இராமாயணமும், மகாபாரதமும் நம் நாட்டின் இருபெரும் கண்கள். இராமாயணம் நமக்கு இரண்டு இரத்தினங்களை தந்திருக்கிறது. ஒன்று அனுமன். மற்றொன்று சுந்தர காண்டம்.
"ராமா' என்ற ஈரெழுத்து மந்திரத்தையே சதா ஜெபித்து வருபவன் அனுமன். எங்கெல்லாம் இராமன் புகழ் பாடப்படுகிறதோ, அங்கெல்லாம் அனுமன் காட்சி அளித்து அருள் பாலிப்பவன். "ராமா' என்னும் இனிய திருநாமத்தைச் சொன்னால் நமக்கு அனுமனின் அருளுடன்,இராமனின் அருளும் சேர்ந்து கிடைக்கும். அதே போன்று மனித வாழ்வில் ஏற்படும் எந்த பிரச்னைக்கும் தீர்வு தரும் ஆன்மீக மருந்து சுந்தரகாண்ட பாராயணம் மட்டுமே. நாம் மேற்கொள்ளும் ஒரு மண்டல சுந்தரகண்ட பாராயானம், நமது வாழ்வில் பெருத்த நிம்மதியை கொண்டு வரும் என்பது அனுபவ உண்மை.
சீதாதேவி இராமனைப் பிரிந்து துன்பத்தில் துவண்டாள். சீதையின் துயர் துடைக்க ராமநாமத்தின் மீதான நம்பிக்கை ஒன்றே அனுமனுக்கு மிகவும் உதவியது. அந்த நம்பிக்கையைக் கொண்டே அனுமன் கடலையே தாண்டி இலங்கையை சென்றடைந்தான்.அனுமனின் இராமபக்தியையும், சுந்தரகாண்டத்தின் அருமையினை அறிந்தவர்கள் அவை காட்டும் பக்தி வழியில் செல்லும் வாய்ப்பை தவற விட மாட்டார்கள்.தினமும் அனுமனை வணங்கி, சுந்தரகாண்டத்தின் ஒரு ஸர்க்கத்தையாவது படிக்க நாம் பழக வேண்டும்.இதனால் நமது வாழ்வு சிறக்கும். இதனை நமது இளைய தலைமுறைக்கும் உணர்த்த வேண்டும்.
ஒருமுறை குழந்தை அனுமன், வானில் சூரியன் உதயமாவதைப் பார்த்து அதை பழமென நினைத்து பறிக்கச் சென்றான். அந்நேரத்தில் ராகுவும், அதை பிடிக்க வந்தான். குழந்தையின் வேகம் கண்ட ராகு பயந்து போய் இந்திரனைச் சரணடைந்தான். அவன் அனுமனை அடித்து கீழே தள்ளினான். அந்த அடியில் அனுமனின் தோள்பட்டை எலும்பு முறிந்தது. தோள்பட்டை எலும்பை "ஹனு' என்பர். எனவே, அவர் அது முதற்கொண்டு அவர் "ஹனுமான்' என அழைக்கப்படலானார் எனக்கூறப்படுகிறது.
. அயோத்தி மன்னன் தசரதனுக்கு குழந்தைச் செல்வம் இல்லை. எனவே,புத்திரகாமேஷ்டி யாகம் செய்து, பாயாசம் பெற்று தன் தேவியருக்கு கொடுத்தார். இராம சகோதரர்கள் பிறந்தனர். இதன் ஒரு பகுதியை, வாயுபகவான், தன் மனைவி அஞ்சனையிடம் கொடுத்தார். அவளும் கர்ப்பவதியாகி,அனுமனை ஒரு மார்கழி மாத மூலம் நட்சத்திரத்தில் பெற்றெடுத்தாள். எனவே, ராமனும், அனுமனும் சம வலிமையுள்ளவர்களாகவே கருதப்படுகின்றனர். இதனால் ராமனின் அளவுக்கு, ஆஞ்சநேயருக்கும் புகழ் ஏற்பட்டது.அவருக்கென தனிக் கோவில்களும் அமைக்கப்பட்டுள்ளன. சத்குரு தியாகப்பிரம்மம் தனது கீர்த்தனையில், அனுமனை சிவாம்சமாகவே குறிப்பிடுகிறார்.
இலங்கையில் அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை அனுமன் எடுத்துரைத்தார். சந்தோஷமடைந்த சீதை அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த வெற்றிலையைக் கிள்ளி அனுமனுடைய தலையில் தூவி ஆசிர்வதித்தார். "இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும்' என்றார். இங்குதான் வெற்றிலை வெற்றி இலையாக மாறியது. வெற்றிலையை காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் பக்தர்கள் அனுமனை தொழும்போது அவருக்கு வெற்றிலை மாலையே சாத்துகின்றனர். திருமணம் போன்ற சுபகாரியங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பதுவும் இதை பின்பற்றித்தான். .
அனுமன் போர்க்களத்தில் பட்ட காயம் கொஞ்ச நஞ்சமல்ல. அவரைக் கட்டிப் போட்டு தெருத்தெருவாக இழுத்துச் சென்றார்கள். காயத்தின் வேதனை குறையத்தான் அவருக்கு வெண்ணெய் சாத்தும் வழக்கம் ஏற்பட்டது. ஆனால், ஆன்மிகக் கருத்து வித்தியாசமானது. வெண்ணெய் வெண்மை நிறமுடையது. வெள்ளை உள்ளமுள்ள பக்தர்களை அனுமனே தன்னுடன் சேர்த்து அருள் செய்கிறான் என்பதன் அடையாளமாக வெண்ணெய் சாத்தப்படுவதாக நம்பப்படுகிறது. வெண்ணெய் எவ்வளவு வெயில் அடித்தாலும் உருகுவது இல்லை. எவ்வளவு நாள் ஆனாலும் கெட்டுப்போவதும் இல்லை.அது போல் அனுமனின் அருளினை பெற்றோர் எந்த நாளும் கெட்டுப்போவதில்லை..
ராமனுக்கு பணிவிடை செய்து கொண்டே அனுமன் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறார். அடக்கம், தைரியம், அறிவுக்கூர்மையுடன் திகழும் அவரிடம் எல்லா தெய்வீக குணங்களையும் காண்கிறோம். கடலைக் கடத்தல், இலங்கையை எரித்தல், மலையோடு சஞ்சீவினி மூலிகையை கொண்டு வந்து லட்சுமணனை எழுப்புதல் போன்ற அரிய செயல்களை இராமநாமத்தை உச்சரித்துக் கொண்டே அவர் செய்தார்.
"நான் ராமனின் சாதாரண தூதன், அவர் பணியை செய்வதற்காகவே இங்கு வந்துள்ளேன். எனக்கு ராமனின் கிருபையால் அச்சமோ, மரணபயமோ கிடையாது. ராமனுக்கு தொண்டு செய்யும் போது நான் மரணமடைய நேரிட்டாலும் அதை வரவேற்கிறேன்,'' என்று சொன்ன அனுனின் வார்த்தைகள் சத்தியமானவை.
ராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவனுக்கு அவனது ராஜ்யம் திரும்ப கிடைத்தது. அங்கதன் ராஜகுமாரனாக மூடிசூட்டப்பட்டான். விபீஷணன் இலங்கையின் அரசனானான். ஆனால், மிகப்பெரிய சாதனைகளைச் செய்த அனுமனோ ராமனிடம் எதுவும் கேட்கவில்லை.இதைக்கண்டு நெகிழ்ந்த ராமன்,"உனது கடனை நான் எப்படி திரும்பச் செலுத்துவேன். நான் எப்பொழுதும் உனக்கு கடன்பட்டவனாகவே இருப்பேன். நீ சிரஞ்சீவியாக வாழ்வாய். என்னைப் போன்றே உன்னையும் எல்லாரும் போற்றி வணங்குவர்,'' என்றார். இந்நிகழ்வே அனுமன் நம் மனங்களை கவருவதற்கு காரணம்.
அனுமன் பிறந்த நாளன்று காலையிலேயே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். அனுமனின் ஆசிரியர் சூரியனே. அவரிடமே அனுமன் இலக்கணம் படித்து, சர்வ வியாகரண பண்டிதர் என்னும் பட்டம் பெற்றார். "வியாகரணம்' என்றால் "இலக்கணம்'. அனுமனின் குருவை நமது குருவாக மதித்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். துளசிதாசர் அருளிய அனுமன் சாலீசா பாராயணம் செய்ய வேண்டும். இதை சொல்ல இயலாதவர்கள் இதன் பொருளையாவது வாசிக்கலாம். மாலையில் 1008 முறைக்கு குறையாமல் "ஸ்ரீராம ஜெயம்' சொல்ல வேண்டும். அனுமனின் கோயிலுக்குச் சென்று அவரை வழிபட வேண்டும். ஏழைக் குழந்தைகளுக்கு புத்தகம், நோட்டு,கல்வி உதவித்தொகை போன்றவற்றை தானமாக வழங்கலாம். இரவில் தூங்கும் முன் "ஸ்ரீராம ஜெயம்' என 108 முறை சொல்ல வேண்டும். உடல்நிலை ஆரோக்கியமானவர்கள் உண்ணாவிரதம் இருக்கலாம்.
அனுமனுக்கு துளசி மாலையும், வடை மாலையும், வெண்ணெயும் மிகவும் விருப்பமானவை. அனுமன் வழிபாட்டால் நமது செல்வவளம் பெருகும், கிரக தோஷம் நீங்கும். எதிரிகளின் தொல்லை நீங்கும். திருமாலின் அருள் நமக்கு கிடைக்கும். நாமும் அனுமனை பின்பற்றி ராம நாமம் சொன்னால் இராமன் அருளும், அனுமன் அருளும் ஒருங்கே நமக்கு கிடைக்கும்.பாவம் தீரும். மரண பயம் நீங்கும். வாழ்வில் தீராத பிரச்னைகள் தீரும்.என்வே,அனுமனை போற்றி வணங்குவோம்.அல்லல்களிலிருந்து விடுதலை பெறுவோம்.
ஸ்ரீ இராமபிரான் அவதரித்த அயோத்தியில் 2024,சனவரி22 அன்று ஸ்ரீராமர் கோயில் குடமுழுக்கு சீரும்,சிறப்புமாக நடைபெறுஇறது.அன்று நம் ஊர் ஆலயங்களிலும், வீடுகளிலும் இவ்வைபவத்தை பக்தியுடன் கொண்டாடுவோம். இராமனின் அருளுடன் அனுமனின் அருளையும் பெறுவோம்.
Leave a comment
Upload