இந்த வாரம் இசைக்கவியின் இதயம் வாழ்க்கைத் தொடரில் அவருடைய "இதயத்தை" குறித்து அவர் சொல்வது நமக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. இவர்கள் இருவரும் இணைந்த கதை அவருடைய வாழ்க்கை கதையை விட மிகவும் சுவாரசியமான ஒன்று.
திருமணம் என்பதை பற்றி முடிவு எடுத்தவுடன் அவர் தந்தை சொன்னது "ஏதோ கவிதை, கிவிதைல்லாம் எழுதற? புத்திசாலியா இருப்பேன்னு நினைச்சேன் கல்யாணம் பண்ணிக்கிறேன்கறியே?"
சேச்சுவின் அக்மார்க் குறும்பு!
இவர் மனைவி அனுராதா இசைக்கவியின் இசை. இருவர் மனதும் இசைந்ததே ஒரு கவிதை தான்.
இவரே சொல்வது போல அவர் மனைவி, மாமனாரும் மாமியாரும் மெச்சிய மருமகள் தான். தன்னுடைய பெண்களோடு மருமகளையும் தனது பெண்ணாகவே ஏற்று கொஞ்சிய தகப்ப ( மாம)னார் வாய்த்தது வரம்.
ஒரு கவிஞனுக்கு வாழ்க்கைப்பட்டு அவனுடைய கற்பனை ஊற்றெடுக்கும் போது அவனை தொந்தரவு செய்யாமல், அதை அழகாக கைகளில் ஏந்தி சேமித்து, பின்னர் கமண்டலக்காவிரியாய் அது பிரவாகம் எடுக்கும் போது அதில் தானும் நனைந்து மற்றவர்களையும் நணையச் செய்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.
பெண் பார்த்த படலத்தில் ஒரு கவிதையைச் சொல்லி எதிரில் இருப்பவரை மிரட்டுவது அல்லது பொருத்தம் பார்ப்பது, எதற்கு என்று வைத்துக் கொண்டாலும் அந்தக் கவிதை அவர்கள் இருவருக்கும் பொதுவான பொக்கிஷமாகவே இருக்கிறது என்பதை இருவரிடமும் தனித்தனியே உரையாடி தெரிந்து கொண்டேன். இருவருமே அந்தக் கவிதையை வார்த்தை மாறாமல் அதே தொனியில் ஒரே மாதிரியாக சொன்ன விதம் என் மனதுக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.
பாரதிக்கு செல்லம்மா எப்படியோ தெரியாது ஆனால் இந்த இசைக்கவிக்கு இசைந்த அனு(ராகம்) நிச்சயம் ஒரு அபூர்வமான ஒன்று. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அவரே அதை சொல்வதை இந்த காணொளியில் கேட்கலாம் வாருங்கள்...
தொடர்ந்து இசைப்போம் ...
Leave a comment
Upload