தொடர்கள்
ஆன்மீகம்
சநாதன தர்மம் - விழிப்புணர்வு : ஆர் சங்கரன்

20240006081255294.jpg

அது சரி இந்த விழிப்புணர்வு நமக்கு ஏன் தேவை? கேள்வியும் கேட்டுவிட்டு பதிலும் தருகிறார்.

உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும் அவற்றின் இயற்கைக்கேற்ற செயல்களைக் காலம் காலமாகச் செய்து வருகின்றன. ஒரு செடியின் மரத்தின் வேர் நீரைத்தேடி மண்ணில் ஊடுருவிச் செல்கிறது. வெயிலைத் தேடி உயர்ந்து படர்ந்து வளைந்து வளர்கிறது. ஊர்ந்து செல்லும் சிறு பூச்சிகள் சிறு சிறு இடுக்குகளையும் பொந்துகளையும் தேடிச் செல்கின்றன. எலி முயல் போன்றவை தமது கால்களால் தமக்கென்ற வளைகளைத் தோண்டுகின்றன. பறவைகளும் விலங்குகளும் அதுபோல் தத்தம் இயல்பு மற்றும் தேவைகளுக்காக தமது அறிவைப் பயன்படுத்துகின்றன.

இவை எல்லாம் உயிர்வாழவும் இனப்பெருக்கத்திற்குமான செயல்கள். நமது செயல்களால் என்ன விளையும், இதைவிடச் சிறப்பாக எளிதாகச் செய்ய முடியுமா என்ற எண்ணங்கள் அவற்றிற்கு இல்லை. பல்லாயிரம் வருடங்களாகச் செய்து வந்ததையே இன்றும் செய்கின்றன. அவ்வாறு வாழும் வசதி மாறுபட்டால் அவை அழிந்து விடுகின்றன.

அனேகமாக எல்லா உயிரினங்களும் தமக்கு வரும் ஆபத்துகளை உணரும் தன்மை பெற்றனவாக இருக்கின்றன. சிங்கத்தின் மணத்தை மானும், காற்றில் செக்குத்தாக வரும் கழுகின் ஓசையை மீனும் உணர்கின்றன, உணர்ந்து தப்ப முயல்கின்றன. அவற்றின் விழிப்புணர்வு உணவு, உறைவிடம், ஆபத்து, இனப்பெருக்கம் என்ற நிலையோடு முடிவடைகிறது.

புல்லும் வைக்கோலும் தின்னும் மாடு இன்று குப்பையைத் தின்று அதனால் துன்பமடைகின்றது. ஆனால் அவ்விதம் தின்னும் குப்பையில் தனக்கு ஒவ்வாத ஒன்று இருப்பதை அதனால் பிரித்தறிய முடிவதில்லை. அவ்வித விழிப்புணர்வு இல்லாததால் இன்றைய நெகிழிப் பயன்பாட்டால் மனிதனைவிட மற்ற உயிரினங்களே அதிகம் பாதிக்கப் படுகின்றன.

மனிதனுக்கு இந்த விழிப்புணர்வு கொடுக்கப் பட்டுள்ளது. தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது அதனை எவ்விதம் பயன்படுத்திக் கொள்ளலாம், எதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று கவனமாக இருந்து பார்த்து அதற்கேற்ப நடக்கும் திறன் மனிதனுக்கு மட்டுமே கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் இந்தத் திறனை நாம் பயன்படுத்தாமல் விட்டுவிட்டால் நமக்குத் தேவைப்படும் நேரத்தில் அது நமக்குக் கைகொடுக்காது. கண்ணிருந்தும் படிக்கக் கற்காதவனுக்குப் புத்தகம் பயனற்றதாகிறது, கையிருந்தும் எழுதக் கற்காதவனுக்கு எழுதுகோல் பயனாவதில்லை. காலிருந்தும் நடந்து பழகாதவனுக்கு நடக்கவே அச்சம் தோன்றும். அதுபோல விழிப்புணர்வு என்பதைப் பழக்கிக்கொள்ளாமல் இருந்தால் அது நமக்குப் பயனற்றதாகிறது. ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் வைத்ததொரு கல்வி மனப்பழக்கம்’ என்ற ஔவையின் வாக்குப்போல விழிப்புணர்வும் விழித்திருக்கும் பழக்கம் இருந்தாலே வரும்.

ஆப்பிள் மரத்திலிருந்து பழம் காலம்காலமாக விழுந்து கொன்டிருக்கிறது. ஆனால் நியூட்டனுக்கு அதிலிருந்து புவி ஈர்ப்புவிசையின் தன்மை தெரிய வந்தது. காணும் எல்லாவற்றிலும் அது ஏன் அது என்ன என்று அறியும் குறுகுறுப்பு மனிதனுக்கு மட்டுமே அமைகிறது. அதேபோல நாம் செய்யும் ஒரு செயல் என்ன விளைவை ஏற்படுத்தும் என்று சிந்திப்பதும் அந்த விளைவை அளவிடுவதும் மனிதனுக்கு மட்டுமே கொடுக்கப் பட்ட பரிசு. இன்று வெட்டப் படும் மரங்களால் காற்றில் மாசு எத்தனை கூடும், அள்ளப் படும் ஆற்று மணலால் என்ன விளையும் என்று கணக்கிடும் திறனைப் பெற்றவன் மனிதன் மட்டுமே.

இவ்விதம் குறுகுறுப்பும், எதிர்விளைவை அறியும் அளவிடும் திறனும், அவற்றை அவ்வப்போதே அறிவதும் என்ற கலவைதான் விழிப்புணர்வு. இந்த உணர்வு தூண்டப்பட்டு எப்போதும் தயார் நிலையில் இருப்பதே மனிதனுக்குச் சிறப்பு. அந்த உணர்வு சிறப்பாகச் செயல்படுவதால்தான் பெரும் சாதனையாளர்கள் உருவாகிறார்கள். ஒரு பெரும் பாறையைப் பலரும் கண்டாலும் சிற்பக் கலையில் விழிப்புணர்வு உள்ள ஒருவன்தான் அதில் ஒரு சிறந்த சிலையைக் காண்கிறான். சமையல் கலையில் விழிப்புணர்வு உள்ளவனுக்குத்தான் காய்கனிகளில் அவற்றால் செய்யப் படும் பல சுவை உணவு தோன்றும்.

இவ்விதம் இந்த விழிப்புணர்வு தான் தனிமனித சாதனையாளர்களை உருவாக்கியுள்ளது. அவர்களுக்கு ஒவ்வொரு நொடியும் காணும், கேட்கும், படிக்கும், நுகரும் எல்லாவற்றிலும் அவரது சுவைக்கேற்ற திறனுக்கேற்ற ஏதாவது இருக்கிறதா என்று நோக்கும் தாகம் இருக்கும். அந்த உணர்வே அவர்களை சாதரண நிலையில் இருந்து சாதனையாளர்களாக மாற்றுகிறது.

தனிமனித வாழ்க்கையிலும் இந்த விழிப்புணர்வு மிக்க அவசியமாகிறது. பழகும் எல்லாவரையும் இவர் நமக்கு நல்ல நட்பாக இருப்பாரா என்ற தேடல் என்றும் இருக்கிறது. கல்லூரியிலிருந்து வரும் மகனை மகளைக் கண்டதும் ஏதாவது மாற்றம் உள்ளதா என்று தாயுள்ளம் விழிப்போடு நோக்கும். என்றும் பரபரப்பாக இருக்கும் சாலை காலியாக இருந்தால் ஏதோ பிரச்சினை என்று அறிவது மனித மனம்.

இந்த விழிப்புணர்வுதான் சமூக நலனைக் காக்கும், சமூகத்தில் ஏற்படும் சங்கடங்களை மாற்றும், தீய சக்திகளின் செயல்களைக் கண்காணிக்கும், அவ்வித செயல்களுக்கு மாற்றுச் செயல்களைத் திட்டமிட்டு நடத்தும். நமது பெற்றோர், உற்றார், உறவினர், நண்பர், தலைவர், மேலதிகாரி என்று பலரும் இதைச் செய் இதைச் செய்யாதே என்று நமக்குப் பலவற்றைச் சொல்கிறார்கள். அவற்றில் எது அவர்கள் சுய லாபத்திற்குச் சொல்கிறார்கள் எதனால் இருவருக்கும் பலன் உண்டு, எது எனது நலனை மட்டுமே கருத்தில் கொண்டு சொல்லப் பட்டது என்பதைத் தெரிந்து கொள்ள இந்த விழிப்புணர்வு மிகவும் தேவைப் படுகிறது.

அதே போல இந்த விழிப்புணர்வுதான் ஒரு சமுதாயத்திற்கு ஒரு நாட்டிற்கு பாதுகாப்பிற்கும் முன்னேற்றத்திற்கும் காரணமாக அமைகிறது. அண்டை நாட்டின் நடவடிக்களிலிருந்து அவர்கள் உள்நோக்கத்தை அறிந்து அதற்கேற்ப தயாராக இருப்பதே சரியான பாதுகாப்பு. நாட்டின் ஒவ்வொரு துறையிலும் – விவசாயம், தொழில், நீர் இருப்பு, பயணம், பாதுகாப்பு, கலை, இலக்கியம், ஆய்வு, பொழுதுபோக்கு போன்ற எல்லாத் துறைகளிலும் – நமது பலம் பலவீனம் உலகில் வரும் தொழில்நுட்ப மாற்றங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் அலசி எடைபோட்டு அதற்கேற்ப மாற்றங்களைக் கொண்டு வரும் நாடே மொத்தமான முன்னேற்றப் பாதையில் செல்கிறது. இந்த விழிப்புணர்வு அந்தந்தத் துறையினர்க்கும், அவர்களை ஒருங்கிணைக்கும் அரசாங்கத்தினர்க்கும் இருப்பதே அந்த நாட்டின் வலிமை.

சரி, அதற்கும் இந்த சனாதன தர்மத்தின் சடங்குகளுக்கும் என்ன தொடர்பு? அடுத்த இதழில் காண்போம்.