தொடர்கள்
கதை
சரணாகதி - கி.ரமணி

20240017162443896.jpeg

அது கானகத்துக்குள்ளே நீண்டு செல்லும் ஒத்தை அடிப்பாதை.

கானகத்துக்குள் எப்படி இப்பாதை ஏற்பட்டது?

முனிவர்களும்,அவர் தம் சீடர்களும், காட்டு வாசிகளும், ஒரு நீர் நிலையை விட்டு மற்றொன்று தேடும் அவசியம் ஏற்பட்ட விலங்குகளும், ஒரு வேளை ஏற்படுத்தி இருக்கலாம்.

மழை பொழியும் போது மேட்டிலிருந்து பள்ளம் நோக்கி ஓடுவதற்கு நீர் தனக்குத்தானே ஒரு வழி அமைத்துக்கொண்டதால் கூட இது உண்டாகி இருக்கலாம்.

எது எப்படியோ,

கடமையே உருவானஇளைய பெருமான் லட்சுமணன் அந்த ஒத்தை அடிப்பாதையில் முன்னாடி நடக்கிறான்.

மரவுரி அணிந்து தோளில் வில், அம்பறாத்தூணியுடன். அப்பப்போ தம்புரா மீட்டுவது போல வில்லின் நாணைத் , தன் விரலால் அவன் லேசாக மீட்ட, சிறிய இடியோசை ஒன்று எழ.

வன விலங்குகள் இவர்கள் வரும் வழியை விட்டு விலகி வேறு வழியில் செல்லுவது வழக்கம்..

இலக்குவனுக்குப் பின்னால், பத்தடியில் நில மடந்தையின் மகள் ஜானகி தன் தாயின் மீது, மிக ஜாக்ரதையாக,அவளுக்கு வலிக்கக்கூடாது என்பது போல் அன்ன இறகு காற்றில் மிதப்பது போல நடக்கிறாள்.அவள் நடையில், ராமன் அவள் அருகில் இருக்கும் உற்சாகமும், மணிக்கணக்கான பயணத்தினால் ஏற்பட்ட சோர்வும் சேர்ந்து தெரிகிறது.

அவளுக்கு பத்தடி பின்னால் கோதண்டம் சகிதமாக ராகவன்,

முன்னே செல்லும் சீதையின் சிறிது சோர்வுற்ற நடையைப் பார்த்தபடியே

அவள் பின் செல்கிறான்.

"ஒரு வேளை நாம் அவசரப்பட்டு விட்டோமோ? சீதையை அயோத்தியிலேயே விட்டு விட்டு வந்திருக்கலாமோ?. 'ராமன் இருக்குமிடம் தான் என் அயோத்தி' என்று சொன்ன அவளது பேரன்பில் நாம் மதி மயங்கி விட்டோமோ?'

காட்டில் அலைவது எனக்கும் லட்சுமணனுக்கும் என்றும் புதிதல்ல.

சிறுவர்களாக இருந்த போதே விஸ்வாமித்ர முனிவருடன் நாங்கள் காட்டில் அலையாத அலைச்சலா.?

ஆனால் பாவம் மைதிலி.அவளுக்கு

இது புதுசு. "

என்று நினைத்தபடி நடக்கிறான் ராமன்.

லட்சுமணன் செல்லும் பாதை கீழ் நோக்கி இறங்குகிறது. கடைசியில் ஒரு புல்வெளி, பூக்கள் பூத்த நந்த வனம், அருகே ஒரு தடாகம். அதில் ஆங்காங்கு ஆம்பல், தாமரை மலர்கள்.

துள்ளி விளையாடும் தங்க மீன்கள்.

குளத்துநீர், கண்ணாடி போல, ஒளி ஊடுருவித் தன் அடியில் இருப்பதை அப்பட்டமாகக் காட்டும் நேர்மையுடன் இருந்தது.

கீழே இறங்கிய லட்சுமணன் தடாகக் கரையை அடைந்து உள்ளே இறங்கு கிறான்.

கை கழுவிக் கொஞ்சம் நீரை வலக் கையில் எடுத்து சோதனைக்காக சிறிது அருந்துகிறான்.

'ஆஹா!அருமை!' முகம் மலர அண்ணியையும் அண்ணனையும் தண்ணீர் பருக அழைக்கிறான்.

முதலில் சீதை குளத்தில் இறங்கித் தண்ணீர் பருகுகிறாள்.

அவளுக்குப் பின் அண்ணல் ராமன் குளக்கரை அருகில் புல் வெளியில் தன் கோதண்ட வில்லை வைத்து விட்டு குளம் நோக்கிச் செல்கிறான்.

சிறிது நேரம் அந்த அழகிய குளத்தினைப் பார்த்து மெய் மறந்து ரசித்து விட்டுப் பின்னர்

இரு கை கொண்டு நீர் அள்ளி அருந்துகிறான்.

பிறகு லட்சுமணனை நீர் அருந்த அழைத்துவிட்டுப் புல்வெளி நோக்கி செல்கிறான் .

புல் தரையிலிருந்து தன் கோதண்டத்தை எடுக்கும் போது தான், இரண்டு பின்னங்கால்களும்,

பின்புறமும், நசுக்கப்பட்ட நிலையில் வில்லுக்கு அடியில் கிடக்கும் ஒரு சிறு தவளையைக் கவனிக்கிறான் ராமன்.

தான் கோதண்டத்தை கீழே புல் தரையில் வைக்கும் போது கவனம் இல்லாமல் தவளை மீது வைத்து விட்டதை உணர்கிறான் ராமன்.

20240017162519953.jpeg

பதற்றத்துடன், உடல் நசுங்கிய தவளையைத் தன் கையில் மெதுவாக எடுத்துக்கொண்டான் ராகவன்.

தன் முகத்துக்கு நேராக கொண்டுவந்து,

" மண்டூகமே. உன் குரல் வளமோ அபரிமிதமானது. நீ சும்மா குரல் கொடுத்தாலே சுற்றி நெடுதூரம் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் அது கேட்குமே!.

நான் ஒரு மடையன்!, கவனம் இல்லாமல் இந்த மாபெரும் வில்லை உன் முதுகில் வைத்து விட்டேன்... என்றாலும், உன் குரல் எங்கே போயிற்று ? ஒரு குரல் கொடுத்து கத்தி என்னை நீ எச்சரித்து இருக்கலாமே!

அல்லது ஒரு வேளை,நீயே நான் வில் வைப்பதைக் கவனிக்கா விட்டாலும், உடல் நசுங்கும் போது உன் மழைக்கால ஓலக் குரல் கொண்டு சத்தம் இட்டிருக்கலாமே. நான் உடனே வில்லை எடுத்திருப்பேனே.

இத்தனை நேரம் நான் இயற்கை அழகுடன்,தண்ணீரையும் சேர்த்து மெதுவாகப் பருகும் வரையில் நீ ஏன் வாய் திறவாது, வலி காட்டாமல் பொறுமையா இருந்தாய்?

உன்னால் ஒரு வேளை குரலே எழுப்ப முடியதா?"

என்று கூறி மிக வருந்துகிறான் ராமன்.

கம்பீரமான குரலில் தவளை பதில் கூறுகிறது..

." இல்லை.ரகு குல திலகனே. என் குரலுக்கு எந்தக்குறையும் இல்லை. "

ஆச்சர்யத்துடன் தவளையைப்பர்த்த ராமன்.

" சரி. அப்புறம், உடல் நசுங்கும் வேதனையைப் பொறுத்துக்கொண்டு ஏன் சும்மா இருந்தாய். நான் அருகில் தானே இருந்தேன். குரல் கொடுத்தால் என் வில்லை அப்புறப்படுத்தி உன் துயரம் குறைத்திருப்பேனே!"

தவளை பொறுமையாய் கூறியது.

" திரிவிக்ரமனே!.கௌசல்யா புத்திரனே! நீதான் முழு முதல் கடவுள் என என் தாய் மூலம் நான் அறிவேன். மற்ற ஜீவ ராசிகளிடமிருந்தோ,இயற்கைச் சீற்றத்திலிருதோ, நான் என்னைக் காப்பாற்றிக் கொள்ள உன்னைச் துதிக்க வேண்டும் என்று என் அன்னை சொல்வாள்.

செய்வேன்.துயர் என்னை அணுகாது.

ராமா நீ எப்பொழுதும் என்னைக் காப்பாற்றி விடுவாய்.

ஆனால் இந்த முறை என் துயரம் என நான் நினைக்கக்கூடிய இந்த விஷயத்துக்கு காரணமே நீ தான்.

நீ செய்த ஒரு காரியம் எப்படி என்னைத் துன்புறுத்த முடியும்?. . எப்படி எனக்குத் துயர் கொடுக்க உன்னால் முடியும்... சொல் ராமா.

நான் ஏன் உன்னை இப்போது உதவிக்கு அழைக்க வேண்டும்? உன்னால் நல்லது மட்டுமே செய்ய முடியும் ராமா. உன்னை மனதார நினைத்தேன்.உணர்ந்தேன். எனக்கு வலியே இல்லை. எல்லா வலியும் காணாமல் போயிற்று, ராகவா!"

என்று சிதைந்த தன் பின் பகுதியைச் சிறிதும் பொருட்படுத்தாமல் சந்தோஷமாகப் பேசுகிறது தவளை.

பிரமித்துப்போன ராமன் கண்ணீர் பெருகும் கண்களுடன் தவளையை நோக்கிய பின் அதன் உடலைத் தன் விரல்களால் அன்புடன் தடவ, காயங்கள் முழுவதும் அகன்று புதுப்பொலிவுற்ற தவளை, ரகு வீரனின் கையிலிருந்து துள்ளிக் குளத்தில் குதித்து மறைகிறது..

'இறைவனிடம் முழுவதாக சரணாகதி அடைவது எப்படி?' என்று மானிட உருவில் வந்த அந்த இறைவனுக்கே உணர்த்திய மண்டூகத்தை அது தண்ணீரில் மறைவது வரையில் கருணையுடன் பார்த்துக்கொண்டிருக்கிறான் தசரதனின் தலை மகன்.

20240020093539909.png