மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில் பெரிதாக போற்றப்படுவது இராம அவதாரம். தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் நெடுங்குணம் என்ற ஸ்தலத்தில் அருள்மிகு யோக இராமர் ஆலயம் சுமார் எண்பத்தேழாயிரம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இக்கோயில் இராமபிரானுக்கென தனிச்சிறப்பு பெற்றதாக விளங்குகிறது
இக்கோவிலை விஜயநகர பேரரசர்கள் சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் கட்டியதால் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஸ்தலமாகவும் இக்கோவில் உள்ளது. தமிழகத்தில் இராமருக்கு இத்தகைய பெரிய தனி ஆலயம் வேறு எங்கும் இல்லை. தனது திருக்கரங்களில் கோதண்டம் எதுவும் ஏந்தாமல் வலது கை சின் முத்திரையுடன் யோக நிலையில் காட்சியளிப்பது இங்கு அபூர்வ திருக்கோலம் ஆகும். இதனால் இந்த திருக்கோவிலில் உள்ள ராமர் ” யோக ராமர்” என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறார். வால்மீகி மகரிஷி உள்ளிட்ட சப்த ரிஷிகளும் பல்வேறு சித்தர்களும் நாரத மகரிஷியும் பிரம்மதேவரும் மற்றும் கொங்கணர். கோரக்கர், பிருகு மகரிஷி தொழுது பேறு பெற்ற புண்ணிய ஸ்தலமாகும்.
ஸ்தலவரலாறு:
இலங்கையில் இராவணனை வென்ற பின் விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்து முடித்து, இராமர் சீதை, லட்சுமணர் மற்றும் அனுமனுடன் அயோத்திக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளையில், இராமரின் வருகையை எதிர்பார்த்து இங்குள்ள தீர்க்காசலம் என்ற மலையில் தவம் செய்து கொண்டிருந்த சுகப்பிரம்ம ரிஷியின் ஆசிரமம் சென்றார்.
இராமர் குறிப்பிட்ட பதினான்கு ஆண்டுகள் முடியும் நிலையில் பரதன் அக்னி வளர்த்து அக்னிக் குண்டத்தில் உயிரை மாய்த்துக் கொள்வார் என்ற சூழ்நிலையில் பரதனைக் காணும் அவசரத் தருணத்தில்கூட, தம் பெரும் குணத்தால் சுகப்பிரம்ம ரிஷியைக் காண வந்ததால் இவ்வூர் 'நெடுங்குணம்' என்று பெயர் பெற்றது என்றும், மற்றும் தீர்க்காசலம் என்ற அழைக்கப்படும் இந்த மலை(தீர்க்கம் + அசலம் = நெடும் + குன்றம்) நாளடைவில் மருவி நெடுங்குணம் ஆயிற்று என்றும் ஸ்தல வரலாறு கூறுகிறது. இராமனைக் கண்ட சுகப்பிரம்ம ரிஷி மகிழ்ந்து, தன்னிடமிருந்த அரிய சாஸ்திரங்கள் நிறைந்த ஓலைச் சுவடிகளை இராமனிடம் கொடுத்தார். அதை இராமர் பெற்றுக் கொண்டு, தம்பியாகிய இலட்சுமணரை தம் வலப்புறம் இருக்கச் செய்தும், இடப்பாகத்தில் சீதையை அமரச் செய்தார். பின் சின்முத்திரையோடு வலது கையை மார்பில் வைத்து, அமர்ந்த நிலையில் சுகப்பிரம்ம ரிஷியிடம் வாங்கிய ஓலைச் சுவடியைப் படிக்குமாறு அனுமனிடம் கொடுத்தார். அனுமனும் பத்மாசனத்தில் அமர்ந்து படிக்கலானார். வேதத்தின் உட்கருத்தைக் கேட்டு இன்புற்று,ஶ்ரீராம்பிரான் “முக்திகோபநிஷத்” என்ற உபநிஷத்தை அனுமனுக்கு உபதேசித்தார்.
கல்வெட்டுகள்:
இந்த கோயில் ஏழாம் நூற்றாண்டிலிருந்து உள்ளதென்றும் மற்றும் யோக ராமர் சன்னதி பல்லவர் காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு விஜயநகர மன்னர்கள் காலத்தில் கோயில் புனரமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது, கிருஷ்ணதேவ ராயர் எட்டு ஏக்கர் பரப்பளவில் கட்டியுள்ளார் என்று பதினைந்து மற்றும் பதினாறாம் ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த விஜயநகர பேரரசு காலத்திய கல்வெட்டுகள் கருவறை மற்றும் மண்டபத்தின் சுவர்களில் காணப்படுகின்றன. இக்கல்வெட்டுகளில் இவ்வூரின் பெயர் நெடுங்குன்றம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது . இக்கல்வெட்டுகளில் இக்கோயிலுக்குக் கொடை அளித்த விபரம் பற்றியும் திருவிழா ஏற்பாடுகள் பற்றிய செய்திகளும் உள்ளன.
ஸ்தல அமைப்பு:
நூற்று ஐந்து அடி உயரமும் அறுபத்திரண்டு அடி அகலமும் ஐந்து நிலை மாடம் கொண்டு கம்பீரமாகக் கிழக்கு நோக்கி நிற்கும் இந்த இராஜகோபுரத்தில் திருமாலின் பத்து அவதாரங்களை நினைவூட்டும் வகையில் வடித்துள்ள சிற்பங்களும், இராமாவதார சிற்பங்களும் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.
கோபுரத்தைச் சுற்றி நான்கரை அடி அகலம் இருபத்தொரு அடி உயரம் கொண்ட மதிலும் உள்ளது. வெளி திருச்சுற்றில் அழகிய பலிபீடமுடன் கூடிய உயர்ந்த கொடிக்கம்பம் உள்ளது. கொடிக் கம்பத்திற்கு வடபுறத்தில் வாகன மண்டபமும் தென்புறத்தில் பதினாறு கால் மண்டபமும் உள்ளன. இத்தனையும் அமைந்த வெளிச்சுற்றைக் கடந்து உள் பிரகாரத்தில் அறுபத்தைந்து அடி உயரமும் நாற்பது அடி அகலமும் கொண்ட ஐந்து நிலை கிளி கோபுரம் நம்மை வரவேற்கிறது. இது சுகபிரம்ம மகரிஷியின் நினைவாகப் பெயரிடப்பட்டது. கிளி கோபுரத்தின் உள் திருச்சுற்றில் நுழைந்தால் மகாமண்டபம், உள் திருச்சுற்று மண்டபம் கருவறை, அர்த்த மண்டபம், இணைந்த மையத் தொகுதியை மூன்று புறம் சூழ்ந்துள்ளது. கருடர் மகா மண்டபத்தில் இருக்கிறார். அதன் பின்புறம் அர்த்த மண்டபத்துள் செல்லும் வாயிலில் அதன் இருபுறமும் இரண்டு பிரமாண்டமான மற்றும் அழகான துவாரபாலகர்கள் நிற்கின்றனர். அர்த்த மண்டபத்தின் சுவர் பின்புறம் நீண்டு கருவறையை மூன்றுபுறமும் சூழ்ந்துள்ளது. கருவறை சுவருக்கும் இந்த சுவருக்கும் இடையில் குறுகிய சுற்றுப் பாதை உள்ளது. கருவறையின் முன் இருபக்கமும் உள்ள தாழ்வான வாயில்கள் வழியே இந்த சுற்றுப் பாதையில் நுழைந்து கருவறையைச் சுற்றி வரலாம். இங்கு மூலவர் சன்னதியின் மேல் அமைந்துள்ள விமானம் கனகவிமானம் என அழைக்கப்படுகிறது.
கருவறையில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி சாந்த சொரூபியாக வலக்கையினால் திருமார்பில் முத்திரை பதித்து அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். (அவருடைய கரம் மார்புக்கு அருகே வைக்கப்பட்டு இருப்பது ஞானமுத்திரை நிலை என்றும் அழைக்கப்படுகின்றது) சீதாபிராட்டி வலது கையில் தாமரை மலரையும் இடக்கையைத் திருவடிச் சரணத்தை உணர்த்தும் அபயஹஸ்தமாக அண்ணலின் இடப்புறம் அமர்ந்திருக்க, தம்பி இலட்சுமணர் வலப்புறத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். எங்கும் காணமுடியாத அற்புதக் காட்சியாக வாயுபுத்திரன் அனுமன் ஸ்ரீ ராமபிரான் எதிரில் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்ட பிரம்மசூத்திரத்தைப் படித்துக்கொண்டு இருக்கிறார். இத்தலத்தில் வில் அம்பு இல்லாமல் எழுந்தருளியுள்ள ஸ்ரீராமபிரானை வணங்கினால் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும்.
மகாமண்டபத்தின் கருவறை முன்மண்டபத்தில் குலசேகர ஆழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், பொய்கை ஆழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார் முதலியவர்கள் அமர்ந்த நிலையிலும், திருமங்கை ஆழ்வார் திருப்பாணாழ்வார் ஆகிய இருவரும் நின்ற நிலையிலும் காட்சி தருகின்றனர். இந்த வழியாக வலம் வந்து இராமரை வணங்கினால் முன் ஜென்ம பாவங்கள் தீர்ந்து பேரின்பம் அடைவார்கள் என்பது ஐதீகம்.
உள்திருச்சுற்று மண்டபத்தில் பிரதான சந்நிதியைச் சுற்றி சக்கரத்தாழ்வார், கல்யாண வெங்கடேச பெருமாள், சஞ்சீவிஹானுமான், ஆழ்வார்கள் போன்றவைகளுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. வடக்குப் பகுதியில் வைகானசர் சந்நிதி உள்ளது. வைகானசர் பின் இரு கரங்களில் ஆழியும் சங்கும் கொண்டு, முன் வலக்கரம் சின் முத்திரையும், இடக்கரம் அருளும் முத்திரையும் கொண்டு அமர்ந்திருக்கிறார். அத்ரி, பிருகு, மரீசி, காஷ்யபர் , ஆகிய நான்கு மகரிஷிகள் (இடமிருந்து வலமாக) கீழ் அமர்ந்து அருள் பெறுகின்றனர். வைகானசர் விஷ்ணுவின் மனதில் இருந்து தோன்றியவர் என்றும், விஷ்ணுவின் எண்ணப்படி வைகானச ஆகமத்தை உருவாக்கி சீடர்களுக்குப் போதித்தார் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இந்த திருக்கோயில் வைகானச ஆகமத்தின் அடிப்படையில்தான் இயங்குகிறது.
கோயிலுக்கு நேரே வெளியில் ஆஞ்சநேயர் சன்னதி உள்ளது. முன் மண்டபத்தில் விஷ்வக்ஷேனர், நம்மாழ்வார், பெரியாழ்வார், ஆளவந்தார், ராமானுஜர், தேசிகர் உள்ளனர். பிரகாரத்தில் வேணுகோபாலர், பரசுராமர், சஞ்சீவி ஆஞ்சநேயர் உள்ளனர்.
வெளி திருச்சுற்றில் வடமேற்கில் கிழக்கு நோக்கிய செங்கமலவல்லி தாயார் சந்நிதி உள்ளது. அழகிய சிற்பங்களை உடைய துண்களைக் கொண்ட மகா மண்டபம்.கருவறை மண்டபத்தில் துவாரபாலஹிகளும் தண்டு ஊன்றி காவல் நிற்கின்றனர். செங்கமலவல்லித் தாயார் கருணை பொழியும் கோலத்தில் காட்சி தருகின்றார். இங்கு உத்ஸவர் ஸ்ரீ விஜய ராகவ பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் இருக்கிறார். மற்றும் பதினாறு கால் ஊஞ்சல் மண்டபம், கல்யாண மண்டபம் முதலியவற்றில் சிறப்பான சிற்பங்கள் உள்ளன.
ஸ்தல தீர்த்தம்:
இந்த கோயிலின் ஸ்தல தீர்த்தம் சுகர் தீர்த்தம் (சூர்ய தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது) எனக் கூறப்படுகிறது.
ஸ்தல விருட்சம் :
இக்கோயிலில் வில்வ மரம் ஸ்தல விருட்சமாகும்.
திருவிழாக்கள்:
ஆண்டுதோறும் பங்குனி அல்லது சித்திரையில் வரும் ஸ்ரீராம நவமியையொட்டி பத்து நாள்கள் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது. ஏழாம் நாள் நடைபெறும் திருத்தேர் விழாவும், பத்தாம் நாள் நடைபெறும் இந்திர விமானத் திருவிழா அனைத்து மக்களின் பங்கேற்புடன் பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது. உத்திர நட்சத்திர தினத்தன்று திருக்கல்யாணம் நடக்கும். வைகாசி விசாகம் கருட சேவை, கிருஷ்ண ஜெயந்தி உறியடி உற்சவம் மற்றும் பொங்கலின் இரண்டாவது நாள் கணு பொங்கலன்று ஸ்ரீ ராமச்சந்திர பெருமாள் மலையை வலம் வரும் வகையில் ஜகந்நாத புரம், அரசம்பட்டு, வேப்பன்பட்டு வழியாக வில்லிவனம் சேத்துப்பட்டு கடைவீதி, பழம்பேட்டை முதலிய ஊர்களுக்குக் காட்சியளித்து பின்னர் நெடுங்குணம் வந்து சேரும் விழாவும் சிறப்பானதாகும். மாசி மகத்தன்று கோதண்டராமர், இங்கிருந்து மகாபலிபுரம் சென்று கடலில் தீர்த்தவாரி அளித்துத் திரும்புவார். கார்த்திகை மாத தீபம், மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி,வருடத்தின் விசேஷ நாட்களான தமிழ், ஆங்கிலப் புத்தாண்டு தினங்கள், தீபாவளி, பொங்கல் தினங்களில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.
பிரார்த்தனை:
ஶ்ரீராமபிரான் இங்கு குரு அம்சமாக இருப்பதால், கல்வியில் சிறப்பிடம் பெறுவதற்கான பிரதான வழிபாட்டு ஸ்தலமாக இருக்கிறது. கல்வி, கலைகளில் உயர்வான நிலை பெற, ஞாபகமறதி நீங்க, ஞானம் உண்டாக நெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்கிறார்கள்.
திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்க, தம்பதியர் ஒற்றுமைக்காக ஊற வைத்த பாசிப்பயறு, சர்க்கரைப்பொங்கல் , பானக நிவேதனம் செய்து வேண்டிக்கொள்கிறார்கள் இத்தலத்தில் வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, குடும்ப ஐஸ்வர்யம்ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர்.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் மூலவருக்குப் பால், தயிர், மஞ்சள், கதம்ப பொடி, தேன், சந்தனம் போன்றவற்றைக் கொண்டு அபிஷேகம் செய்கிறார்கள். நெய் தீபம் ஏற்றுதல், துளசி மாலை, பூ மாலை சாத்துதல், வஸ்திரம் சாத்துதல் ஆகியவற்றைப் பக்தர்கள் நேர்த்திக்கடன்களாகச் செலுத்துகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் செய்கிறார்கள்.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
இந்த கோயில் காலை 6 மணி முதல் மதியம் 11 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
கோயிலுக்குச் செல்லும் வழி:
நெடுங்குணம் திருவண்ணாமலையிலிருந்து 47 கி மீ, சேத்துப்பட்டிலிருந்து 5 கிமீ, வந்தவாசியிலிருந்து 25 கிமீ, ஆரணியிலிருந்து 30 கிமீ தூரத்தில் உள்ளது.
Leave a comment
Upload