தொடர்கள்
தொடர்கள்
அன்பை உணர்த்துவோம்.. உணருவோம்.- பத்மா அமர்நாத்

20231030153953637.jpg

பல்வேறு தத்துவ மற்றும் உளவியல் நூல்களின் படி, அன்பு என்பது மனிதத் தொடர்புகளை வடிவமைக்கும் ஒரு அடிப்படைச் சக்தியாகக் கருதப்படுகிறது.

நாம் எதை வெளிப்படுத்துகிறோமோ, அதுவே நமக்குக் கிடைக்கும்.

அன்பை வெளிப்படுத்துபவர்களிடம், மக்கள் இயல்பாகவே ஈர்க்கப்படுகிறார்கள்.

இதுவரை எப்படியோ…

இனி, அன்புடனும், நிதானத்துடனும் பேசப் பழகிக்கொள்வோம்.

காரணம், நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கு,
அதன் தேவை மிக அதிகம். பலசமயங்களில், அதை நாம் உணரத் தவறிவிடுகிறோம்.

அன்புடன் பேசினால், கேட்பவரிடமிருந்து நன் மதிப்பையும், நம்பிக்கையும் பெறலாம்.

இதற்கான முதல் படி…

1. நிதானத்துடன் பேசுங்கள்..

20231030154438688.jpg

டேனியல் வெப்ஸ்டர்,
18ம் நூற்றாண்டில் வாழ்ந்த, பிரபல வழக்கறிஞர். பேச்சுத் திறமைக்காக, பலராலும் போற்றப்பட்டவர். நீதிபதியிடம் தன் வாதத்தை முன் வைக்கும் போது,

“என் விவாதத்தில் உள்ள மதிப்புமிக்க விவரங்களை, ஆராயத் தவற மாட்டீர்கள், என்று நம்புகிறேன்...”

“இந்த புள்ளி விவரங்கள் உங்கள் கண்களிலிருந்து தப்பிக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன்…”

“நீங்கள், மனிதனுக்குரிய அறிவுப் பூர்வமான சிந்தனையுடன்,
என் கருத்துகளில் உள்ள உண்மையை, ஒப்புக்கொள்வீர்களென்று நம்புகிறேன்..”

போன்ற வரிகளைப் பயன்படுத்தத் தவற மாட்டாராம்.

அடுத்தவர் மீது நம்பிக்கை வைக்கும் விதமாக, பொறுமையுடன் இப்படிப் பேசினால், கேட்பவரின் உணர்வு எப்படி இருக்கும், என்று சிந்தித்துப் பாருங்கள்.

அடித்துப் பேசுவதோ, அனல் பறக்க,
டென்சன் உண்டாக்கும் விதமாகவோ பேசவே மாட்டார். அமைதியாகப் பேசுவார். தன் வாதத்தில் ஜெயிப்பார்.

இந்த பேச்சுத் திறமையே அவரைப் பிரபலமாக்கியது.

ஒரு முறை, சூரியனுக்கும், காற்றுக்கும் இடையே,
யார் பெரியவர் என்பதில் கடும் போட்டி.
காற்று சவால்வட்டது -

“கீழே நிற்கும் அந்தக் கிழவனின் கோட்டை நான் கழட்டிக் காண்பிக்கிறேன் பார்” என்று,
பலமாக வேகம் கொண்டு, காற்று வீச ஆரம்பித்தது.

காற்று பலம் பெறவும், கிழவர்,
தன் கோட்டை இன்னும் கெட்டியாக,
இறுகப் பிடித்துக் கொண்டார்.

காற்று தோல்வியுற்ற பின், சூரியன் மேலே வந்து, மெல்ல, அமைதியுடன் மிளிர ஆரம்பித்தது.

கீழே நின்றகிழவர், புழுக்கம் தாளாமல், கோட்டைக் கழற்றினார்.

மென்மையுடனும், நட்புடனும் பழகும் தன்மை தான், வேகத்தைவிடவும், கோபத்தைவிடவும்,
பலம் பெற்றது.

2. அன்புடன் பேசுங்கள் :

ஈசாப் கதைகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஏசு கிறிஸ்து பிறப்பதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்னரே, பல நீதி போதனைக் கதைகளை எழுதிவைத்தவர். கிரேக்க நாட்டில், அடிமையாக வாழ்ந்த ஈசாப், அன்பின் தேவையை உணர்ந்திருந்தார்.

பல நூறு ஆண்டுகளுக்கு முன்,
அன்பான வார்த்தைகளின் அவசியத்தை,
அவர் எப்படிச் சித்தரித்தாரோ, இன்றளவும்,
மக்கள், அன்பான வார்த்தைகளைக் கேட்க விரும்புகிறார்கள்.

ஆக, சுற்றி உள்ளவர்களை நட்பாக்கிக் கொள்ள வேண்டுமானால், அன்புடன் பழக வேண்டும்.

அதற்கு முதலில்,
நான் எனும் தன்மையை, விலக்கிக் கொண்டு, மக்களிடம் பழக வேண்டும்.

குடும்பப் புகைப்படத்திலும், நண்பர்களுடன் நிற்கும் படத்திலும், நம் கண்கள் முதலில் நம்மைத் தான் தேடும்.

அப்படியே பழகி விட்டோம்.

சுற்றி உள்ளவர்களிடம் பழகும் போது,
நம்மைப் பற்றி மட்டுமே சிந்திக்காமல், மற்றவர்களின் நிலையையும் சிந்தித்துப் பழக வேண்டும்.

20231030154537951.jpg

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஜனாதிபதி, தியோடர் ரூஸ்வெல்ட், இன்றளவும் மக்கள் மனத்தில் நீங்காத இடம்பிடித்தவர்.

வெள்ளை மாளிகையில், நாட்டின் மிக உயர்ந்த பதவி வகிக்கும் போது கூட, தன் பணியாளர்கள், சமையல் அறை ஊழியர்கள் உட்பட, அனைவரையும், சரியாக அவர்களின் பெயரைச் சொல்லி அழைப்பாராம்.

“நாட்டின் உயர்ந்த பதவியில் இருப்பவர்,
நம் பெயரை ஞாபகம் வைத்து,
அழைக்கிறாரே..”
என்ற சந்தோஷத்தை, தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்குக் கொடுத்தார்.

பதவி, அந்தஸ்து, போன்றவற்றை, தலையில் ஏற்றிக் கொள்ளாமல், தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார்.

ராஜாவானாலும், ஊழியரானாலும்,
‘தன்னை அனைவரும் விரும்ப வேண்டும்’ என்றே நினைப்பார்கள்.

அனைவரும் நம்மை விரும்ப, அன்பை, முதலில்,
நாம் வெளிப்படுத்த வேண்டும்.

முதலாம் உலகப் போரின் போது,
ஜெர்மனியை ஆண்ட மன்னர் தோல்வியுற்றார்.

உலகில் உள்ள மக்கள் அனைவரும் அவரை வெறுத்தனர். தன் நாட்டு மக்களே, அவர் மீது நெருப்பை உமிழ்ந்தனர்.

ஹாலன்ட் நாட்டிற்குத் தப்பி ஓடிவிட்டார் அம்மன்னர்.

ஒரு சிறுவன் மட்டும், மன்னருக்குக் கடிதம் எழுதினான். "நிலை எதுவானாலும் சரி, மக்கள் என்ன பேசினாலும் சரி, வில்ஹெம்,
என்ற தாங்கள் தான் என்னுடைய மன்னர்”
என்று குறிப்பிட்டிருந்தான்.

20231030154343439.jpg

இதை வாசித்த மன்னர், கண்கலங்கி,
தன்னைச் சந்திக்குமாறு, சிறுவனுக்கு,
அழைப்பு விடுத்தார்.

சிறுவன், தன் தாயுடன் அவரைச் சென்று பார்த்தான். மன்னர் வில்ஹெம், அச்சிறுவனை ஏற்றுக்கொண்டு, அச் சிறுவனின் தாயை மணந்து கொண்டார்.

ஒரு கொடியவனின் மனத்தில் ஈரம் கசிய வைத்து,
அச்சிறுவனால், அவரை வெல்ல முடிந்தது.

3. அன்பைப் பெற, அன்பை வெளிப்படுத்துங்கள் :

பிறர் நம்மை விரும்ப வேண்டும் என்ற எண்ணம் தோன்றும் போதே, பிறரின் அன்பைப் பெற, நாம் என்னசெய்தோம், என்று சிந்திக்க வேண்டும்.

வேல்சின் இளவரசர் வில்லியம்,
தென் அமெரிக்கா சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தது. அவர் புறப்படும் முன், ஸ்பேனிஷ் மொழியைக் கற்றுக் கொண்டார்.

காரணம்,
அப் பகுதி மக்களுடன், அவர்கள் பாஷையில் பேச வேண்டும் என்பதற்காக.

ஒரு சுற்றுப் பயணத்திற்காக, பல நாட்கள் சிரமப் பட்டு, ஒரு மொழியைக் கற்றுக்கொள்ளவேண்டிய அவசியம்இல்லை.

மொழி பெயர்ப்பாளர்கள் இருந்தாலே போதுமானது.

ஆனால், தானே, அம்மக்களிடம், அவர்கள் மொழியில் உரையாடும் போது, நிச்சயம் அவர்கள் மகிழ்வார்கள்.

சாமானிய மக்களிடம், அவர்கள் பாஷையில்பேசி, தானும், ‘அம்மக்களில் ஒருவர்’ என்ற நினைப்பை விதைப்பது தான், ஒரு ஆட்சியாளரின் சிறந்த பண்பும்கூட.

ஆக,
நிதானத்துடன் பேசி
அன்பான வார்த்தைகளைப் பேசி
அன்பை முதலில் நாம் வெளிப்படுத்தி

அன்பைப் பகிர்வோம், அன்பைப் பெறுவோம்.

(தொடர்ந்து பேசுவோம் )