தொடர்கள்
ஆன்மீகம்
சபரிமலை யாத்திரை போகலாமா – பால்கி

வருடந்தோறும் பல லட்சம் பக்தர்கள் சபரிமலை யாத்திரை போகிறார்கள்.

இந்த கட்டுரை சபரிமலை செல்லாத, அல்லது இந்த வருடம் போக முடியாத பக்தர்களுக்காக.....

ஒரு யாத்திரை வர்ணனை.

20240020002949754.jpg

போன வருடம் இடது கால் முட்டி பிசகிப் போய் நான்கு மாதம் படுத்த படுக்கையாக இருந்தது என்று பார்க்கையில் பெரு வழியாக அடர்ந்த கானகத்தினூடே வெறும் காலுடன் நடப்பது ஒரு சத்திய சோதனையாகத் தான் தோன்றியது.

கார்த்திகை முதல் தேதி வந்தது. துளசி மாலையணிந்து கொண்டோம் குழுவாக. அன்றிலிருந்து மார்கழி மாதத்திலும் கட்டு நிறை செய்து கொள்வது வரை கூட்டு சரணங்களும் சாஸ்தாப்ரீதி எனும் பெரு அளவிலான பூஜை மற்று பஜனைகளிலும் சரண கோஷங்களும் அய்யன் நாமங்களும் எங்களது மூச்சாயின.

ஜன 7 தேங்காயில் நெய் நிறைத்தோம் கட்டும் கட்டினோம். இருமுடி தாங்கினோம்.

நேத்ராவதி விரைவு வண்டியில் பதினான்கு பேர் குழுவாக ஏறினோம். அதில் ஐவர் உத்திர பிரதேசத்திலிருந்து வந்தவர்கள். இடையில் பன்வேல் ஸ்டேஷனில் இருந்து இரு அய்யப்பன்கள்.

20240020002449943.jpg

ரயிலிலும் காலையும் மாலையும் சுலோகங்கள் மற்றும் பஜனை செய்தோம்.

மறு நாள் காலை குட்டி புரத்தில் இறங்கி குருவாயூர் அடந்தோம். குருவயூரப்பனை வணங்கினோம். அங்கு சென்னையிலிருந்து வந்த இன்னுமொரு நால்வர் குழு எங்களுடன் ஐக்கியமானர்கள்.

அங்கிருந்து த்ருப்ரயார் ராமரைக் கண்டு தொழுதோம். கொடுங்ஙல்லூர் பகவதியையும் கண்டு தொழுதோம்.

அங்கிருந்து நேராக குளத்துப்புழை பால சாஸ்தா கோயிலுக்கு அதிகாலை வேளையில் வந்தடைந்தோம். ஓடும் டெம்போ ட்ராவலரிலியே தூங்கிக் கொண்டோம்.

நீராடி முடித்து பாலனைத் தொழுதுவிட்டு தமிழகத்தில் இருக்கும் ஆரியங்காவு அய்யன் கோவிலுக்கு பயணப்பட்டோம். அங்கு தான் அந்த சாஸ்தாவையே மணம் செய்துகொண்டார் புஷ்கலா எனும் சௌராஷ்டிர குலத்தைச் சேர்ந்த சிறுமி. தன் பக்தையின் பரிபூரண பக்தியை சாஸ்தா ஏற்றுகொண்டதனால் இந்த ஐக்கியம் ஏற்பட்டது.

அங்கிருந்து திருநெல்வேலி பாபனாசத்தினருகே இருக்கும் பொன் சொரிமுத்தைய்யனார் கோயிலுக்கு செல்ல முற்பட்டோம். அது புலி சரணாலயத்தில் அமைந்துள்ள கோயில். அந்த சமயத்தில் பெய்த, பெய்து கொண்டிருந்த கடும் மழையால் பாலமே மூழ்கி அதற்கு மேலேயே வெள்ளம் ஓடிக் கொண்டிருந்ததால் சென்ற டிசம்பரிலிருந்தே வாகனங்கள் அங்கு செல்ல தடை செய்து விட்டனராம்.

அங்கிருந்து குற்றால ஐந்தருவியில் மனம் குளிர ஒரு குளியல்.

மறுநாள் கோட்டைவாசல் கருப்பண்ணசாமி கோயில் வழியாக அச்சன் கோயிலை அடைந்தோம். அந்த கடுங்காட்டு வழியாக ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து பாத யாத்திரையாக நடந்து வரும் அய்யப்பன்களைக் கண்டோம்.

அச்சன்கோயிலருகேயும் ஒரு பிரசித்தி பெற்ற கருப்பண்ணசாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தோம். அங்கிருந்து எரிமேலி அடைந்தோம்.

அங்கு எங்களின் இருபது பேர் கொண்ட குழுவில் எட்டு பேர் முதல் முறையாக சபரிமலை வரும் கன்னி அய்யப்பன்கள். ஆதலால் அவர்களை அழைத்துக்கொண்டு பேட்டை துள்ளல் செய்ய ஆயத்தமானோம்.

2024002000304729.jpg

20240020003119768.jpg

மேளம் நாதஸ்வரம் வாசிப்பவரை அமர்த்திக்கொண்டோம். அங்கிருந்து அருகேயுள்ள பேட்டை சாஸ்தா கோயிலுக்கு வந்து உத்திரவு பெற்றுக் கொண்டோம். அங்கிருந்து எரிமேலி சாஸ்தா கோயிலை நோக்கி மேளம் நாதஸ்வர இசை சங்கமத்திற்கு ஏற்ப நாங்களனைவரும் ஆடிக் கொண்டே நகர்ந்தோம். மகர காலமனதாலும் மகரஜோதி தினத்திற்கு மிக அருகில் இருக்கும் நாள் என்பதாலும் அய்யப்பன் கூட்டமும் அவர்களின் பேட்டை துள்ளலும் சூழலை இன்னும் ஆனந்த மயமாக்கிக்கொண்டிருந்தது.

எரிமேலி சாஸ்தா அப்போது யானை மீது பக்தர்களைக் காண சீவேலியில் வெளியே வந்து மேளமும் கூடிய நாதஸ்வர இசையை அனுபவித்துக்கொண்டிருந்தார். அவரைத் தொழுதுவிட்டு அன்றிரவு அங்கேயே விடுதியில் தங்கிவிட்டோம்.

மறு நாள் பெரு வழியில் நடக்க ஆரம்பித்தோம். பேரூர் தோடு கடந்தோம். அரசுமுடிக் கோட்டை வழியாக காளகட்டி க்ஷேத்ரத்தை அடந்தோம். அதனருகிலிருக்கும் வாழைத் தோப்பு எனுமிடத்தில் காட்டிலிருக்கும் ஒரு வீட்டில் தங்கிவிட்டோம்.

அருகே ஓடிக்கொண்டிருக்கும் அழுதா நதியில் நீராடினோம்..

இரவு வெளியிலேயே தரையில் படுத்து விட்டோம். குழுவில் சிலர் இன்னும் பேசியவாரே இருந்தனர். நான் கண்ணயர்ந்தேன்.

அஜய் வெரு என்ற சத்தம் கேட்டு தடாலென எழுந்தேன். எனது கம்பிளியிலிருந்து ஏதோ ஒரு கருப்பான வஸ்த்து தள்ளி விழுந்தது. அஜயைத் தெரியுமாதலால் அவருடன் ஹலோ சொல்லிவிட்டு எனது உறங்குமிடத்திற்கு வந்து கம்பிளியை இழுத்தேன். அந்த கரிய வஸ்துவை அருகிலிருந்த அய்யப்பன் காலால் தள்ளி விட்டார். எனக்கு ஏதோ உள் மனதில் அது என்னது என்று தீர தெரிந்துகொள்ள பயம் கலந்த ஆவல் கொண்டேன். எனது இந்த விண்ணப்பத்திற்கு எவரும் உடன் படாமல் அவரவர் தூங்குவதற்கு ஆயத்தமானர்கள.

சட்டென அந்த வஸ்து நெளிந்த வாறே எனது கம்பிளியருகே வர வியர்த்துவிட்டேன்.

எதிரில் வாலை ஆட்டியவாறே மெதுவாய் நகர்ந்து வந்த ஒரு கருந்தேள் என்னை மட்டுமல்ல அங்கிருந்த அனைவரையும் பயப்பட வைத்தது. அது அதனோட இடத்தில் தான் இருக்கு. நாமத்தான் அத்தோட இடத்திற்குள் நுழைந்து இருக்கிறோம் என்றார் எனது குருஸ்வாமி.

அதை ஒரு துடைப்பம் கொண்டு அருகே இருந்த செடி கொடிகளருகே விரட்டி விட்டோம்.

அஜய்க்கு நன்றி சொல்லிக் கொண்டேன். இல்லையெனில் என்னவாயிருக்கும் என்று யோசிக்கவே பயமாயிருந்தது.

காட்டு வழிப்பயணம், காட்டு விலங்குகள் சகஜமாக நடமாடும். எங்களுக்கு இருக்கும் ஒரே ஆயுதம் சரண கோஷம் தான். இன்று மட்டு மல்ல , என்றுமே தான்.

முக்கியமாக ஒன்று இங்கு சொல்லிவிடுகிறேன். இந்த பெரு வழி புலி சரணாலயமும் ப்ரைவேட் எஸ்டேட்டும் அடங்கிய பகுதி. ஆதலால் டிசம்பர் 15 முதல் ஜனவரி 14 வரை தான் திறப்பார்கள். நடக்கும் பாதையும் பெரும்பாலும் பக்தர்களின் நடப்பினாலேயே அமைந்திடும். ஆங்காங்கே யானைகளின் சாணிகளைக் காணலாம். அதிலிருந்து அவைகள் அக்கம் பக்கத்தில் தான் இருக்கின்றன என்பதை யூகிக்கலாம்.

சென்ற 2020 மகர ஜோதியின் போதும் கருவிளாந்தோடு என்ற அடர்ந்த காட்டுப்பகுதியில் தங்குகையில் தங்கியிருந்த இடமருகே யானை திடீரென புகுந்திட நல்ல வேளை எதிரே இருந்த வனத்துறை அதிகாரிகள் அதை திசை திருப்பி விட்டது நினைவில் இன்னமும் இருக்கிறது.

மறுநாள் அழுதா மலையை கிரி வலமாக சுற்றியவாரே முக்குழி அடைந்தோம்.

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை, குண்டும் குழியும் கண்ணுக்கு வெளிச்சம், மேடும் பள்ளமும் பரமானந்தம் என்ற கோஷங்கள் பாதையில் ஏற்படும் பாதைகளை நினைவூட்டும்.

2024002000392332.jpg

கடந்தசில வருடங்களாக 2018 வெள்ளம், 2019 சுப்ரீம் கோர்ட் வழக்கு, அதற்குப் பிறகு கரோனா எனத் தடங்கல்கள் வர பெரு வழியில் அய்யப்ப மார்களின் நடமாட்டம் குறைந்திட வன விலங்குகளின் ராஜ்ஜியம் ஓங்கியது. அதனால், தற்போது வனத்துறை அதிகாரிகள் வனத்தில் ஆட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி விட்டனர். காலை 7 மணிக்கு தொடங்கி மேலும் மாலை ஐந்தரை மணிக்குள்ளே குறிப்பிட்ட தங்குமிடத்தில் தங்கிவிடவேண்டும் என்ற எச்சரிக்கை ஆங்காங்கே அறிவிப்பு பலகை மூலம் தெரிவித்து வருகின்றனர்.

20240020004013399.jpg

முக்குழி தேவி பகவான் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப் பட்ட மூர்த்தியாகும். தேவியினை வணங்கிவிட்டு கருவிளாம்தோடு வனத்துறை அலுவலகமருகே அமைந்துள்ள டெண்டுகளில் தங்கினோம். மறுநாள் கரிமலை ஏறத் தொடங்கினோம்.

2024002000404636.jpg

20240020004117184.jpg

கரிமலை ஏற்றம் கடினம் கடினம் என்றோரு சரணமும் பிரசித்தம். முட்டி உயரத்தில் மரத்தின் வேர்களிருக்கும் அங்கு வளர்ந்திருக்கும் ஆஜானுபாகுவாய் விண்ணை முட்டும் மரங்கள்.

20240020004157915.jpg

கரி மலை உச்சியில் மணிகண்டன் அமைத்த வற்றாத கிணறு கண்டோம், வணங்கினோம்.

20240020004238669.jpg

கரிமலை இறக்கம் மேலும் கடினம் தான்.

20240020004319610.jpg

வழுக்குப்பாறையும் கடந்து பெரியாண வட்டம் சேர்ந்தோம். பலர் அங்கு அன்னதானம் செய்வார்கள். மலை ஏறி இறங்கி வரும் அய்யப்பமார்களுக்கு அது ஒரு வரப்பிரசாதம்.

20240020002110730.jpg

[சிங்கப்பூரிலிருந்து வந்த அய்யப்பமார்கள்]

2024002000355914.jpg

சாப்பிட்ட இலையில் விழுந்து புரண்டு அந்த வாழை இலைகளைத் தலையில் எடுத்துக் கொண்டு பம்பை நதியில் நீராட செல்வர். கூடவே பம்பை நதியில் சிறு குச்சிகளால் விளக்கு செய்து அதை பம்பையில் மிதக்க விடுவார்கள்.

20240020001603114.jpg

[பம்பாநதிக்கரை..இங்கு தான் மணிகண்டனாக சாஸ்தா பூலோக அவதாரம் எடுத்த இடம்]

20240020001914242.jpg

[பம்பா கணபதியருகே கழியெடுத்துச் சூறையாடும் காவலர் இவர்கள். எனக்கு என் இடது காலிழுத்து நடப்பது கண்டு ஒரு கம்பை எனக்கு கொடுக்க முன் வந்தவர்கள்]

அங்கிருந்து பம்பா கணபதியருகே எங்களது முன்பதிவு செய்த விர்ச்சுவல் பாசை ஊர்ஜிதப் படுத்திக்கொண்டு நீலி மலை அப்பாச்சி மேடு, சபரி பீடம் சரம்குத்தியால் பகுதிகள் வழியாக சபரிமலை சன்னிதானத்தின் நடைப்பந்தலை அடைந்தோம். அமைக்கப்பட்டிருந்த வரிசைகள் வழியாக பதினெட்டு படிகளை அடந்தோம்.

20240020002349349.jpg

[பதினெட்டம் படியருகே]

பெரிய கடுத்த ஸ்வாமியையும், கருப்பாயி-கருப்பண்ணஸ்வாமியை வணங்கிக் கொண்டோம்.

அங்கு வந்து சேர்ந்ததற்கு அடையாளமாக ஒரு படித் தேங்காயை அருகிலிருந்த சுவற்றில் எரிந்து உடைத்துவிட்டு பதினெட்டு படிகளேறினோம். கொடி மரம் தொழுதோம். அருகிலிருந்த பிரிட்ஜ் வழியாக ஒரு சுற்று வந்து கீழிறங்கி சாஸ்தா சன்னிதியடைந்தோம். தலையில் இருமுடியுடன் அய்யனைக் காண்பது முக்கியம். கூடவே, அதே போன்றே தலையில் இருமுடியுடன் கன்னிமூல கணபதி, நாகராஜா, சிறிய கடுத்த ஸ்வாமி, நாகராஜாக்கள், மணிமண்டபம், நவகிரகங்கள், மாளிகைப்புரம் என்று அனைத்து சன்னிதிகளையும் தரிசித்துவிட்டு முன்பதிவு செய்திருந்த தங்குமறைக்கு வந்து குழுமினோம்.

2024002000262895.jpg

ஒவ்வொரு இருமுடி கட்டின் முன் முடியிலிருந்த நிவேதனப் பொருட்களை பிரித்தோம். அனைத்து முத்திரைத் தேங்காய்களை உடைத்து அதிலிருந்த நெய்யை ஒரு பாத்திரத்தில் சேகரித்தோம். மற்ற பூஜை பொருட்களான விபூதி, குங்குமம்,தேன், போன்றவற்றையும் பிரித்து வைத்து மறுநாள் அபிஷேகத்துக்கு கொடுத்துவிட்டு வந்தோம்.

மறு நாள் அபிஷேகம் முடிந்து மற்ற பூஜைகளையும் முடித்துக் கொண்டு அந்த பிரசாதங்களை அனைவருக்கும் வினியோகம் செய்யும் வகையில் பாட்டிலிலும் காகிதங்களிலும் அடக்கி அந்தந்த இருமுடிகளில் நிறப்பிவிட்டோம்.

20240020002241277.jpg

மறு நாள் 15.01.2024, மகர சங்கராந்தி, அன்று தான் ஜோதி தெரியும் நாள். எப்போதும் இருக்கும் மலரலங்காரம் மிஸ்ஸிங். ஏனோ தெரியவில்லை.

வெடிவழிபாடு இரண்டு வருடங்களாக நிறுத்தப் பட்டு விட்டது. இது முக்கிய சடங்காகும். இதுவும் ஏன் என்று தெரியவில்லை.

காலையிலும் ஒரு தரிசனம் செய்துகொண்டோம்.

20240020003747678.jpg

மாலை சன்னிதி அருகிலேயே நின்றுகொண்டோம் ஜோதி தெரியும் கிழக்கு திசை நோக்கி. கூடியிருந்த அனைவரும் சரண கோஷங்களை எழுப்ப விண்ணும் சந்தோஷித்தது.

20240020002845335.jpg

இந்த மரம் செய்த புண்ணியம் என்னவோ அய்யனருகேயே ஒவ்வொரு கணமும்....

பந்தளத்து அரண்மணையிலிருந்து மூன்று திருவாபரணப் பெட்டிகளைத் தூக்கியவாரே ஆண்டு முழுவதும் கடும் விரதமிருந்தவர் சுமந்து வந்து சாஸ்தா, மணிமண்டபம், மாளிகைப்புரம் என்று அந்தந்த சன்னிதிகளுக்கு விரைந்தனர். சாஸ்தா அந்த ஆபரணங்களைத் தாங்கிக் கொள்ள மேல்ஷாந்தி தீபாராதனை காண்பிக்க கிழக்கு திசையில் மும்முறை ஜோதி தெரிந்தது.

20240020001117226.jpg

[சாஸ்தாவுக்கான திருவாபரணப் பெட்டியைச் சுமந்து வந்தவருடன் ...]

20240020001332108.jpg

[மணிமண்டபத்திற்கான திருவாபரணப்பெட்டி]

மகர ஜோதி மூன்று முறை காந்த மலையில் தெரிந்தது.

ஒவ்வொரு முறை ஜோதி தெரியும் போது அந்த கானகமே சரண கோஷத்தில் அதிர்ந்தது. யோசித்துப் பாருங்கள் லட்சம் பேர் ஒரே நேரத்தில் ஆனந்தப் பரவசத்தில் சரணம் ஐயப்பா என்று கோஷம் எழுப்பும் போது அது.....ஏகாந்தம். தெய்வீகம். பரவசம். வர்ணிக்க எந்த மொழியிலும் வார்த்தைகள் கிடையாது.

அதை , அந்த நொடியை அனுபித்தால் மட்டுமே உணர முடியும்.

பின்னர் வரிசையில் நின்று சென்று திருவாபரணம் தாங்கிய சாஸ்தாவை தரிசனம் செய்தோம்.

கீழிறங்கி எமது இருப்பிடம் வந்து எமது சுமைகளைத் தூக்கிக் கொண்டு பதினெட்டாம் படிக்கு வந்து இரண்டாம் படித் தேங்காயை ஸ்வாமியே சரணம் அய்யப்பா. அடுத்த வருஷமும் இந்த பாக்கியம் கிட்டணுமே அய்யப்பா என்று கூறி நன்றி சொல்லும் விதமாக உடைத்து விட்டு நிறைந்த மனதுடன் கீழிறங்க ஆரம்பித்தோம்.

ஸ்வாமியே சரணம் அய்யப்பா. கொண்டு போய் கொண்டு வந்த பகவானே சரணம் அய்யப்பா