தொடர்கள்
தொடர்கள்
குலம் காக்கும் குழந்தை வளர்ப்புக் கலை - 8 - ரேணு மீரா

20240005110849259.jpg

எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல்

மற்றுஅன்ன செய்யாமை நன்று

“ஏன் செய்தோம்” என்று தானே பின்னர் வருந்தும் செயலை ஒருபோதும் செய்யக்கூடாது ஒருமுறை செய்தாலும் மறுபடியும் அது போன்ற செயல்களை செய்யக்கூடாது என்ற இந்த வள்ளுவரின் குறளுக்கு ஏற்ப பல பெற்றோர் அவர்தம் குழந்தைகள் செய்யும் இன்றைய தவறுகள் அவர்களது நாளைய ஆரோக்கியத்தை பாதிக்கும் என்ற பயம் வந்துவிடுகிறது.

குறிப்பாக உணவு பழக்கம் இன்றைய காலகட்டத்தில் எதை எடுத்தாலும் youtube, தொலைக்காட்சி விளம்பரம்,OTT என்று சொல்லக்கூடிய தளங்களில் எல்லாம் பலவித உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உணவு வகைகளை பற்றி காணொளிகள் குவிந்த வண்ணம் உள்ளது.இவற்றை பார்த்துவிட்டு வித்தியாசமான உணவுகளை வாங்கும் கலாச்சாரம் குழந்தைகளிடம் அதிகரிக்கின்றன.

Cheese,Olive oil,Oregano, இது போன்றவை நம் பாரம்பரிய உணவுப் பழக்கம் இல்லை என்றாலும் வித்தியாசமான ருசியால் கவரப்பட்டு இந்த உணவுகளில் ஒரு ஈர்ப்பு குழந்தைகளுக்கு வந்து விடுகிறது. இத்தகைய பழக்கங்களை அறவே ஒழிக்க முடியாவிட்டாலும் தொடர்ந்து உபயோகிப்பதை குறைப்பது அவசியம். இவ்வகை உணவுகள் கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்கு மேல் நம் நாட்டில் உலா வருகிறது, முதலில் 2 minutes நூடுல்ஸ் என்ற பெயருடன் நுழைந்தது.

80’s, 90’s, 2000 காலகட்டத்து தாய்மார்கள் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சிற்றுண்டி செய்து கொடுத்தல் என்பது ஒரு பெரிய வேலையாகவே செய்தனர்,அப்போது அவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் இந்த 2 minutes நூடுல்ஸ், இந்த ருசியும் குழந்தைகளை மீண்டும் மீண்டும் கேட்க தோன்றியது அதன் பின் சைனீஸ் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் என்று மெருகேறியது இந்த உணவு கலாச்சாரம்.

இதையும் தாண்டி இன்றோ swiggy zomato போன்ற ஆன்லைன் சர்வீஸ்கள் விருப்பப்பட்ட உணவை வேண்டிய இடத்தில் இருந்து நாம் விரும்பும் உணவை அரைமணி நேரத்திற்குள் நம் வீட்டிற்கு கொண்டு தரும் முறை பலருக்கு வசதி ஆகிவிட்டது. வீட்டில் என்ன சமைத்தாலும் வெளியே இருந்து ஆர்டர் செய்து சாப்பிடுவதை பழக்கமாகிக்கொண்ட குழந்தைகளின் தாய்மார்களோ தன் கை மீறி போய்விட்ட இந்த பழக்கத்தை சரி செய்ய என்ன செய்வது என்று திணறுகின்றனர்.

சமீபத்தில் என்னை சந்தித்த ஒரு பெண்மணி தன்மகள் வயது 13 அந்த சிறுமியின் முறையற்ற உணவுப் பழக்கத்தில் இருந்து மாற்ற வேண்டும் என்று ஆலோசனை கேட்டு வந்தார். அந்த சிறுமியை நேரில் சந்தித்தபோது வீட்டில் சமைக்கும் உணவு தனக்கு பிடிக்கவில்லை. எப்போதுமே ஒரே மாதிரியான உணவு சமைக்கிறார்கள் என்றும் அவர்கள் செய்யும் காய்கறிகளோ மற்ற பண்டங்களோ தனக்கு பிடிப்பதில்லை என்றும், புதுவகை உணவு மற்றும் Mexican, Italian, Chinese, போன்ற வகைகளையும் வீட்டில் செய்வதை விட online இல் order செய்வது சுலபம் என்று பெருமிதத்துடன் கூறினார். அந்தப் பெண்மணியும் சீஸ் நிறைந்த மைதாவால் சமைக்கப்பட்ட உணவுப் பொருட்களை சாப்பிட்டால் உடல் நலம் கெடும் என்று கவலை படுகிறார்.

2024001813030507.jpg

இந்த மாதிரியான சூழலை அந்த பெற்றோர்கள் எப்படி கையாள வேண்டும்?

இரண்டு அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை தன் குழந்தைகளின் சினேகிதர்களை வீட்டிற்கு அழைத்து வீட்டில் உணவு சமைத்து அவர்களுக்கு பரிமாற வேண்டும், பெரும்பாலும் சனிக்கிழமை மாலை வேலைகளில் இதை செய்வது சரி, அப்படி அவர்கள் உங்கள் வீட்டில் வந்து சாப்பிடும் போது நீங்களும் அவர்களுடன் அமர்ந்து பேச வேண்டும், அப்படி பேசும்போது பள்ளியை பற்றியோ, பாடம் பற்றியோ, பரீட்சை பற்றியோ, பேசக்கூடாது. நீங்கள் சமைத்தவற்றை அவர்களுக்கு எது பிடித்தது என்றும் நீங்கள் எப்படி அதை செய்தீர்கள் என்றும் பேசுவது நல்லது. எந்த வெளி உணவையும் ஒப்பிட்டு குறை கூற கூடாது.

ஒரு கதை போல் உணவின் சிறப்பை பேசுங்கள் முடிந்தவரை வெளியே வாங்கி விருந்தளிப்பதை தவிர்ப்பது நல்லது குளிர்பானம் ஐஸ்கிரீம் புட்டிங் போன்றவை குழந்தைகளுக்கு பிடித்தவை இவை கூட வீட்டில் செய்து கொடுங்கள். வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறையே செய்ய வேண்டி வரும். தவறாமல் இப்படி செய்யும் போது குழந்தைகளுக்கு உங்கள் மீதும் உங்கள் சமையல் மீதும் நாட்டம் ஏற்படும். இதற்கு சில சுலபமான வழிகளை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் ரெடி மிக்ஸ் சில ருசியான குழந்தைகளுக்கு பிடித்த வகை உணவை செய்யலாம் கடை பொருட்களை மாதிரியே இருக்க வேண்டும் என்று முயற்சி செய்யக்கூடாது.

நீங்கள் செய்யும் பண்டங்கள் அனைத்தும் அவர்களுக்கு உண்மை தன்மையுடன் புது பெயருடன் இருப்பது நல்லது. பொதுவாக பெற்றோர்கள் அவர்கள் குழந்தைகள் சில உணவு வகைகளை விரும்புகிறார்கள் என்று தெரிந்தவுடன் மற்ற உணவை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதை தவிர்த்துவிடுகிறார்கள். இப்படி நாம் வீட்டிற்கு அழைத்து இத்தகைய உணவு சமைத்து கொடுக்கும்போது மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து ருசிக்கும்போது அவர்கள் பழக்கங்கள் மாறத் துவங்கும். அத்துடன் தன் வீட்டு சமையல் ருசியையும் தன் அம்மாவின் சமையல் பற்றியும் தன் சக நண்பர்கள் பாராட்டுவதை குழந்தைகள் விரும்புவர்.

இந்த ஆலோசனையை பின்பற்றி அந்த பெண்மணி தன் மகளின் சிநேகிதர்களை அழைத்து சிற்றுண்டி சமைத்து கொடுத்துள்ளார் இதன் மூலம் தாய் மகள் உறவும் வலுப்பெற்றது மற்றும் அவர்கள் குழுவாய் சேர்ந்திருக்கும் போது அந்த வயது குழந்தைகளின் மனம் பழக்க வழக்கம் போன்றவையும் பெற்றோர்களுக்கு தெரியவருகிறது என்றும் இது ஒரு ஆரோக்கியமான சூழலையும் தனக்கு தெளிவையும் கொடுத்தது என்று என்னிடம் சொல்லி மகிழ்ந்தார்.

குழந்தைகளின் பார்ட்டி என்ற பெயரில் உணவு பண்டங்களை வெளியே இருந்து வாங்கி கொடுத்து பழகுவதை விட சமைத்து பரிமாறி பழகுங்கள் காலத்திற்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ளும் பழக்கம் ஒரு புறம் இருக்க காலம் நம்மை மாற்றாமல் இருக்க வேண்டும் என்றால் இத்தகைய முயற்சிகளை செய்ய வேண்டும்.

தொடர்ந்து பேசுவோம்...