தொடர்கள்
தொடர்கள்
பெண்களுக்கான சுய அதிகாரம் -9 - பத்மா அமர்நாத்

20240018123423682.jpg

பாலின வேறுபாடு பெண்களை எவ்வாறு கட்டுப்படுத்தி, செயலிழக்கச் செய்தது என்பதை ஆரம்பத்தில் பார்த்தோம்.
பாலின வேறுபாடு என்ற நீர்க்குமிழிக்குள் அடைபட்டு கிடக்காமல், ஒவ்வொரு பெண்ணும் சுய நிர்ணய உரிமை பெற்றுச் செயல்பட வேண்டும்.
அதற்குத் தேவையான சில அடிப்படை அம்சங்களை, இனி தொடர்ந்து பார்ப்போம்.

முதல் முக்கியமான அம்சம், கல்வி.

1. ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் :

‘…அப்பெண்மணி தினமும் பள்ளிக்கூடம் செல்கையில், கூடுதலாக ஒரு புடவையை, கையில் கொண்டு செல்வாராம். காரணம், பெண்களுக்குக் கல்வி கற்றுத் தருகிறார் என்ற காரணத்தினால், சாலையில் அவர் செல்லும் போது, கல்லையும் சாணியையும் அவர் மீது எறிந்து, வசை பாடுவார்கள்.

யார் அந்தப் பெண்மணி?

பல இன்னல்களைக் கடந்து, கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தி,
தான் வசிக்கும் ஊரிலுள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும், 1848ல், தானே ஒரு பள்ளிக்கூடம் அமைத்து, கல்வி கற்பிக்க முன் வந்த பெண்ணியவாதி.

அவர் தான்,
திருமதி சாவித்ரிபாய் பூலே. இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்களில் ஒருவர். பெண்ணியத்தை வலியுறுத்தி, பெண்களின் முன்னேற்றம் மற்றும் உரிமைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தவர்.

20240018123523861.jpg

போளூரில் 24-4-1927 இல் நடந்த ஆரம்ப ஆசிரியர்கள் மாநாட்டில் தந்தை பெரியார் நிகழ்த்திய சொற்பொழிவு:

“சாதாரணமாக ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரை, யாருக்கு உபயோகப் படுத்தலாமென்றால், முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப்படுத்தலாம். ஏனெனில் நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள், அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயாவார்கள். அக்குழந்தைகளுக்கு 6,7 வயது வரையிலும் தாய்மார்களே தான் ஆசிரியர்களாக இருக்கிறார்கள். மேல்நாட்டுப் பழக்கங்களிலும் இவைதான் காணப்படுகின்றன. 

எனவே, பள்ளியில் இருப்பவர்கள், இரண்டாவதாகத்தான் ஆசிரியர்கள் ஆவீர்கள்.

ஆனால், அப்பேர்ப்பட்ட ஆரம்ப ஆசிரியர்களாகிய பெண்களுக்கு, ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா, பிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும்…?”

'பெண் கல்வி கற்றால் சம்பாதிக்கலாம், தன் காலில் நிற்கலாம், சுதந்திரத்துடன் செயல்படலாம் என்பதெல்லாம் வேறு. ஒரு பெண் கல்வி கற்றால், அடுத்த தலைமுறையே, வலுவான தலைமுறையாக மாறும்,' என்ற பேர் உண்மையை உணர்த்தி உள்ளார் தந்தை பெரியார்.

கல்விக் கடவுளாக சரஸ்வதியும், செல்வத்துக்கு லக்ஷ்மியும் இருக்கும் நம் நாட்டில், பெண்களுக்குக் கல்வியும், சொத்துரிமையும் மறுக்கப்பட்டிருந்தது. அதை எல்லாம் உடைத்து, வாழும் சரஸ்வதியாகத் திகழ்ந்தவர் சாவித்ரி போய் பூலே.

நம் நாட்டில் மட்டும் அல்ல, உலகளவில், ‘அனைவருக்கும் கல்வி’ என்ற கோட்பாடு மறுக்கப்பட்டு வந்தது.

"அனைவருக்குமானது கல்வி,
புத்தகம் பொதுவானது.”
எனத் துண்டுப் பிரசுரம் அளித்ததற்காக,
பிரபல கவிஞர் மில்டனை சிறையில் அடைத்தது அந்நாட்டின் அரசு.
இன்று, முன்னேறிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பிடிக்க, பல புரட்சிகளும், மாற்றங்களும் தான் காரணம் என்பதில் சந்தேகம் என்ன!

ஒரு சமூகம் முன்னேற, அங்கு பெண்களுக்கான கல்வி அதிகாரம் மிக முக்கியமானது. தரமான கல்வி, பெண்களின் தெளிவான சிந்தனைக்கு வழிவகுக்கும்.

கல்வியின் அவசியத்தைப் பற்றி, வள்ளுவப் பெருமான், பொட்டில் அறைந்தார் போல, தன் பாணியில், மிக அழகாக எழுதிச் சென்றுள்ளார்.

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்


களரனையர் கல்லா தவர். (406)

படிப்பறிவில்லாத நபர்கள், பெயரளவில் மட்டுமே (உளரென்னும் மாத்திரையர்) உயிரோடிருக்கின்றனர். மற்றபடி, (அல்லால் பயவா) அவர்களால் எவ்விதப் பயனும் இல்லை என்பதை, எதனுடன் ஒப்பிடுகிறார் பாருங்கள்…

‘களரனையர் கல்லா தவர்’. பிறருக்கு எந்தப் பலனையும் தராத விளைச்சலற்ற (களர்) நிலத்தைப் போன்றவர் கல்லாதவர், என்கிறார்.

விளைச்சலற்ற நிலத்தால், உரியவரும் பயன்பெறமாட்டார், மற்றவர்களும் பயன் பெற மாட்டார்கள். ஆக, கல்வி இல்லை என்றால், அவர்களால் தன்னையும் மேம்படுத்திக் கொள்ள முடியாது. பிறரின் மேன்மைக்கும் உதவ முடியாது, என்று உறுதிபட எழுதி உள்ளார் திருவள்ளுவர்.

கல்வியைப் பற்றிப் பேசும் போது, தடைகளைப் பற்றிச் சிந்திக்காமல்,
உலக அரங்கில் புகழ்பெற்ற, பாகிஸ்தானிய கல்வி ஆர்வலர், மலாலாவைப் பற்றி நிச்சயம் குறிப்பிட வேண்டும்.

20240018123651459.jpg

மலாலா யூசப்சயி, பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் பிறந்தார்.
அங்கிருந்த தாலிபான்கள், பெண்கள் பள்ளிக்குச் செல்லத் தடை விதித்தனர். பலமான எதிர்ப்பையும் ஆபத்துகளையும் தாண்டி, மலாலா கல்வியைத் தொடர்ந்தார். அவருக்குக் கிடைத்த புத்தகங்கள் மற்றும் ஆதாரங்களிலிருந்து, தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொண்டே வந்தார்.

பிபிசி உருது இணையதளத்தில், புனைப்பெயரில், வலைப்பதிவு எழுதத் தொடங்கினார். பெண் கல்விக்கான தனது வலுவான ஆதரவையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

20240018123940430.jpg

மலாலாவின் எழுத்துகள் கவனத்தைப் பெற்றதால், அவரது தைரியமும் சிந்தனைத் தெளிவும் உலகம் முழுவதும் உள்ள பலரை ஊக்கப்படுத்தியது. இறுதியில், அவரது செயல்பாட்டிற்காக தாலிபான் அவரைப், படுகொலை செய்ய முயற்சித்தது.
இச்செயல், மலாலாவின் உறுதியை மேலும் வலுப்படுத்தியது.

20240018123753149.jpg

இப்படியாகப் போற்றப்படும் கல்வியால் நாம் பெரும் பயன் என்ன?
கல்வியானது, விமர்சன சிந்தனையைத் தூண்டும், சிக்கலைத் தீர்க்கும் திறன்களை, வளர்க்க உதவும். சரியான தேர்வுகளை எடுக்க வழிவகுக்கும். முடிவெடுக்கும் திறனை அதிகரிக்கும். பலவித சமூகச் செயல்பாடுகளில் பங்கேற்கத் தேவையான அறிவு மற்றும் திறன்களைக் கற்றுக் கொடுக்கும். ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தும்.

பள்ளி, கல்லூரி புத்தகங்களுடன் மட்டுமே நம் கல்வி நின்றுவிடுவதில்லை. “அதையும் தாண்டி, வேறு என்ன?” என்று கேட்கிறீர்களா?

2024001812402361.jpg

இணைந்திருங்கள்… தொடர்ந்து பேசுவோம்.