தொடர்கள்
கதை
வகிடு - ஜி. ஏ பிரபா

20240015113553263.jpeg

வகிடு பிசிறு இல்லாமல் இருந்தது.

நேர் வகிடு. இரண்டு பக்கமும் சமமாகப் பிரித்து முடியை தளர விட்டிருந்தாள் ரம்யா. நீண்ட கூந்தல் அலை அலையாக இடுப்புக்குக் கீழ் பரவி இருந்தது. தலை குனிந்து மொபைலில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தவளை ரசித்தான் கோகுல் .

இவள் தான் எத்தனை அழகு? அதோடு இணைந்த கம்பீரம், அதன் அடியில் விரவிக் கிடக்கும் ஆணவம்.

அது ஆணவம் இல்லை என்பாள் ரம்யா. என் தன்மானம் என்பாள்.

எது தன்மானம்? நீ என்ன சொன்னலும் கேட்க மாட்டேன். என் வாழ்க்கை என் இஷ்டம் என்கிறாள். தன்மானம் வேறு, கர்வம் வேறு. அது புரியாமல்தான் இந்த வாழ்க்கை இப்போது விவாகரத்தில் வந்து நிற்கிறது.

திருமணம் ஆகி ஒரு வருஷம் கூட ஆகவில்லை. ஒத்துப் போகவில்லை. கருத்து வேறுபாடு. நித்தம் எதோ ஒரு சண்டை. எதிர் வாதம். போதும் என்று சலிப்பு.

“விட்டுக் கொடுத்துப் போடா” - அம்மா.

“எப்பவும் நான்தான் விட்டுக் கொடுக்கணுமா?”

அவள் பக்கமும் பேசினார்கள். இரண்டு பக்க சமாதானமும் எடுபடாமல் கோர்ட் வாசலில் நிற்கிறார்கள்.

ஒத்து வாழ முடியாது என்று மறுத்து விட்டாள். பிடிவாதம். என்னால் சகிக்க முடியாது என்கிறான் கோகுல்.

யார் என்ன பதில் சொல்வது?.

யார் சொல்லியும் கேட்காமல் இன்று இங்கு கோர்ட்டில் வந்து நிற்கிறது்

“ ஒரு மணி நேரம் ஆகும் சார்”- வக்கீல்

“ தனியா வந்தியா?” ரம்யாவைக் கேட்டான். கூட யாரும் இல்லாமல் வராண்டாவில் தனியாக நின்றிருந்தாள்.

தோள் குலுக்கினாள்.

இதான் ரம்யா. கேட்டதற்கு பதில் சொல்லமல் ஒரு தோள் குலுக்கல், புருவம் உயர்த்தல், தலை அசைப்பு, ய்யா, எஸ், நோ..அவ்வளவுதான்.

அழகி, படித்தவள், ஐடி கம்பெனி வேலை. இவளின் அலட்டலை எத்தனை நாள் சமாளிப்பது?

மியூசுவல் என்பதால் டைவர்ஸ் சீக்கிரம் கிடைத்து விடும் என்றார்கள்.

கோகுல் வெளியில் டீ குடிக்கலாம் என்று போனான். லெமன் சோடா இருந்தது. ரம்யாவுக்குப் பிடிக்கும். வாங்கிக் கொண்டு வந்தபோது கோர்ட் வராண்டாவில் ரம்யா இல்லை. சுற்றிலும் தேடியபோது கையில் ஒரு டீ கப்பும், வடையும் ஏந்தியபடி வந்தாள்.

“ எங்க போயிட்டே. உனக்கு லெமன் சோடா பிடிக்குமே” …கோகுல்

“ நீ பதினோர் மணிக்கு டீ, வடை சாப்பிட்டுவீல்ல. போய் வாங்கிண்டு வந்தேன்.”...ரம்யா

அவன் அமைதியாக அவளைப் பார்த்தபடி நின்றான்.

“ என்ன?”

“யாருக்கு என்ன பிடிக்கும்னு தெரிஞ்ச நமக்கு, பிடிக்காததை ஏன் அனுசரித்து வாழத் தெரியலை?”

“---------”

“நாம் ஒருவரின்,ஒருவர் குறைகளைத்தான் பார்த்தோமே தவிர, நல்ல விஷயங்களைக் கவனிக்கத் தவறி விட்டோம்”- கோகுல்.

“ஒரு பாதை என்பது இரண்டு பக்கமும் பிரிவுகளை உண்டு பண்ணினாலும் அதை இணைப்பதற்கான கோடு அது.

இந்த வகிடு போல், பாதை போல் அன்பு என்பது நமக்குள்ளான கோடாக இருக்கட்டுமே. வகிடு நெற்றிக்கு எவ்வளவு அழகாய் இருக்கிறது. கூந்தலைப் பிரித்தாலும், ஒரு எல்லையில் இணைகிறதே. அன்புங்கற வகிடும் அப்படித்தான்.”என்றான் கோகுல்.

“ நீ நீயாக இரு. நான் நானாக இருக்கிறேன். நாம் ஒருவரை ஒருவர் மதித்து, உணர்ந்து நடந்து கொள்வோம். வாழ்க்கை என்பது வாழ்வதற்குத்தானே தவிர பிரிவதற்கு இல்லை.

அவன் கையைப் பிடித்துக் கொண்டாள் ரம்யா.

“அழகாக இருக்கிறது” என்றாள்.

எது என்று அவனுக்குப் புரிய புன்னகைத்தான்.