கோயிலில் ஒலிக்கும் தமிழக மணிகள்!
அயோத்தி ராமர் கோயிலுக்கு 2400 கிலோ எடையில் பித்தளை, வெண்கலம், தாமிரம், அலுமினியம், இரும்பு, தங்கம், வெள்ளி மற்றும் துத்தநாகம் போன்ற உலோகங்களால் ஆன பிரமாண்ட காண்டாமணி ஐலேசர் பகுதியில் 21 நாட்களில் சுமார் 70 தொழிலாளர்கள் மூலம் தயாராகியுள்ளது. பின்னர் அந்த காண்டாமணி, கடந்த 9-ம் தேதி அயோத்தியில் ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத்ராயிடம் ஒப்படைக்கப்பட்டு, நிர்மாணப் பணிகள் நடைபெறுகிறது.
கருவறையில் ராமர் சிலை (ராம் லல்லா) பிரதிஷ்டை முதல் ஒலிக்க துவங்கும். இதன் ஒலிச்சத்தம் சுமார் 10 கிமீ தூரத்துக்கு தெளிவாக கேட்கும் என்கின்றனர். இப்பணியை தயாரிக்க, பிரபல தொழிலதிபர்கள் ஆதித்யா மற்றும் பிரசாந்த் மிட்டல் குடும்பத்தினர் ₹25 லட்சம் நன்கொடை அளித்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயோத்தி ராமர் கோயிலின் கருவறையில் மூலவர் உள்பட அனைத்து சன்னதிகளிலும் தமிழக சிற்பக் கலைஞர்கள் மூலம் கலைநுணுக்கங்களுடன் 48 தேக்குமரக் கதவுகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்றன. இதில் 18 கதவுகளுக்கு தங்கத்தகடுகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதேபோல் கோயில் கதவுகளில் பொருத்த வேண்டிய மணிகள் தயாரிக்கும் பணியில் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீ ஆண்டாள் மோல்டிங் ஒர்க்ஸ் உரிமையாளர் ராஜேந்திரன், அவரது மகன் காளிதாஸ் (எ) புருஷோத்தமன் ஆகியோர் மேட்டு வருகின்றனர்.
இதுபற்றி அவர்கள் கூறுகையில், "கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜேந்திர நாயுடு என்பவர், அயோத்தி ராமர் கோயிலின் கதவுகளில் பொருத்தும் மணிகளை வழங்குகிறார். அவர்தான் எங்களுக்கு மணி தயாரிக்கும் ஆர்டரை வழங்கினார். அதன்படி 70 கிலோ எடையில் 5 ஆலய மணிகள், 60 கிலோ எடையில் 6 ஆலய மணிகள் மற்றும் 25 கிலோ எடையில் ஒரு மணி என மொத்தம் 12 மணிகள், 36 பிடி மணிகளை கடந்த ஒரு மாத காலத்தில் 25 தொழிலாளர்களின் பங்களிப்பில் தயாரித்துள்ளோம்.
இந்த மணி தயாரிப்புக்கு காப்பர், வெள்ளி, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் பயன்டுத்தப்பட்டன. இதனால் கோயிலில் எங்களின் மணிகள் கணீரென ஒலித்துக் கொண்டே இருக்கும்! அயோத்தி ராமர் கோயிலுக்கு மொத்தம் 108 மணிகள் தேவை. முதல் கட்டமாக 48 மணிகள் தயாரித்து வழங்கப்பட்டு உள்ளது. இதில் 12 ஆலய மணிகள் கோயில் பிரகாரத்தில் வைக்கப்படுகிறது. கோயில் பிரான் பிரதிஷ்டை விழாவில், இங்கு தயாரிக்கப்பட்ட மணிகள் ஒலிக்கத் துவங்கும்!” என்று தந்தையும் மகனும் பெருமையுடன் தெரிவித்தனர்.
கோயில் வளாகத்தில் பிரமாண்ட ராமர் சிலை!
அயோத்தி ராமர் கோயிலின் வளாகத்தில் பிரமாண்ட பைபர் ராமர் சிலையை மேற்குவங்க மாநிலம், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஜமாலுதீன் மற்றும் அவரது மகன் பிட்டு ஆகியோர் வடிவமைத்து நிர்மாணித்து உள்ளனர். இதுபற்றி முகமது ஜமாலுதீன் கூறுகையில், ‛‛மண்ணில் வடிக்கப்படும் சிலைகளை காட்டிலும் பைபர் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிலைகள் நீடித்து உழைக்கும். இவற்றை வடிப்பதில் நிறைய நுணுக்கம் தேவை. இதனால் ஒரு சிலையின் விலை ₹2.8 லட்சம் வரை செலவாகியது. இங்கு பைபரினால் ராமர் சிலை மட்டுமின்றி துர்கா, ஜெகதாத்ரியின் பிரமாண்ட சிலைகளை உருவாக்கி இருக்கிறோம்!” என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.
அயோத்தியில் ராமர் கோயிலுக்கான பிரான் பிரதிஷ்டா விழா, அனைத்து தரப்பு மக்களையும் பிரமுகர்களையும் ஈர்க்கும் பிரமாண்டமான நிகழ்வாக அமைக்கப்பட்டு உள்ளது. ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, முக்கிய நிகழ்வுக்கு முன்னதாக, கடந்த 16-ம் தேதி முதல் வேத சடங்குகளுடன், ராம் ஜென்மபூமி கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாசுக்கு புதிய ஆடை மற்றும் கொடி வழங்கப்பட்டது, இது, 'பிரான் பிரதிஷ்டை' விழாவின் உச்சக்கட்டத்துக்குப் பிறகு, பகவான் ராம் லல்லாவை அருளுவதற்காக விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராம் லல்லாவின் சம்பிரதாய ஸ்தாபனத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். பிரான் பிரதிஷ்டையின் முக்கிய சடங்குகளை லக்ஷ்மிகாந்த் தீட்சித் தலைமையிலான அர்ச்சகர்கள் குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். அயோத்தி ராமர் கோயிலில் நடைபெறும் பிரான் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் தங்குவதற்காக ஏராளமான கூடார நகரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
குஜராத்தின் வதோதரா நகரில் சுமார் 3,160 கிலோ எடையில் 108 அடி நீளம், மூன்றரை அடி சுற்றளவில் தயாரிக்கப்பட்ட பிரமாண்ட ஊதுபத்தி, கடந்த 17-ம் தேதி அயோத்தி ராமர் கோயிலில் பூஜை புனஸ்காரங்களுடன் ஏற்றப்பட்டது. இதன் நறுமணம் சில கிமீ தூரத்துக்கு வீசி வருகிறது. அயோத்தி ராமர் கோயிலில் பிரான் பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க, திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லட்டுகளை வழங்கியுள்ளது.
நாக்பூரைச் சேர்ந்த சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர், பக்தர்களுக்கு வழங்க சுமார் 7000 கிலோ எடையிலான ‘தூத்பேடா’ எனும் ரவையினால் ஆன அல்வா தயாரித்துள்ளார். இதற்காக 900 கிலோ ரவை, ஆயிரம் கிலோ சர்க்கரை, 1000 கிலோ நெய், 2000 லிட்டர் பால், 2500 லிட்டர் தண்ணீர், 75 கிலோ ஏலக்காய், 300 கிலோ பாதாம் மற்றும் திராட்சை பயன்படுத்தப்பட்டு உள்ளது. அலிகர் நகரில் இருந்து சத்ய பிரகாஷ் சர்மா என்ற பூட்டு தயாரிப்பாளர், சுமார் 10 அடி உயரம், 4.6 அடி அகலம் மற்றும் 400 கிலோ எடையில் பிரமாண்ட பூட்டு, சாவி தயாரித்து அனுப்பியுள்ளார்.
அலிகர் அருகே ஏட்டாவில் இருந்து சுமார் 2100 கிலோ எடையில் தயாரான ராட்சத கோயில் மணி அயோத்திக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், சூரத் வைர வியாபாரி ஒருவர் 5,000 அமெரிக்க வைரங்களும் 2 கிலோ வெள்ளி கட்டிகளையும் ஸ்ரீராம ஜென்ம பூமி அறக்கட்டளைக்கு அனுப்பி வைத்துள்ளார். உ.பி மாநிலத்தைச் சேர்ந்த நஸ்னீன் அன்சாரி, நஜ்மா பர்வீன் என்ற இஸ்லாமியர்கள், ‛கடவுள் ராமர் நமது முன்னோர். இந்தியர்களின் டிஎன்ஏவும் ஒன்றுதான்' என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ராமஜோதியை எடுத்து வந்துள்ளனர்.
Leave a comment
Upload