல நினைத்தார் ஆனால் வார்த்தை எழும்பவில்லை நாக்கு மேல் அன்னத்தோடு ஒட்டிக்கொண்டது. (படுபாவி அச்சு பக்கத்திலேயே இருந்து அவனுடைய சிசிடிவி கண்ணால எல்லாத்தையும் நோட் பண்றானே! நாளைக்கு மீனாட்சி வந்தா இத அப்படியே ரிப்பீட் டெலிகாஸ்ட் பண்ணுவானே என்ன பண்றது அப்படின்னு யோசிச்சு) மயக்கம் வருவது போல் தடாரென்று சாய்ந்தார். பரிமளா மாமி உடனே ஆக்ஷனில் இறங்கினாள். "நகருங்க, கொஞ்சம் காத்து விடுங்க, யாராவது விசிறியை கொண்டு வந்து வீசுங்க, கொஞ்சம் தண்ணி கொடுங்களேன், முகத்தை தொடச்சி விடுங்க, சட்டை மேல் பட்டன கழட்டி விடுங்க... என மழைக்கால பகுதிகளில் பார்வையிட்ட மேயர் போல் கடகடவென உத்தரவுகளை பிறப்பித்து விட்டு அவள் சொன்ன அத்தனையும் அவளே செய்ய ஆரம்பித்தாள்.

மாமா கண்ணை மூடி அப்படியே இது என்னடா மயக்கம் போட்டா பிரச்சனை தீரும்னு பார்த்தால், இது இன்னும் பெருசாகுது, நம்ம கிரைம் ரேட் கூடிக்கிட்டே போகுதே... மெதுவாக உணர்வு வந்தவர் போல் அசைந்தார். சரி சரி இது பசி மயக்கம் தான் ஒரு வா சாப்பிட்டா எல்லாம் சரியா போயிடும் என்று மோர் குழம்பை சாதத்தோடு கலந்து பரிமளா மாமியை பிசைய துவங்கினார். வாய் வரைக்கும் கொண்டு போனவள் என்ன நினைத்தாளோ, அவர் கையை நீட்டி, கையில் வைத்தாள்... மாமா நினைத்தார் நல்ல வேளை ஊட்டி விடாமல் விட்டாளே.... முதல் உருண்டை உள்ளே போனதும் மாமாவுக்கு அவருடைய அம்மா நினைவு வந்தது. அவருடைய அம்மா இப்படித்தான் மோர் குழம்பை உருண்டையாக உருட்டி, ஒரு உருண்டைக்கு மேலே ஒரு வெண்டைக்காய் தான் வைத்துக் கொடுப்பாள். நான்கு உருண்டை சாப்பிட்ட பின் தண்ணீர் குடித்து மாமா எழுந்தார். போதும், போதும் என்று ஜாடையாலே சொன்னவர், கோயில் மதில் சுவர் பின் பக்கம் சென்று தன் கண்ணீரை துடைத்துக் கொண்டார். பின்னாடியே வந்த அச்சு "என்ன மாமா அக்காக்கு துரோகம் பண்றோம்னு வருத்தமா இருக்கா?" என்றான்... போடா நீயும் உன் திங்கிங்கும்... பின்னர் கமிட்டியில் சொல்லிக்கொண்டு நேராக வீட்டுக்கு வந்தவர் பேனை போட்டு அமைதியாக படுத்து விட்டார்.

காலிங் பெல் சத்தம் கேட்டது. அதில் விழித்துக் கொண்டு மெதுவாக எழுந்து வாசலில் சென்று கதவைத் திறந்தார், மீனாட்சி மாமி, "என்ன இவ்வளவு நேரமா பெல் அடிக்கிறறேன், அப்படி என்ன அசந்து தூங்கிட்டிங்க பகல்லையே?..." "காலைல வெயில்ல போயிருந்தேன் கோயில் வேலையா ...அதான் அசந்துட்டேன். நீ போன காரியம் எல்லாம் முடிஞ்சுதா?.".. "நல்லா முடிஞ்சுது. சரி இருங்க காபி போட்டு தரேன்"என்று சமையல் ரூம் பக்கம் சென்ற மீனாட்சி மாமியை அச்சு தடுத்தான், இரு அத்திம்பேர் போட்டு தருவார்... ரெஸ்ட் எடு" என்றான்...

"என்னடா புதுசா! அத்திம்பேர் போடறது?" என்றாள் மீனாட்சி மாமி.

"அக்கா உனக்கு ஒன்னும் தெரியாது அத்திம்பேர் காபி நம்ம காலனியில் அப்படி பேமஸ், எழுத்த வீடு, பக்கத்து வீடு எல்லாரும் வந்து கேட்டு வாங்கி சாப்பிட்டு போறாங்க தெரியுமா?" இதில் 'பக்கத்து வீடு' என்பதை கொஞ்சம் அழுத்தி சொன்னதை மாமி கவனித்தாள்... உடனே அவள் கண்கள் மட்டும் பக்கத்து காம்பவுண்டை நோக்கி சென்று திரும்பியதை மாமாவும் கவனித்தார். "இரு மீனாட்சி நானே காபி போட்டு எடுத்துட்டு வரேன்" என்று உள்ளே நுழைந்தவர் (பகவானே என்னை காப்பாத்து இந்த கும்பாபிஷேகம் முடிஞ்ச உடனே நான் அயோத்திக்கே வந்து கோவில நாலு தடவ அடி பிரதட்சணம் பண்றேன் அப்படின்னு வேண்டிக்கிட்டார்). இவர் காபியோடு வெளியில் வரவும், பரிமளா மாமி வந்து இப்பதான் நெனச்சுண்டே வந்தேன் கரெக்ட்டா போட்டு எடுத்துட்டு வரீங்களே என்று சொல்லி அந்த டம்ளர் காஃபியை அப்படியே வாங்கி ஒரு ஆத்து ஆத்தி மடக், மடக் என்று குடிக்க ஆரம்பித்துவிட்டாள்.... அதன் பிறகு தனது இடப்பக்கம் திரும்பி அவள் சோபாவில் அமர்ந்திருந்த மீனாட்சி மாமியை பார்த்து மாமி நீங்க எப்ப வந்தீங்க ? என்றாள்....."

"ம்...அவர் காபி போடறதுக்கு முன்னாடியே" என்றாள்...மீனாட்சி மாமி

இதற்குள் இன்னொரு காபி போட்டு எடுத்து வர மாமா உள்ளே பாய்ந்தார். கையில் இருந்த காபியை மீனாட்சி மாமியிடம் கொடுக்க போகவும் கோயில் கமிட்டி தலைவர் கையில் செக்கோடு உள்ளே நுழையவும் சரியாக இருந்தது." என்ன குப்புசாமி சார் பேபி மா, செக்க மறந்து அங்கேயே வச்சுட்டு வந்துட்டீங்களே. அது உங்க பேருக்கு வந்துருக்கு. நீங்க தானே அதை பேங்க்ல இருந்து மாத்தி கேஷா எடுத்துட்டு வரணும்... என்று சொல்லியபடியே செக்கை மாமாவிடம் கொடுத்துவிட்டு, கரெக்டான டைமுக்கு தான் வந்திருக்கேன் போல இருக்கு என்று மீனாட்சி மாமிக்கு அவர் போட்டு வைத்திருந்த காபியை மாமாவிடமிருந்து வா(பிடு)ங்கிக் கொண்டார்.
மீனாட்சி மாமியின் முகத்தைப் பார்க்கும் தைரியம் மாமாவுக்கு இல்லை... கேப்டனை நேருக்கு நேர் பார்க்க நேர்ந்த வைகைப்புயல் போல மாமாவின் நிலை. பரிமளா மாமியும், கமிட்டி தலைவரும் காபியை சாப்பிட்டுவிட்டு, வைத்து விட்டு "மாமா காபி நீங்க போட்டதா பிரமாதம் போங்கோ" என்று பாராட்டி விட்டு சென்று விட்டனர்.

இதற்காகவே காத்திருந்தவன் போல் அச்சு"இப்ப புரியுதா அக்கா நான் சொன்னது?"
"புரியுது புரியுது" என்று DTS , Atmos Dolby எஃபெக்ட்டில் மினாட்சி மாமி சொன்னதும்... மாமாவின் மண்டையில் எச்சரிக்கை கூண்டு எண் 9 ஏற்றப்பட்டது. எதுவும் பேசாமல் மாமி தன்னுடைய மூட்டை முடிச்சுகளோடு தன் அறையில் சென்று கதவை சாத்திக் கொண்டு விட்டாள். மாமா சப்தநாடியும் ஒடுங்கிப் போய் சோபாவில் சரிந்தார்.

"அச்சு இங்க தொட்டுப் பாருடா ஜுரம் அடிக்கிற மாதிரி இல்ல"
"ஏன் பயப்படறீங்க, அந்த செக்கு உங்க பிரண்டு அனுப்பிச்சது, கோயில் திருப்பணிக்கு தானே அதை சொல்லிட்டு போங்க அக்கா கிட்ட என்றான் கூலாக.... ( முன்கதை: பேபி என்று ஒரு பெண்ணை தான் காதலித்ததாகவும் அவளும் தன்னை விரும்பியதும், பின்னர் ஏதோ பிரச்சினையால் அவர்கள் குடும்பமாய் அமெரிக்கா சென்று செட்டில் ஆனதையும் முதலிரவின் கிளுகிளுப்பில் மாமா ஏற்கனவே உளறி இருந்தார். அதன் பிறகு பேபி மனதில் மட்டும்தான், மறந்தும் கூட வாய் வழியே உச்சரிக்க மாட்டார்)

இத்தனை வருடம் கழித்து பேபி செக் ரூபத்தில் குடும்பத்திற்குள் என்ட்ரி கொடுப்பாள் என்று மாமா நினைத்துப் பார்க்கவே இல்லை. ஓல்ட் ஸ்கூல் பிரெண்ட்ஸ் கெட் டுகெதெருக்கு வந்த ஒரு அமெரிக்க நண்பன் தன் நம்பரை வாங்கிக்கொண்டு, அதை அவன் பேபியை பார்க்கும் போது கொடுத்து வாட்ஸ் அப்பில் தொடர்பு துவங்கி தான் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் ஆக வைத்த கோவில் கும்பாபிஷேக பத்திரிகை பார்த்துவிட்டு தான் ஏதாவது செய்ய வேண்டும் எப்படி செய்வது என்று கேட்ட பேபியை சீரியஸாக எடுத்துக் கொள்ளாதது தன் தவறு தான் என்று மாமா யோசித்துக் கொண்டிருந்தார்.

கதவு திறந்தது மயான கொள்ளை முடிந்து திரும்பும் மதுரை வீரன் சாமி போல மாமி வெளியே வந்ததை பார்த்த மாமா அச்சுவின் கையைப் பிடித்துக் கொண்டு நைசாக வெளியே நழுவினார். "கோயில்ல கொஞ்சம் வேலை இருக்கு வா போய் பாத்துட்டு வந்துருவோம்"... அப்படியே உள்பக்கம் பார்த்து "மீனாட்சி கோயில் வரைக்கும் போயிட்டு வந்துடறேன்" என்று கேட்டும்,கேட்காதது போல் சொல்லிவிட்டு விடு விடுவென கோயிலை நோக்கி நடையை கட்டினார்.


இவர் கோயில் வாசலில் நுழைந்தவுடன் கமிட்டி தலைவர் " வாங்க குப்புசாமி, உங்கள பாக்க வரலாம்னு இருந்தேன்..முக்கியமான வேலை நாளைக்கே நீங்க கும்பகோணம் போகணும்" என்றார். அச்சு முந்திக்கொண்டு "நாங்க எதுக்கு கும்பகோணம் போகணும்" என்றான்.
"சாமிசிலைக்கு அடியில வைக்கிற யந்திரம் வரணும். அதை எடுத்துட்டு வரேன்னு சொன்னவரு உடம்பு சரி இல்லாம படுத்துட்டாரு அந்த ஸ்தபதி கிட்ட போயி எந்திரத்தை வாங்கிட்டு அப்படியே சுவாமிமலைக்கு போயி கற்பூர ஆரத்தி தட்டும் மணியும் வாங்கிட்டு வரணும்" என்றார்.
"அது ஒழுங்கா வந்து சேரனும் அதனால நம்ம மணி டிராவல்ஸ்ல சொல்லி இருக்கேன். காலைல ஆறு மணிக்கு உங்க வீட்டுக்கு வண்டி வந்துரும் நீங்க போயிட்டு இத வாங்கிகிட்டு நாளைக்கே திரும்பிடுங்க கொஞ்சம் ராத்திரி நேரம் ஆனாலும் பரவால்ல பத்து பத்து மணிக்குள்ள வந்துருங்க. என்ன? நாளைக்கு மறுநாள் நம்ம கும்பாபிஷேகம், யாகசாலை பூஜையை ஸ்டார்ட் பண்ணனும் என்றார்.

"சரி நான் கும்பகோணம் போயிட்டா செக்க எப்படி பேங்க்ல போட்டு பணம் எடுக்கறது " மாமா கேட்டார். "அதுக்கும் வழி பண்ணிட்டேன், இப்பதான் மீனாட்சி மாமி கிட்ட பேசினேன், உங்க ரெண்டு பேர் பேர்ல இருக்குற ஜாயிண்ட் அக்கவுண்ட்ல அதை டெபாசிட் பண்ணிட்டு மாமி பணத்தை எடுத்து கொடுக்கிறேன்னு சொல்லிட்டாங்க" .. இந்த ஆளு என்ன அநியாயத்துக்கு ஃபாஸ்ட்டா இருக்கானே... சரி இவகிட்ட இருந்து இப்போதைக்கு தப்பிச்சா போதும், என்று மனசுக்குள்ளேயே நினைத்துக் கொண்டு "சரி நாளைக்கு நான் போயிட்டு வரேன் என்று சொல்லி வெளியே வந்தார். அச்சுவோடு வெளியில் மனம் போன போக்கில் அலைந்து விட்டு ஒரு காபி, ஐஸ்கிரீம், மசால் வடை,பானி பூரி, சுண்டல் இவ்வளவையும் முடித்துவிட்டு வீட்டுக்குள் வந்தார். தன் வீட்டிற்கு போவதாக சொன்ன அச்சுவின் கையை இறுகபற்றி கொண்டு ..தன் வீட்டிற்குள்ளேயே அயலான் போல நுழைந்தார். மீனாட்சி மாமி வாசலிலேயே ஜெயிலர் போல குறுக்கும் நெடுக்குமாய் உலாத்திக்கொண்டு இருந்தாள்.
இருவரையும் பார்வையாலே நிறுத்தினாள்..

"செக்கு மட்டும் தானா? "
மாமாவுக்கு எல்லாம் புரிந்து விட்டது.
" அது வந்து மீனு...எனக்கு...நான்...நீ..அவ...இங்க...பேபி....நீ..வந்து...." இன்ஸ்டாகிராமில் போட்ட படம் இப்போது இன்ஸ்டால்மென்ட்டில் பேசும் அளவுக்கு கொண்டு வந்து விட்டதை எண்ணி மாமாவுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.... ஆபத்பாந்தவனாய் அச்சு தான் கை கொடுத்தான்" அக்கா நீ காப்பி சாப்டியா இல்லையா?" அத்திம்பேர்,ஒரு கப் காபி போட்டு எடுத்துட்டு வாங்க ... எனக்கும் சேத்து என்று, மேயரை காப்பாற்றிய சேகர்பாபுவாய் செயல்பட்டான்.
" அக்கா, அத்திம்பேர கோச்சிக்காத. நாளைக்கு கார்த்தால நாங்க ரெண்டு பேரும் கும்பகோணம் போறோம் கோயில் விஷயமா... சண்டை போடாமல் சந்தோஷமா அவரை அனுப்பி வை..." என்றான்....

"பணம் வந்ததில எனக்கும் சந்தோஷம் தான்டா, கோயில் திருப்பணிக்கு வந்து இருக்கே, அதுவும் இவ்வளவு கஷ்டமான நேரத்துல. ஆனா இந்த மனுஷன் இன்னும் பேபி கிட்ட பேசிகிட்டு இருக்காருன்னு எனக்கு டவுட்.... அதான்" என்றாள்.

"நான் நாளைக்கு போகும் போது இதை பத்தி விசாரிச்சுட்டு உனக்கு சொல்றேன் அக்கா" என்று மோடியிடம் சொல்லும் ஜெய்சங்கராய் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
இரவு திரும்ப தாமதமானதால் மறுநாள் காலையில் கிளம்பி மாலையில் கோவிலை வந்து அடைந்தார்கள். நேரே யாகசாலைக்கு சென்று எல்லாவற்றையும் கொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்து விட்டார். குளித்து முடித்து டைனிங் டேபிள் இருந்த டிபனை சாப்பிட்டு விட்டு சத்தமே போடாமல் படுத்துக்கொண்டார். இருந்த களைப்பில் தூக்கியும் போய்விட்டார். மறுநாள் காலை 8 மணிக்கு எழுந்திருக்கும் போது, வீட்டில் யாரும் இல்லை. மெதுவாக எழுந்து காபி போட்டு சாப்பிட்டு விட்டு குளித்து புது உடை போட்டுக்கொண்டு நேராக கோயில் நோக்கி சென்றார். மறுநாள் கும்பாபிஷேகம் வேலைகள் எல்லாம் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன மீனாட்சி மாமியும், பரிமளா மாமியும் ஒன்றாக அங்கும் இங்கும் சுத்திக் கொண்டிருந்தார்கள்.. இந்தக் கூட்டணி நமக்கு ஆகாது என்று மாமா வேறு ஒரு பக்கம் ஒதுங்கிக் கொண்டார் எல்லாம் முடிந்து அன்று இரவு அதிக பேச்சு வார்த்தை இல்லாமல் இருவரும் தூங்கி விட்டார்கள். மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து கும்பாபிஷேகத்துக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து அலாரம் வைத்தார் மாமா.
ஆனால் வழக்கம் போல எழுந்தது என்னவோ ஒரு மணி நேரம் லேட்டாய் இப்போதும் வீட்டில் யாரும் இல்லை கோவிலில் இருந்து லவுட் ஸ்பீக்கரில் நாதஸ்வர சத்தம் கேட்டது. குளித்துவிட்டு கோயிலுக்கு ஓடினார்.

கும்பாபிஷேக கலசம் கோபுரத்தின் உச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. சரியான நேரத்திற்கு வந்திருக்கிறோம் என்று எண்ணிக்கொண்டு தன்னுடைய புது வேஷ்டி, பட்டு சட்டை, அங்க வஸ்திரம் எல்லாவற்றையும் சரி செய்து கொண்டார். அவர் தானே இன்று சீப் கெஸ்ட்... கும்பாபிஷேகம் முடிந்து, மேலிருந்து புனித நீரை எல்லோரும் மேலும் தெளித்தார்கள். அது தனக்காக துவக்கப்பட்ட பன்னீர் என்று தலையை நிமிர்த்தி ஆனந்தமாய் அதில் நனைந்தார் மாமா.

விழா துவங்கியது. முன் வரிசையில் எல்லோரும் அமர்ந்திருக்க, கமிட்டி தலைவர் எல்லோரையும் வரவேற்று பேசி முக்கியஸ்தர்களை மேடையில் வந்து அமர அழைத்தார். இன்றைய விழாவின் சிறப்பு விருந்தினர், அறநிலையத்துறை திட்ட குழு உறுப்பினர், நமது கோதண்டராமர் கோயிலின் புதிய நிர்வாக அதிகாரி என்றெல்லாம் தலைவர் சொன்னவுடன் குப்புசாமி மாமா நெஞ்சை நிமிர்த்தி சட்டையை சரி செய்து கொண்டு அங்க வஸ்திரத்தை மீண்டும் ஒருமுறை எடுத்து தோளில் சரியாக வைத்துக் கொண்டு எழ முற்படும்போது, தலைவர் சொன்னார்.... திருமதி மீனாட்சி குப்புசாமி அவர்கள்....

பலத்த கைதட்டலோடு மீனாட்சி மாமி மெதுவாக எழுந்து தன் வயிர நெக்லஸை சரி செய்து கொண்டு, புடவையை சரி செய்து கொண்டு, அடிமேல் அடி எடுத்து சப்த பதி போல் நடந்து குப்புசாமி மாமாவை தாண்டி ஓரக் கண்ணால் அவளும் நோக்க அண்ணலும் நோ (விழி)க்க ...மேடையை நோக்கிச் சென்று நடுநாயகமாய் அமர்ந்தாள்... அதன் பிறகு நடந்தது எதுவும் மாமாவிற்கு கவனத்தில் இல்லை..(அந்தப் பதவிக்கான நேர்காணல் முடித்து உத்தரவை வாங்கிக் கொண்டு வரத்தான் ஊருக்கு போயிருந்தாள் என்பதும், மாமா கும்பகோணம் போயிருந்த போது கமிட்டி தலைவரிடம் பணத்தை ஒப்படைக்க வந்த மீனாட்சி மாமியை நீங்கள் தான் இந்த விழாவிற்கு தலைமை ஏற்று நடத்தி தர வேண்டும் ஏனென்றால் புதிய நிர்வாக அதிகாரி நீங்கள் தான் என்று கமிட்டி தலைவர் கேட்டுக் கொண்டதும், பாவம் மாமாவுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை...)
வழக்கம்போல சீட்டிலே மயக்க நிலையில் இருந்த மாமாவை அச்சு தான் தட்டி எழுப்பினான் "மாமா.. மாமா.. சீக்கிரம் வாங்க நம் ஆத்துக்கு உங்க பிரண்ட் பேபி வந்துருக்கா...."" என்ற அச்சுவின் மேலேயே மயங்கிச் சரிந்தார் குப்புசாமி மாமா....